டாக்டர் பாஸ்கரன் ஜெயராமன்
நரம்பியல் மருத்துவர், தோல் மருத்துவர். இவற்றோடு எழுத்தாளர், பேச்சாளர், கட்டுரையாளர், விமர்சகர் எனப் பல திறக்குகளில் இயங்கி வருபவர் டாக்டர் பாஸ்கரன் ஜெயராமன். சென்னை, மேற்கு மாம்பலம் பொது சுகாதார மையத்தின் மருத்துவக் கண்காணிப்பாளர். நோயாளிகள் கவனிப்பு, மருத்துவ விற்பனைப் பிரதிநிதிகளுடன் உரையாடல், சுகாதார மையம் சார்ந்த பணிகள், பொறுப்புகள், சந்திப்புகள் என்று எப்போதும் பரபரப்புடன் இயங்கி வருபவர். எப்படி எழுத நேரம் கிடைக்கிறது என்று அனைவரும் வியக்கும் வண்ணம் சிறுகதைகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்கள் இவற்றோடு மருத்துவக் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார். சென்னையில் தனியார் இயன்முறைக் (PHYSIOTHERAPY) கல்லூரிகளில் நரம்பியல் துறை வருகைப் பேராசிரியரும் கூட. தொலைக்காட்சிகளில் மருத்துவம் மற்றும் இலக்கியம் தொடர்பான பல நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர். தனது மருத்துவ மற்றும் எழுத்துப் பணிகளுக்காக பல்வேறு விருதுகளும் பாராட்டுதல்களும் பெற்றவர். இதோ, டாக்டர் பாஸ்கரன் பேசுகிறார்.

★★★★★


பள்ளிப் பருவத்தில்...



கே: சிதம்பர நினைவுகளில் இருந்து தொடங்குவோமா?
ப: சிதம்பரம், நான் பிறந்த ஊர். ஆரம்பப் பள்ளிப்படிப்பு எட்டாவது வரை அங்குதான். ஒரு கூட்டுக் குடும்பத்தின் நன்மைகள், கஷ்டங்கள் அனைத்தையும் உணர்ந்த இளமைப் பருவம். அம்மாவழித் தாத்தா, பாட்டி மாமா, மாமி, சித்தி எனப் பெரிய குடும்பம். தாத்தா வைதீக பிராமணர் - கனபாடிகள். மற்ற எல்லோரும் படித்து பேராசிரியர்களாகவும், பள்ளிக்கூட ஆசிரியர்களாகவும் இருந்தனர். கட்டுப்பாட்டுடனும், அதே சமயம் எல்லாச் சலுகைகளுடனும் வளர்ந்தவன் நான்.

காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு பள்ளிக்கூடம், மாலை கொஞ்சம் விளையாட்டு - நடராஜா கோயில், கீழத்தெரு மாரியம்மன் கோயில், தில்லைக் காளியம்மன் கோயில் எனப் பாட்டி கைப்பிடித்துச் சென்றது நினைவிருக்கிறது. ஆனந்தவிகடன், குமுதம், பொம்மை, பேசும்படம், ரீடர்ஸ் டைஜஸ்ட் எனப் பல பத்திரிகைகள் வரும். சிலவற்றைப் படித்திருக்கிறேன். மாதம் ஒன்றோ, இரண்டோ சினிமாவும் உண்டு. இப்போது திரும்பிப் பார்க்கும்போது, 'சிதம்பர நினைவுகள்' ஆரோக்கியமானதாகவே இருக்கின்றன. சிதம்பர நாட்களின் பல சுவாரஸ்யமான அனுபவங்களை என் 'அது ஒரு கனாக்காலம்' புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.

