பஞ்ச பாண்டவர்களில் மூத்தவனான கர்ணனுக்கு, தான் ஐவரின் சகோதரன் என்பது தெரியாது. பஞ்ச பாண்டவர்களுக்கும் இது தெரியாது. அதன் காரணமாக, கர்ணன் அவர்களை அடியோடு வெறுத்தான். அவர்களை அழிக்கத் துடித்தான். அவன் மட்டற்ற ஆற்றலோடு அவர்களை எதிர்த்துப் போராடத் தன்னைத் தயார் செய்துகொண்டான். அவனது ஐந்து தம்பிமார்களும் அவனைக் கொடிய எதிரியாகக் கருதி அழித்துவிடத் திட்டமிட்டனர். அவர்கள் அவனைக் கொன்றும் விட்டனர். கர்ணனின் மரணத்துக்குப் பிறகு அவன் தனது சகோதரன் என்பதை அறியவந்த தர்மராஜருக்கு அளவுகடந்த துக்கம் ஏற்பட்டது.
அவரால் தன்னைத் தேற்றிக்கொள்ளவே முடியவில்லை, அவரைத் துக்கம் வாட்டியது. உண்மை தெரிந்திருந்தால் அந்தத் துக்கத்தைத் தவிர்த்திருக்கலாமே, அல்லவா? அதுபோலவே, எல்லாப் பீடங்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ஒரே கடவுள்தான் என்பதையும் அதே கடவுளின் அருள்தான் யாவரையும் ஊக்கி இயக்குகிறது என்பதையும் அறியாதவரை உனக்கு வெறுப்பும் கர்வமும் இருக்கும். அதை அறிந்து அனுபவித்துவிட்டால் உன்னில் அனைத்தின் மீதும் அன்பும் மரியாதையும் நிரம்பிவிடும். இந்த அடிப்படை சகோதரத்துவத்தை அந்தராத்மாவில் உணர்ந்துவிட்டால், போர் என்னும் காட்டுமிராண்டித்தனத்தை விட்டுவிடுவோம்.
நன்றி: சனாதன சாரதி, அக்டோபர் 2021
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |