தியாகராஜரும் ஃபெர்மாவின் கடைசி சூத்திரமும்
கதவைத் திறந்த சஞ்சய் சுப்ரமணியனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. முன்னறிவிப்பு இல்லாமல் ப்ரொஃபசர் கணேசன் வந்ததேயில்லை. அவர் வருகையைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அஜய் என்பது முகத்தில் தெரிந்தது..

"அட புரொஃபசரா! வாங்க, வாங்க!"என்றபடிகதவைஅகலமாகத்திறந்தான். "பார்த்து எவ்வளவு நாளாச்சு! எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?"

"எனக்கென்ன? பாட்டும் சாப்பாடுமா என்பாட்டுக்கு இருக்கேன்". ப்ரொஃபசர்தனியாகவரவில்லைஎன்பதைஅப்போதுதான்கவனித்தான்சஞ்சய். அவரைப்பார்த்துசம்பிரதாயமானஒருஅகலப்புன்னகை செய்தான்.

மூவரும் வரவேற்பறையில் நுழைந்ததும் சோபாவில் அமர்ந்திருந்த கிருஷ்ணா மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்கிறான்.

"அட, கிருஷ்ணாவும் இருக்காரா. வெரி குட், வெரி குட்."

புரொஃபசர் கணேசன் ஐ.ஐ.டி.யில் கணிதத் துறையின் தலை. போன வருடம் நோபெல் பரிசை இணைந்து வென்றவர். அதன் மூலம் தமிழ்நாட்டில் சினிமாக்காரர்களையும் கிரிக்கெட் வீரர்களையும் தற்காலிகமாக ஓரம்கட்டி ஹீரோ ஆகியிருப்பவர். ஃபோட்டோவுடன் செய்திப் பத்திரிகைகளிலும் நாளிதழ்களிலும் வெளியானதில் பெயரும் முகமும் தமிழ்நாட்டில் பலருக்கும் பரிச்சயமாகியிருந்தது. கிருஷ்ணா அவரை சஞ்சயின் வீட்டில் சிலமுறை சந்தித்திருக்கிறான். ஆனால் ஸ்டார் ஆன பிறகு இதுதான் முதல் முறை.

"வாழ்த்துக்கள் புரொஃபசர்"என்றான்கிருஷ்ணா.

"தாங்க்யூ, தாங்க்யூ"

சஞ்சய், கிருஷ்ணா இருவரின் பார்வையும் புரொஃபசருடன் வந்திருந்த ஜோல்னா பை ஆசாமிமேல் விழுகிறது.

"ஓ! இவரை அறிமுகப்படுத்த மறந்துட்டேன். வெரி சாரி. இவர் புரொஃபசர் விகாஸ் குப்தா. ஆங்! அப்படி மட்டும் சொன்னா சரியில்லை. கணித மேதை பிரம்மகுப்தாவின் வழித்தோன்றல்..."

"யாரு? பிரம்மஸ்புட சித்தாந்தம் எழுதினாரே அந்த பிரம்மகுப்தாவா?" சஞ்சயின் குரலில் ஆச்சரியம்.

அட! அதைப்பற்றிக் கூட சஞ்சய்க்குத் தெரிந்திருக்கிறதே என்றது குப்தாவின் ஆச்சரியப் புருவ உயர்த்தல்.

"கரெக்ட். அவரேதான்"என்றார்புரொஃபசர்.

"இரண்டு கணித மேதைகள் சேர்ந்து வந்திருக்கிறீங்க, வருகையில் கண்டிப்பா விஷயமில்லாமல் இருக்காது. என்ன விசேஷம் சொல்லுங்க புரொஃபசர்"என்றான்சஞ்சய்ஆர்வமாக.

"ரொம்ப சரியா சொன்னீங்க. விசேஷம் இருக்கு"கண்சிமிட்டினார்புன்முறுவலுடன்.

"வாங்க உட்கார்ந்து பேசலாம். என்ன சாப்பிடுறீங்க?"

