கலைச்செல்வி
தற்காலப் பெண் படைப்பாளிகள் வரிசையில், தனித்துவமிக்க மொழியாளுமையுடன் இயங்கி வருபவர் கலைச்செல்வி. பிறந்தது நெய்வேலியில். தந்தை சுப்பிரமணியன், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் உயரதிகாரி. அவர் வாங்கித் தந்த அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம் நூல்கள் மூலம் வாசிப்பார்வம் சுடர் விட்டது. வளர வளர குமுதம், குங்குமம், விகடன், அமுதசுரபி, கல்கி, கலைமகள், மஞ்சரி என ஆர்வம் பரிணமித்தது. பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் தந்தை அளித்த உள்நாட்டு வெளிநாட்டு காமிக்ஸ் புத்தகங்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் வாசிப்பை நேசிக்க வைத்தன. கு.ப. ராஜகோபாலன், ஜி. நாகராஜன், புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன் போன்றோரின் எழுத்துக்கள் தாக்கத்தை ஏற்படுத்தின. அசோகமித்திரன், லா.சா.ரா, ஜெயகாந்தன், ஜி. நாகராஜன், ந. பிச்சமூர்த்தி, அம்பை, வாஸந்தி, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், ஆ. மாதவன், சா. கந்தசாமி, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஆல்பெர் காம்யு, மாப்பசான், இடாலோ கால்வினோ, வர்ஜீனியா உல்ஃப் என வாசிப்பு தொடர்ந்தது. இவை புதிய வாசல்களைத் திறந்துவிட்டன. சிற்றிதழ்களை நிறைய வாசிக்கத் தொடங்கினார். அதன் மூலமாக அயல்நாட்டு இலக்கிய நூல்கள் பல அறிமுகமாகின. எழுத்தார்வம் உந்த சிறுகதைகள் சிலவற்றை எழுதினார் என்றாலும் அவற்றைப் பத்திரிகைகளுக்கு அனுப்பவில்லை.

அற்றைத் திங்கள் - நூல் வெளியீடு



வேலை, திருமணம், குழந்தைகள் என வாழ்க்கை விரிந்த பின்தான் எழுத முற்பட்டார் கலைச்செல்வி. தொடர்ந்த வாசிப்பும் ஏகாந்தமான தனிமை உணர்வுமே இவரை எழுத்துக்குள் செலுத்தின. 2012ல், நெய்வேலி தினமணி இதழ் சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவிக்க, அதற்கு ஒரு சிறுகதையை அனுப்பி வைக்கலாமே என்ற எண்ணத்தில் 'வைதேகி காத்திருந்தாள்' என்ற கதையை எழுதி அனுப்பினார். அச்சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றது. அதுதான் அச்சில் வந்த இவரது முதல் சிறுகதை. அதற்குக் கிடைத்த வரவேற்பும் குடும்பத்தினர், நண்பர்களின் ஊக்கமும் எழுதும் ஆர்வத்தைத் தூண்டின. தந்தை பெயரில் இவர் எழுதி அனுப்பிய 'வலி' சிறுகதை, 2013ல் நெய்வேலி தினமணி நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து உற்சாகத்துடன் எழுத ஆரம்பித்தார். உயிரெழுத்து, கணையாழி போன்ற இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகிப் பரவலான வாசக கவனம் பெற்றன. நாவல் எழுதும் ஆர்வம் முகிழ்த்தது. 2014ல், முதல் நாவல் 'சக்கை'யை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டது. கல்லுடைக்கும் தொழிலாளிகள் குறித்த கதை இது. இதற்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த நாவலுக்கான விருது கிடைத்தது. திருப்பூர் தமிழ்ச்சங்க விருதும் இதே நூலுக்குக் கிடைத்தது. தடம், காலச்சுவடு, காக்கைச் சிறகினிலே, சொல்வனம் இணைய இதழ், பதாகை இணைய இதழ், அகநாழிகை, கல்கி, செம்மலர், தாமரை, நவீன விருட்சம், சிலேட் என்று இலக்கிய இதழ்கள் பலவற்றிலும் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளியாகின. முதல் சிறுகதைத் தொகுப்பு 'வலி' 2014ல் வெளியானது.

