ஓவியர் கிஷோர்
கிஷோர், வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் வசிக்கிறார். கல்லூரி மாணவர். வயது 22. அவர் வாங்கியிருக்கும் விருதுகளோ 23. மேலும் பல விருதுகளைப் பெறுமளவிற்கு உழைப்பும் திறமையும் கொண்டவர். அவருடன் உரையாடியபோது...

"ஓவியத்தில் எனக்கு ஆர்வம் வரக் காரணம் ஆரம்பத்தில் நான் சந்தித்த தோல்விகள்தான். சிறு வயதில் எங்கள் பள்ளியில் பல போட்டிகளில் பங்கேற்பேன் ஆனால் அதிகம் வெற்றி பெற முடிந்ததில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக ஓவியம் வரைய ஆரம்பித்தேன். அப்படித்தான் ஆரம்பித்தது எனது ஓவியப் பயணம். இப்போது எனது மகிழ்ச்சிக்காக ஓவியங்கள் வரைந்து கொண்டிருக்கிறேன்."கிஷோர், தன் சிறுவயதில் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களில் வெளியான புகைப்படங்களைப் பார்த்து வரைய ஆரம்பித்திருக்கிறார். பிறகு 12ம் வகுப்பு முடித்தபின், (2017ல்) தனது ஊரில் உள்ள 'லதா ஓவியக் கூடம்' என்ற ஓவியப் பயிற்சிப் பள்ளியில் ஓவிய வகுப்பில் சேர்ந்திருக்கிறார். ஆனரபிள் டாக்டர் பா. சண்முகம் கிஷோருக்குப் பயிற்சி அளித்திருக்கிறார். கிஷோரின் ஆர்வத்தைப் பார்த்து எந்தவிதக் கட்டணமும் பெறாமலேயே சொல்லித் தந்திருக்கிறார். கடும் பயி்ற்சியின் விளைவு, மே மாதம் நடைபெற்ற அரசு தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி பெறக் காரணமானது. பிறகு அதே பயிற்சிக் கூடம் மூலம் தன்னைப் போலவே ஓவியத்தில் நாட்டமுடையவர்களுக்கு, மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்திருக்கிறார். அது இன்றும் தொடர்கிறது. "நான் பயிற்சியில் கற்றுக் கொண்டதை விட, மற்ற மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் போதுதான் நிறையக் கற்றுக் கொள்கிறேன்" என்கிறார் கிஷோர்.கிஷோர் வேதியியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். படிக்கும் காலத்திலேயே டிப்ளமோ இன் டிராயிங் & பெயிண்டிங் (Diploma in Drawing & Painting) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் பயின்று பட்டம் பெற்றிருக்கிறார். தற்போது ஸ்ரீ பாலாஜி கல்வியியல் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார்.

ராகவேந்திரர் வாழ்க்கை ஓவிய வரிசையில் ஒன்றுசர்வதேச, தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் இதுவரை 23 விருதுகள் (பார்க்க பெட்டிச் செய்தி) பெற்றிருக்கிறார் கிஷோர். அவற்றில் சமீபமாகக் குறிப்பிடத்தகுந்தது இந்திய தேசிய ராணுவம் நடத்திய 'swarnim vijay varsh' ஆன்லைன் ஓவியப் போட்டிக்காக வரைந்தது. இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்து 50 ஆண்டுகள் ஆனதை நினைவில் நிறுத்தும் வகையிலும், அப்போரில் உயிர்நீத்த ஏர் மார்ஷல் உள்ளிட்ட வீரர்களை நினைவு கூரும் வகையிலும் இந்த நிகழ்வை பாரதப் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். விழாவின் ஒரு பகுதியாக ஆன்லைன் ஓவியப் போட்டி அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதிலுமிருந்து திரளான ஓவியர்கள் அதில் கலந்து கொண்டனர். கிஷோருக்கு போட்டியின் இறுதி மூன்று நாட்களுக்கு முன்னர்தான் அதுபற்றித் தெரிய வந்திருக்கிறது. உடனே ஆர்வத்துடன் அதில் கலந்துகொண்டிருக்கிறார். ஆன்லைன் போட்டி என்பதால் அவர்கள் குறிப்பிட்டிருந்த மின்னஞ்சல் முகவரிக்கு ஓவியத்தை அனுப்பி வைத்திருக்கிறார்.சில நாட்களுக்குப் பிறகு அமைப்பாளர்கள் தொடர்புகொண்டு கிஷோரின் ஓவியம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகச் சொன்னதுடன், அசல் படைப்பை உடன் அனுப்பி வைக்குமாறு சொல்லியிருக்கின்றனர். கிஷோரும் அனுப்பி வைத்திருக்கிறார்.

