கனடாவில் 2001 முதல் இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்ட அறக்கட்டளை அமைப்பு, ஆண்டுதோறும் தமிழ் மொழிக்குச் சிறந்த பங்களிப்பைத் தந்து வரும் இலக்கியவாதிகளுக்கு விருதளித்துச் சிறப்பித்து வருகிறது. 2021ம் ஆண்டிற்கான விருதுகளுக்குக் கீழ்க்காணுவோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கவிதை விருது பெருந்தேவிக்கு வழங்கப்படுகிறது. நியூயார்க் மாகாண சியானா கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் பெருந்தேவி, கும்பகோணத்தைச் சேர்ந்தவர். தமிழின் நவீன கவிஞர்களுள் ஒருவர். தனித்துவமான மொழியுடன் படைப்புலகில் இயங்கி வருபவர். கவிஞராகவும், எழுத்தாளராகவும் இயங்கி வரும் இவரது நவீன கவிதைகள் குறிப்பிடத்தகுந்தவை. சில கவிதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது ஆய்வுக் கட்டுரைகளும், 'ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்' என்ற குறுங்கதைத் தொகுப்பும் குறிப்பிடத்தகுந்தவை. இதுவரை 10 கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரது 'கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?' என்ற சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு பரவலான கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
புனைவுக்கான விருதினை பா. கண்மணி பெறுகிறார். 'இடபம்' என்கிற நாவல் மூலம் இலக்கிய உலகின் கவனத்தை ஈர்த்தவர். இது அவரது முதல் நாவலும்கூட. தஞ்சையைச் சேர்ந்த இவர் வங்கியில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். தற்போது பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பணி ஓய்விற்குப் பின் சிறுகதை, நாவல் எனப் படைப்புலகில் தீவிரமாக இயங்கி வருகிறார்.
கோவிட் தொற்று காரணமாக இருவருக்கும் விருதுகள் டிசம்பர் மாதம் நிகழ்ந்த நேரலை விழா நிகழ்வில் வழங்கப்பட்டது.
விருதாளர்களுக்குத் தென்றலின் வாழ்த்துகள். |