கருமலை களவாணிகள் (அத்தியாயம் - 3)
ரமேஷுக்கு டெக்ஸ்ட் செய்தி பார்த்ததும் சங்கடமாக இருந்தது. கீதா அதை கவனித்தாரா என்று நோட்டம் விட்டார். கீதா சாப்பிடுவதில் கவனமாக இருந்தார். அருணும் அவன் பாட்டுக்கு ஏதோ சிந்தனையில் இருந்தான்.

"அருண், அருண்" ரமேஷ் மெல்லக் கூப்பிட்டார்.

அருண் கவனிக்காமல் புத்தகம் படித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

"அருண்" என்று மெதுவாக, டேபிளின் அடியில் அவனது காலை மிதித்தார்.

"அப்பா, ஏன் கால மிதிக்கறீங்க?" அருண் பட்டென்று கேட்டான்.

ரமேஷுக்கோ என்னடா இது, இங்கிதம் தெரியாமல் இப்படி இருக்கிறானே என்று எரிச்சல் வந்தது. ஒன்றுமே நடக்காதது போல ரமேஷ் சாப்பாட்டுப் பாத்திரத்தை தன் பக்கமாக இழுப்பதுபோல பாவனை செய்தார்.

"அருண், உள்ளிருந்து ஊறுகாய் எடுத்திட்டு வறியா?" ரமேஷ் மீண்டும் அருணைக் கூப்பிட்டார். அப்பாவின் இம்சை தாங்காமல் முறைத்துவிட்டுப் பட்டென்று எழுந்து ஃப்ரிட்ஜ் பக்கமாக நடந்து சென்றான்.

"எனக்கும் தண்ணி வேணும்" என்று சொல்லி ரமேஷ் எழுந்து சென்றார்.

கீதாவுக்கு நடக்கும் கூத்து கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்தது. எதுவும் தெரிந்தபடிக் காட்டிக்கொள்ளாமல், நமட்டுச் சிரிப்போடு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மெதுவாக ஓரக் கண்ணால் நோட்டம் விட்டார்.

ரமேஷ் அருணுடன் எதோ கிசுகிசுவென்று பேசிக் கொண்டிருந்தார். அருண் ஏதோ பீதி பிடித்தவன் போலே கேட்டுக் கொண்டிருந்தான்.

"ஊறுகாய் எங்க இருக்குன்னு தெரியலயா?" என்று கீதா சத்தமாகக் கேட்டார். "நான் வந்து எடுத்துத் தரட்டுமா?"

"வேண்டாம், நாங்களே பாத்துக்கறோம்" என்று அப்பாவும் மகனும் சேர்ந்து கூவினர்.

"ஃப்ரிட்ஜ் என்ன பசிபிக் சமுத்திரமா? இப்பிடி கொலம்பஸ் மாதிரி குடையறீங்களே?"

அருண் ஊறுகாய் பாட்டிலை வெளியே எடுத்து சமையலறை மேடைமீது வைத்தான். நொடியில் அங்கிருந்து சமையலறையின் மறுபக்கமாக அப்பாவுடன் மாடிப்பக்கம் நழுவினான்.

ஐந்து நிமிடங்களில் அப்பாவும் பையனும் வாழ்த்து அட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு படியில் தடதடவென்று இறங்கி வந்தார்கள்.

"சர்ப்ரைஸ்!" என்று இருவரும் சேர்ந்து கீதாவின் அருகில் வந்து கத்தினார்கள். கீதாவுக்கு அவர்கள் கத்தியது ஒன்றும் ஆச்சரியமாக இல்லை. ஒருவிதமான எதிர்பார்ப்போடுதான் இருந்தார். நடந்த கூத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாரே!

"Happy Birthday, அம்மா!"

"பிறந்த நாள் வாழ்த்துக்கள், கீதா!"

கீதா நாடகத்தனமான கேள்விக்குறியுடன் அவர்களைப் பார்த்தார்.

"Are you sure?"

"இன்னிக்குத்தான் அம்மா உங்களோட பிறந்த நாள். நாங்க கரெக்ட்தான்."

"Come on. என் பிறந்த நாள் எனக்கே தெரியாதா என்ன?"

"இன்னிக்குத்தான் கீதா."

"இல்ல ரமேஷ். அடுத்த வாரம்தான். ஏன் இப்பவே டென்ஷன் ஆகறீங்க?"

ரமேஷுக்கு திடீரென்று சந்தேகம் வந்தது. அருணைப் பார்த்தார். அருணும் சந்தேகத்தோடு அவரைப் பார்த்தான். அப்பாவின் கையில் இருந்து செல்ஃபோனைப் பட்டென்று பிடுங்கி அதில் வந்திருந்த செய்தியைப் பார்த்தான்.

"இதில போட்டிருக்கே கீதா, இன்னிக்கித்தான் உன்னோட பிறந்த நாள்."

கீதா கலகலவென்று சத்தமாகச் சிரித்தார். அவருக்குச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அப்படிச் சிரித்ததால் புரை ஏறியது.

"ஃபோன் மெசேஸ் பாத்துத்தான் தெரியணும்போல. லொக் லொக்….. என்ன ஜென்மங்களோ ஆண்டவா. லொக் லொக்…."

ரமேஷுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. கீதா இதற்குமேல் சோதனை பண்ண வேண்டாம் என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

"வெறும் அட்டை தானா? அன்பளிப்பு எதுவும் இல்லியா?"

ஈ என்று இளித்தார்கள் ரமேஷும் அருணும். வாழ்த்து அட்டையைக் கொடுத்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார்கள்.

கீதா கையில் இருந்த வாழ்த்து அட்டையைப் பிரித்துப் பார்த்தார். அவரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. இன்னும் சத்தமாகச் சிரித்தார்.

"என்னப்பா, இது எனக்கு 5 வருஷம் முன்னாடி குடுத்த கார்டு இல்ல? எனக்கு 5 வயசு குறைச்சுட்டீங்களே ரெண்டு பேரும் சேர்ந்து. சிரிக்கறதா அழறதான்னு தெரியலை."

அப்பாவும் பையனும் அசடு வழிந்தார்கள்.

"என்ன கிஃப்ட் வேணும் கீதா?"

"எதுவானாலும் நாங்க தரோம்."

"ஐயோ! பரிசு எல்லாம் நான் என்னிக்கு கேட்டிருக்கேன்? ரெண்டுபேரும் என்கூட இன்னிக்கி மலையேற வாங்க. அது போதும்."

"இன்னிக்கா? மணி இப்பவே 2 ஆயிருச்சே?"

"அதுக்கென்ன, வெளிச்சம்தான் 8 மணி வரைக்கும் இருக்கே. 4 மணி போலக் கிளம்பிப் போய்ட்டு வந்திடலாம். என்ன சரியா? அதுதான் எனக்குப் பிறந்தநாள் பரிசு"

சரியான யோசனைதான் என்று நினைத்தார் ரமேஷ். கீதாவே எங்கே போவதென்று முடிவு செய்யட்டும் என்று விட்டுவிட்டார்.

"கருப்பு மலை உச்சிக்குப் போலாமா?"

"கருப்பு மலையா? ரொம்ப செங்குத்தா இருக்குமே, அம்மா?"

"Young man, Come on. Let’s go…" கீதா தன் மகனை உற்சாகப்படுத்தினார்.

(தொடரும்)

© TamilOnline.com