திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் சாரதாமணிக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. ஒரு பைத்தியத்திற்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்ததால் அவளது வாழ்க்கையே வீணாகிவிட்டது என்று அடிக்கடிப் புலம்பிக் கொண்டிருந்தார் அவளது தாய்.
ஒரு சமயம் தனது மாப்பிள்ளையின் காது படும்படியாகவே இதைக் கூறிவிட்டார்.
மாப்பிள்ளைக்கு இதைக் கேட்டு ஆத்திரமோ, கோபமோ வரவில்லை, மாறாக, முகம் நிறையப் புன்னகையுடன், "அம்மா, ஏன் இப்படிக் கவலைப்படுகிறீர்கள்? ஒரு பிள்ளை அல்ல, ஓராயிரம் பிள்ளைகள் நாளைக்கு உங்கள் மகளை 'அம்மா, அம்மா' என்று கூப்பிடப் போகின்றனர். இது சர்வ நிச்சயம்" என்றார்.
அந்த அம்மாளுக்கு அதில் நம்பிக்கை வரவில்லை. மாப்பிள்ளை வழக்கம்போல் ஏதோ உளறுகிறார் என்று நினைத்துப் பேசாமல் இருந்துவிட்டாள்.
ஆனால் 'மாப்பிள்ளை'யின் வாக்கு பலித்தது. அந்த 'மகள்' ஆயிரக்கணக்கானோருக்கு 'அம்மா' ஆனார்.
ஆம். இன்றும் லட்சக்கணக்கான பக்தகளுக்கு 'மா'வாக விளங்கும் அன்னை சாரதாதேவி தான் அந்த மகள். அவர் பிற்காலத்தில் ஆயிரக்கணக்கான சாதகர்களுக்கு 'அம்மா 'ஆவார் என்பதை அன்றே உணர்ந்து சொன்ன அந்தப் 'பைத்தியம்' வேறு யாராக இருக்க முடியும்? காளி அன்னையின் மீது மாபெரும் பித்துக் கொண்டிருந்த குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தவிர!
தோற்றம் கல்கத்தாவில் உள்ள ஒரு சிற்றூர் ஜெயராம்பாடி. அங்கு அந்தண குலத்தின் நெறிமுறைகளைத் தவறாது பின்பற்றி வாழ்ந்தவர் ராமச்சந்திர முகர்ஜி. கணவரது அனைத்துப் பணிகளுக்கும் உறுதுணையாக இருந்தவர் சியாமா சுந்தரி தேவி. இவர்களுக்கு டிசம்பர் 22, 1853ல் மகளாகப் பிறந்தவர்தான் க்ஷேமங்கரி என்ற சாரதாமணி. இனிய இல்லறச் சூழலில் சாரதாமணி வளர்ந்தார்.
திருமணம் அவருக்கு ஐந்து வயதானபோது திருமணம் நிகழ்ந்தது. அருகில் உள்ள காமர்புகூரில் வாழ்ந்து வந்த க்ஷுதிராம் சட்டர்ஜி-சந்திரமணி தேவி இணையரின் மகனான, 23 வயது கதாதரனுக்கும், ஐந்து வயது சாரதா தேவிக்கும் 1859ம் ஆண்டு, மே மாதத்தில் திருமணம் நிகழ்ந்தது. உண்மையில் அத்திருமணம் தெய்வ சங்கல்பமாகவே அமைந்தது. காரணம், அக்கால கட்டத்தில் சதா தன்னை மறந்த நிலையில் வாழ்ந்து வந்தார் கதாதரர். தீவிர பிரம்மசாரியாக இருப்பதால்தான் இவ்வாறு இருக்கிறார் என்றும், ஒரு நல்ல பெண்ணாய்ப் பார்த்து மணம் முடித்தால் நிலைமை சரியாகி விடும் என்றும் உறவினர்கள் சிலர் கருதினர். தாய் சந்திரமணி தேவி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், பல இடங்களில் பார்த்தும் சரியான பெண் அமையவில்லை. பித்தரைப் போல வாழ்ந்த ஒருவருக்கு யார் பெண் தர முன்வருவர்? அதனால் சந்திரமணி தேவிக்கு மிகுந்த வருத்தம் உண்டானது. மகனின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று கவலைப்பட ஆரம்பித்தார். நாளடைவில் அந்தக் கவலையே அவரது உடல்நலக் குறைவுக்கு வழி வகுத்தது.
