'லைஃப் ட்ரஸ்ட்' கலைவாணி
சேலத்தைச் சேர்ந்த கலைவாணி எம்.ஏ., பி.எட். முடித்தவர். சிறுவயது முதலே பிறருக்கு உதவுவதிலும் சேவை செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஒரு சமயம் அறக்கட்டளை ஒன்றில் கைவிடப்பட்ட பெண்களுக்கு தையல் கற்பிக்கும் வாய்ப்பு வந்தது. அதுதான் இவரது சேவைப் பணிகளின் ஆரம்பம். மிகுந்த ஈடுபாட்டுடன் அப்பணியைச் செய்து பலருக்கு உதவினார். மகளிர் உதவிக் குழுக்களுடன் ஏற்பட்ட தொடர்பு இவரது சேவை வட்டத்தை விரிவுபடுத்தியது. இந்நிலையில்தான், உறவுகளால் கைவிடப்பட்ட ஒரு முதிய தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது. இளவயதில் கலப்புமணம் செய்துகொண்ட அவர்கள், உறவுகளால் கைவிடப்பட்டனர்; வாரிசுகளும் இல்லை மிகுந்த வறுமை வாட்டியது. உடல்நலப் பிரச்சனைகள் வேறு. இதனை அறிந்த கலைவாணி, தனது மகளிர் குழுத் தோழிகளுடன் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். திடீரென்று ஒருநாள் அந்த முதியவர் காலமாகிவிட, வாரிசுகள் இல்லாததால் கலைவாணியே தோழிகளுடன் சேர்ந்து இறுதிச் சடங்கைச் செய்தார். தொடர்ந்து அந்த முதிய பெண்மணியும் இறந்துவிடவே அவருக்கான இறுதிக் கடன்களையும் தோழிகளுடன் இணைந்து செய்தார்.



பின்னர் யாருமற்ற யாசகர் ஒருவர் இறக்க, அவருக்கான சடங்குகளை மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதி பெற்றுச் செய்தார். மருத்துவமனைகளில் இவ்வாறு ஆதரவற்று இறப்பவர்களின் எண்ணிக்கை மாந்ததோறும் கணிசமாக இருக்கும் என்பதை அறிந்தவர், மாநகராட்சி மற்றும் காவல்துறையின் அனுமதி பெற்று அவர்களுக்கான இறுதிச் சடங்குகளைத் தானே பொறுப்பேற்றுச் செய்ய ஆரம்பித்தார். அப்பணிக்காக இவர் ஆரம்பித்ததுதான் 'The Life Trust.' நவம்பர் 11, 2005ல் தனது அறக்கட்டளையை ஆரம்பித்தார். இதுவரை 2700க்கும் மேற்பட்ட உடல்களை நல்லடக்கம் செய்திருக்கிறார். ஆரம்ப காலகட்டங்களில் கைவண்டியில் உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்து வந்தார். இதுபற்றி அறிந்த சேலம் மாநகராட்சி, சேவை உள்ளம் கொண்டோரின் துணையுடன் ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி அளித்தனர். தற்போது அதன்மூலம் கலைவாணியின் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.



கோவிட்-19 காலத்தில், கோவிட் தாக்கத்தால் பலர் இறக்க, உறவுகளேகூட நெருங்க அஞ்சிய காலத்தில், உடல்களை நல்லடக்கம் செய்த இவரது பணி பலராலும் வியந்து பாராட்டப்பட்டது. அத்தோடு நில்லாமல், முறைப்படி அவரவருக்கான மதச் சடங்குகளையும் இவரே சுடுகாட்டில் செய்வது குறிப்பிடத்தகுந்த ஒன்று. கிட்டத்தட்ட 15 வருட காலமாக, எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல், அரசுப் பொது மருத்துவமனை, மாநகராட்சி, காவல்துறையினரின் துணையுடன் 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று இப்பணிகளைச் செய்து வருகிறார் கலைவாணி, தனது பணி குறித்து அவர், "இதுபோல் ஆதரவற்றவர்களை அடக்கம் செய்வது எனக்கு மனநிறைவு அளிக்கிறது. சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்கான்வற்றை நாம் செய்யும்போது இனம்புரியாத சந்தோஷம் ஏற்படுகிறது" என்கிறார்.



ஆதரவற்றோரின் உடல்களின் இறுதிச் சடங்குகளைச் செய்வதோடு கலைவாணியின் அறப்பணி நின்றுவிடவில்லை. ஆதரவற்ற முதியோர்களுக்காக இல்லம் ஒன்றையும் நடத்தி வருகிறார். ஒரு சமயம் பேருந்து நிலையத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து விட்டதாகத் தகவல் வர, கலைவாணி அங்கு சென்றிருக்கிறார். அப்போதுதான் தெரிகிறது, அவர் இறக்கவில்லை என்பதும், பல நாட்களாக உண்ணாததால் ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கிறார் என்பதும். பின் அவரை மருத்துவமனையில் சேர்த்து, தகுந்த சிகிச்சை அளித்துக் காப்பாற்றியிருக்கிறார்.



இதுபோல் நகரெங்கும் உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் பலர் இருக்கக்கூடும் என்பதை உணர்ந்தவர், அவர்களுக்காக இல்லம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இவரது பணியை அறிந்த தமிழக அரசு, அதற்கான நிலத்தை ஒதுக்கித்தர, சேவை உள்ளம் உள்ளவர்களின் ஆதரவில் 'லைஃப் ட்ரஸ்ட்' ஆதரவற்றோர் இல்லம் உருவானது.



இல்லத்தில் தற்போது 30க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுக்குத் தங்க இடம், மூன்று வேளை உணவு, இரண்டு வேளை தேநீர், மருத்துவ சிகிச்சை எல்லாம் அளித்துப் பராமரித்து வருகிறார் கலைவாணி. இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது லைஃப் டிரஸ்டிற்கு அரசு நிதியுதவியோ, வெளிநாட்டு நிதியுதவியோ எதுவும் இல்லை. கருணை உள்ளம் கொண்டவர்கள் அளிக்கும் நிதியால் மட்டுமே இல்லம் நடந்து வருகிறது. இந்த கோவிட்-19 காலத்தில் மற்ற அமைப்புகளைப் போலவே இவர்களும் பொருளாதார ரீதியாகப் பல்வேறூ சிக்கல்களை எதிர்கொண்டே இல்லத்தை நடத்துகின்றனர்.

முகநூல் பக்கம் நன்கொடைகளுக்கு 80G வருமான வரிவிலக்கு உண்டு.

கலைவாணியின் தன்னலமற்ற சேவையைப் போற்றுவோம். வாழ்த்துவோம்.

ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com