அர்ஜுனன் உத்தரகுமாரனுக்குத் தேரோட்டியாகப் போருக்குக் கிளம்பினாலும் அவனுக்குச் சில அசௌகரியங்கள் இருந்தன. உதாரணமாக, அவனால் உத்தரகுமாரனுடைய வில்லைத்தான் பயன்படுத்த முடியும். எவ்வளவோ உறுதியான வில் என்றாலும், காண்டீவத்தைப் பயன்படுத்திய அவனுடைய தோள்வலிமைக்கு மற்ற விற்கள், (அவனே சொல்லப் போவது போல) 'ஒரு இழுப்புக்குத் தாங்காது'. போவதோ போர்க்களத்துக்கு. காண்டீவம் இல்லாமல் போர்புரிவதை அவன் மறந்தே போயிருந்தான். காண்டவ வனத்தை எரிக்க அக்கினி தேவன் காண்டீவத்தைக் கொடுக்கும்வரை அவனும் சாதாரணமான விற்களைத்தான் பயன்படுத்தி வந்தான். ஆனால் காண்டீவம் கிடைத்த மறுவிநாடியிலிருந்து அதை மட்டுமே பயன்படுத்தி வந்தான். 'ஒரு பனைமர உயரம் கொண்டது' என்று பலமுறை இந்த காண்டீவத்தைப் பற்றி அவன் குறிப்பிடுவான். பீஷ்மர், துரோணர் உள்ளிட்ட கௌரவ சேனை நிற்கும் களத்துக்குப் போகவேண்டுமானால் அவனுக்குக் காண்டீவம் வேண்டும். உத்தரகுமாரனோ, மஹா பெரிய அந்த கௌரவ சேனையைப் பார்த்ததும், 'நான் திரும்பப் போகிறேன், என்னை விட்டுவிடு' என்று அர்ஜுனன் காலில் விழுந்து கெஞ்சத் தொடங்கிவிட்டான்! 'அந்தப்புரத்தில் பெண்களுக்குமுன்னால் அவ்வளவு வீரம் பேசிய நீ இப்போது இப்படிச் சொல்லலாமா' என்று அர்ஜுனன் சொல்லிப் பார்த்தான். பயனில்லை. அவன் சொல்லச் சொல்ல உத்தரகுமாரனுடைய நடுக்கம் அதிகம்தான் ஆனது. இது இயற்கைதான். அங்கே நின்றுகொண்டிருந்த வீரர்கள் அத்தகையவர்கள். பீஷ்மரும் துரோணரும் தலைமைதாங்கும் கௌரவ சேனை யாருக்குத்தான் நடுக்கத்தை உண்டாக்காது! தேரிலிருந்து இறங்கி ஓடிய உத்தரகுமாரனைத் துரத்திப் பிடித்த அர்ஜுனன் 'நீ ஒன்று செய்' என்றான். அங்கு நின்றுகொண்டிருந்த கௌரவ சைனியத்துக்கு, ரதத்தில் வந்த ராஜகுமாரன் இறங்கி ஓடுவதையும், அவனை ஒரு பேடி துரத்திக்காண்டு செல்வதையும் பார்க்கச் சிரிப்பாக இருந்தது. அவர்களுக்கு இதுவரையில் 'இது அர்ஜுனன் என்பது தெரியாது.