நூல் வெளியீடு



கே: அருமை. சாதாரண நடுத்தர வர்க்கப் பின்னணியிலிலிருந்து மருத்துவராக உயர்ந்திருக்கிறீர்கள். அதுபற்றிச் சொல்லுங்கள். மருத்துவராகும் கனவு உங்களுக்குச் சிறு வயதிலேயே இருந்ததா?
ப: சின்ன வயதில் அந்தக் கனவெல்லாம் கிடையாது. சொல்லப் போனால், டாக்டர் என்றாலே பயம். ஊசி போட்டுக்கொள்ளக்கூட ஊரைக் கூட்டும் ஜாதி நான்! சின்னம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ள, எல்லோரும் வரிசையில் நிற்க, நான் 'ஓ'வென்று அழுதபடி ஓட, தலைமை ஆசிரியர் உமாபதி சார் பின்னாலேயே துரத்திப் பிடித்து வாக்சினேஷன் போட்டுக்கொண்ட கதையும் உண்டு. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் நிறைய மார்க் வாங்கி, நேஷனல் மெரிட் ஸ்காலர்ஷிப் கிடைத்ததாலும், என் தாய்மாமாவின் அறிவுரையாலும், இறைவன் அருளாலும், அதிர்ஷ்டத்தாலும் (அப்போதிருந்த அரசியல் நிலைமை அப்படி!) நானும் மருத்துவனாகி விட்டேன்!

பாஸ்கரனின் அன்னையார் சாவித்ரி



கே: மருத்துவப் படிப்பு மற்றும் பணிகளில் நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள், சவால்கள் என்னென்ன?
ப: அப்போதெல்லாம் பி.யூ.சி. ஒரு வருடம். பிறகு மேல்படிப்பு. முதலில் மருத்துவ சீட் கிடைக்கவில்லை. அதனால் ஒரு வருடம் பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி படித்து, நண்பர்களின் தூண்டுதலால் மீண்டும் முயற்சித்தேன். கிரேடுக்கு பதில் மார்க் வைத்து விண்ணப்பித்ததில், முதல் பத்து இடத்துக்குள் இருந்ததால், எந்தவிதச் சிபாரிசும் இன்றி மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. குடும்பச்சூழல் காரணமாக புத்தகங்கள் வாங்க முடியாது. லைப்ரரி, சீனியர் கொடுக்கும் புத்தகங்கள், வகுப்பில் எடுத்துக்கொள்ளும் குறிப்புகள் என வாசிப்பு தொடர்ந்தது. மருத்துவக் கல்லூரியில் சேர்வது எவ்வளவு கடினமோ, அதைவிடக் கடினம், ஒழுங்காகப் படித்து தேர்ச்சி பெற்று வெளியே வருவதும்! எந்தவிதப் பின்புலமும் இல்லாமல், மருத்துவம் பயின்று, மருத்துவராக வெற்றி பெறுவது எளிதானதல்ல.

அப்பா.. அன்புள்ள அப்பா...
அப்பாவின் மாதச் சம்பளம் எழுபத்தைந்து ரூபாய். நான் SSLC-யில் எடுத்த மார்க்குக்கு (இந்தியாவிலேயே 75 ஆவது ரேங்க்) அஞ்சல் துறையில் வேலை கிடைக்கும். அறுநூறு ரூபாய் வரை சம்பளம் உண்டு. என் அப்பாவின் நிலையில் வேறு யாராக இருந்தாலும், என்னை வேலைக்கு அனுப்பியிருப்பார்கள். ஆனால் என் அப்பா எடுத்த முடிவு என்னால் மறக்க முடியாதது. "நான் படிக்கலை. நீ நல்ல மார்க் வாங்கியிருக்க. ஒரு பி.எஸ்சி, எம்.எஸ்சி. வாங்கி ஒரு காலேஜ்ல வேலைக்குப் போ. குடும்பத்த நான் பார்த்துக்கிறேன்." அவரது தீர்க்கமான முடிவு, இன்று என்னை ஒரு மருத்துவனாக ஆக்கியுள்ளது. Be faithful to your daily routine - இதுதான் அப்பாவின் தாரக மந்திரம். பொய், ஏமாற்று, வீண் பேச்சு எதுவும் கிடையாது. வீட்டில் ஒரு டைப்ரைட்டர் வைத்துக்கொண்டு, காலையும், மாலையும் அவர் உழைத்த உழைப்பு இன்று எங்களை இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ளது. தானுண்டு, தன் வேலையுண்டு என்று நெறியுடன் வாழ்ந்தவர். இறக்கும்வரை விடாமல் சபரிமலை சென்று வந்தவர். மீண்டும் பிறந்தால் அவரே எங்களுக்குத் தகப்பனாராக வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனையாக இருக்கிறது.

