ராமாயணத்தில் அயோத்தியா காண்டம் படித்துக் கொண்டிருந்தேன். லக்ஷ்மணன் தாயாகிய சுமித்திரா தேவியைப்பற்றிப் படித்தபோது என் மனத்தில் ஒரு பெரும் வியப்புத் தோன்றியது. ஆசிரியர் அவளைப்பற்றிக் கூறியிருப்பதோ வெகு கொஞ்சம். அப்படி இருந்தும் ஏதோ பக்கம் பக்கமாக எழுதி அவள் குணத்தை எடுத்துரைத்திருப்பது போன்ற பாவம் ஏற்படுகிறதல்லவா என்று வியந்தேன். சுமித்திரையின் சித்திரத்தை வரைவதற்குக் கவி அதிகப் பாடுபடவில்லை. ஆயினும் அவள் உருவம் என்றும் அழியாமல் நம் உள்ளத்தில் பதிந்துவிடுகிறது. சிற்சில வார்த்தைகளாலேயே அவள் மனப்பான்மை முழுவதும் நமக்கு மிகவும் தெளிவாக வெளியாகிறது. இத்தகைய சக்தி தெய்வப் புலமை வாய்ந்தவர்களுக்கல்லாது வேறு யாருக்கு இருக்க முடியும்?
பாத்திரங்களின் குணாகுணங்களை அவர்கள் சம்பாஷணை, நடவடிக்கை இவற்றின் மூலமாகவே வெளியிட்டு அவர்களை உயிர்பெற்றவர்களாகச் செய்வது நாடக ஆசிரியர்களுக்கே அமைந்த ஒரு தனி முறை. இந்த அற்புத சக்தியின் பெருமையை ஆங்கில மகாகவியாகிய ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் நாம் பெரிதும் காணலாம். As you like it என்னும் நாடகத்தில் கதாநாயகியான ராஸலிண்டு யாவரையும் விட அதிகமாகப் பேசுகிறாள். வேடிக்கையும் விநோதமும் பொருந்திய அவள் மொழிகள் எப்போதும் சலசலவென்று இனிய சத்தமிட்டு ஓடிக்கொண்டிருக்கும் சிறிய மலை அருவியை ஞாபகப்படுத்துவதாக இருக்கின்றன. அத்துடன் பெரும் கஷ்டங்களின் மத்தியிலும் சற்றும் வாட்டமுற்று ஓய்ந்து போகாத அவள் உற்சாக குணத்தையும் வெகு அழகாக இது எடுத்துக்காட்டுகிறதல்லவா? ஆனால் லீயர் (Lear) என்னும் நாடகத்தில் கார்டீலியா (Cordelia) என்னும் ராஜகுமாரியின் விஷயத்தில் கவி என்ன முறையைக் கையாளுகிறார்? ராஸலிண்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கார்டீலியாவை வெறும் ஊமை என்றே சொல்லி விடலாம். அவள் அவ்வளவு குறைவாகவே பேசுகிறாள். ஆயினும் அந்தச் சில வார்த்தைகளில் பொய்யை அடியோடு வெறுக்கும் அவள் உயர்ந்த சுபாவமும், சகோதரிகள் வயதுசென்ற தந்தையை வஞ்சிக்கும் அற்பத்தனத்தைக் கண்டு அவள் அடையும் வருத்தமும் கோபமும் எவ்வளவு தெளிவாகத் தெரிகின்றன
அவ்வாறே ராமாயணத்தில் சுமித்திரையைப்பற்றி நினைக்கும்போது பரிசுத்தமும் அடக்கமும் நிறைந்த ஓர் இனிய வடிவம் நம் முன் தோன்றுகிறதென்றால் மிகையில்லை. ஆகாயத்தில் வெகு தூரத்தில் தெரியும் நக்ஷத்திரமானது உற்று நோக்கினால் அல்லாது கண்களுக்குப் புலப்படுவது அரிதாயிருப்பது போல் சுமித்திரையின் சிறந்த குணமும் கவனித்துப் பார்த்த பிறகே நம் அறிவுக்கு எட்டுவது சாத்தியமாகிறது. ராமாயணம் முழுவதும் தேடிப் பார்த்தாலும், ராமருக்கு அடுத்தபடியாகப் பெரிய துன்பங்களின் மத்தியிலும் மனம் கலங்காது அமைதியாக இருந்தவர் வேறு யாரேனும் உண்டோவெனில் அது சுமித்திரையே என்று நாம் உறுதியாகக் கூறலாம்.