"அதெல்லாம் வேண்டாம் சஞ்சய். எடுத்துட்டு வந்தாலும் வேஸ்ட். நான் சொல்லப்போற விஷயம் அதுமாதிரி."சஸ்பென்ஸ்வைத்தார்அவர்.

"ஃபெர்மா என்ற பிரஞ்சு கணித மேதையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா?" தடாலடியாகத் தொடங்கினார்.

எதிர்பாராமல் வந்த அந்தக் கேள்வியால் இருவரின் முகங்களும் குழம்பின.

"பெயர் கேள்விப்பட்ட மாதிரிதான் இருக்கு. ஆனால் சரியா நினைவுக்கு வரவில்லை"என்றான்சஞ்சய். தனக்குத்தெரியாதுஎனபதைஉதடுபிதுக்கிக்காட்டினான்கிருஷ்ணா.

"நோ ப்ராப்ளம். நானே சொல்கிறேன். ஒரு விஷயம். நான் வெறும் கணிதத்தை மட்டும் பத்தி பேச இங்க வரல. சஞ்சய், ஒரு ஸ்பெஷல் அன்பளிப்பும் கொண்டு வந்திருக்கேன்."

"விசேஷ அன்பளிப்பா, எனக்கா?" சஞ்சயின் குரலில் ஆச்சரியம் தொனித்தது. இதுபோன்ற உணர்ச்சிவசப்பட்ட தருணங்களில் சோஃபாவின் விளிம்புக்கு வந்துவிடுவது சஞ்சயின் பழக்கம். அப்போதும் அப்படியே. புரொஃபசருக்கு லேசாகச் சிரிப்பு வந்தது.

"ஆமாம். நான் கேட்ட கேள்வியும் அது சம்பந்தப்பட்டதுதான்"அர்த்தமுள்ளபுன்னகையுடன்குப்தாவைப்பார்க்கிறார். பரஸ்பரம்கண்சிமிட்டிக்கொள்கின்றனர்.

"ஆனால் அவசரப்படக் கூடாது. முதலில் கொஞ்சம் கதை. சுவாரசியமாக இருக்கும்"என்றார்அவரேதொடர்ந்து.

சஞ்சயைப் பார்த்ததும், முதலில் ஹோம்வர்க் அப்புறம்தான் டிவி என்றவுடன் கோணும் குழந்தையின் முகம் ஞாபகத்துக்கு வந்தது புரொஃபசருக்கு.

"என்ன சஞ்சய், சின்னப் பையனாட்டம்"உரிமையுடன்கடிந்துகொள்கிறார்.

"சரி. ஆரம்பிக்கலாமா. ஃபெர்மா ஒரு ஃப்ரெஞ்ச் கணித மேதைன்னு சொன்னேன், இல்லையா? தொழில் முறையில் அவர் வக்கீல். கணிதம் இரண்டாம் தாரம் மாதிரி"கண்சிமிட்டுகிறார்.

"புரிஞ்சுது. கணிதமே கதின்னு இருந்தாராக்கும்?" சொல்லிவிட்டு பலமாகச் சிரித்தான் சஞ்சய்.

"அதே அதே. அவருடைய கடைசி சூத்திரம் கணித வட்டத்தில் மிகப் பிரபலம். அவர் ஒரு தடவை கிரேக்க கணிதமேதை டயோபன்டைஸோட ஒரு புத்தகத்தில a2 + b2 = c2 என்ற சமன்பாட்டைப் பார்த்திருக்கிறார். என்ன சஞ்சய்? புரியலையா. சமன்பாடுன்னா ஈக்வேஷன். பாருங்க குப்தா, இந்தக் காலத்துத் தமிழ்ப் பசங்களுக்கு எல்லாத்தையும் இங்கிலீஷ்ல சொன்னாத்தான் புரியுது. ம்ம்ம் அது எதுக்கு இப்ப. எங்க விட்டேன்? ஆங், ஃபெர்மாவுக்கு அதைப் படிச்ச உடனே ஒரு பொறி தட்டியது. இந்தச் சமன்பாட்டை நிறைவு செய்யும் பாஸிடிவ் இன்டிஜர்கள் பல இருக்கு. ஆனால்...."

நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள் சஞ்சையும் கிருஷ்ணாவும்.

"என்ன சிரிப்பு? ஓ, இதை மட்டும் ஏன் இங்கிலீஷ்ல சொல்றேன்னு பாக்கறீங்களா? பேரிலக்கம்னு சொன்னா மட்டும் புரியுமா உங்களுக்கு? அதுனாலதான். ஓ.கே. Let’s not digress. அந்தச் சமன்பாட்டையே an + bn = cnஅப்படின்னு மாத்தி எழுதினால் என்னன்னு யோசித்தார். இந்த ஈக்வேஷனில் a, b, c மூன்றும் பாஸிடிவ் ஈவன் இன்டிஜராக இருக்க வேண்டும் என்றால் n உடைய value இரண்டுக்கு மேல் இருக்கவே முடியாது. இந்த சூத்திரத்திற்கான தெளிவையும் நான் கண்டுபிடித்து விட்டேன், ஆனால் அதை எழுத இந்த இடம் போதாது என்று அந்தப் புத்தகத்தின் மூலையில் எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டார்."

சொல்லி நிறுத்தினார். சஞ்சய், கிருஷ்ணா இருவரின் ஆர்வமான முகங்கள் அவர் சொல்வது விளங்குகிறது என்பதைத் தெளிவுபடுத்தின. உற்சாகத்தோடு மீண்டும் தொடர்கிறார்.

"இப்ப உதாரணத்திற்கு a2 + b2 = c2 ஈக்வேஷனை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு
32 + 42 = 52
62 + 82 = 102
92 + 122 = 152
122 + 162 = 202
152 + 202 = 252

என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் an + bn = cn என்பதில் n-க்கு இரண்டுக்கு பதில் மூன்றை வைத்தால் a, b, c இவை மூன்றுமே ஈவன் எண்களாக இருக்கவே முடியாது என்கிறார் ஃபெர்மா."சொல்லிவிட்டுநிறுத்தினார்புரொஃபசர்.

"Very Interesting. நிஜமாகவா? நம்ப முடியலையே? வீட்டுக்குப் போய் பொறுமையா ட்ரை பண்றேன்"என்றான்கிருஷ்ணா.

"விடு கிருஷ்ணா, இதைப் படிச்ச, கேட்ட எல்லாரும் ரொம்ப வருஷங்களாக இதைத்தான் செய்து வருகிறார்கள். ஃபெர்மா தெளிவு கண்டுபிடிச்சுட்டேன்னு எழுதினாரே தவிர தெளிவு என்னன்னு எழுதாமலேயே போய்ச் சேர்ந்துவிட்டார். அவர் தெளிவு எதுவும் தராததால் தெளிவு கண்டுபிடிக்கிறேன் என்று பலரும், ஃபெர்மாவின் கடைசி சூத்திரம் சுத்த பேத்தல் என்று அதைத் தவறாக்கும் முயற்சியில் பலரும் இன்றுவரை பிஸியாக இருக்கிறார்கள். இரு சாரார் தரப்பிலிருந்தும் இதுவரை உபயோகமாக ஒரு தகவலும் இல்லை. ஆனால் பாருங்க, உலகமே மண்டையை உடைச்சிட்டிருக்கும் விஷயத்தை நம்ம குப்தா சத்தமில்லாமல் உடைச்சுட்டார்."

"என்ன நிஜமாவா?"

"ஆமாம். அதைப்பற்றி விளங்கச் சொல்ல இப்போது சமயமில்லை. ஆனா ஒரு முக்கியமான விஷயம். குப்தாவின் தெளிவினால் ஒரு அற்புதமான பலன் கிடைத்திருக்கிறது."சொல்லிவிட்டுநிறுத்தினார்புரொஃபசர், இருவரின் எதிர்பார்ப்பு நிறைந்த முகங்களைப் பார்த்தபடி.

"குப்தா, அவர்களுக்கு அந்த விசேஷ அன்பளிப்பைக் காட்டும் நேரம் வந்துவிட்டது."

தன் ஜோல்னாப் பையிலிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்து புரொஃபசரிடம் நீட்டினார் குப்தா. புரொஃபசரின் கையிலிருந்து வாங்கி அதை அவசரமாகப் பிரித்துப் பார்க்கிறான் சஞ்சய். உள்ளே இருந்தது ஒரு சி.டி.

"என்ன சி.டி இது?"

"தியாகராஜர் கிருதிகள்"என்றார்குப்தாஅமைதியாக.

புஸ்ஸென்று ஆகிவிட்டது சஞ்சய்க்கு. இதைப்பற்றியா இவ்வளவு சிலாகித்துப் பேசினார் என்று மனதில் நினைத்துக் கொண்டது முகத்தில் தெரிந்தது.

"யாருடையது?" குரல் ஆச்சரியம் எல்லாம் போய் சுரத்தில்லாமல் வந்தது.

"தியாகராஜர்"என்றார்குப்தாஅவருடையவழக்கமானஅமைதியானகுரலில்.

"அதைக் கேட்கவில்லை குப்தாஜி. யாரு பாடியிருக்காங்கன்னு கேட்டேன்."

"அதைத்தான் நானும் சொன்னேன்."குரலின்அமைதிகொஞ்சமும்குறையவில்லை. லேசாகச்சிரிக்கவும்செய்தார்.

"என்ன?" இரட்டை நாயனமாகக் கேட்டனர் இருவரும். குரல்களில் ஆச்சரியம் விஞ்சியிருந்தது.

"ஆமாம். இது தமாஷ் இல்லை. இதைப் பாடியது சாட்சாத் தியாகைய்யர் தான்"வழிமொழிந்தார்புரொஃபசர்கணேசன்.

"அவர் காலத்தில ஏது ரெக்கார்டிங் எல்லாம்"இதுகிருஷ்ணா.

"கரெக்ட் கிருஷ்ணா. அதெல்லாம் அவர் காலத்தில கிடையாது. இந்த சி.டி. உபயம் நம்ம குப்தா. ஃபெர்மாவின் கடைசி சூத்திரத்துக்கு அவர் கண்டுபிடித்த தெளிவின் பயன்தான் உங்க கையில சி.டியா இருக்கு."

இது என்ன கதை என்றன இருவரின் முகங்களும்.

"நம்ப முடியவில்லை இல்லையா? இதை முதலில் இவர் சொன்னதும் எனக்கும் கப்ஸா என்றுதான் தோன்றியது. ஆனால் சத்தியமாக இது நிஜம். என்னை நம்புங்கள்"என்றார்புரொஃபசர்.

"சி.டியைப் போட்டுக் கேட்கலாமே!"என்றான்சஞ்சய், ஆர்வத்துடன்.

கேட்டதும் பிரமிப்பில் ஆழ்கிறார்கள் இருவரும்.

"இது தியாகராஜர் குரலான்னு தெரியலை. குரல் இதுவரை நான் கேட்காத குரல். குரல், பாவம், ஞானம் இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் இருக்கலாம்னுதான் தோணுது. ஆனால் இது எப்படி சாத்தியம்னுதான் புரியலை. நம்ப முடியலயே!"

"சஞ்சய், குப்தா இந்த சூத்திரத்தின் தெளிவைக் கண்டுபிடித்த உடன் இதை எங்கு பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சி செய்தார். இரண்டு வருட ஆராய்ச்சிக்குப் பின் ஒலி வடிவ மீட்பியல் துறையில் பயன்படுத்தலாம்னு கண்டுபிடித்தார்."

"ஒலி வடிவ மீட்பியல் துறையா?"