நெய்வேலி தினமணி சிறுகதைப் போட்டி பரிசு - 2013



கலைச்செல்வியின் எழுத்து பற்றி பாவண்ணன், "பொருட்படுத்தி வாசிக்கும் விதத்தில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவரும் படைப்பாளி கலைச்செல்வி. அசலான வாழ்வனுபவங்கள் சார்ந்து மானுட மன ஆழத்தைத் தொட முனையும் விழைவை அவர் கதைகள் புலப்படுத்துகின்றன. அவர் கதைகளில் சித்தரிக்கப்படும் எல்லாச் சம்பவங்களும் மிக இயல்பான முறையில் பொருந்தி, கதைகளுக்கு ஒருவித நம்பகத்தன்மையை வழங்குகின்றன. கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளென கதைகளின் வடிவம் கலைச்செல்விக்கு மிக இயல்பாகவே கை வந்திருக்கிறது" என்று மதிப்பிடுகிறார். ('இரவு' சிறுகதைத் தொகுப்பு).

புதுக்கோட்டை இலக்கியப் பேரவை விருது



கலைச்செல்வியின் 'மாயநதி' முக்கியமானதொரு சிறுகதைத் தொகுப்பாகும். முதல் கதையாக இடம் பெற்றிருக்கும் 'மாயநதி' குழந்தைப் பருவத்தில், இளைஞன் ஒருவனால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் சிறுவனின் வாழ்க்கை, பின்னால் எப்படி எல்லாம் தடம் மாறுகிறது என்பதைச் சொல்கிறது. 'பிடித்தமானவள்' சிறுகதையும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். ஓய்வுபெற்ற தனது தந்தையின் பிரிவுபசார விழாவுக்கு அழைப்பதற்காக, அவருடன் முன்பு பணியாற்றிய பெண் அலுவலரின் இல்லத்திற்கு, தனது தந்தையுடன் செல்கிறான் கதையின் நாயகன். தனது தந்தையின் மரணம் காரணமாக அவரது அரசுப் பணியைப் பெற்ற அந்த வீட்டுப் பெண்ணை, தனக்குப் போட்டியாக, தன்னைப் போன்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பைத் தட்டிப்பறிப்பவளாக நினைக்கிறான். பிடிக்காத அந்தப் பெண்ணே சிறிது நேரத்தில் அவனுக்குப் பிடித்தமானவள் ஆகிறாள். எப்படி, எதனால் அவள் பிடித்தமானவள் ஆகிறாள் என்பதை உரத்துக் கூவாமல், போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் கலைச்செல்வி. தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் 'கீர்த்தியின் அப்பா' மற்றொரு முக்கியமான சிறுகதை. மகளின் வாழ்க்கையைப் பொருந்தாத் திருமணத்தால் பாழாக்கிய தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட, அந்தத் தந்தைக்கு, கணவனால் புறக்கணிக்கப்பட்ட அந்த மகள் ஆற்றும் சேவையே அவருக்குத் தண்டனையாவதை விளக்குகிறது இக்கதை. பல காத்திரமான சிறுகதைகளைக் கொண்டுள்ள இத்தொகுப்பு பற்றி அம்பை நூலின் முன்னுரையில், "கதைகளினூடே வரும் மனித உறவுகளும் அவற்றின் ஆழங்களும் திடீரென்று வீசும் வாசமாய் வரும் பெண்களின் ஒட்டுறவும் மனக்கிடக்கையும் கனக்கும் இக்கதைகளின் மரண அழுத்தத்தைத் தாங்க உதவும் தென்றலாய் வீசிப் போகின்றன. அந்தத் தென்றலை உருவாக்குவதுதான் கலைச்செல்வியின் எழுத்தின் பலம்" என்று குறிப்பிடுகிறார். அம்பையின் மதிப்பீட்டுக்கு ஏற்றவாறே இவரது படைப்புகள் பலவும் அமைந்துள்ளன. விரிவான களத்தில் மானுடர்களின் பிரச்சனைகளைப் பேசுகின்றன. அலசுகின்றன. தாழ்வாரம் இலக்கிய விருது 'மாயநதி' தொகுப்புக்குக் கிடைத்தது.