ராணுவப் போட்டியில் பரிசு வென்ற ஓவியம்மறுபடியும் கிஷோரைத் தொடர்பு கொண்ட அமைப்பாளர்கள் அவரது ஓவியம் சிறந்த 25 ஓவியங்களுள் ஒன்றாகப் பட்டியலிடப் பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். பரிசீலனையின் இறுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 10 ஓவியங்களுள் கிஷோருடையதும் ஒன்று. அந்த ஓவியம் தில்லி இந்தியா கேட்டில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதற்காகச் சான்றிதழும், சிறப்புப் பரிசும் கிஷோருக்குக் கிடைத்திருக்கிறது

திருக்குறள் ஓவியப் போட்டியில் பரிசு"எனது இந்த வெற்றிகளுக்கெல்லாம் முதற் காரணம் என் பெற்றோர்கள். அப்பா மாதவன், அம்மா ராதா இருவருமே எனக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பவர்கள். நான் ஆரம்பத்தில் பல ஓவியப் போட்டிகளில் தோல்வியுற்றபோது என்னை ஊக்கப்படுத்தி நான் மேலே எழுவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள். எனது ஆர்வத்திற்கு, முயற்சிகளுக்கு இவர்கள் என்றுமே தடையாக இருந்ததில்லை. "உனக்கு எது பிடித்திருக்கிறதோ அதைச் செய்" என்று என்னை ஊக்கப்படுத்தி எனக்கு முழுச் சுதந்திரம் அளித்து வருகின்றனர் அவர்கள் இல்லாமல் நானில்லை என்றுதான் சொல்வேன். எனது தங்கை சோனியா என்னை எப்போதும் உற்சாகப்படுத்தி வருபவர்." என்கிறார் கிஷோர்."நான் படித்த பள்ளியும் சரி, எனது கல்லூரியும் சரி இன்றுவரை எனது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. நான் பள்ளியில் பயிலும்போது பங்கேற்ற போட்டிகளில் ஆரம்பத்தில் தோல்வியுற்றாலும், என்னை உற்சாகப்படுத்தி, என்னைப் பல ஓவியப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்று பல பரிசுகளைப் பெற வைத்தவர் எனது ஓவிய ஆசிரியர் தரணிதேவி அவர்கள். அவர் இன்றும் எனக்குத் துணையாக, தூணாக, என் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை உடையவராக இருக்கிறார். அவரை நான் மறக்கவே முடியாது. என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் எனது நண்பர்கள் கருணாகரன் மற்றும் ஜெயசூரியா என் வாழ்வில் முக்கியமானவர்கள். பல விஷயங்களில் இவர்கள் எனக்கு உறுதுணையாக இருக்கின்றனர்" என்கிறார்'உங்களைக் கவர்ந்த ஓவியர்கள் யார்' என்று கேட்டதும் சட்டென்று பதில் வருகிறது, கிஷோரிடமிருந்து. "என்னை முதன்முதலில் கவர்ந்த ஓவியர் என்னுடன் சேர்ந்து பணிபுரியும் பணக்கோட்டி அண்ணன் அவர்கள்தான். அவரும் நானும் ஒரே பள்ளியில் படித்தோம். அவர் என்னைவிட ஒரு வருடம் பெரியவர். அவரை நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலில் பார்த்தேன். அவர் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்துத்தான் நான் இயற்கைக் காட்சிகளை வரைய ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு மனித உருவங்களை வரைவதுதான் மிகவும் பிடிக்கும். இன்று அவரும் நானும் இணைந்து பல ஓவியங்களை வரைந்து வருகிறோம். அவற்றுள் ஸ்ரீ ராகவேந்திரர் வாழ்க்கை ஓவியமும் ஒன்று.ஸ்ரீ ராகவேந்திரர் வாழ்க்கை வரலாற்று ஓவியங்கள் அமையும் வாய்ப்பு - அதுவும் இந்த வயதில் - கிடைக்கப்பெற்றதை நான் ஒரு மிகப்பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். நானும் எனது நண்பர் பணக்கோட்டி அவர்களும் இந்த வரலாற்று ஓவியங்களை, பார்த்து வரைய எந்த புகைப்படமும் இல்லாமல், கற்பனையில் மட்டுமே வரைந்தோம். சில ஓவியங்களுக்கு நமது திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த ராகவேந்திரர் படத்தின் காட்சிகளை மாதிரியாக எடுத்துக்கொண்டோம். இந்த வரலாற்று ஓவியங்களை வரைந்ததன் மூலம் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம்.""எனக்கு அனைத்து வகை ஓவியங்களையும் வரையப் பிடிக்கும். எல்லா வகை வண்ணங்களிலும் நான் வரைவேன் என்றாலும், நான் அக்ரிலிக் வண்ணங்களை அதிகம் பயன்படுத்துகிறேன். ஏனென்றால் அவை உடனே காய்ந்து விடும். அந்த வண்ணங்களைப் பயன்படுத்தி மனித உருவங்களை வரைவது எனக்கு மிகவும் பிடிக்கும்." என்கிறார் கிஷோர்.