தனக்குப் பெண் தேடுவது கதாதரருக்குத் தெரிய வந்தது. அதனால்தான் அன்னைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்பதையும் அறிந்து கொண்டார். உடனே அந்த முயற்சியை அவர் தீவிரமாக எதிர்ப்பார் என்று அனைவரும் நினைத்திருக்க, கதாதரரோ, ஒருநாள் தன்னை மறந்த பரவச நிலையில், "இதோ பாருங்கள்... எனக்குப் பெண் தேடுகிறேன் என்று அங்கே, இங்கே யாரும் என்று அலைய வேண்டாம். எனக்கு மனைவியாக வரப்போகிறவள், இதோ, இங்கே அருகில் இருக்கும் ஜெயராம்பாடியில் ராமச்சந்திர முகர்ஜியின் வீட்டில்தான் இருக்கிறாள்." என்றார். அப்படித்தான் சாரதா தேவி - ராமகிருஷ்ணர் திருமணம், தெய்வீகத் திருமணமாக நிகழ்ந்தது. பால்ய விவாகம் அக்காலத்தில் சகஜம் என்பதால் வயது வித்தியாசம் போன்ற விஷயங்கள் பெரிதாகக் கணக்கில் கொள்ளப்படவில்லை.
பிரிவு திருமணம் என்பது சிலருக்கு மிகப்பெரிய குறிக்கோள். வாழ்க்கை லட்சியம். இறைவன் கொடுத்த வரம். ஆனால் சிலருக்கோ அது ஒரு சடங்கு. உண்ணுதல், உறங்குதல் போல அதுவும் ஒரு வாழ்க்கை நிகழ்வு. அவ்வளவுதான். அப்படித்தான் ராமகிருஷ்ணர் - சாரதாதேவியின் திருமண வாழ்வும் அமைந்தது. திருமணம் முடிந்து சில நாட்கள்வரை சாரதா கணவர் வீட்டில் இருந்தாள். பின் ராமகிருஷ்ணர், காளிகோவில் பூஜைக்காக தஷிணேஸ்வரம் சென்று விட, சாரதாவும் தன் தாய்வீடு திரும்பினார். அக்காலத்தில் பெண்கள் பள்ளிக்குச் செல்லும் வழக்கம் இல்லை என்பதால் சாரதா பள்ளியில் பயிலவில்லை.
சந்திப்பு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பின் தன் சொந்த ஊரான காமர்புகூருக்குச் சென்றார் ராமகிருஷ்ணர். அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது, மனைவி ஜெயராம்பாடியில் இருக்கிறாள் என்பதைக்கூட உணரமுடியாத நிலையில் அவர் காளி அன்னையுடன் ஒன்றி இருந்த சமயம் அது. ஊருக்கு வந்தபின்தான் அவருக்குச் சாரதா தேவியின் நினைவு வந்தது. உடன் சாரதா தேவி காமர்புகூருக்குப் புறப்பட்டு வந்தார். இரண்டு வருடங்கள் கழித்து அவர்களது சந்திப்பு நிகழ்ந்தாலும் அவர்கள் ஒன்றாக வசிக்க முற்படவில்லை. சில நாட்களுக்குப் பின் ராமகிருஷ்ணர் தக்ஷிணேஸ்வரத்துக்குச் சென்றுவிட, சிறுமி சாரதா வழக்கம் போல் தனது அன்னையின் வீட்டில் வாழ்க்கையைத் தொடர்ந்தார். நாளடைவில் சாரதாவின் உள்ளம் மெல்ல மெல்ல இறை வழிபாட்டின் மீது திரும்பியது.
இப்படியே சில வருடங்கள் கடந்தன.
சில வருடங்களுக்குப் பின் உடல் நலிவுற்ற தனது அன்னையைக் காண வந்தார் ராமகிருஷ்ணர். அவர் காளி அன்னையின் தரிசனத்தைப் பெற்று சதா இறையில் லயித்திருந்த காலம் அது. அன்னை காண விரும்பியதால் அவர் ஊருக்கு வந்திருந்தார்.
கணவர் ராமகிருஷ்ணர் காமர்புகூருக்கு வந்திருப்பது சாரதா தேவிக்குத் தெரியவந்தது. அவர் இளம் பெண்ணாகி விட்டிருந்தார். உறவினர்கள் சிலர், அவள் கணவனுடன் வசிக்கவில்லை என்பதால் பலவாறாகப் பேசி அவள் மனத்தைக் காயப்படுத்தி வந்தனர். அது பெரும் கவலையாக சாரதாவின் மனத்தை வாட்டியது. இந்நிலையில் கணவரின் வருகை அவருக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. பருவப்பெண்ணுக்கே உரிய ஆவலுடன் சாரதா கணவரைக் காண காமர்புகூருக்கு வந்தார்.