நெருஞ்சி இலக்கிய விருது



காடுகள் மீதும் பழங்குடியினர் மீது அரசும் அதிகாரமும் செலுத்தும் வன்முறை மற்றும் ஆதிக்கம் பற்றியது கலைச்செல்வியின் 'அற்றைத் திங்கள்' நாவல். சுற்றுச்சூழல் பிரச்சனைகளை காத்திரமாகப் பேசுகிறது இந்நாவல். ப. சிதம்பரம் அவர்களது முயற்சியில் உருவான எழுத்து இலக்கிய அமைப்பு இவரது 'புனிதம்' நாவலை வெளியிட்டுள்ளது. இதனைப் பெண்ணியம் பேசும் நாவலாக மதிப்பிடலாம். தனது படைப்பு முயற்சிகள் பற்றி கலைச்செல்வி, "என்னைப் பொறுத்தவரை அகத்திலும் புறத்திலுமான நெருடலான தருணங்களை விரிவான புனைவுக்குள் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பின் வழியே விரியும் மனதின் அடுக்குகளை எழுத்தின் வழியே அணுக இயலுமா என முயன்று கொண்டிருக்கிறேன்" என்கிறார். "பெண் எழுத்து என்றால் பெண்களைக் குறித்தேதான் எழுதவேண்டும் என்ற பொதுப்புத்தியைக் கடந்துவிடவே விரும்புகிறேன்" என்பவர், மேலும் அதுபற்றி, "படைப்புக்குள் பால் வேறுபாடு தேவையில்லை என்பதே என் கருத்து. பெண் இலக்கியம் என்றால் பெண்கள்தான் பேசவேண்டும் என்றில்லை. பெண்களை நோக்கி, அவர்களின் இரண்டாம் பட்ச சமுதாயப் போக்கு குறித்த அவலங்கள் நோக்கி, ஆண் படைப்பாளர்கள் மூலமாகப் பேச, எழுத வைப்பதும்கூட நல்ல விஷயம்தான்" என்கிறார். 'பெண்ணிய எழுத்தாளர்' என்பதை விட 'அறம் சார்ந்த படைப்பாளி' என்று குறிப்பிடப்படுவதையே விரும்புகிறார் கலைச்செல்வி.

சாகித்ய அகாடமி கூட்டம் ஒன்றில்



நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார் கலைச்செல்வி. இவருடைய சில சிறுகதைகள் தெலுங்கிலும் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. சிறுகதைகள், நாவல்கள் என்றில்லாமல் குறிப்பிடத் தகுந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இலக்கிய விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். காந்தியத்தின் மீது மிகுந்த ஆர்வமும் பிடிப்பும் கொண்டவர். தற்போது காந்தியின் வாழ்க்கையிலிருந்து அறியப்படாத பல பக்கங்களைப் புனைவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அந்த வகையில் குறிப்பிடத்தகுந்த படைப்பாக 'ஹரிலால் S/O மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி' நாவல் விளங்குகிறது. காந்தியின் மைந்தரான ஹரிலாலைப் பற்றியும், காந்தியை, காந்தியக் கொள்கைகளை, காந்திய வாழ்க்கையை மையமாக வைத்தும் இவர் எழுதியிருக்கும் நாவல் இது. இந்த நாவலின் இரண்டாம் பாகத்தைத் தற்போது எழுதிக் கொண்டிருக்கிறார். காந்தியை ஒரு கதாபாத்திரமாகக் கொண்டு இவர் எழுதியிருக்கும் மற்றொரு நாவல் 'ஆலகாலம்'. காந்தியை மையமாக வைத்து நிறையச் சிறுகதைகளையும் எழுதி வருகிறார். காந்தியைப் பற்றி அதிகம் எழுதிவரும் எழுத்தாளர்களான ஜெயமோகன், சுனீல் கிருஷ்ணன் வரிசையில் தற்போது கலைச்செல்வியும் இணைந்திருக்கிறார்.

