கருமலை களவாணிகள் (அத்தியாயம் - 6)
வீட்டுக்குத் திரும்பிப் போகும் வழியில் கீதா தனக்கு பிடித்த ஓர் உணவகத்தில் வண்டியை நிறுத்தச் சொன்னார். அங்கு போவதற்கு முன்பே சாப்பாட்டைக் கட்டித்தர ஆர்டர் செய்திருந்தார். ரமேஷையும் அருணையும் இருக்கச் சொல்லிவிட்டு, வண்டியில் இருந்து இறங்கிப்போய் சாப்பாட்டை வாங்கி வந்தார். வீடு திரும்பிய பின் அவர்கள் சாப்பிட்டார்கள்.

மறுநாள், அதாவது ஞாயிற்றுக்கிழமை காலையில் அருணுக்கு ஏதேனும் விளையாட்டு அல்லது ஞாயிறு பள்ளி இருக்கிறதா என்று அருணைக் கேட்டார். அருண் இல்லை என்று சொன்னவுடன் சிறிது நேரம் டி.வி. பார்க்கலாம் என்று எண்ணினார். அருணையும் ரமேஷையும் படுக்கப் போகச் சொன்னார்.

அருண் தூங்குமுன் பிடித்த podcast எதையாவது கேட்டபடி தூங்குவான். அது அவன் வழக்கம். அதுவும், N.P.R. radio.station-இல் வரும் 'How I Built This?' அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் அதைக் கேட்க ஆரம்பித்தான்.

கீதா அருணின் அறையில் இருந்து சத்தம் வருவதை கவனித்தார். அங்கு விளக்கும் எரிந்து கொண்டு இருந்தது.

"அருண், கொஞ்சம் சத்தத்தைக் குறைச்சுக்கோ," கீதா கீழே இருந்து குரல் கொடுத்தார்.

உடனடியாக மாடி அறையில் சத்தம் கொஞ்சம் குறைந்தது. கீதா டி.வி. நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பித்தார். என்னவோ தெரியவில்லை, அன்று பிறந்த நாள் என்ற சந்தோஷமே அவருக்கு இல்லை. முதலில் கணவரும் மகனும் செய்த சிறுபிள்ளைத்தனம். அதற்குப் பின் அன்று கருமலைக்குச் செல்லும் நடைபாதையில் பார்த்த அறிவிப்புப் பலகை.

காலடிச் சத்தம் மெதுவாகக் கேட்டது. "அருண், படுத்துக்கப் போ. கொஞ்சம் ஒய்வு எடுத்துக்கோ. இன்னைக்குத் தேவை இல்லாத அலைச்சல் பாரு," என்றார் கீதா.

"அம்மா, எனக்குத் தூக்கமே வரலே."

அது புதிதல்ல. வார நாட்களிலும் அப்படி ஆவதுண்டு. "இல்லைப்பா, போய்ப் படுத்துக்கோ."

"அம்மா, நானும் கொஞ்ச நேரம் டி.வி. பார்க்கறேன், ப்ளீஸ். நாளைக்குத்தான் காலைல சீக்கிரம் எழுந்துக்க வேண்டாமே."

அதற்குள் ஏனோ ரமேஷும் எழுந்து வந்தார். "எனக்கும் தூக்கும் வரல கீதா. கொஞ்ச நேரம் நானும் டி.வி. பாக்கறேன்."

கீதா கொஞ்சம் தனித்து இருக்க நினைத்திருந்தார். அது இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை. 'ரமேஷ், நீங்க உள்ளே போய் வேற எதுலயாவது பாக்கலாமே...' என்று சொல்ல நினைத்தார். எதற்கு வீண் சச்சரவு என்று விட்டுவிட்டார்.

பக்கரூ மட்டும் கவலை இல்லாமல் தூங்கப் போய்விட்டான்.

கீதாவும் அருணும் பார்த்துக்கொண்டிருந்த டி.வி. நிகழ்ச்சி போர் அடிக்கவே, ரமேஷ் எழுந்து உள்ளே போய்விட்டார். அவருக்கு எந்த நேரத்திலேயும் அடிதடிப் படம் அல்லது கிரிக்கெட் மேட்ச் பார்க்கத்தான் பிடிக்கும். ஏதோ முனகிக்கொண்டே போனார். அருண் தனக்குள் சிரித்துக்கொண்டான்.

வீட்டில் ஒரே நிசப்தம். டி.வி. மிகவும் குறைந்த ஒலியில் ஓடிக்கொண்டிருந்தது.

