இதோ ஓடிவிடும் மூன்று மாதம்...
உங்கள் அறிவுரை அவசியமாகத் தேவை. இல்லாவிட்டால் எனக்கும் என் கணவருக்கும் உண்மையிலேயே 'சீரியஸ் இஷ்யூ' ஆகிவிடும் போலத் தோன்றுகிறது. எங்கள் வீட்டிற்கு இரண்டு பேர் வந்திருக்கிறார்கள். வந்து மூன்று மாதத்திற்கு மேல் ஆகிறது. ஒருவர் என் கணவரின் மாமி. மாமா இறந்து இரண்டு, மூன்று வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன். இன்னொருவர் அந்த மாமியின் மகன். அவருக்கு டைவர்ஸ் ஆகிவிட்டது வயது 58. மாமிக்கு 76 வயது.

மாமிக்கு ரொம்ப நாளாக அமெரிக்கா வர ஆசை. என் கணவர் தன் கல்லூரிக் காலத்தில் அவர்கள் வீட்டில் தங்கிப் படித்ததை அந்த மாமி சொல்லிக் காட்டிக்கொண்டே இருப்பார். அதனால் மாமா போன பிறகு இந்த 'கோவிட் பேஸ்' கொஞ்சம் முடிந்து, அவர்களை வரவழைத்தார். அம்மாவும் பையனும் ஒன்றாக இருக்கிறார்கள். அவனும் வர ஆசைப்பட்டான். சரி. நாங்கள் இருவரும் வேலைக்குப் போகிறோம். வயதான அம்மாவைப் பார்த்துக்கொள்ள வசதி என்று செலவைப் பொருட்படுத்தாமல் அவனுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தோம். வந்த பிறகுதான் தெரிகிறது, அவனுக்கு மனோரீதியாக ஏதோ பிரச்சனை என்று. வயதுக்கேற்ற பக்குவம் இல்லை. நாகரிகம் இல்லை. வீட்டிற்கு வந்தவுடன் டைனிங் டேபிளில் வைத்திருந்த பழத்தை எடுத்துக் கடித்து டேஸ்ட் செய்தான். கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது.

முதல் முறையாக வருகிறார், எதைப்பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கும் என்று எடுத்துக் கொண்டேன். படித்திருக்கிறார். வேலையிலும் இருந்திருக்கிறார். ஏழெட்டு வருடங்களாக வேலைக்குப் போகவில்லை போல இருக்கிறது. ஒரு பெண் இருக்கிறாள். அவள் தன் அம்மாவுடன் இருக்கிறாள். இவர் தன் அம்மாவுடன்தான் இருந்து கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு மாதம், இரண்டு மாதம் இருந்து விட்டுப் போகட்டும்; எங்களால் முடிந்தவரை ஊரைச்சுற்றிக் காட்டுகிறோம் என்று நினைத்தோம். செய்யவும் செய்தோம். ஆனால், திடீரென்று அம்மாவும் பிள்ளையும் அப்படிச் சண்டை போட்டுக்கொள்வார்கள். அந்த மாமி இவரிடம், "என்னை இங்கேயே வைத்துக்கொள். என்னால் அவனுடன் திரும்பிப் போக முடியாது" என்று அழுவாள். அந்த மாமியும் சண்டையில் சளைத்தவரல்ல. எங்கேயாவது இவர்கள் சப்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 911-ஐக் கூப்பிட்டு விடுவார்களோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. மேலும் என் இரண்டு பிள்ளைகளும் டீன் ஏஜர்ஸ். அவர்கள் படிக்கும்போது இவர்கள் சப்தம் கேட்டு டிஸ்டர்ப் ஆகிவிடுகிறார்கள். மறுநாள் அம்மா, பிள்ளை இருவரும் சமாதானம் ஆகிவிடுவார்கள். எங்களிடம் மன்னிப்பும் கேட்பார்கள். நாங்கள் அவர்களைவிட வயதில் சிறியவர்கள், அவர்கள் எதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவர்களைச் சமாதானம் செய்வோம். மறுபடியும் இரண்டு நாள்தான் சமாதானம். மறுபடியும் ஆரம்பித்துவிடுவார்கள்.

எனக்குப் பொறுமை எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. நான், என் கணவர், பிள்ளைகள் எல்லாருமே அமைதியை விரும்புபவர்கள். இது எனக்குப் புதிய அனுபவமாக, தலை வேதனையாக இருக்கிறது. நிச்சயம் ஏதோ மனோவியாதி. ஆனால், இந்த இடத்தில் எந்த சைக்கியாஸ்ரிட்-சைக்காலஜிஸ்ட் இடம் போவது? 6 மாதம் விசா இருக்கிறது. அது முடியும்வரை இருந்துவிட்டுத் தான் போவோம் என்று அடம் பிடிக்கிறார்கள். வேலை 'ஹைப்ரிட்' ஆக மாறிவிட்டதால், ஆஃபீஸில் இருந்து திரும்பும் போது, என்ன சத்தம் கேட்கிறதோ என்ன சண்டையோ என்று பயந்து கொண்டேதான் உள்ளே நுழைகிறேன். சிரிப்பாகவும் இருக்கிறது; வருத்தமாகவும் இருக்கிறது நினைத்தால். என் வீட்டில் நுழைவதற்கே எனக்குத் தயக்கமாக இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அவர்களைப் பார்த்தால் பாவமாகவும் இருக்கிறது. அந்த மகனும் ஏதோ வெறியில் கத்துகிறாரே தவிர நல்ல மனிதர்தான். அவர்களால் எங்களுக்குப் பொருளாதார ரீதியாக அவ்வளவு ஒன்றும் செலவு பெரிதாக இல்லை. அவர்கள் இன்னும் மூன்று மாதம் தங்கி இருக்கும் பட்சத்தில், எப்படி டீல் செய்வது என்று தெரியவில்லை. அந்த மாமி இந்த வயதிலும் சமைப்பதற்கு உதவியாக இருப்பார். அந்த மகன், என் கணவருக்கு உதவியாக இழுத்துப் போட்டுக்கொண்டு தோட்ட வேலை செய்வார். சில சமயம் வருத்தமாகப் பேசிக் கொள்வார். "என்னால் யாருக்கும் உபயோகம் இல்லை. என் பெண்ணும் எனக்குச் சொந்தம் இல்லை. என் மனைவியும் என்னை விட்டுப் போய் விட்டாள். என் அம்மாவையும் வருத்தப்பட வைக்கிறேன்" என்று சொல்லும்போது பரிதாபமாக இருக்கும். கோடை வந்து விட்டதால் நிறைய சோஷியல் எங்கேஜ்மெண்ட்ஸ். இவர்களை அழைத்துக் கொண்டும் போக முடியவில்லை. விட்டுவிட்டும் போக முடியவில்லை. Any thoughts/piece of advice to help me out?