சுமித்திரையைப்பற்றிக் கூறும்போது பரதனுடைய தாயாகிய கைகேயியின் நினைவும் நமக்குக் கூடவே உண்டாவது சகஜம். அவ்விருவருடைய மனப்பான்மையையும் நாம் ஒப்பிட்டுப் பாராமல் இருக்க முடியாது. சுமித்திரை தசரத சக்கரவர்த்தியின் மூன்று பிரதான மகிஷிகளில் ஒருத்தி எனினும் அம்மூவருடைய நிலைமையிலும் ஏற்றத்தாழ்வு அதிகமாகவே தென்படுகிறது. தசரதனுடைய மூத்த மனைவி என்பதுடன் அனைவருடைய உள்ளங்களையும் கொள்ளை கொண்ட ஜேஷ்டபுத்திரன் ஸ்ரீராமனுடைய தாய் என்ற கௌரவம் கௌசல்யாதேவிக்குத் தானாகவே அமைந்திருக்கிறது. அதனுடன் வேறு பெருமை எதுவும் போட்டிபோட முடியாது. ஆனால் கடைசி மனைவியாகிய கைகேயியோ மற்ற இருவரிலும் இளையவள்; எழில் மிகுந்தவள்; வயது முதிர்ந்த அரசனுடைய எல்லையற்ற அன்புக்குப் பாத்திரமானவள். இதனால் அவளுக்கு ஏற்பட்ட செல்வாக்கு மிகவும் அதிகம். கைகேயியின் அத்தகைய செல்வாக்காவது, கௌசல்யையின் இயற்கையாயுள்ள பெருமையாவது, சுமித்திரைக்கு இல்லை. ஆயினும் அவற்றுக்குப் பதில் அவ்விருவருக்கும் இல்லாத ஒரு விவேகம் அவளிடம் நிறைந்து விளங்குகிறது. கைகேயியிடம் எவ்வளவு புத்தியின்மையும் பிடிவாதமும் தென்படுகின்றனவோ அதற்கு மாறாக அவ்வளவு அடக்கமும் அறிவும் அவளிடம் குடிகொண்டு விளங்குகின்றன. கடும் புயற்காற்றிலும் அலைகளின் கொந்தளிப்பை எதிர்த்துத் தாங்கி நிற்கும் அரிய மரக்கலம் போல் எத்தகைய கஷ்டத்திலும் அவள் உள்ளம் நிலை தடுமாறாமல் அமைதியும் தெளிவும் பெற்று விளங்குவது மிகவும் ஆச்சரியத்தையே அளிக்கிறது.
கைகேயி அல்லாமல் சுமித்திரையே பரதனுடைய தாய் என்று வைத்துக்கொள்வோம். அப்போது சுமித்திரை எவ்வாறு நடந்து கொண்டிருப்பாள்? கைகேயியின் மனத்தை மாற்றியதுபோல் மந்தரை அவள் மனத்தை மாற்றியிருக்க முடியுமா? அது ஒருபோதும் சாத்தியமல்ல என்றே நாம் கூறலாம்.
சுமித்திரை பரதனுடைய தாய் என்றிருந்தால் முதலில் ராமாயணக் கதை இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்க முடியாது. ராமன், சீதை, லக்ஷ்மணன் இவர்களுடன் பதினான்கு வருஷம் காட்டுக்குச் சென்று வசிப்பதும், ராவணன் சீதையைத் தூக்கிச் செல்வதும் முடிவில் ராமன், ராவணனைக் கொன்று சீதையை மீட்பதுமாகிய சம்பவங்களோ நடக்க ஏதுவில்லை. ராமனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டுப் பரதன் ராஜ்யம் ஆளுவதற்கு உரிய காரணங்களை எடுத்துக் கூறி மந்தரை எவ்வளவு ஆசை காட்டியும் இணங்காமல் சுமித்திரை, தன்னுடைய அறிவும் கனிவும் நிறைந்த வார்த்தைகளினால் மந்தரையின் மனத்தையே அடியோடு மாற்றிப் போகச் சொல்லியிருப்பாள் என்றுதான் நமக்குத் தோன்றுகிறது.