- டாக்டர் பாஸ்கரன் ஜெயராமன்.


நான் நல்ல மார்க்குடன் எம்.பி.பி.எஸ். தேர்ச்சிபெற்றும், வேண்டிய மேற்படிப்பு எனக்குக் கிடைக்கவில்லை. கிடைத்த டிப்ளமோவில் (தோல் மருத்துவம்) சேர்ந்து நல்ல மார்க் வாங்கியும் மேலே எம்.டி. கிடைக்கவில்லை. ஐந்து வருடங்களாக வெயிட்டிங் லிஸ்டில் முதல் பெயர் என்னுடையதுதான் - நான் சார்ந்த ஜாதிக்கு அரை சீட்தான் ஒதுக்கீடு! - மத்திய, நடுத்தரக் குடும்பச் சூழலால் எனக்கு வேலை வேண்டியிருந்தது - மூன்று வருடங்கள் டாக்டர் சாந்தா அவர்களின்கீழ் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் வேலை செய்தேன். பின்னர் புகழ் பெற்ற நரம்பியல் நிபுணர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீனிவாஸ் அவர்களின் வழிநடத்தலில், லண்டன் குயின் ஸ்கொயர் - National Hospital for Nervous diseases-ல் டிப்ளோமா இன் கிளினிகல் நியூராலஜி பட்டம் பெற்றேன். கடந்த 38 வருடங்களாக சென்னை, மேற்கு மாமபலம் பப்ளிக் ஹெல்த் சென்டரில், நரம்பியல் மருத்துவராகப் பணி புரிந்து வருகிறேன். கடந்து வந்த பாதையில் பல தடங்கல்கள். திறமை ஒன்றை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு படிப்படியாக முன்னேறியதில் எனக்குப் பெருமைதான். அதற்கு உடனிருந்து உதவிய அனைவரையும் நான் மறப்பதற்கில்லை.

இலக்கிய பீடம் விருது



கே: பணிகளின் போது நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவங்கள் குறித்துப் பகிர்ந்து கொள்ள இயலுமா?.
ப: மேற்கு மாம்பலம் ஹெல்த் சென்டர், 1953ம் வருடம், மிகச் சிறந்த காந்தீயவாதியும், பத்திரிகையாளருமாகிய திரு எம்.சி. சுப்ரமணியம் அவர்களால் தொடங்கப்பட்டது. கடந்த நான்கு வருடங்களாக நான் மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணி புரிகிறேன். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்து ஊழியர்களும் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிந்து வருகின்றனர். 2015 வெள்ளம் வந்தபோது, தரைத்தளம் முழுவதும் நீரில் மூழ்க, மேல் இரண்டு தளங்களில் இருந்த நோயாளிகளையும் அவர்களுடன் தங்கியவர்களையும் மூன்று, நான்கு நாட்களுக்குப் பாதுகாத்து, உணவு கொடுத்து கவனித்துக்கொண்டதை, செவிலியர்களின் சேவையை, என்றுமே மறக்க முடியாது. அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 150 படுக்கைகள், 300க்கும் அதிகமான ஊழியர்கள், தினமும் 500க்கும் அதிகமான நோயாளிகள் என இயங்கும் இந்த மருத்துவமனையில் பணி புரிவதே நிறைவான, சுவாரஸ்யமான விஷயம்தான்.

