இந்தியத் திரையிசையின் முக்கிய அடையாளமாகக் கருதப்பட்ட இசைக்குயில் லதா மங்கேஷ்கர் (92) காலமானார். செப்டம்பர் 28, 1929 அன்று இந்தூரில், தீனநாத் மங்கேஷ்கர்-ஷெவந்தி இணையருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். இயற்பெயர் ஹேமா. தந்தை இசைக்கலைஞர் என்பதால் லதாவிற்கு இயல்பாகவே இசை நாட்டம் இருந்தது. தந்தை இசை நாடகங்களும் நடத்தி வந்தார். தனது ஐந்தாம் வயதில் தந்தையின் இயக்கத்தில் மராத்திய இசை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார் லதா. அவருக்கிருந்த இனிய குரல்வளத்தால் பார்வையாளர்களைக் கவர்ந்தார். அவருக்குப்பின் பிறந்த மீனா, ஆஷா, உஷா, ஹிருதய்நாத் ஆகியோரும் இசையில் நாட்டம் செலுத்தினர்.
லதாவின் குரலால் கவரப்பட்ட குடும்ப நண்பரும் இயக்குநருமான மாஸ்டர் விநாயக், அவருக்குத் திரைப்படப் பின்னணி பாடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். 1942ல் 'கிதி ஹசல்' என்ற மராட்டிப் படத்தில் முதல் பாடலைப் பாடினார் லதா. அப்போது அவருக்கு 13 வயது. தொடர்ந்து வாய்ப்புகள் வரத்தொடங்கிய நிலையில் அதே ஆண்டில் தந்தையை இழந்தார். இயக்குநர் மாஸ்டர் விநாயக் லதாவிற்கும், அவர்களது குடும்பத்திற்கும் உறுதுணையாக இருந்தார். இசையமைப்பாளர் குலாம், லதாவுக்கு, 'மஜ்பூர்' என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பளித்தார். இது லதாவின் வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனை ஆனது. இயக்குநர் மாஸ்டர் விநாயக்கின் வழிகாட்டலில் மும்பைக்கு வந்து திரைபடங்களுக்குப் பாடல்கள் பாடத் தொடங்கினார். 'பர்ஸாத்', 'அந்தாஸ்', 'துலாரி', 'மஹால்' போன்ற படங்கள் இவருக்குப் பெரும்புகழை ஈட்டிக் கொடுத்தன. முன்னணிப் பாடகியானதுடன் பல விருதுகளும் கௌரவங்களும் தேடிவந்தன. அதன் பிறகு உச்சம் தான். 1960ல் சில மராத்திப் படங்களுக்கு இசையமைத்து அதிலும் தனது அடையாளத்தைப் பதிவு செய்தார்.
நௌஷத், எஸ்.டி. பர்மன், சி. ராமச்சந்த்ரா, சலீல் சௌத்ரி தொடங்கி அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் வரை பலரது இசையில் பாடியிருக்கிறார். 'ஹம் ஆப்கே ஹைன் கோன்', 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' போன்ற படங்களில் இவர் பாடிய பாடல்கள் வட இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலித்து ரசிகர்களைத் தாளம் போட வைத்தன. தமிழிலும் 'எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்', 'இங்கே பொன் வீணை', 'வளையோசை கலகலவென', 'ஆராரோ ஆராரோ', 'இங்கேயும் அங்கேயும்' என ஒரு சில பாடல்களை மட்டுமே பாடியிருந்தாலும் தமிழ் இசை ரசிகர்களின் நெஞ்சங்களிலும் தனது வசீகரக் குரலால் இடம் பிடித்தார்.
அவர் தமிழ்ப் பாடல்களைக் கேட்க
கடந்த 70 ஆண்டுகளாக, கிட்டத்தட்ட 20 மொழிகளில், ஐம்பதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார் லதா. ஆரம்ப காலங்களில் அவர் குரல்நயமும் சிறப்பும் எப்படி இருந்ததோ அப்படியே இறுதிவரை இருந்தது. சிறந்த பின்னணிப் பாடகிக்கான மாநில, தேசிய விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பாரதரத்னா, பத்மபூஷண், பத்மவிபூஷண், தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை, பட்டங்களைப் பெற்றார். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த அவர், பல்வேறு சமூக, அறப்பணிகளுக்கு உதவி வந்தார்.
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த லதா மங்கேஷ்கர் சிகிச்சை பலனின்றிக் காலமானார். அவர் மறைந்தாலும் அவர் குரல் காற்றில் என்றும் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. |