கைகேயி பரதனுடைய மனப்பான்மையைச் சிறிதும் அறியாமல் தவறிழைத்ததுபோல் அவள் ஒருபோதும் செய்திருக்க மாட்டாள். சுருக்கமாக அவள் பரதனுடைய தாயாக மட்டும் இருந்திருந்தால் பொழுது விடிந்ததும் ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்று சகல ஜனங்களும் கொண்ட களிப்பானது ஒரு க்ஷணத்தில் ஒரே சோகமயமாக மாறுவதற்கு இடமில்லாமல் உத்தேசித்தபடியே தந்தையினால் முடிசூட்டப்பெற்று ராமன், சீதையுடன் சிம்மாசனத்தில் வீற்றிருப்பான். ஆனால் கதை அத்துடன் முடிந்திருக்கும்; மேலே வளருவதற்கு இல்லை. ராஜ்யத்துக்குப் பதிலாக வனவாசத்தைச் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்ட ராமனுடைய தியாகத்தின் பெருமையை உணர்ந்து அநுபவிக்கும் பாக்கியமும் நமக்குக் கிட்டியிருக்காது.
வால்மீகி சுமித்திரையைப்பற்றிக் கூறும்போது 'தத்துவ தர்சினி'- உண்மையை உணர்ந்தவள் என்று சொல்லுகிறார். அதைவிட அவள் இயல்புக்குப் பொருத்தமாக அமைந்த பெயர் வேறு இருக்க முடியாது. மற்ற மாந்தர்கள் இயற்கையான உணர்ச்சிகளைப் பின்பற்றக்கூடிய சமயங்களிலும் அவளிடம் விவேகமே தலைசிறந்து விளங்குகிறதல்லவா? இல்லாவிட்டால் தன் அருமை மைந்தனாயிற்றே என்றுகூடப் பாராமல் தைரியமாக, 'ராமனுடன் வனத்துக்குச் செல்' என்று ஒரு தாய் கட்டளையிடுவதை எங்காவது நாம் காண முடியுமா? லக்ஷ்மணன் தன்னை நமஸ்கரித்து விடை பெற்றுக்கொள்ளும்போது அவள் என்ன சொல்லுகிறாள்? "அப்பா, நீ வனவாசத்துக்கென்றே பிறந்துவிட்டாய். உன் தமையனாகிய ராமன் காட்டுக்குச் செல்லும் போது நீ பேசாமல் இருக்கலாகாது. கஷ்டத்திலும் சுகத்திலும் நீ உன் தமையனைப் பின்பற்றி நடப்பதே சிறந்த வழி என்று நினைக்கிறேன். இதுதான் சூரிய வம்சத்தில் உதித்தவனும் நேர்வழியில் நடப்பவனுமான உனக்குத் தகுந்தது. லக்ஷ்மணா, ராமனை உன் தந்தையாகப் பாவித்து நடப்பாய். சீதையை உன் தாயாகவும் வனத்தையே அயோத்தியாகவும் கருதுவாய். தாமதிக்காதே! உடனே சென்றுவிடு." - இதுதான் பதினான்கு வருஷங்கள் கொடிய ஆரணியத்தில் வசிக்கப்போகும் தன் மகனுக்கு அவள் கடைசியாகக் கூறிய மொழிகள். இச்சொற்களில் விளங்கும் மன உறுதியும் தைரியமும் நம்மை மெய் சிலிர்க்கச் செய்கின்றன அல்லவா?
கைகேயி ராமனைத்தான் பதினான்கு வருஷம் காட்டுக்குச் சென்று வசிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாளே ஒழிய லக்ஷ்மணனும் கூடச் செல்ல வேண்டுமென்று வற்புறுத்தவில்லை. அப்படி இருக்கும்போது ராமனைப் பின்பற்றிச் செல்லும்படி சுமித்திரை ஏன் லக்ஷ்மணனுக்குப் புத்திமதி கூற வேண்டும்? ஏனெனில் கைகேயி பரதனை அறியாதிருந்ததுபோல் அவள் லக்ஷ்மணனை அறியாதவள் அல்ல. ராமனை விட்டு லக்ஷ்மணன் அரைக்கணமும் பிரிந்திருக்கமாட்டான்; அதைவிட வேறு எந்தக் கஷ்டமும் அவனுக்குப் பெரிதல்ல என்பதை அவள் நன்கு அறிவாள். ஆகவே, எவ்வளவுதான் அவன் தன் மைந்தனென்றும் தான் அவனைப் பெற்ற தாயென்றும் இருந்தபோதிலும், ராமனைப் பின்பற்றிச் செல்லவேண்டும் என்ற உயர்ந்த தீர்மானத்தினின்றும் அவன் மனத்தை மாற்ற அவள் கனவிலும் கருத மாட்டாளென்பது நிச்சயம். தர்மத்துக்கு முன் மற்றெதுவும் பெரிதல்ல என்பதே அவள் கொள்கை.