ஸ்பேரோ விருதுடன்



பத்திரிகைகளிலும், இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் கலைச்செல்வி, தமிழக அரசசின் பொதுப்பணித் துறையில் பணியாற்றி வருகிறார். குடும்பத்துடன் திருச்சியில் வசித்து வருகிறார். writerkalaiselvi.blogspot.com என்பது இவரது வலைத்தளம்.

மாபெரும் விருட்சமாய் விரியும் மனிதவாழ்வு, ஒரு சிறு விதையாய் இலக்கியத்துக்குள் ஒளிந்திருக்கிறது. அதனைக் கலைச்செல்வி போன்றவர்கள் தங்கள் படைப்பின் வழி சிறப்பாகக் காட்சிப்படுத்தி வருகிறார்கள்.



கலைச்செல்வியின் படைப்புகள்
சிறுகதைத் தொகுப்புகள்: வலி, இரவு, சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது, மாயநதி, கூடு.
நாவல்கள்: சக்கை, புனிதம், அற்றைத் திங்கள், 'ஹரிலால் S/O மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி', ஆலகாலம்.




விருதுகள்
இவரது 'வலி' சிறுகதைத்தொகுப்புக்கு 'கவிதை உறவு' பரிசு கிடைத்தது. 2016ம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாக இவரது 'ஆழம்' சிறுகதை, இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவரது 'மீட்சி' சிறுகதைக்கு, 2017ல் நடந்த சிகரம் சிறுகதைப் போட்டியில் பரிசு கிடைத்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டியில் இவரது 'இரவு' என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது. பாரதி கலை இலக்கியப் பேரவை கம்பம் அமைப்பில் 'இரவு' சிறுகதைத் தொகுப்பு முதல் பரிசு பெற்றது. அதே தொகுப்புக்கு 'பாரதி கலை இலக்கிய பேரவை' பரிசும், 'நாங்கள் இலக்கியகம்' அமைப்பின் பரிசும் கிடைத்துள்ளது. கணையாழியில் வெளியான இவரது 'அலங்காரம்' சிறுகதை, 2017ம் ஆண்டின் 'இலக்கியச் சிந்தனை' விருது பெற்றது. 'இவளப் பிடிக்கல' என்ற இவரது சிறுகதை 2017ன் சிறந்த சிறுகதைக்கான விருது பெற்றதுடன், அவ்வாண்டின் சிறந்த சிறுகதைகளுடன் சேர்த்து நூலாகக்த் தொகுக்கப்பட்டு அதே பெயரில் வெளியானது. சென்னை தினம்-கிழக்கு பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'வீடு' சிறுகதை மூன்றாம் பரிசு பெற்றது. 'புனிதம்' நாவலுக்கு புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சி விருது கிடைத்தது.

கணையாழி பொன்விழாவில் சிறந்த சிறுகதைக்கான பரிசு இவரது சிறுகதைக்குக் கிடைத்தது. தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கிய 'வளரும் படைப்பாளர் விருது' உள்படப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். நேரு மெமோரியல் கல்லுாரி மற்றும் பிஷப் ஹீபர் கல்லுாரி உள்பட பல கல்லூரிகளில் இவரது படைப்புகள் பாட நூலாக வைக்கப்பட்ட சிறப்பை உடையன. கலைச்செல்வியின் சாதனைப் பயணத்தில் மற்றுமொரு இறகாக, அம்பையின் தலைமையில் இயங்கும் 'ஸ்பேரோ' அமைப்பின் (SPARROW -Sound and Picture Archives for Research on Women) 2021ம் ஆண்டிற்கான 'ஸ்பாரோ இலக்கிய விருது' கிடைத்துள்ளது.




அரவிந்த்

© TamilOnline.com