ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-19f)
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

★★★★★


கேள்வி: நான் சமீபத்தில் ஒரு நிறுவனத்தை ஒரு சக நிறுவனரோடு ஆரம்பித்துள்ளேன். ஓரிரு தேவதை மூலதனத்தாரிடமிருந்தும் சிறிய அளவு மூலதனம் பெற்று இதை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் விதை நிலை மூலதனத்தாரிடம் சென்று முயல்கையில் "இந்த யோசனை பெருவளர்ச்சியைச் சமாளிக்குமா" (will it scale?) என்று பலர் கேட்கிறார்கள். இவ்வளவு புதிய நிறுவனம் இப்போதே பெருவளர்ச்சியைப் பற்றி யோசித்து நடைமுறைப்படுத்த வேண்டுமா? இல்லை என்றால் எவ்வாறு மூலதனத்தாருக்கு நம்பிக்கையளிப்பது? விளக்குங்களேன்! (தொடர்ச்சி)

கதிரவனின் பதில்: பெருவளர்ச்சி கண்டபின் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஆரம்பநிலையிலேயே அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றாலும், நிறுவனம் மூலதனம் பெறவேண்டுமானால் அதைப்பற்றி யோசித்தே தீரவேண்டும் என்று சென்ற பகுதியில் கண்டோம். மேலும், பெருவளர்ச்சி என்றால், நிறுவனத்தின் விற்பொருள் அல்லது சேவை பெருமளவில் விற்கப்படும் நிலை என்றும் மூலதனத்தாரின் கவலை அப்போதாவது உங்கள் நிறுவனம் லாபகரமாக நடைபெற இயலுமா என்பது என்றும் கண்டோம்.

அதாவது விற்பொருளின் அடிப்படை அலகின் (basic unit) விற்பனை விலை, அதன் உற்பத்திச் செலவு மற்றும் வணிகரீதியான செலவு குறையுமா என்பதுதான் முக்கியமான கேள்வி. என்று முன் பகுதிகளில் கண்டோம்.

மேலும், அடிப்படை அளவின் செலவு என்பது நிலைத்த செலவு மற்றும் வேறுபடும் செலவு என்னும் இரண்டு வகைச் செலவுகளின் கூட்டுத்தொகை என்றும், ஒரே ஒரு பொருளை உற்பத்தி செய்தாலும் மாறாதது நிலைத்த செலவு என்றும், தொழிற்சாலை, தகவல் மையம், குறைந்தபட்ச மேகக்கணினி போன்று அதன் உதாரணங்களைப் பற்றியும் கண்டோம். மேலும், பெருவளர்ச்சி நிலையில் நிலைத்த செலவின் விகிதம் மிகக் குறைவாக இருக்கக்கூடும் என்றும், அதனால் லாபகரமாக நடத்த வேண்டுமானால் அடிப்படை விற்பனை அளவின் வேறுபாட்டு செலவு, விற்பனை விலையைவிடக் குறைவாக இருக்க வேண்டும் என்றும் கண்டோம். வேறுபாட்டுச் செலவைக் கணிப்பது எளிதல்ல என்றாலும் அதன் அம்சங்களை ஆராய்ந்து எவ்வாறு கணிப்பது என்பதை விவரித்து வருகிறோம்.

சென்ற அத்தியாயத்தில், உங்கள் விற்பனை அளவு அதிகரிக்க அதிகரிக்க, நீங்கள் பயன்படுத்தும் பகுதிப் பொருட்கள் அல்லது கீழ்மட்ட சேவைகளின் (lower level services) விலைகளும் தொகுதித் தள்ளுபடியின் (volume discounting) அடிப்படையில் குறையும், அதனால் உங்கள் அடிப்படை விற்பனை அளவின் வேறுபாட்டுச் செலவும் குறைந்து கொண்டே வரும் என்ற கருத்தை உதாரணங்களுடன் விளக்கினோம். இந்தக் கோட்பாடு பெருவளர்ச்சி நிலைக்கு எப்படிப் பயனளிக்கும் என்று இப்போது மேற்கொண்டு காண்போம்.

பெருவளர்ச்சி நிலையில் மொத்த நிலைத்த செலவு மற்றும் அடிப்படை வேறுபாட்டுச் செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்திலேயே அதற்கான வழிமுறைகளை அமுல்படுத்திக் காட்டவேண்டும் என்பது அவசியமில்லை. பார்க்கப் போனால் அது நிறுவன வளர்ச்சிக்கு பெரிய தடையாகக் கூட வந்து முடியக் கூடும். ஏனெனில், செலவைக் குறைப்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கு மிக அதிகமான முயற்சி தேவைப்படும்.