மானிடர்களுக்கு இயற்கையாக உள்ள பாசங்கள் அனைத்தும் அறவே ஒழிந்து உத்தமமான ஒரு சாந்த நிலையைப் பெற்றவள் சுமித்திரை. இந்த மனப்பான்மையே துன்பத்தின் மத்தியில் மற்ற எவருக்கும் கிட்டாத மனோதைரியத்தை அளித்து அவளை மேன்மையாக்கியிருக்கிறது. தன்னுடைய தெளிந்த அறிவின் பயனால் ராமனுடைய உயர்வையும் குணாதிசயங்களையும் அவள் கண்டறிந்தது போல் கௌசல்யை கூட அறிந்தவள் அல்ல என்று நாம் கூறலாம். மைந்தனின் பிரிவை நினைத்துப் புலம்பும் கௌசல்யை முன் அவள் எப்படித் தோன்றுகிறாள், பாருங்கள்!
"அம்மணி! நீங்கள் எதற்காக வருத்தப்படுகிறீர்கள்? சகல நற்குணங்களும் நிரம்பிய தங்கள் புத்திரன் புருஷ சிரேஷ்டன். அவன் ராஜ்யத்தைத் துறந்து வனவாசத்தை ஏற்றுச் செல்வது பிதாவைச் சத்தியத்தினின்றும் தவறாமல் காப்பதற்கே அல்லவா? கவலையை ஒழியுங்கள். மகா வீரனாகிய ராமன் அரண்மனையில் இருப்பதுபோல் வனத்திலும் சுகமாக வசிப்பான். பதினான்கு வருஷங்களுக்குப் பிறகு சீதை, லக்ஷ்மணன் இவர்களுடன் அவன் திரும்பி வந்து உங்களை நமஸ்கரிப்பானென்பது நிச்சயம்."
- இந்த மொழிகள், 'கைகேயியின் மீதுள்ள ஆசையினால் அறிவிழந்தவன்' என்ற அபவாதத்துக்கு ஆளாக்காமல் தசரதனைக்கூட எவ்வாறு உயர்த்துகின்றன! 'ராமன் தந்தை சொல்லைக் காப்பதற்கல்லவா காட்டுக்குச் செல்லுகிறான்?' என்ற சிறு வாக்கியம் ஒன்றே அவள் விவேகத்தை வெளியாக்குவதுடன் பதியின் மேலுள்ள அவள் குன்றாத பக்தியையும், சோக வெள்ளத்தில் ஆழ்ந்து கிடக்கும் அரசனைக் கடுஞ்சொற்களால் மேன்மேலும் துன்புறுத்தலாகாதெனக் கௌசல்யைக்கு அவள் இங்கிதமாக உணர்த்துவதையும் மிகவும் நன்றாக எடுத்துக் காட்டுகிறது.
கைகேயியைப் பற்றி அவள் ஒரு கடுஞ்சொல்லும் கூறாமல் இருப்பதும் கவனிக்கத்தக்கதே! இந்த விஷயத்தில் ராமனைக்கூடத் தோஷமற்றவன் என்று நாம் கூற முடியாது. ஏனெனில் சீதை அபகரிக்கப்பட்டதும் தன் மன உறுதியெல்லாம் குலைந்து போய் ராமனும், "அம்மா கைகேயி, நீ விரும்பியதெல்லாம் நிறைவேறிவிட்டது!" என்று புலம்புகிறான் அல்லவா?
புத்தியின்மையினால் ராஜ்ய மோகத்தில் ஆழ்ந்து மீளாப் பழியைச் சம்பாதித்துக் கொண்டவள் கைகேயி. சுமித்திரையோ தன்னலம் கருதாத சிறந்த விவேகத்தைக் கைப்பற்றியதால் அழியாத புகழைப் பெற்றவள். இவ்வுத்தமி ராமாயணத்தில் முக்கியமான பாத்திரமாக இல்லாமலிருந்தும் என்றும் மறக்க முடியாதபடி நம் உள்ளத்தில் பதிந்து விடக்கூடிய தன்மை வாய்ந்தவள் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.
கி. சாவித்திரி அம்மாள் எழுதிய 'வம்புப் பேச்சு' நூலில் இருந்து... |