சாக்ரமென்டோ: ஜனவரி தமிழ்ப் பாரம்பரிய மாதமாக அறிவிப்பு
கலிஃபோர்னியா சாக்ரமென்டோவில் ஜனவரி மாதம் தமிழ்ப் பாரம்பரிய மாதமாக அறிவிக்கப்பட்டது. கலிஃபோர்னியா மாகாணத்தில் சாக்ரமெண்டோ தமிழ்மன்றத்தின் பரிந்துரையின்பேரில், ஜனவரி மாதத்தைத் தமிழ் பாரம்பரிய மாதமாக முக்கிய நகரங்களாகிய ஃபோல்சம், ரோஸ்வில், ராக்லின், ராஞ்சொகோர்டோவா ஆகியவற்றில் ஜனவரி 2022 அன்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் குறித்த விழிப்புணர்வையும் பாராட்டையும் அதிகரிக்க ஜனவரி, தமிழ்ப் பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படுகிறது. கலிஃபோர்னியா மாகாணத்தில் சுமார் 60,000 தமிழர்கள் வசிக்கின்றனர். சாக்ரமென்டோ தமிழ் மன்றம், சமூத்தில் அனைவருக்கும் சமமான அணுகல், வாய்ப்பு, மரியாதை மற்றும் சொந்தம் என்ற உணர்வை ஊக்குவிக்கிறது.



தமிழ்ப் பாரம்பரிய மாதத்தின் நோக்கங்கள்
1. தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் செழுமையைக் கொண்டாடுவது,
2. உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் பாரம்பரியங்கள், கலைகள் மற்றும் கலாச்சாரங்களைக்கொண்டாடுவது,
3. தமிழ் மக்களின் மொழி, மரபுகள் மற்றும் வரலாறு பற்றிய பின்னணியில் உள்ளவற்றைக் கற்பித்தல்,
4. கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தமிழர்கள் பல்வேறு துறைகளில் ஆற்றிய சாதனைகளை எடுத்துரைத்தல்,
5. தமிழர்களின் வளர்ச்சி மற்றும் செழுமையை முன்னெடுப்பது.

சாதனைகளை அங்கீகரித்து, நமது வேர்களைக் கண்டறியும் அதே வேளையில், தமிழர் வரலாற்றைக் கொண்டாட தமிழ் மரபு மாதம் வாய்ப்புகளை வழங்கும். உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் ஆர்வத்துடன் கொண்டாடும் பொங்கல் பண்டிகை, ஜனவரி மாதத்தில் வருகிறது என்பது இம்மாதத்தைத் தமிழ்ப் பாரம்பரிய மாதமாகக் கொண்டாடத் தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாகும்.

தமிழ் வழி வந்தவர்கள் அனேகர் பெரும் பங்களிப்பை அமெரிக்க சமூகத்திற்கு அளித்துள்ளனர். இவர்களில் சுந்தர் பிச்சை, கமலா ஹாரிஸ், இந்திரா நூயி, விஜய் அமிர்தராஜ், சி.கே. பிரகலாத், மிண்டி கெய்லிங் ஆகியோர் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பங்களித்துள்ளனர்.

தகவல்: சந்தியா நவீன்

© TamilOnline.com