உத்தரகுமாரனைப் பற்றி இழுத்த அர்ஜுனன் 'சரி, எனக்கு நீ தேராட்டு. நான் போர்புரிகிறேன்' என்றான். உத்தரகுமாரனுக்கு மூச்சு திரும்பியது. அப்போதுதான் இந்த வில் பிரச்சினை எழுந்தது. 'எனக்கு என் ஆயுதங்களை எடுத்துவந்து கொடு' என்றான் அர்ஜுனன். 'அவை எங்கே இருக்கின்றன' என்று கேட்டான் உத்தரகுமாரன். அர்ஜுனன், தாங்கள் ஆயுதங்களைத் தொங்கவிட்டுத் திரும்பிய வன்னிமரத்தைச் சொன்னான். அங்கே சென்றதும் உத்தரகுமாரனுக்குத் தான் அங்கே ஒரு கிழவியின் சவம் தொங்குவதாகக் கேள்விப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. மரத்தில் ஏற மறுத்தான். 'நான் ராஜகுமாரன். வேதங்களை அறிந்தவன். என்னைப் பிணம் சுமக்கச் செய்யாதே' என்று அர்ஜுனனைக் கெஞ்சினான். அவனை அர்ஜுனன் வற்புறுத்தி, அந்தத் தோற்பையை இறக்கிவரச் செய்தான். கீழே வந்ததும் அர்ஜுனன் எடுத்த ஆயுதங்களைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆச்சரியம் மேலிட்டது. அந்த ஆயுதங்களைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தான். 'இங்கே உள்ளவை தேவ சம்பந்தமுள்ள ஆயுதங்களா? அப்படியானால் இவை யாருடையவை? நீளமான இந்த வில்லைப் பார்த்தால் ஸர்ப்பத்தைப் போலத் தோன்றுகிறதே! இது யாருடைய வில்? இவையெல்லாம் யாருடைய ஆயுதங்கள்' என்று குழந்தையைப் போல் அர்ஜுனனிடம் கேட்டான். இந்தவில் தர்மருடையது; இது அர்ஜுனனுடைய காண்டீவம்; இந்த வாள் சஹதேவனுடையது. இது பீமனுடைய கதை' என்று அந்த ஆயுதங்களுக்கு உரியவர் இன்னின்னார்' என்ற விவரத்தைச் சொன்னான்.
உத்தரகுமாரன் ஏறிவந்த தேர், நகருக்கு வெளியே சுடுகாட்டின் அருகிலுள்ள வன்னிமரத்துக்குச் செல்வதை துரோணர் கவனித்தார். பேசத் தொடங்கினார். 'வீரர்களே! பேய்க்காற்று வீசுகிறது. ஆகாயம் சாம்பல் நிறமுள்ள மேகங்களால் மூடப்பட்டுள்ளது. மேகங்கள் விகாரமாகத் தோன்றுகின்றன. நரிகள் ஊளையிடுகின்றன. குதிரைகன் கண்ணீர் வடிக்கின்றன. நமக்குப் பல தீமைகள் நடக்க இருக்கின்றன என்பதை இவை காட்டுகின்றன. விரைவில் யுத்தம் வரக்கூடும். பேடி வேடத்தில் வந்திருப்பவன் அர்ஜுனன் என்பதில் சந்தேகமில்லை' என்றார். இதைக் கேட்ட பீஷ்மர், 'துரியோதனா, நாம் நம்முடைய நாட்டைத் தாண்டி வந்துள்ளோம். நாம் பாண்டவர்களுக்குக் குறிப்பிட்ட பதின்மூன்று ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. இப்போது பேடி வேடத்தில் வெளிப்பட்டிருப்பவன் அர்ஜுனன்தான் என்பதில் ஐயம் இல்லை' என்றார். மீண்டும் பேசிய துரோணர் 'பேடி வேடத்தில் இருப்பவன் அர்ஜுனன் என்பதில் ஐயமில்லை. சிறந்த வில்லாளியான அவன், மகாதேவரைச் சந்தித்து, அவருடைய அருளையும் பெற்று வந்திருக்கிறான் என்று அறிகிறேன்' என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த கர்ணனால் அவருடை பேச்சை சகித்துக்கொள்ள முடியவில்லை. கோபத்துடன் துரோணரைப் பார்த்த அவன், 'ஆசாரியரே! நீங்கள் எப்போதும் அர்ஜுனனையே பாராட்டிப் பேசுகிறீர்கள். என்னையும் துரியோதனனையும்விட அவன் உயர்ந்தவன் என்று பாராட்டுகிறீர்கள். அவனொன்றும் சிறந்த போராளியல்லன்' என்று கோபத்துடன் சொன்னான்.
