பாக்கியம் ராமசாமி, கடுகு வரிசையில் நகைச்சுவை எழுத்தாளராக இயங்கி வந்த ஜே.எஸ்.ராகவன் (80) காலமானார். பிரபல கட்டுமான நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்ற ராகவன், நகைச்சுவையாகப் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நீண்ட காலமாக எழுத்துலகில் இயங்கி வந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதில் வல்லவர். 'அண்ணாநகர் டைம்ஸ்' மற்றும் 'மாம்பலம் டைம்ஸ்' இதழில் இவர் எழுதி வந்த 'தமாஷா வரிகள்' வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்டவை.
'Laughing Tablets', 'காமெடி காக்டெயில்', 'புன்னகை வராளி', 'எல்லாம் 'இன்கம்' மயம்', 'கிச்சு கிச்சு', 'மாவரு ராமுடு', 'ரெடி ஜூட்', 'யாஹூ காலம்' எனப் பல நகைச்சுவை நூல்களை எழுதியிருக்கிறார். இவரது 'சிவசாமியின் சபதம்' நூல் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றதாகும். இவரது 'P for நீங்கள்' சிறந்த தன்னம்பிக்கைக் கட்டுரைகள் அடங்கிய நூல். 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தனது எழுத்துப்பணிக்காக 'தேவன் அறக்கட்டளை விருது' உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். தினமணி, கல்கி, டெக்கான் ஹெரால்ட், டெக்கான் க்ரானிகள், டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற இதழ்களில் நிறைய எழுதியவர். இவரது நூல்களை அல்லயன்ஸ் பதிப்பகம், விஜயா பதிப்பகம், கிழக்கு பதிப்பகம் போன்றவை வெளியிட்டுள்ளன.
தனது இறுதி நேரம் வரை எழுதி வந்த ஜே.எஸ்.ராகவன், இறப்பிற்கு முன் தனது இறுதி தமாஷா வரிகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து விட்டே விடை பெற்றிருக்கிறார்.
ஜே.எஸ்.ராகவனுக்குத் தென்றலின் அஞ்சலிகள்! |