இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மொத்தம் 128 பேர் பெறுகின்றனர். 107 பேர் பத்மஸ்ரீ, 4 பேர் பத்மவிபூஷண், 17 பேர் பத்மபூஷண் பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 34 பேர் பெண்கள். வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர், இந்திய வம்சாவளியினர் 10 பேர். விருது பெறுவோரில் இணையர் இருவரும் அடங்குவர். 13 பேர் இறப்புக்குப் பிறகு பெறுகின்றனர்.
தமிழகத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத், உத்தர பிரதேச முதல்வராக இருந்த மறைந்த பா.ஜ.க. மூத்த தலைவர் கல்யாண் சிங் இருவருக்கும் பத்ம விபூஷண் வழங்கப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பத்மபூஷண் பெறுகின்றனர். கோவிட்-19க்கான 'கோவாக்சின்' தடுப்பூசியைக் கண்டுபிடித்த 'பாரத் பயோடெக்' நிறுவனத் தலைவர் கிருஷ்ண எல்லா, அவரது மனைவி சுசித்ரா எல்லா இணையர் சேர்ந்து பத்மபூஷண் பெறுகின்றனர். அதேபோல், 'கோவிஷீல்டு' தடுப்பூசியை அளித்த 'சீரம் இன்ஸ்டிட்யூட்' நிறுவனத்தின் சைரஸ் பூனேவாலாவும் பத்மபூஷண் பெறுகிறார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாராயண நாதெள்ளா, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் பத்மவிபூஷண் பெறுகின்றனர்.
பத்மபூஷண் விருதை அமெரிக்காவின் சமையல் கலைஞர் மதுர் ஜாஃப்ரி, அறிவியலாளர் சஞ்சயா ராஜாராம் (மறைவுக்குப் பின்) பெறுகின்றனர். மஹாரஷ்டிரத் தொழிலதிபர் நடராஜன் சந்திரசேகரனும் பத்மபூஷண் பெறுகிறார்.
பத்மஸ்ரீ விருதை தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேர் பெறுகின்றனர். டாக்டர் வீராச்சாமி சேஷய்யா; எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் சிற்பி பாலசுப்ரமணியம்; சமூக சேவகர், கிராமாலயா நிறுவனர் எஸ். தாமோதரன்; கஜல் பாடகர், ஷெனாய் இசைக் கலைஞர் எஸ். பல்லேஷ் பஜந்திரி, க்ளாரிநெட் கலைஞர் ஏ.கே.சி. நடராஜன், சதிர் நடனக் கலைஞர் ஆர். முத்து கண்ணம்மாள், நடிகை சௌகார் ஜானகி ஆகியோர் தமிழகம் சார்பாக பத்மஸ்ரீ பெறுகின்றனர். புதுச்சேரியைச் சேர்ந்த தவில் கலைஞரான கொங்கம்பட்டு ஏ.வி. முருகையனும் பத்மஸ்ரீ பெறுகிறார். விருதும் கேடயமும் மார்ச், ஏப்ரலில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.
விருதாளர்களுக்குத் தென்றலின் வாழ்த்துகள். |