வி. பாலம்மாள்
எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூக சேவகர் என பல திறக்குகளில் இயங்கியவர் வி.பாலம்மாள். இவர் திருச்சியை அடுத்த மணக்காலில் டாக்டர் ஏ.ஆர். வைத்தியநாத சாஸ்திரி - ஸ்ரீமதி அம்மாள் இணையருக்கு மகளாகப் பிறந்தார். அக்காலச் சூழலுக்கேற்ப இல்லத்திலிருந்தே கல்வி பயின்றார். தமிழ், ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற இவர், தாயிடமிருந்து கன்னடம், சம்ஸ்கிருத மொழிகளைக் கற்றுக்கொண்டார். அக்காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த 'விவேகபாநு', 'வித்யாபாநு', 'செந்தமிழ்' போன்ற பல இலக்கிய இதழ்களால் தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். நடேச சாஸ்திரி, ராஜம் ஐயர், பாரதியார், மாதவையா, நாகை கோபாலகிருஷ்ண பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியார் போன்றோரது படைப்புகளைத் தொடர்ந்து வாசித்தார். எழுத்து கை வந்தது. நாவல் எழுதும் விருப்பம் கைகூடியது. 'தேவதத்தன் அல்லது தேச சேவை' என்ற நாவலை எழுதி வெளியிட்டார். அதுதான் அவரது முதல் நாவல். அந்நாவல் பரவலான கவனம் பெற்றது.

அக்காலத்தில் திருச்சியிலிருந்து வெளிவந்த குறிப்பிடத்தகுந்த இதழ்களுள் ஒன்று 'விவேகோதயம்'. பாலம்மாளின் உறவினரும், நேஷனல் கல்லூரியில் ஆசிரியராக இருந்தவருமான பண்டிதர் ம. கோபாலகிருஷ்ணையர் 'விவேகோதயம்' இதழின் ஆசிரியராக இருந்தார். பாலம்மாள் அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். தனது அன்னை ஸ்ரீமதியின் தூண்டுதலின் பேரில், 'சாணக்ய சாகஸம் அல்லது சந்திரகுப்த சரிதம்' என்ற கன்னடத் தொடரைத் தமிழில் மொழிபெயர்த்து அவ்விதழில் வெளியிட்டார். பிப்ரவரி 1917முதல் ஜனவரி 18வரை அத்தொடர் வெளியானது. அதுதான் தமிழில் முதன்முதலில் பெண் எழுத்தாளரால் எழுதப்பட்ட வரலாற்று நாவல். அந்த நாவலை அக்காலத்தின் புகழ்பெற்ற இதழ்களான சுதேசமித்திரன், செந்தமிழ், வைசியமித்திரன், வித்யாபாநு உள்ளிட்டவை பாராட்டியிருந்தன. அந்நூல் பின்னர் 1919ல் சென்னை மாகாணத்தில் இருந்த பள்ளிகளில் பாடநூலாக வைக்கப்பட்டது. இதுபோலவே இவரது 'சுபோத ராம சரிதம்' என்ற சம்ஸ்கிருத நூலும் மைசூர் மாகாணத்திலும், சென்னை ராஜதானி மற்றும் வங்காளத்திலும் பள்ளி மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டது. தொடர்ந்து சாணக்ய சாகஸத்தின் இரண்டாம் பாகத்தை 'விவேகோதயம்' இதழில் தொடராக எழுதினார். அது 1921ல் நூலாக வெளியானது. சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்ட நாவல்கள் பலவற்றைத் தொடர்ந்து வெளியிட்டார்.

நாவல் மட்டுமல்லாமல் சிறுகதை எழுதுவதிலும் பாலம்மாள் தேர்ந்தவராக இருந்தார். அதற்காகவே 'சிந்தாமணி' என்ற இதழைத் தொடங்கினார். அவ்விதழின் நோக்கம் பற்றி அவர், "நம் தமிழ்நாட்டுச் சகோதரிகளின் அபிவிருத்தியை முக்கிய காரணமாகவும் மற்ற விஷயங்களைப் பொதுவாகவும் உத்தேசித்து இத்தமிழ் மாதப் பத்திரிகையை வெளியிட முன்வந்திருக்கிறேன். அவசியமான சகலவிஷயங்களும் இதிலடங்கியிருக்கும் என்ற காரணம் பற்றி இதற்குச் சிந்தாமணி என்று பெயரிடலாயிற்று. சிந்தாமணியில் பெண்கல்வி, மாணவர் முன்னேற்றம், தொழிலாளர் நிலைமை, நீதிமொழிகள், சுகாதாரம், நவீன கதைகள், புராண ஆராய்ச்சி முதலிய பலவிஷயங்களும் வெளிவருமாகையால் தமிழ்நாட்டிலுள்ள சகோதர சகோதரிகள் அனைவரும் என் முயற்சியை ஆதரித்து என்னைக் கௌரவிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.



சமூக மாற்றம் என்பது பெண்களை உயர்வு செய்யும்போதுதான் உண்மையாக மலரும் என்பதை உணர்ந்து, தனது சிந்தாமணி இதழில் அதற்கேற்றவாறு பல்வேறு படைப்புகளைத் தந்துள்ளார். பெண்களுக்குக் கல்வி தேவை என்பதை வலியுறுத்திப் பல கட்டுரைகள் அவ்விதழில் வெளிவந்துள்ளன. ஒவ்வோர் இதழிலும் பல சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 'அதிருஷ்டம்', 'கிண்டி குதிரைப் பந்தயம்', 'திருச்செந்தூர் கந்த ஷஷ்டி', 'கற்பகத்தின் காதற் கடிதம்', 'தேச சேவை', 'மண் பானை' போன்றவை குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளாகும். சிறுகதைகளை வெளியிடுவதற்காக என்றே 'கற்பக மலர்' என்னும் வெளியீட்டைக் கொண்டு வந்தார். அதற்கு மிகநல்ல வரவேற்புக் கிடைத்ததால் கற்பகமலர் -1, கற்பகமலர் -2, கற்பகமலர் -3 என்று தொடர்ந்து சிறு சிறு தொகுப்புகளாகக் கொண்டு வந்தார். அவற்றில் இவர் எழுதிய பல சிறுகதைகள் வெளியாகின. 'உண்மைக்காதல்', 'திலகவதி', 'பரோபகாரம்', 'விருந்தில் விலங்கு', 'பணச்செருக்கு', 'அவள் இஷ்டம்', 'கல்லட்டிகை', 'ஒப்பந்தம்', 'இவர் யார்' போன்றவை இதில் வெளிவந்த இவரது சிறுகதைகளில் முக்கியமானவையாகும். தனது சிறுகதைகளைத் தொகுத்து நூல்களாகவும் வெளியிட்டுள்ளார்.

இந்தியா, தமிழ்நாடு, திராவிடன் போன்ற இதழ்கள் இவரது நாவல்களைப் பாராட்டி விமரிசித்துள்ளன. தமிழர்கள் வசித்த வெளிநாடுகளிலும் 'சிந்தாமணி' இதழுக்கு மிக நல்ல வரவேற்பு இருந்தது. 1928ல், ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். அங்கு பல கூட்டங்களில் 'பெண் விடுதலை' பற்றி உரையாற்றியிருக்கிறார் அங்குள்ள தமிழ் மக்களுடன் தொடர்பில் இருந்து வந்திருக்கிறார். 'சிந்தாமணி' இதழுக்காக அவர்களது பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

வி. பாலம்மாளின் படைப்புகள்

நாவல்கள்: 'ஒற்றுமையின் வெற்றி', 'மனோகரி அல்லது மரணத் தீர்ப்பு', 'தீண்டாமை அல்லது தீட்சிதரின் கோபம்', 'நிராசை அல்லது நீங்காத் துயரம்', 'புருஷோத்தமன் அல்லது புன்சிரிப்பு', 'கலாவதி அல்லது காலத்தின் கொடுமை', 'பத்மநாபன் அல்லது பணச்செருக்கு' மற்றும் சில.

சிறுகதைத் தொகுப்புகள்: 'விருந்தில் விலங்கு', 'அவள் இஷ்டம்', 'இவர் யார்' மற்றும் சில.

கட்டுரை நூல்: சுபோத ராம சரிதம் (ராமரின் வாழ்க்கை வரலாறு), பண்டித மதன்மோஹன் மாளவியா (வாழ்க்கை வரலாறு)


சமூக சேவையிலும் பெண் கல்வியிலும் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை உடையவர் பாலம்மாள். அதற்காகவே 'இந்திய மாதர் சேவா ஸ்தாபனம்' என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தினார். பெண்கள் சுயதொழில் செய்வதை ஊக்குவித்து உதவினார். ஆர்வமுள்ள பெண் குழந்தைகள் கல்வி பயில்வதற்கும் உதவிகரமாக இருந்தார். தனது தாயின் பெயரில், திருவல்லிக்கேணியில் 'ஸ்ரீமதி பிரசுராலயம்' என்ற பதிப்பகத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தன் நூல்களை வெளியிட்டு வந்தார். இவரது நூல்கள் அக்காலத்தில் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு வெளியாகியிருபபது நூல் குறிப்பில் இருந்து தெரியவருகிறது. பர்மா, இலங்கை, மலேயா போன்ற நாடுகளிலும் இவரது புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்திருக்கிறது. தனது புரட்சிக் கருத்துக்களாலும், செயல்பாடுகளாலும் இவர் 'சகோதரி பாலம்மாள்' என்று அழைக்கப்பட்டார். இறுதிக் காலத்தில் ஜபல்பூரில் வாழ்ந்த இவர், முதுமையால் உடல் நலிவுற்றுக் காலமானார்.

அரவிந்த்

© TamilOnline.com