ஆட்டிசம் இன்றைக்கு உலகளாவிய பிரச்சனையாக உள்ளது. ஆட்டிசம் என்பது நோயல்ல. உண்மையில் அது ஒரு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் மற்ற குழந்தைகளைப் போல இயல்பாக எதையும் செய்ய இயலாது. உரையாடலிலும், மற்றவர்களுடனும் கலந்து பழகுவதிலும் அவர்கள் பின்தங்கியே இருப்பார்கள். செய்ததையே மீண்டும் மீண்டும் செய்வது, சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வது, கண் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது என்று பல குறிகளை இவர்களிடம் காணலாம்.
இவர்களை வளர்ப்பதற்குப் பெற்றோர்களுக்கு மிக அதிகப் பொறுமையும் அர்ப்பணிப்பும் தேவை.
இந்நிலையில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நல்வாழ்விற்காக கருவி ஒன்றைக் கண்டறிந்துள்ளார் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர் D. தமிழ்ச்செல்வி. இவரது மெய்நிகர் தொழில்நுட்பக் கருவி (Head Mounted Display - HMD), ஆட்டிசம் குழந்தைகளின் கற்றல் முறையில் உள்ள சிக்கல்களைக் குறைத்து, அவர்களின் புரிதலில் முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவுகிறது.
பேராசிரியர் தமிழ்ச்செல்வி, ரோபாடிக்ஸில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் செயல்பாடுகள், அவர்களின் மூளை அமைப்பு, நிகழ்வுகளை அவர்கள் உள்வாங்கும் திறன் பற்றியெல்லாம் மிக விரிவாக ஆய்வு செய்தவர். ஆய்வில் இவர் கண்டறிந்த உண்மை, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் மற்ற பிற குழந்தைகளைப் போலவே தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உள்வாங்குகிறார்கள் ஆனால் நரம்பியல் சிக்கல்களால் அவர்களால் அதனைச் சரிவரச் செயல்பாட்டில் கொண்டு வர இயல்வதில்லை என்பதுதான்.
அதனை அவர்கள் செயலில் கொண்டு வருவதற்கு என்ன வழி என்று ஆராய்ந்தார் தமிழ்ச்செல்வி. உளவியளாலர்கள், மூளை நரம்பியல் வல்லுநர்கள், மருத்துவர்கள், தொழில்நுட்ப ஆய்வாளர்கள் எனப் பலரிடம் இது குறித்துக் கலந்துரையாடினார். அமெரிக்கா உள்படப் பல நாட்டு வல்லுநர்களிடம் கலந்தாலோசித்தார். பல்லாண்டுக் கால முயற்சிக்குப் பின் இறுதியில் Cognitive Science மூலம் Virtual Reality மற்றும் Augmented Reality (AR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதற்குத் தீர்வு காண முடியும் என்பதைக் கண்டறிந்தார்.
முதலில் AR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆட்டிசம் குழந்தைகளின் கவனச் சிதறல்களைக் குறைத்து, அவர்கள் என்ன பார்க்கிறார்களோ அதனை உணர்ந்து அதற்கான செயல்பாட்டை வெளிப்படுத்தும் கற்றல் முறையை அறிமுகப்படுத்தினார். இதற்குக் குழந்தைகள் மற்றும் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து இந்திய அரசின் Department of Science and Technology (DST), Cognitive Science and Research Institute (CSRI) ஆகியவற்றுக்கு இந்தத் தொழில்நுட்பத்தை விரிவாக விளக்கி, நிதி உதவி வேண்டினார். அவர்கள் 34 லட்சம் நிதி நல்கினர்.
தனது கல்லூரியிலேயே ஒரு மெய்நிகர் அறையை உருவாக்கினார் தமிழ்ச்செல்வி. மெய்நிகர் உலகிற்குள் செல்வதற்கான HMD கருவியை, ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் தலையில் அணிந்து கொண்டால் வெளியுலகின் தொடர்பு நீங்கி, அவர்கள் அந்த மெய்நிகர் உலகில் இருக்க முடியும். அதில் அவர்கள் பார்க்கும் காட்சிகளையும், எழுப்பப்படும் கேள்விகளையும் நன்கு புரிந்துகொண்டு பதில் அளிக்க ஆரம்பித்தனர். இந்த முறையால் அவர்களுக்கு ஒரு விஷயத்தை எளிதில் உணர்த்த முடிந்தது என்பதுடன், அதனை உள்வாங்கி அவர்களால் பதிலளிக்கவும் முடிந்தது. கண்ணுக்குக் கண் பார்த்து பதில் சொல்வது, கவனிப்புத் திறன் மேம்படல், உடனடியான எதிர்வினை என அக்குழந்தைகளால் செயல்பட முடிந்தது, இதன் செயல்பாட்டு வெற்றியை நிரூபித்தது.
இந்த மெய்நிகர் கருவியை பெங்களூருவில் செயல்படும் Nimhans, மதுரையில் செயல்படும் Spark மற்றும் Rakshana Child Care Centre, புதுச்சேரியில் சிறப்புக் குழந்தைகளுக்காகச் செயல்படும் பள்ளிகள் போன்ற மூளை மற்றும் நரம்பியல் சார்ந்து செயல்படும் பல்வேறு இடங்களுக்குச் சென்று பரிசோதித்துப் பார்த்ததில் வெற்றிகரமான முன்னேற்றத்தைக் காண்பித்திருக்கிறது.
இந்தக் கருவியைக் கண்டுபிடித்ததற்காக 'CII Industry Innovation Award 2021' பெற்றிருக்கிறார் தமிழ்ச்செல்வி. பல்வேறு ஆய்விதழ்களில் தனது ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பு குறித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளார். எதிர்காலத்தில் குகை அடிப்படையிலான மெய்நிகர் உலகத்தை உருவாக்க வேண்டும் என்பது இவரது விருப்பம்.
சாதனைப் பெண்மணிக்குத் தென்றலின் வாழ்த்துகள்.
ஸ்ரீவித்யா ரமணன் |