அழகிய சிங்கர், அசோகமித்திரன், பாஸ்கரன்



கே: சிறுகதை, கட்டுரை என்று எழுத்துலகில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். மருத்துவப் பணிகளின் ஊடே இவற்றுக்கெல்லாம் எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?
ப: மருத்துவம் என் முதற் பணி. அதற்கான நேரம் போக, கிடைக்கும் நேரத்தில், தோன்றும்போது எழுதுகிறேன். மதியமோ, இரவு 10 மணிக்குப் பிறகோதான் எழுத முடிகிறது. எழுதுவதற்கான மனநிலை எப்போது கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எழுத வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது. கிடைக்கின்ற நேரத்தில் முடிந்தவரையில் எழுதுகிறேன்.

சகோதரர் பாலசுப்பிரமணியனுடன்



கே: நீங்கள் விரும்பி வாசிக்கும் முன்னோடி மற்றும் சமகால எழுத்தாளர்கள் யார், யார்?
ப: உண்மையில் மிகவும் சிக்கலான கேள்வி! மூத்த எழுத்தாளர்களில் கல்கி, தேவன், புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபலன், கு. அழகிரிசாமி, நா. பார்த்தசாரதி, க.நா. சுப்ரமண்யம், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி, ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், சுஜாதா, பாலகுமாரன், சிவசங்கரி என எல்லோருடைய படைப்புகளையும் முழுவதும் இல்லாவிட்டாலும், சிறிதளவாவது வாசித்திருக்கிறேன். மற்றும் பிரபஞ்சன், நாஞ்சில்நாடன், சாருநிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன்., இரா. முருகன் (சில பெயர்கள் விடுபட்டிருக்ககலாம்) போன்றவர்களின் படைப்புகளையும் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொருவித தனித்தன்மையுடன் எழுதுபவர்கள். ஒரு எழுத்தாளருடைய எல்லாப் படைப்புகளும் ஒருவருக்குப் பிடிக்கும் என்று சொல்லமுடியாது. ஒரே படைப்பு எல்லாக் காலங்களிலும் பிடிக்கும் என்றும் சொல்ல முடியாது. காலம் கடந்து நிற்கும் படைப்புகள் - பொன்னியின் செல்வன், மோகமுள், காதுகள், ஒரு வீடு-ஒரு மனிதன்-ஒரு உலகம், மானசரோவர் போன்ற படைப்புகள் என்றும் வாசிக்கத்தக்கவை! இதில் மகாகவி பாரதியின் படைப்புகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

நாஞ்சில் நாடனுடன்



கே: உங்களைப் பாதித்த எழுத்து என்று யாருடையதைச் சொல்வீர்கள்?
ப: தூங்கவிடாமல் செய்த படைப்பு ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. தி. ஜானகிராமனின் எழுத்தில் உள்ள கலையழகு; அசோகமித்திரனின் ஆர்ப்பாட்டம் இல்லாத ஆழமான எழுத்து; புத்திசாலித்தனத்துடன், சமகால அறிவியலைச் சேர்த்து எழுதும் சுஜாதாவின் நடை; இப்படி ஒவ்வொரு எழுத்தாளரிடமும் சிறப்பான ஒரு பாணி இருக்கிறது. ஜெயமோகன், வண்ணநிலவன், யுவன் சந்திரசேகர், ஸிந்துஜா ஆகியோரையும் வாசிக்கிறேன். நான் அதிகம் வாசித்தது தி. ஜானகிராமனையும் அசோகமித்திரனையும்தான்.