உதாரணமாக, மென்பொருள் சேவைக்கான கணினிகள், மின்வலை, சேமிப்பகங்கள், பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளை, தேவைக்கேற்ப நிலைநாட்டி இயக்கிக் கொண்டிருப்பதற்கு முதலில் நிறைய ஊழியர்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அதனால் வேறுபாட்டுச் செலவு மிக அதிகமாகவே இருக்கும், சேவை லாபகரமாக இருக்காது. அதற்காக அம்முயற்சிகளைக் குறைக்கும் குறிக்கோளுடன் தானியக்கத்திற்கு (automation) முதலில் இருந்தே தீவிரமாக இறங்கினால் அந்தத் தானியக்க அமைப்புக்கே அதிக முயற்சி எடுத்துக் கொள்ள நேரிடும். மேலும் தானியக்கம் என்பதும் மென்பொருளால் நடத்தப்படுவதுதான். அதனால், மென்பொருள் பொறியியலாளர்கள் பலர் அந்தத் தானியக்க முயற்சிக்குத் திசை திருப்பப்படுவர்.

இப்போது யோசித்துப் பாருங்கள். ஆரம்ப காலத்தில் அந்த மென்பொருள் சேவைக்கு மிக அத்தியாவசியமானது வாடிக்கையாளர்களைப் பெறும் வேகம். அப்படி வாடிக்கையாளர்களைப் பெற வேண்டுமானால் மென்பொருள் பயன்பாட்டு அம்சங்களை வெகு விரைவாக அதிகரிக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட பயன்பாட்டு அம்சங்களை உருவாக்க வேண்டிய மென்பொருள் பொறியியலாளர்கள் ஒரு சிலரேனும் அதிலிருந்து திசை திருப்பப்பட்டு, தானியக்கத்தில் ஈடுபட்டால், பயன்பாட்டு அம்சங்களைக் கூட்டும் வேகம் குறைந்தே தீரும் அல்லவா? அதன் விளைவாக, வாடிக்கையாளர்களைப் பெறும் வேகமும் குறையும். அதனால் நிறுவனத்தின் மதிப்பீடும் குறையும், மூலதனம் பெறும் வாய்ப்பேகூட குறையலாம்.

அதனால், ஆரம்ப காலத்திலிருந்தே வேறுபாட்டுச் செலவைக் குறைக்கும் பெரு முயற்சியில் ஈடுபடுவது நல்லதல்ல. அத்தகைய குறைப்பு முயற்சி பிற்காலத்தில், பெருவளர்ச்சி நிலையில் நிச்சயமாகத் தேவைப்படும். அந்நிலையைச் சிறிது காலத்திலேயே அடைந்துவிடப் போகிறோம் என்ற நிச்சய நம்பிக்கையை விற்பனை வளர்ச்சி வேகம் குறியிட்டுக் காட்டும் தருணத்தில் வேறுபாட்டுச் செலவைக் குறைக்கும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பிக்க வேண்டும். அத்தருணம் வந்து சேரும் வரை, நிறுவனத்தின் கவனத்தை வாடிக்கையாளர்களை வெகுவேகமாகப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில்தான் செலுத்த வேண்டும்.

ஆனால் ஆரம்பநிலை முதலீட்டார்கள் நிறுவனம் பெருவளர்ச்சி நிலையில் லாபகரமாகச் செயல்படும் என்று காட்டினால்தான் முதலீடு அளிப்போம் என்று நிபந்தனை இடுகிறார்களே, அதை எப்படிச் சமாளிப்பது என்று கேட்கிறீர்களா? நல்ல கேள்விதான். இது வேறுவிதமான கேள்வி. அதை மூலதனத்தார் கேட்பது நியாயந்தான். என்னடா இது அந்தர் பல்ட்டி அடிக்கிறேன் என்று எண்ணிவிடார்தீர்கள்! விளக்குகிறேன்.

மூலதனத்தார் ஒன்றும் லாபகரமாக இப்போதே இயக்கிக் காட்டுங்கள் என்று நிபந்தனையிடவில்லையே. பெருவளர்ச்சி நிலையில் உங்கள் நிறுவனம் எவ்வாறு லாபகரமாக இயங்கக்கூடும் என்று விளக்குங்கள் என்றுதானே கேட்கிறார்கள். அத்தகைய விளக்கத்தைக் கேட்டு அதை நிபந்தனையாக இடுவது நியாயம் என்றுதான் கூறுகிறேன்.

எளிதாக நியாயம் என்று விட்டீர்கள், ஆனால்... ஆரம்ப காலத்திலேயே பெருவளர்ச்சி நிலையில் அடிப்படை வேறுபாட்டுச் செலவு எவ்வளவாக இருக்கும் என்று எப்படி கணிப்பது என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்குத் தெரிகிறது. கணிக்க முடியும். பிற்கால வளர்ச்சி நிலை அடிப்படை வேறுபாட்டுச் செலவின் அம்சங்கள் என்னென்ன, அதை ஆரம்ப நிலையிலேயே எப்படி கணிப்பிடுவது என்பதைப் பற்றி அடுத்து வரும் பகுதிகளில் காண்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com