குற்றம் புரிவது மனித இயல்பு
எதிர்க்கட்சிகள் எப்போதும் போலீசாரைக் குறை சொல்லியே பேசுகின்றனர். இதனால் அவர்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டு, பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும். குறிப்பிட்ட நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து கொண்டே இருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டம், ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கொலையே நடக்கவில்லை. கற்பழிப்பே நடக்கவில்லை. திருட்டே இல்லை என்ற நிலை உலகில் எங்கும் இருக்க முடியாது. சட்டம் ஒழுங்கைக் குற்றங்களின் விகிதாசாரத்தை வைத்துதான் கணக்கிட முடியும்.

குற்றம் புரிவது மனித இயல்பு. அதை தடுத்து நிறுத்துவதற்காகத் தான் காவல்துறை உள்ளது. குற்றங்களின் விகிதாசாரத்தில் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் குற்றங்கள் குறைவு. பிற நகரங்களை ஒப்பிட்டால் சென்னையில் குற்றங்கள் குறைவு. இந்தியாவில் தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு மிக நன்றாக உள்ளது என்று அனைவரும் பாராட்டுகிறார்கள்.

ஜெயலலிதா, தமிழக முதல்வர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசியது...

*****


தற்காலத் தமிழ் இலக்கியச் சூழல் எனக்கு அவ்வளவாகப் பிடிபடவில்லை. ஒத்துப்போகவும் இல்லை. எல்லாம் சாதிமயமாகிவிட்டது. எழுத்தாளர்களும் சாதியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். இது இன்ன சாதிக்காரன் எழுதிய நாவல் அல்லது சிறுகதை என்ற பார்வை இன்று வந்துவிட்டது. இது மனித குலத்துக்கே நேர்ந்த ஒரு அவமானம். நிச்சயம் இது திடீரென்று முளைத்திருக்க வாய்ப்பில்லை. உள்ளே ஊறிக்கிடந்த விஷயமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இலக்கியத்தில் சாதி பிரிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இது முன்பு இல்லை. கோவில்பட்டியில் எங்களில் யாருக்கும் யார், யார் எந்த சாதி என்று தெரியாது. யாருக்காவது ஆர். சண்முகசுந்தரம் என்ன சாதி என்று தெரிந்திருக்குமா? சத்தியமாகச் சொல்லுகிறேன். இன்றைக்கு வரைக்கும் எனக்குத் தெரியாது. எனக்கு அது தேவையும் இல்லை. சாதி இல்லாமல் ஒரு சமூகம் இருக்க முடியாது. தமிழகச் சூழலில் சாதியை முற்றாக ஒழித்துவிட முடியும் என்பது பொய். குடும்ப உறவுகளுக்கு, கல்யாணம், கொடுக்கல் வாங்கல்களுக்குச் சாதி தேவைப்படுகிறது. இதை ஒருவருக்கொருவர் கண்ணியமாக அங்கீகரித்துக் கொள்வதுதான் முடியக்கூடியது.

பூமணி, எழுத்தாளர், பத்திரிக்கைப் பேட்டியில்...

*****


தேசிய விருது பெறுவதற்காக நான் அமர்ந்திருந்த போது, கடலில் மூழ்குவது போல ஒரு உணர்வு. நம்மைச் சுற்றி பல பெரிய திரைக்கலைஞர்கள் அமர்ந்திருந்தனர். ஒருவித படபடப்பும் இருந்தது. 12 ஆண்டு போராட்டத்துக்குப் பின் இந்நிலையை நான் அடைந்திருக்கிறேன். இது எனக்குக் கிடைத்த அங்கீகாரம்.

இதற்காக ரசிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 51 ஆண்டுகளில் தமிழ் சினிமாவிலிருந்து மூன்று பேர் மட்டுமே தேசிய விருது வாங்கியுள்ளனர். இந்நிலை மாறவேண்டும். தமிழ்ப் படங்கள் தேசிய அளவில் பேசப்பட வேண்டும். அதற்கான முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும்.

நடிகர் விக்ரம், தேசிய விருது பெற்ற பின் நிருபர்களிடம்...

*****


இந்து நாட்டில் இந்து சமுதாயப் பாதுகாப்புக்காக ஒரு மாநாடு நடத்துவதே வேதனைக்குரிய விஷயம். காஞ்சி சுவாமிகள் கைது சம்பவம் வரலாற்றின் தொடர்ச்சி, இந்து மதத்தின் மீது தொடர்ந்து தொடுக்கப்பட்டு வரும் தாக்குதலின் தொடர்ச்சி இது.

இந்து சமூகத்தை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டார் ஜயேந்திரர். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகப் பாடுபாட்டார். அதனால்தான் அவரைக் குறிவைத்து இத்தாக்குதல் நடந்துள்ளது. காங்கிரஸ் மேலிடத்திற்குத் தெரிந்துதான் ஜயேந்திரர் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபாட்டார். அதனால்தான் அவரைக் குறிவைத்து இத்தாக்குதல் நடந்துள்ளது.

முரளிமனோகர் ஜோஷி, சென்னையில் நடந்த ஹிந்து சமுதாய பாதுகாப்பு மாநாட்டில்...

*****


சுதந்திரம் என்பது கேட்டுப் பெறக் கூடியதல்ல. நாமே எடுத்துக் கொள்வது. சுதந்திரத்தைப் பயன்படுத்தும் விதம்தான் வித்தியாசப்படுகிறது. அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாதாவர்களால் பிரச்சினை ஏற்படுகிறது. சில இடங்களில் சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் ஆதிக்கம் செலுத்துவதையும் பார்க்கிறேன். பெண்ணியம் பேசும் எழுத்தாளராக இருந்தாலும் பெண்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுவதும் கடமை.

பெண்ணுக்கு மனதைரியம் வேண்டும். அழுகையைக் கைவிட வேண்டும். பெண் என்றாலே அழுகை என்ற நிலையை மாற்ற வேண்டும். அழாத பெண்கள் கண்டிப்பாக ஜெயிப்பார்கள்.

துக்கத்தால் அழுவதுகூட ஒரு சில மணி நேரங்கள்தான். காலம் என்ற மருந்து அனைத்தையும் சரிப்படுத்தி விடுகிறது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணை இழிவுபடுத்தவோ, கொச்சைப்படுத்தவோ கூடாது.

குடும்பத்திலும், சமூகத்திலும் மற்றவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். குறிப்பாக ஆத்திரம், அவசரம் கூடாது.

அனுராதா ரமணன், எழுத்தாளர், பத்திரிகைப் பேட்டியில்...

*****


தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com