கே: அசோகமித்திரன், எழுத்தாளர் விக்கிரமன், இயக்குநர் விசு எனப் பல பேருக்கு நீங்கள் நண்பராகவும், மருத்துவராகவும் இருந்திருக்கிறீர்கள். அவர்களுடனான உங்கள் நினைவுகளைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்ள இயலுமா?
ப: 'விருட்சம்' அழகியசிங்கர்தான் அசோகமித்திரன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்தார். முன்னதாக அசோகமித்திரனின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். என்னைக் கவர்ந்தது அவரது எளிமை - வாழ்கையிலும், எழுத்திலும்! இரண்டிலும் தெரியும் எளிமைக்குள்ளே இருக்கும் அழுத்தமும் ஆழமும் மிக அதிகம். அவரது எழுத்திலும், பேச்சிலும் இழைந்தோடும் அங்கதமும், நகைச்சுவையும் பிரத்தியேகமானவை. எனது 'அப்பாவின் டைப்ரைட்டர்' புத்தகத்தை வெளியிட்டு, வாழ்த்தியதை வாழ்நாளில் மறக்கமுடியாது. அவருடைய படைப்புகளை வாசிக்கும்போது, அவருடன் பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு வரும் - அது அவருடன் பழகியவர்களுக்குத்தான் தெரியும். அசோகமித்திரனுக்கு என்னைத் தெரியும் என்பதில் எனக்குப் பெருமையே.

டாக்டர் சாந்தா: கற்றதும் பெற்றதும்
அரசுக் கொள்கைகள், அரசியல் முரண்களால் தோல்மருத்துவப் படிப்பில் டிப்ளமோ வாங்கிய பிறகும் எனக்கு மேலே படிக்கவோ, அரசுப் பணியில் அமரவோ வாய்ப்பில்லாமல் போனது. குடும்பச் சூழ்நிலை, எனக்கு ஒரு வேலை தேவை என்றது. அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில், 1981ம் வருடம் மெடிகல் ஆபீசராகச் சேர்ந்தேன், ஒரு நேர்முகத்தேர்வுக்குப் பிறகு; சேர்த்துக்கொண்டவர் டாக்டர் சாந்தா அவர்கள். கிட்டத்தட்ட இரண்டு வருடம் எட்டு மாதங்கள், டாக்டர் சாந்தா அவர்களின் நேரடி வழிகாட்டுதலில், அவருக்கு உதவி மருத்துவனாக நான் கற்றுக் கொண்டவை புற்றுநோய் மருத்துவம் மட்டும் அல்ல – மனிதநேயமும், நேர்மையும், கண்டிப்பும், மருத்துவ தர்மங்களும் (Ethics) கூட! தனிப்பட்ட முறையில் என்மீது மிகுந்த அக்கறையும் அன்பும் கொண்டவர். என் மகள் திருமணத்திற்கு, முப்பது கிலோமீட்டர் தாண்டி வானகரம் வந்து வாழ்த்தியதை வாழ்நாள் உள்ளவரை மறக்கமாட்டேன். 'தலைவலி' புத்தக வெளியீட்டிற்கு வந்து, முதற் பிரதியைப் பெற்றுக்கொண்டு வாழ்த்தியதை பெரும்பேறாக எண்ணி என்னுள் கரைகிறேன். என் அழைப்புக்கிணங்கி, மேற்கு மாம்பலம் ஹெல்த் சென்டருக்கு வந்து 'டாக்டர்ஸ் டே' அன்று சிறப்புரை ஆற்றியதை மறக்க முடியாது.

'இன்றைய மருத்துவ தர்மங்கள்' குறித்த தனது வருத்தத்தை வெளிப்படுத்தத் தயங்கியதே இல்லை டாக்டர் சாந்தா. "தேவை இல்லாத பரிசோதனைகளைத் தவிர்க்கவேண்டும். இயந்திரம் இருக்கிறது என்பதற்காக டெஸ்ட்டுகள் எடுக்கக்கூடாது. டாக்டர்– நோயாளி தொடர்பு, நோய் குறித்த தெளிவை நோயாளிக்கு ஏற்படுத்த வேண்டும். டெஸ்ட்டுகளை விட நோயாளியுடன் சிறிது கூடுதல் நேரம் பேசுவதும், விரிவான கிளினிகல் பரிசோதனையும் நோயையும், நோயாளியையும் அறிய மிகவும் உதவும்" என்பதில் அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை. இன்றைய மருத்துவர்கள் அனைவரும் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய மருத்துவ தர்மம் இது என்பதில் சந்தேகமே இல்லை.