உபதேசம் மனைவியைக் கண்டார் ராமகிருஷ்ணர். தம் பொறுப்பினை உணர்ந்தார். அதே சமயம் மற்ற கணவன்மார்கள் போன்று தன்னால் இல்லறத்தை நடத்த முடியாது என்பதையும் அறிந்திருந்தார். ஆகவே அதற்கேற்றவாறு சாரதா தேவியைப் பக்குவப்படுத்த எண்ணினார். சாரதா தேவியைத் தனி அறைக்கு அழைத்த அவர், பல இறை வாழ்வியல் உண்மைகளை அவருக்குப் போதித்தார். "இறைவன் ஒருவனே அனைவரது பாவங்களையும் போக்கும் பேரருளாளன். அவனைச் சரணடைதலே மனித வாழ்வின் லட்சியம். நீ ஒரு குழந்தைக்கு மட்டும் தாயாக இருக்கப் பிறந்தவள் அல்ல. ஓராயிரம் குழந்தைகளுக்குத் தாயாக இருக்க வேண்டியவள். இல்லறத்தில் இருந்துகொண்டே ஆண்டவனை அடையும் சாதனமாக அதை மாற்றவேண்டும். இதுதான் வாழ்வின் லட்சியமாக இருக்க வேண்டும்" என்றெல்லாம் போதித்தார்.
சாரதா தேவியும் அவற்றை உள்வாங்கிக் கொண்டார். கணவரோடு சில காலம் புகுந்த வீட்டில் வசித்தவர், மீண்டும் தன் பிறந்த வீட்டுக்குச் சென்றார். ராமகிருஷ்ணரும் தக்ஷிணேஸ்வரத்திற்குச் சென்றுவிட்டார். அது முதல் சாரதாவின் மனம் பக்தி மார்க்கத்தில் தீவிரமானது. உலகியல் விஷயங்களில் ஆர்வம் குறைந்தது. இறைவழிபாட்டிலும், தியானத்திலும் தனது மனதை ஈடுபடுத்த ஆரம்பித்தார்.
இப்படியே சில வருடங்கள் கடந்தன.
தன் கணவர் வந்து தன்னை அழைத்துப் போவார் என சாரதா தேவி ஜெயராம்பாடியில் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் ராமகிருஷ்ணரோ வரவே இல்லை. காளி அன்னையின் தரிசனம் பெற்ற அவர், அந்தப் பரவச உணர்விலேயே எப்போதும் லயித்திருந்தார். குடும்பம், இல்லறம், மனைவி பற்றிய சிந்தனைகளே அவருக்குத் தோன்றவில்லை. சதா இறையுணர்வில் ஊறித் திளைத்திருந்தார் அவர்.
கணவரைத் தேடி... ஜெயராம்பாடியில் உறவினர்கள் பலரும் சாரதா தேவியின் வாழ்க்கை அவ்வளவுதான் என்றும், கணவர் அவளைக் கைவிட்டு விட்டார் என்றும், இனிமேல் அவள் வாழ்க்கை கேள்விக் குறிதான் என்றும் பலவாறாகப் பேசினர். சாரதா தேவி அதனால், கணவர் இங்கு வராவிட்டால் என்ன, நாம் அவர் இருக்குமிடம் தேடிச் செல்வோம் என்று முடிவு செய்தார். தந்தை ராமச்சந்திரரை அழைத்துக்கொண்டு தக்ஷிணேஸ்வரத்துக்குப் புறப்பட்டார்.
வழியில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் அங்குள்ள ஒரு சத்திரத்தில் தங்க நேர்ந்தது.
விழிப்பும் மயக்கமுமான நிலையில் சாரதா தேவி இருந்தபோது கறுப்பு நிறத் தோற்றம் கொண்ட பெண் ஒருவர் அவரைக் காண வந்தார். சாரதா அவரை யார் என விசாரிக்க, தான் தக்ஷிணேஸ்வரத்தில் இருந்து வருவதாகச் சொன்னார் அந்தப் பெண்.