அப்பொழுது துரியோதனன், 'இவன் அர்ஜுனன் எனில் என்னுடைய எண்ணம் நிறைவேறிவிடும். இவனை நாம் பார்த்துவிட்டால், பாண்டவர்கள் மீண்டும் பன்னிரண்டாண்டு வனவாசமும் ஓராண்டு அக்ஞாத வாசமும் மேற்கொள்ள நேரும். அப்படி இல்லாமல் வேறொருவன் பேடி வேடம் தாங்கி இங்கே வந்திருப்பானாகின் அவனை என் அம்புகளால் கொல்வேன்' என்றான். பதின்மூன்று ஆண்டுகள் கழிந்து அதற்கு மேலேயே ஒருமாத காலமும் ஆகிவிட்டது என்பதை அறிந்திருந்த போதிலும், பீஷ்மர், துரோணர், கிருபர் போன்றோர் துரியோதனனை வாழ்த்திப் பேசினார்கள். இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அர்ஜுனன், உத்தர குமாரனிடம் ஆயுதங்களை எடுத்துவரச் சொல்லியிருந்தான். 'உன்னுடைய வில் என்னுடைய வேகத்தைத் தாங்காது. ஒரு இழுப்புக்குப் போதாது. ஒடிந்துவிடும். நான் சொன்ன அந்த ஆயுதங்களை எடுத்து வா' என்றான் அர்ஜுனன். ஆயுத மூட்டையை எடுத்துவந்த உத்தரன், அதைப் பிரித்தான். 'இது யாருடைய வில்? இதில் தங்க இதழ்கள் கொண்ட நூறு தாமரைப் புஷ்பங்கள் உள்ளனவே! ஆச்சரியமான வேலைப்பாடு உடைய இது யாருடைய வில்' என்று மீண்டும் மீண்டும் கேட்டான். அர்ஜுனனும், ஆயுதங்களுக்கு உரியவர்களுடைய பெயர்களைச் சொன்னான். 'பிருகன்னளையே! இவை பாண்டவர்களுடைய ஆயுதங்கள் என்று கூறுகிறாய். அப்படியானால், அவர்கள் எங்கே? எங்கே வசிக்கிறார்கள்?' என்றெல்லாம் கேட்டான் உத்தரன். இவ்வளவு சொன்ன பிறகும் 'இதுதான் அர்ஜுனன். பாண்டவர்கள் நம் நாட்டில்தான் வசிக்கிறார்கள்' என்று அவனால் ஊகிக்க முடியவல்லை
அர்ஜுனன் சிரித்துக்கொண்டே, 'இளவரசே! நீ அஞ்ச வேண்டாம். நான்தான் அர்ஜுனன். பாண்டவர்களாகிய நாங்கள் பன்னிரண்டாண்டுகள் காட்டில் வாழ்ந்தோம். ஓராண்டு அக்ஞாத வாசத்தைக் கழிப்பதற்காக இங்கே வந்திருந்தோம். மன்னனவையில் கங்கர் (Kanka) என்ற பெயருடன் இருப்பவர்தான் யுதிஷ்டிரர். வல்லபன்தான் பீமசேனன்.குதிரைகளைப் பராமரிப்பவன் நகுலன். பசுக்களை மேய்ப்பவன் சகதேவன். சைரந்திரிதான் திரௌபதி. இதனை அறிந்துகொள்' என்றான் அர்ஜுனன்,
உத்தரனுக்கு அப்படியும் சந்தேகம் போனபாடில்லை. அர்ஜுனனுக்குப் பத்துப் பெயர்கள் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றையும், அவற்றின் பொருளையும் சொன்னால்தான் நீ சொன்னதை நம்புவேன்' என்றான். அங்கே கௌரவ சேனை யுத்தத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இங்கே இவன் அர்ஜுனனுடைய பத்துப் பெயர்களுக்குபொருள் கேட்கிறான். மீண்டும் சிரித்துக் கொண்டே அர்ஜுனன் தன் பத்துப் பெயர்களையும் அவற்றுக்கான காரணங்களையும் சொன்னான். 'அர்ஜுனன், பல்குணன், ஜிஷ்ணு, கிரீடி, ஸ்வேதவாஹனன், பீபத்ஸு, விஜயன், பார்த்தன், சவ்யஸாசி (Savyasachi) தனஞ்சயன், கிருஷ்ணன் என்பவையே அவை' என்றான். 'பெயர்க்காரணங்களையும் சொன்னால்தான் நம்புவேன்' என்றான் உத்தரகுமாரன். மீண்டும் புன்னகைத்தபடி தன் பெயர்க் காரணங்களை விளக்கினான் அர்ஜுனன். 