- டாக்டர் பாஸ்கரன் ஜெயராமன்.


திரு. விக்கிரமன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது கவிஞர் பாலசாண்டில்யன். விக்கிரமன் அவர்களை முதன்முதலாக அவரது வீட்டில் சந்தித்து உரையாடியது மறக்க முடியாதது. பின்னர் ஓரிரு முறை அவரை வீட்டிலேயே சந்தித்திருக்கிறேன். அருமையான மனிதர். அந்த வயதிலும், அமுதசுரபியில் வெளியான முக்கியமான படைப்புகளைத் தொகுப்பதில் மிகவும் ஆர்வமாயிருந்தார். அவரது சரித்திர நாவல்களும், சிறுகதைகளும், அனுபவக் கட்டுரைகளும் இன்றும் வாசித்துப் பயன்பெறத் தக்கவை.

திரு விசு அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் 'உரத்தசிந்தனை' உதயம்ராம். ஏதோ மருத்துவ ஆலோசனை. முதல் சந்திப்பிலேயே மிகவும் நெருக்கமான நண்பரைப் போல விசு பழகியது எனக்கு வியப்பளித்தது. அமெரிக்காவிலிருந்து போன் செய்து, சந்தேகங்கள் கேட்கும் அளவிற்கு, நான் அவரது நட்பு வட்டத்தில் இருந்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. மருத்துவனாக என்னை எவ்வளவு மதித்தாரோ, அதே அளவு என் எழுத்துக்களையும் மதித்தார். 'அப்பாவின் டைப்ரைட்டர்' வாசித்து அவர் அனுப்பிய குறுஞ்செய்திகளை இன்னும் வைத்திருக்கிறேன். அவற்றில் ஒன்று: "Tamil is at your command... you are not searching for thoughts or descriptions or words… humour, Realism and emotions are running in a race in your pen Mr.Loyalty Bhaskaran. A detailed review will follow.. Visu.



கே: ஒருவரது நரம்பியல் சிக்கல்களின் தீவிரத்திற்கும் அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா?
ப: இல்லை. அது ஒரு மெடிகல் 'மித்' (Medical Myth). சில மனோவியாதிகள் பெளர்ணமியில் அதிகரிப்பதாக நினைப்பதற்கும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை. அது காலம் காலமாக நம்மிடையே இருந்து வரும் ஒரு நம்பிக்கைதான்!

கே: இசை, மனம், மூளை இவற்றுக்கிடையேயான ஒருங்கிணைப்பு பற்றிப் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்கள். அது பற்றிச் சுருக்கமாக விளக்க முடியுமா?
ப: இசையை உருவாக்குவது, இசைப்பது, கேட்பது, கேட்டு பரவசப்படுவது – எல்லாவற்றுக்கும் ஆதாரம் மூளையின் செயல்பாடுகளே! இதனை அறிவியல் பூர்வமாக அறிய இன்று மிக நுணுக்கமான டெக்னாலஜிகள் – எஃப்.எம்.ஆர்.ஐ (Functional Magnetic Resonance Imaging), பெட் – (Positron Emission Tomography), மேக்னெடோ என்செஃபலோகிராம் (Magneto Encephalogram) - போன்றவை இருக்கின்றன. இவற்றின் மூலம், இசையினால் மூளையின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை அறிய முடியும். மூளையின் ரத்த ஓட்டம் அதிகமாவதையும், நியூரான் செயல்பாடுகள் கூடுவதை அல்லது குறைவதைக் கொண்டு, இசையின் ஸ்வரம், பிட்ச், ரிதம், டோன் போன்றவை உருவாகும் பகுதிகளையும், அவை உருவாக்கும் மாற்றங்களையும் அறிய முடியும்.