உடனே சாரதா தேவி, "அங்குதான் என் கணவர் இருக்கிறார், அவரைப் பார்க்கத்தான் நான் போய்க் கொண்டிருக்கிறேன்" என்றார்.
அதற்கு அந்தக் கறுப்பு நிறப் பெண், "ஓ, எனக்கு நன்கு தெரியுமே! நான்தானே அங்கு அவருக்குத் துணையாக இருந்து கவனித்துக் கொண்டு வருகிறேன்!" என்று கூறினாள். பின், "கவலைப்படாதே, உனக்கு உடல்நலம் நன்றாகிவிடும்" என்று கூறிவிட்டு, சாரதாவின் தலையைத் தொட்டு ஆசிர்வதித்து விட்டுச் சென்றுவிட்டாள்.
தான் கண்டது கனவா நனவா என்ற குழப்பம் சாரதாவிற்கு. விடிந்ததும் அவர் உடல்நலம் சரியாகி இருந்தது! மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்.
தக்ஷிணேஸ்வரத்தில்... தஷிணேஸ்வரத்திற்குச் சென்றார். கணவரான ராமகிருஷ்ணரைக் கண்டார். அவரோ பரவச நிலையில் எங்கோ பார்த்தவாறு உட்கார்ந்து கொண்டிருந்தார். சமாதியில் ஆழ்ந்திருந்த அவருக்கு இந்த உலக நினைவே இல்லை என்பதைப் பார்த்த உடனேயே சாரதா புரிந்து கொண்டார். பின் காளி அன்னையைத் தொழுவதற்காக ஆலயத்திற்குள் சென்றார். அன்னையைக் கண்டதும் அளவு கடந்த ஆச்சரியமுற்றாள். காரணம், சத்திரத்தில் தங்கியிருந்தபோது தன்னிடம் வந்து பேசிய கறுப்பு உருவப் பெண்ணின் தோற்றமும், காளி அன்னையின் தோற்றமும் ஒரே மாதிரி இருந்ததுதான்.
மெல்ல மெல்ல அவருக்கு உண்மைகள் புரிய ஆரம்பித்தன. நடந்தவை, நடப்பவை அனைத்தும் காளி அன்னையின் லீலைகளே என்பதும், அவரே தனது கணவரை ஆட்கொண்டு வழி நடத்தி வருகிறார் என்பதும் அவருக்குப் புரிந்தது. பரவசத்துடன் அன்னையைத் தொழுது நின்றார்.
தனது தெய்வீகப் பரவச நிலையிலிருந்து மீண்ட ராமகிருஷ்ணர், மனைவி சாரதா தேவி தன்னைத் தேடி வந்திருப்பதை அறிந்தார். கவலை கொண்டார்.
தனி அறையில் சாரதா தேவியைச் சந்தித்த அவர், "உலகியல் வாழ்விற்கு இழுக்கத்தான் என்னைத் தேடி நீ இங்கு வந்திருக்கிறாயா?" என்று கேட்டார்.
அதற்குச் சாரதா தேவி, "இல்லவே இல்லை, உங்களின் ஆன்மிகப் பணிக்கு உதவுவதே என் லட்சியம். அதுவே என் நோக்கம்! உங்களுக்கு உறுதுணையாக இருப்பதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்" என்றார்"
அதைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சியுற்றார் ராமகிருஷ்ணர். திருமணத்திற்குப் பின் சாரதாவிற்கு இல்லறப் பற்றுக்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று தான் காளி அன்னையிடம் வேண்டிக் கொண்டது வீண் போகவில்லை என்றெண்ணி மகிழ்ந்தார்.
இது குறித்துப் பிற்காலத்தில் ராமகிருஷ்ணர் தனது சீடர்களிடம், "சாரதை மட்டும் தூய்மையானவளாக இருந்திராவிட்டால், நானும் எல்லோரையும் போல புலன்கள் வசப்பட்டு உலகியல் வாழ்வில் வீழ்ந்திருப்பேன்" என்றார்.இதிலிருந்து சாரதா தேவியின் பெருமையை அறிந்து கொள்ளலாம்.
ராமன் இருக்குமிடமே அயோத்தி என சீதை பின்தொடர்ந்தது போல, குருதேவரும் கணவருமான ராமகிருஷ்ணரைத் தேடி, மனைவி சாரதா தேவி வந்து சேர்ந்தது, ஆன்மீக உலகிற்கு மிகப் பெரியதொரு வரப்பிரசாதம் ஆனது.
(தொடரும்)
பா.சு. ரமணன் |