'உத்தரா! நான் பல நாடுகளை வென்று, ஏராளமான தனத்தை வென்று குவித்தேன். எனவே எனக்கு தனஞ்சயன் என்று பெயர். எதிர்த்தவர்களை வெல்லாமல் திரும்பியதில்லை. எனவே எனக்கு விஜயன் என்று பெயர். போருக்குச் செல்லும் என்னுடைய தேரில் எப்போதும் வெள்ளை குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். எனவே எனக்கு ஸ்வேதவாஹனன் என்று பெயர். இந்திரன் அளித்த கிரீடத்தை அணிவதால் நான் கிரீடி. போர்செய்யும்போது, அருவருப்பான காரியங்களைச் செய்யமாட்டேன் என்பதால் எனக்கு பீபத்ஸு என்று பெயர். போரில், வலது, இடது ஆகிய இரண்டு கைகளாலும் வில்லைப் பிடித்து அம்பை எய்வேன். எனவே எனக்கு சவ்யஸாசி என்று பெயர். அழகானவனாகவும் சுத்தனாகவும் இருப்பதால் அர்ஜுனன். உத்தரபல்குணி, பூர்வ பல்குணி ஆகிய நட்சத்திரங்களின் சேர்க்கையின்போது பிறந்தவன் என்பதால் நான் பல்குணன். எனக்கோ, என் சகோதரர்களுக்கோ அவமானம் ஏற்படாதபடி தடுப்பவன் என்பதால் நான் ஜிஷ்ணு. என் தாயின் பெயர் பிருதை (Prita) எனவே என் பெயர் பார்த்தன் (இது அர்ஜுனன், தர்மன் பீமன் ஆகிய மூவருக்கும் உரிய பெயர்). பிரம்மதேவரும் சிவபெருமானும் என்மேல் கொண்ட அன்பின் காரணமாக எனக்குக் கிருஷ்ணன் என்ற பெயரை இட்டனர். இது என்னுடைய பதினோராவது பெயராகும். நான் அவர்களிடமிருந்து பல அஸ்திரங்களைப் பெற்றேன். நிவாத கவசர்கள் என்ற கொடிய அரக்கர்களை அதன்மூலம் அழித்தேன். அறுபதினாயிரம் அரக்கர்களைக் கொன்றேன். திருதிராஷ்டிர புத்திரர்களான துரியோதனன் உள்ளிட்ட நூற்றுவரை, கந்தர்வர்களிடமிருந்து காத்தேன்' என்றான் மிகவும் பொறுமையாக.
அதன்பின்னர் தனக்கு முன்னே பேடிக் கோலததில் உள்ள பிருகன்னளைதான் அர்ஜுனன் என்று உத்தரகுமாரன் புரிந்துகொண்டான். தேரேறி வந்த அவன். தேர்சாரதியாகி அர்ஜுனனுடைய தேரைச் செலுத்தினான். உத்தரகுமாரா! நான் இப்போது பகைவர்களைத் துரத்தப் போகிறேன். காண்டீபம் என்கிற என் வில்லையும், தேவதத்தம் என்ற என் சங்கத்தையும், அம்புகளையும், அம்பறாத் தூணிகளையும் என் தேரில் எடுத்து வை' என்றான். 'குந்தி புத்திரரே! நீங்கள் என் அருகில் இருக்கும்போது நூறு துரோணர்கள் வந்தாலும் அஞ்சமாட்டேன். ஆனாலும் உங்களுக்குப் போய் எப்படி பேடித் தோற்றம் ஏற்பட்டது என்பது எனக்கு விளங்கவில்லை' என்றான் உத்தரன். மீண்டும் புன்னகைத்த அர்ஜுனன் தனக்கு ஊர்வசியின் சாபம் ஏற்பட்ட கதையைச் சொன்னான்.
உடனே உத்தரன், 'வீரரே! நான் தேரைச் செலுத்துகிறேன். தேரை ஓட்டுவதில் நான் கிருஷ்ணருக்கும் தாருகனும் (Dharuka) இணையானவன் என்று பெயர் பெற்றவன்' என்றான். சிறுவனான இவனுடைய 'வீரமொழிகளுக்குப்' பழகிப் போயிருந்த அர்ஜுனன் மீண்டும் புன்னகைத்தான். போர் தொடங்கியது. கிருஷ்ணன் என்ற சாரதியில்லாமல், குருக்ஷேத்திரப் போர்க்களத்தின் முன்னோட்டத்தில் அர்ஜுனன் செய்த வீரச்செயல்களைச் சிறிது பார்ப்போம்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |