அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில், ஃப்ரீமான்ட் நகரில் வளர்ந்த அக்ஷயா ராமன் எழுதிய 'The Ivory Key' (தந்தச் சாவி) என்ற நூல் உலகெங்கிலும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஓர் அரச குடும்பச் சகோதர சகோதரிகள் இடையே எழும் போட்டி மனப்பான்மையை சூழ்ச்சிப் பின்னலை மையமாக வைத்து சுவைபடச் சித்திரிக்கும் கதை இது. அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பைக் கதை முழுவதிலும் நேர்த்தியாகக் கொண்டு செல்கிறார் அக்ஷயா. 384 பக்கங்கள் கொண்ட ஒரு பெரும் நாவலில் இத்தகைய எதிர்பார்ப்பை, வேகத்தை தக்கவைப்பது மிகவும் கடினம். அக்ஷயா ராமனின் முதல் வெற்றி இந்த வேகமும் எதிர்பார்ப்பும் தான்.
கதையோடு சேர்த்து ஆசிரியர் நமக்குப் பல வரலாற்றுத் தகவல்களையும் தருகிறார். அசோகரின் சாம்ராஜ்யம் என்ற கற்பனையான காலகட்டத்தின் நாடு, மக்கள், உணவு, உடை, சிந்தனைப் போக்கு, கலாசாரம், மரபு என்று எல்லா விவரங்களையும் கதை நமக்குச் சொல்கிறது. அந்தக் கால கட்டத்திலோ அந்த நாட்டிலோ வாழாத, புலம்பெயர்ந்த எழுத்தாளர் ஒருவர் இவ்வளவு தகவல்களை சுவாரசியமாகக் கொடுத்தது பாராட்டுக்கு உரியது. காதல், அன்பு, பயம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு, கோபம், ஆற்றாமை, ஆகியவற்றைச் சூழ்ச்சிகளின் பின்னணியில் துல்லியமாகச் சித்திரித்திருக்கிறார் அக்ஷயா. 'Fantasy' என்று ஆங்கிலத்தில் கூறப்படும் 'மிகைக் கற்பனை' ரகத்தைச் சேர்ந்த கதை இது. எல்லாக் கதைகளிலும் கற்பனை உண்டு, ஆனால் இது கற்பனையையே கதையாக்கும் நூல்.
அக்ஷயா ராமனின் முதல் நூல் இது என்றால் நம்பவே முடியவில்லை. அமெரிக்காவில் வளர்ந்த பெண், ஒரு கற்பனையான மன்னர் காலத்தில், அரண்மனையில் வழங்கிய விருந்தில் இடம்பெறும் அனைத்து உணவுப் பொருட்களையும் பெயர் குறிப்பிட்டு, அவற்றின் சிறப்பையும் விளக்குகிறார்; மகாராணியின் புடவை, புடவை மடிப்பு முதற்கொண்டு, நகை, அணிகலன்களையும் விவரிக்கிறார். ஒரு தேர்ந்த எழுத்தாளரின் சொல்நேர்த்தி இதில் தெரிகிறது. ஒரு கலாசாரத்தை நன்கு ஆராய்ந்து, அதைப் பின்னணியாக வைத்து எழுதுவது அந்த கலாசாரத்திற்கு ஓர் எழுத்தாளர் தரும் கௌரவம். அக்ஷயா ராமன் இந்திய கலாசாரத்தின்மேல் வைத்திருக்கும் மதிப்பையும் மரியாதையையும் தனது கதாபாத்திரங்களின் மூலமாக வெளிப்படுத்துவதை நாம் காண முடிகிறது. இந்த ஆராய்ச்சிக் குணம்தான் ஒரு தேர்ந்த எழுத்தாளரைச் சாதாரண எழுத்தாளரிடமிருந்து தனித்துக் காட்டுவது. ஆராய்ந்துதான் எழுதவேண்டும் என்ற குணமிருப்பதினால், அக்ஷயா ராமன் எந்த நாட்டிலும் இருக்கும் எந்த கலாசாரத்தைப் பற்றியும் எழுதலாம். எழுதவேண்டும் என்று வாசகர்கள் விரும்புவார்கள். அதற்காகக் காத்திருப்பார்கள்.
நூலை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அமேசானில் வாங்க முடியும்.
அக்ஷயா ராமன் குறித்து மேலும் அறிய: akshayaraman.com
Title of the book: The Ivory Key (available in all formats - Hardcover, Paperback, Kindle and Audiobook) Author: Akshaya Raman Publisher: Clarion Books, an imprint of Harper Collins Publshers
இளங்கோ மெய்யப்பன், ஃப்ரீமான்ட் |