டாக்டர் பாஸ்கரன் ஜெயராமன் நூல்கள்
* சரும நோய்கள் (சங்கடம் முதல் சந்தோஷம் வரை) (2008)
* வலிப்பு நோய்கள் (2010)
* தலைவலியும் பாதிப்புகளும் (2014)
* அப்பாவின் டைப்ரைட்டர் - வாழ்வியல் கட்டுரைகள் தொகுப்பு (2016)
* 'தேடல்' - சிறுகதைத் தொகுப்பு (2017)
* 'அது ஒரு கனாக்காலம்' - கட்டுரைத் தொகுப்பு (2018)
* 'குவிகம்' கடைசிப் பக்கம் - கட்டுரைத் தொகுப்பு (2019)
* 'கிணற்றுக்குள் காவிரி' - சிறுகதைத் தொகுப்பு (2020).
* படித்தேன்… ரசித்தேன் - புத்தக விமர்சனக் கட்டுரைகள் தொகுப்பு (2021).
* இலக்கிய முத்துக்கள் - 20 இலக்கியவாதிகள் குறித்த வாசிப்பனுபவம் சார்ந்த கட்டுரைகள் (2021)
* தி.ஜா. நூற்றாண்டு - திஜா 50 சிறுகதைகள் ஒரு பார்வை (2021)
* Search and other short stories (Translated by RV.Rajan - 'தேடல்' சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு)


'டெமென்ஷியா'வில் 'மறதி' என்பது முக்கியமான குறைபாடு – எல்லாவற்றையும் மறந்துவிட்டாலும், இசைக் கருவிகளை வாசிக்கும் திறமை மட்டும் மறப்பதில்லை! அதுபோலவே, சிலவகை இசைப் பயிற்சிகள் நினைவாற்றலை அதிகப்படுத்துகின்றன! மூளையின் இடப்பக்கம் தூண்டப்படுகிறது. இவையெல்லாம் இசை மூலம் டெமென்ஷியாவுக்குச் சிறிது சிகிச்சை அளிக்கமுடியும் என்னும் நம்பிக்கையைக் கொடுக்கின்றன.

நல்ல ரிதமுடன் கூடிய இசை, பார்க்கின்சன் மற்றும் ஸ்ட்ரோக் நோயாளிகளின் நடையில் நல்ல முன்னேற்றம் தருவதாகக் கண்டுபிடித்துள்ளார்கள்! மூளை வளர்ச்சி குன்றிய சில குழந்தைகளுக்கு, பாடும் திறமை மட்டும் வளர்ந்திருக்கிறது. எதிர்காலத்தில், "இவருக்கு சங்கராபரணம் வயலினில் முப்பது நிமிடமும், தோடி ராக ஆலாபனை முப்பது நிமிடமும், அமீர் கல்யாணி சித்தாரில் முப்பது நிமிடமும் வாசிக்கவும்!"; "இவருக்கு இருபது நிமிடம் ஜதி மட்டும் சொல்லவும்" - என்பது போன்ற ப்ரிஸ்க்ரிப்ஷன்கள் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!



கே: 'நீட் தேர்வு' குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: அந்தக் காலத்தில் நாங்கள் மெடிகல் சேர்வதற்கு பி.யூ.சி. மதிப்பெண்கள், சில நற்சான்றிதழ்கள் மற்றும் நேர்காணலின் மதிப்பெண்கள் எல்லாம் தேவைப்பட்டன. அதிலும் வேண்டுபவர், வேண்டாதவர் பேதங்கள் இருந்தன. பெரும்பான்மையாக, மருத்துவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. இருந்தாலும், தகுதிக்கும் மதிப்பு இருந்தது. பின்னர் அரசியல் குறுக்கீடு வந்த பிறகு மெடிகல் சீட் பேரம் பேசப்பட்டது! மேலும் புதியதாய் வந்த தனியார் மருத்துவக் கல்லூரிகள் மருத்துவக் கல்வியை வியாபாரமாக்கின. இந்தச் சிக்கலான சூழ்நிலையில், தகுதி வாய்ந்த அனைவருக்கும் மருத்துவம் பயில வாய்ப்பளிப்பது 'நீட்' தேர்வு என்பது என் கருத்து.