"அம்மா, நான் கொஞ்சம் காரீய விஷம் (lead poisoning) பத்தி ஆராய்ச்சி பண்ணட்டுமா?"

அருண் சொன்னதைக் காதில் வாங்கி கொள்ளாமல் கீதா பாதித் தூக்கத்தில் டி.வி. பார்த்தபடி இருந்தார்.

"அம்மா, எனக்கு உங்களோட நோட்புக் கணினி வேணும்."

கீதா கண் விழித்து சுவரில் இருந்த கடிகாரத்தை பார்த்தார். மணி பத்துக்கு மேல் ஆகி இருந்தது. "மணி பத்து ஆயிருச்சே கண்ணா..."

அவருக்கும் மனதில் மதியம் கருமலைப் பகுதி அறிவிப்புப் பலகையில் பார்த்தது உறுத்திக் கொண்டிருந்தது. அவரால் மறுக்க முடியவில்லை. மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக்கொண்டு அம்மாவின் மடிக் கணினியைக் கொண்டு வந்தான். கீதா login பண்ணிக் கொடுத்தார்.

அருண் படபடவென்று உலவியைத் திறந்து அதில் கூகிள் தேடலைச் செய்தான். தங்களது எர்த்தாம்டன் நகரைப் பற்றிக் கேள்விக் கணைகள் தொடுத்தான். "Lead Poisoning+Black Hills+Earthampton"

அருணின் கேள்விக்கு பதில்கள் படபடவென்று கொட்டும் என்று எதிர்பார்த்தான். இரண்டே இரண்டு லின்க்குகள் மட்டுமே வந்தன. அருணுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பத்து இருபதாவது வரும் என்று எதிர்பார்த்திருந்தான்.

கீதா ஓரக்கண்ணால் அருணின் தேடலைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கும் ஒரே ஆச்சரியம் இருந்தது. அருண் தனது கேள்வியை மாற்றித் தட்டினான்: "Heavy Machines at Black hills preserve."

அப்போதும் பெரிதாக எதுவும் வரவில்லை.

"என்ன அம்மா, அவ்வளவு பெரிய அறிவிப்புப் பலகை இருந்தும் ஆய்வைப்பத்தி ஒரு செய்தியுமே இல்லையே?"

"ஆமாம் கண்ணா, ஒரு தகவலும் இல்லை. கூகிளுக்குத் தெரியாம இருக்காதே!"

இன்னும் சில மாற்றங்கள் செய்து தேடினார்கள். வந்த பதிலில் எந்த மாற்றமும் இல்லை.

"அம்மா, அந்த அறிவிப்புப் பலகையை நான் படம் பிடித்தேன். அதுல ஒரு வலைத்தளத்தின் பெயர் இருந்த மாதிரி ஞாபகம்."

அருண் செல்ஃபோனை எடுத்து வந்தான். அதை ஒரு கேமரா ஆகத்தான் உபயோகப்படுத்தினான். அதில் வேறு தொலைத் தொடர்பு வசதி எதுவும் கிடையாது.

அடுத்த சில நிமிடங்களில் தான் எடுத்த படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தான். அதில் வலைத்தளத்தின் பெயர் ஏதும் இருக்கவில்லை. 21ஆம் நூற்றாண்டில் இப்படி ஓர் அறிவிப்பா? QR Code இருக்கிறதா என்று பார்த்தான். அதுவும் இல்லை. 'For enquiries call: 1-987-6543' என்று மட்டும் இருந்தது.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. திங்கட்கிழமை முதல் வேலையாக அந்த எண்ணுக்கு அழைத்துக் கேட்க வேண்டும் என்று தீர்மானித்தான்.

"ஒரு வலைத்தளம் இல்ல, ஒரு QR Code. இல்ல. வெறுமனே ஒரு நியாண்டர்தால் ஃபோன் நம்பர்தான் அம்மா, இது dark ages மாதிரி இருக்கு. I just can't believe it!"

கீதாவுக்கும் பல கேள்விகள் எழுந்தன. ஒரு பெரிய ஆய்வு வேலையைப் பற்றி விவரமான செய்தி இல்லாவிட்டால் ஏதோ மூடி மறைக்கப்படுவதாக இருக்கலாம்.

"அருண் கண்ணா, நாம காலைல இதுபத்தி விசாரிக்கலாம். இப்ப மணி 12 ஆயிருச்சு பாரு. தூங்கப் போ."

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com