அலெக்ஸாண்டருக்கு இந்தியர் கற்றுத் தந்தது
இந்திய கலாச்சாரத்தின் மகத்துவத்தைச் சித்திரிக்கும், மாவீரன் அலெக்ஸாண்டர் குறித்த கதை ஒன்று உண்டு. தான் வந்து சேர்ந்த தேசத்தின் பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ள, தனது முகாமைச் சுற்றியிருந்த கிராமங்களுக்கு அலெக்ஸாண்டர் மாறுவேடத்தில் செல்வது வழக்கம். ஒருநாள் ஒருவர் மற்றொருவரிடம் குடம் நிறையத் தங்கத்தை வாங்கிக்கொள்ள வேண்டிக் கெஞ்சுவதையும், அந்த நபர் அதை ஏறிட்டும் பார்க்க மறுப்பதையும் அலெக்ஸாண்டர் பார்த்தார். வாங்க மறுப்பவரின் நிலத்திலிருந்து அந்தக் குடம் இவருக்குக் கிடைத்தது என்பதை அலெக்ஸாண்டர் அறிந்தார். "நான் வாங்கியது நிலத்தை மட்டும்தான், அதனால் எனக்கு இந்தக் குடம் நிறையத் தங்கத்துக்கு அருகதை இல்லை" என்று வாதிட்டார் வாங்கியவர். "நான் விற்றுவிட்ட நிலத்தின் மேலேயோ, அடியிலோ இருக்கும் எந்தப் பொருள்மீதும் எனக்கு உரிமையில்லை" என்றார் விற்றவர். அலெக்ஸாண்டர் இதைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். இருவரும் மசியவில்லை.

இறுதியாக, தீர்ப்புச் சொல்ல ஊர்ப் பெரியவர்கள் அழைக்கப்பட்டனர். அலெக்ஸாண்டர் பார்த்துக்கொண்டிருந்த போதே சந்தோஷமான தீர்வு ஒன்றைப் பெரியவர்கள் கண்டார்கள். நிலத்தை வாங்கியவரின் மகன், விற்றவரின் மகளை மணம் செய்துகொள்ள வேண்டும், மணப்பெண்ணுக்குச் சீதனமாகத் தங்கம் நிறைந்த குடம் கொடுக்கப்படும் என்பதுதான் அது! மனிதப் பண்புகள் எத்தனை உயரத்தை எட்டமுடியும் என்பதை அறிந்த அலெக்ஸாண்டருக்குப் பெருமகிழ்ச்சி உண்டானது. அதே நேரத்தில், படை பலத்தைக் கொண்டு பிறர் சொத்தை அபகரிக்க நினைத்த தனது ஆசையை எண்ணி அவன் வெட்கப்பட்டான்.

ஒவ்வோர் இந்தியனும் பழங்கால இந்திய கலாச்சாரத்தின் அடிநாதமாக இருந்த லட்சியங்களை நுணுகிக் கற்கவும் கடைப்பிடிக்கவும் வேண்டும்; அவ்வாறு செய்தால் உலகம் இந்தச் சிறந்த முன்னுதாரணத்தினால் பலனடைய முடியும்.

நன்றி: சனாதன சாரதி, பிப்ரவரி 2022

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா

© TamilOnline.com