இப்படிக்கு,
...........


அன்புள்ள சிநேகிதியே

இது நாமே இழுத்துப் போட்டுக்கொண்ட பிரச்சனை தான். ஆனால், உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு நல்ல மனதுடன் அவர்களை வரவழைத்திருக்கிறீர்கள். மூன்று மாதம் ஓட்டி விட்டீர்கள். இன்னும் ஒரு மூன்று மாதம். 90 நாட்கள். 12 வாரங்கள். கொஞ்சம் கஷ்டம்தான்.

1) இதில் கொஞ்சம் கவலைப்பட வேண்டிய விஷயம், உங்களுக்கும் கணவருக்கும் ஏற்படும் சச்சரவுதான். என்ன உபதேசம் அவர்களுக்குச் செய்தாலும் அவர்களை மாற்றுவது கஷ்டம். ஆனால், அந்த மகன் என்ன செய்தால் அமைதியாக இருக்கிறார் என்று தெரிந்து அந்த வேலையில் ஈடுபடுத்துங்கள். அதேபோல் அந்தத் தாய்க்கும் அவருக்குப் பிடித்தமான வேலையில் ஈடுபடுத்துங்கள். அவருக்குத் தெய்வபக்தி உண்டா, இசை ரசிகரா, தமிழ் சீரியல் பார்ப்பவரா, படித்தவரா என்று எதுவும் எனக்குத் தெரியவில்லை.

2) பார்ட்டியோ, ஃபங்ஷனோ முக்கியமாக இருந்தால், நீங்கள் போவதை ஏன் நிறுத்த வேண்டும்? நீங்கள் இல்லாத சமயத்தில் அவர்கள் உரக்கக் கத்திப் பேசினால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள், அது எந்த ஆபத்தில் கொண்டு செல்லும் என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள். ஏற்கனவே சொல்லி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் சிறிது நினைவில் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். யாரேனும் ஒருவர் அடங்கிப் போனால் சத்தம் கேட்காது. யார் அவர் என்று உங்களுக்குத்தான் தெரியும்.

3) உங்கள் கணவருக்கு ஒரு நன்றிக்கடன். அவருடன் நீங்களும் ஒத்துழைக்கிறீர்கள். சாதாரணமாக நம் அப்பா, அம்மா அல்லது மாமியார், மாமனார் போன்றவர்கள் ஆறு மாதம் வந்து தங்கினாலே பிரச்சனைகள் சிறிதாக முளைத்துப் பெரியதாக மாறிவிடும். "நிச்சயம் நாங்கள் இந்த அமெரிக்கா பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டோம்" என்று சபதம் செய்த பெற்றோர்கள் மறுபடியும் இரண்டு வருடம் கழித்துத் திரும்புவார்கள். அதுதான் உறவுகளின் பலம். அதுதான் பயம்கூட. உங்களுடன் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

4) அந்த மாமிக்கு எதிர்காலத்தைப் பற்றிய பயம் இருக்கும். அந்த மகனைப் பற்றிய கவலைகூட இருக்கும். அதை வெளிப்படுத்தத் தெரியவில்லை. அதேபோல அந்த மகனுக்கும் தாயின்மேல் பாசம் இருக்கும். மனைவி, குழந்தைமேல் அன்பு இருந்திருக்கும். ஆனால், அவருக்கு இருக்கும் மனோவியாதி (அதுபோலத்தான் புரிகிறது) சில சமயம் வார்த்தை வெடிப்புகளாக வரும். அவரைப் புரிந்து கொண்டால்தான் அந்த வெடிப்புகளை நம்மால் ஜீரணிக்க முடியும். மருத்துவ உதவியை நாடியிருக்கிறாரா, மனைவிக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை என்றும் தெரியாது. நீங்கள் கொஞ்சம் புரிந்துகொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் கண்டிப்பாக வரும் மூன்று மாதம் சுமையாக இருக்காது.

5) இதோ மூன்று மாதத்தில் 'டிகிரி' முடித்து விடுவான். இதோ இன்னும் மூன்று மாதத்தில் இந்த நாளில் கல்யாணம் முடிந்து போயிருக்கும். இதோ இன்னும் மூன்று மாதத்தில் வீட்டைக் கட்டி முடித்து விடுவார்கள் என்றெல்லாம் நினைக்கிறோம் அல்லவா? இதோ இவர்கள் கிளம்பிவிடுவார்கள். நேரம் தன்படிதான் செல்கிறது. நம் சிந்தனைதான் முக்கியம்.

வாழ்க, வளர்க.

மீண்டும் சந்திப்போம்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com

© TamilOnline.com