லதா ஓவியக் கலைக்கூடம் மூலமாக கிஷோர் தன்னுடன் பணிபுரியும் அண்ணன் பணக்கோட்டி, ஆசிரியர் பா. சண்முகம் மூவரும் இணைந்து வாரம் ஒருமுறை மாணவர்களுக்கு ஓவிய வகுப்பு எடுத்து வருகின்றனர். ஏழை மாணவர்களுக்கு இலவசமாகவும் ஓவியம் கற்றுத் தருகின்றனர். பல விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்திருக்கின்றனர். "தமிழகத்தில் முதன்முறையாக கோவிட் பற்றிய விழிப்புணர்வு ஓவியம் வரைந்தது நாங்கள்தான்" என்கிறார் கிஷோர் பெருமையுடன். "லதா ஓவியக் கலைக்கூடத்தில் எந்தக் கட்டணமும் வாங்காமல் இலவசமாகவே கற்றுத் தந்த ஆசிரியர் பா. சண்முகம் அவர்களின் அன்பை என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன்" என்கிறார்."நான் கற்றுக்கொண்டிருக்கிற இந்த ஓவியக் கலையைப ஒளிவுமறைவு இல்லாமல் ஒரு 100 பேருக்காவது கற்றுக் கொடுக்கவேண்டும். ஓவியம் குறித்து ஒரு புத்தகம் எழுதவேண்டும் ஓவியத் துறையில் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் இவைதாம் என் விருப்பங்கள். என்னைப் போன்ற இளம் ஓவியர்களுக்கு, ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஓவியம் என்பது ஒரு கடல். நமது உணர்வுகளைத் தூரிகை மூலமாக வெளிக்கொணர்வது தான் ஓவியம். ஆகையால் முடிந்தவரை கற்பனை ஓவியங்களை வரைய முயலவேண்டும். கற்பனை ஓவியங்கள் காலத்தால் அழிக்க முடியாதவை. ஒரு புகைப்படத்தை இணையத்தில் தேடி அதே மாதிரி வரைவதைவிட நமது கற்பனைகளை ஓவியங்களாகத் தீட்டுவதுதான் மிகவும் சிறப்பானதாக இருக்கும்" என்கிறார்.

அவரது ஓவிய முயற்சிகளை வாழ்த்தி நாம் விடைபெறுகிறோம்.

உரையாடல்: அரவிந்த்

கிஷோர் பெற்ற விருதுகள்

1. மாநில அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக மூத்த ஓவியர் அம்புலிமாமா சங்கர் அவர்கள் கையால் விருது பெற்றிருக்கிறார். இது கிஷோர் பெற்ற முதல் விருது.

2. மாநில அளவிலான திருக்குறள் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்று மேனாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் கையால் விருது மற்றும் ₹40,000 பரிசுத் தொகை பெற்றிருக்கிறார். அந்த ஓவியம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், திருக்குறள் ஓவியக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

3. கலை பண்பாட்டுத் துறை நடத்திய மண்டல அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்று 2011ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் இருந்தும், 2021ம் ஆண்டில் கலை பண்பாட்டுத்துறை இயக்குநரிடம் இருந்தும் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை பெற்றுள்ளார்.

4. வித்தக சிற்பி விருது பெற்றுள்ளார். இதனை சென்னை ஸ்ரீதர்ஷன் கலைக்கூட நிறுவனர் டாக்டர் திரு தர்மலிங்கம் (ஓவியர்) அவர்கள் வழங்கிச் சிறப்பித்திருக்கிறார்.

5. தேசிய விருதை மூத்த ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்கள் கையால் பெற்றுள்ளார்.

6. கோயம்புத்தூரில் நடைபெற்ற தேசிய அளவிலான ஓவியக் கண்காட்சியில் இவரது ஓவியம் சிறந்த ஓவியமாகத் தேர்வு செய்யப்பட்டது அதற்கான தேசிய விருது மற்றும் பரிசினை ரோட்டரி கிளப் தலைவர் சாந்தி சுரேஷ் அவர்களிடம் பெற்றிருக்கிறார்.

7. சர்வதேச அளவிலான Honorable Award சென்னை லலித்கலா அகாதெமியில், அன்னை காமாட்சி கலைக்கூடத்தில் நிறுவனரின் கரங்களால் பெற்றுள்ளார்.

8. வன உயிரின வார விழாவை ஒட்டி நடந்த மாநில அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்று மேனாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் கரங்களால் விருது பெற்றிருக்கிறார்.

9. சர்வதேச அளவிலான சிறந்த ஓவியருக்கான விருதினைத் திரைப்பட நடிகர் மைம் கோபி அவர்களிடமிருந்து பெற்றுள்ளார்.

10. இந்திய தேசிய ராணுவம் நடத்திய ஓவியப் போட்டியில் சிறந்த ஓவியத்துக்கான பரிசு மற்றும் சான்றிதழையும் பெற்றிருக்கிறார்.

11. கலைச்சிற்பி விருது பெற்றுள்ளார்.

கிஷோர் பெற்றுள்ள விருதுகளில் 10 மாநில அளவிலான போட்டிகளிலும், தேசிய அளவில் 7 முறையும் சர்வதேச அளவில் 3 முறையும் மற்றும் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகளில் பல முறையும் பெற்றுள்ளார்.


கிஷோரின் இன்ஸ்டாக்ராம் பக்கம்

லதா ஓவியக் கலைக்கூடம்

© TamilOnline.com