கே: சாவித்திரி ஃபவுண்டேஷன் குறித்துச் சில வார்த்தைகள்..
ப: எங்கள் அன்னை சாவித்திரியின் பெயரில் என் மூத்த சகோதரர் திரு ஜெ. பாலசுப்பிரமணியன் அவர்கள் நடத்தி வருவது 'சாவித்திரி ஃபவுண்டேஷன்.' ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உதவி, ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி, கலை கலாச்சார நிகழ்வுகளுக்கு ஆதரவு, நல்ல புத்தகங்கள் வெளியீடு எனப் பல சமுதாய மேம்பாட்டு உதவிகளைச் செய்து வருகிறது அவ்வமைப்பு. அவரது சேவைகளைப் பாராட்டி, சமீபத்தில் தமிழ்நாடு அரசு அவருக்குக் 'கலைமாமணி' விருதளித்து கெளரவித்துள்ளது.

டாக்டர் பாஸ்கரன் ஜெயராமன் பெற்ற விருதுகள்
* இந்திய மருத்துவ அசோசியேஷனின் கோடம்பாக்கம் கிளை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது
* பவித்ரம் தொண்டு நிறுவனம் வழங்கிய 'சேவா சக்ரா' விருது
* அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய "மருத்துவ மாமணி" விருது
* நாதபிரம்மம் அகாதமி - Award of Excellence in Medical field
* புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய 'மக்கள் நல மருத்துவர்' விருது
* டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பன் விருது
* தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு; சிறந்த ஆசிரியருக்கான விருது (வலிப்பு நோய்கள் நூலுக்காக அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் வழங்கப்பட்டது)
* 'தலைவலி' நூலுக்காக உரத்த சிந்தனை அமைப்பு வழங்கிய ஆடிட்டர் என்.ஆர்.கே. விருது.
* 'அப்பாவின் டைரைட்டர்' நூலுக்காக அமெரிக்காவின் உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வழங்கிய "Best Appreciation Award"
* நெய்வேலி புத்தகக் கண்காட்சி வழங்கிய 2018ம் ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர் விருது.
* 'கிணற்றுக்குள் காவிரி' சிறுகதைத் தொகுப்புக்கு, சிறந்த நூலுக்கான 'கவிதை உறவு' விருது
* கி.வா.ஜ. நினவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு.
* 'இலக்கியப் பீடம்' சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு உள்பட பல்வேறு விருதுகள், பரிசுகள், பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
முகநூல் பக்கம்: facebook/bhaskaran.jayaraman


கே: உங்கள் குடும்பம் பற்றி...
ப: மிகவும் சாதாரண, எளிய குடும்பம் எங்களுடையது. பல இடர்களையும், ஏழ்மையையும் கடந்து இன்று நாங்கள் முன்னேறியதற்குக் காரணம் எங்கள் பெற்றோரும், இறையருளுமே. கல்வி ஒன்றே ஒருவரை வாழ்வில் மேல்நோக்கி அழைத்துச் செல்லும் என்பதற்கு எங்கள் குடும்பம் ஓர் உதாரணம். என் மனைவி ஒரு வங்கி அதிகாரி. மூத்த மகள் பல் மருத்துவர் - யூ.எஸ்.ஸில் சாண்டா கிளாராவில் வசிக்கிறார். இளைய மகள் கனடாவில் வழக்குரைஞராக இருக்கிறார்.

ஒரு மருத்துவருக்குரிய 'பொறுமை'யும், எழுத்தாளருக்குரிய எளிமையும் வெளிப்படுகின்றன அவரது பேச்சில். டாக்டர் பாஸ்கரன் ஜெயராமனின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தி விடைபெறுகிறோம்.

உரையாடல்: அரவிந்த்

© TamilOnline.com