"பெயரிலேயே விளக்கமும் இருக்கு சஞ்சய். அதாவது ஒலி வடிவங்களை மீட்பது எப்படி என்று ஆராய்ச்சி செய்வதுதான் இந்தத் துறையின் நோக்கம். உதாரணத்துக்கு, குளத்தில் ஒரு பெரிய கல்லைப் போட்டால் என்ன ஆகும்?"

"முங்கும்"என்றான்கிருஷ்ணா. பதிலுக்குமுடிவில்கேள்விக்குறிஇருந்தது.

"முங்கும், சரி. அதுக்கு முன்னால்?"

"காற்றில் இருக்கும்."

"இல்லை கிருஷ்ணா, விடு. நானே சொல்லிடறேன். கல் குளத்தில் விழுந்த நொடியில் சத்தம் கேட்கும். குளத்தின் நீர்ப்பரப்பில் அலைகள் உருவாகும் இல்லையா?"

ஆமாம் என்று தலை அசைக்கிறார்கள் இருவரும்.

"தண்ணீரில் கல் விழுந்ததால் ஏற்பட்ட இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அதாவது, நீரலைகளின் தன்மையை வைத்து அதை உருவாக்கிய சத்தத்தை மீட்பதுதான் ஒலி வடிவ மீட்பியல் துறை"

"என்ன!"இருவரிடமிருந்தும்ஒருசேரவந்தஅந்தக்கேள்வியில்அதிகம்இருந்ததுவியப்பா, அவநம்பிக்கையா என்று பட்டிமன்றமே நடத்தலாம்.

"ஏன்? ஏன் முடியாது? சிம்பிள் லாஜிக். நான் இப்போ பேசுவது உங்களுக்கு எப்படி கேட்கிறது? நான் பேசுகிறபோது அதனால் காற்றுத் துகள்களில் ஏற்படுகிற அதிர்வுதான் குரல். நம் தொண்டை - ட்ரான்ஸ்மிட்டர். அந்த அதிர்வுகளை வாங்கிக்கொள்ளும் ரிசீவர் நம்ம காது. அந்த அதிர்வுகள் செவிப்பறையோட கதவைத் தட்டி உள்ள நுழைந்து காக்லியா (cochlea) வழியா மூளையை எட்டுகிறது. இடையில் அதிர்வுகளை வைத்து ஒலியை மீட்கும் மாயாஜாலம் நடக்கிறது. கடைசியில் புரிதல் – மூளையின் உதவியுடன். அதே சூட்சுமம்தான் இங்கேயும்."

"சரி புரொஃபசர், செய்ய முடியும் என்றே வைத்துக் கொள்ளலாம். தியாகராஜர் பாடிய போது உருவான அதிர்வுகள் இன்னும் அங்கேயேவா சுத்திக் கொண்டிருக்கும்? கேளடி கண்மணி ஏர் பில்லோ காமெடி தோத்துது போங்க."

"அப்படித்தான் நினைக்கத் தோணும். அறியாமை சஞ்சய், அறியாமை. ஃபெர்மாவின் கடைசி சூத்திரத்தின் தெளிவு, அதில்தான் விஷயமே இருக்கு. அதை நான் விளக்கி உங்களை போர் அடிக்கப் போவதில்லை. விளக்கினாலும் உங்களுக்குப் புரியுமான்னு தெரியலை. ஆனால் இது சத்தியமான உண்மை. இதில் எந்த விதமான சந்தேகமும் வேண்டாம்."

வாயடைத்துப் போகிறார்கள் சஞ்சயும் கிருஷ்ணாவும்.

"சரி சஞ்சய், கிருஷ்ணா. நான் வந்த வேலை முடிஞ்சாச்சு. நான் கிளம்புகிறேன். ஆங், முக்கியமான விஷயம். இந்த ஆராய்ச்சியை இன்னும் அஃபிஷியலா பப்ளிஷ் பண்ணல்லை. அதுனால நான் சொல்ற வரைக்கும் இந்த விஷயம் உங்களுக்குள்ளேயே இருக்கட்டும்."

வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்.

"அப்புறம், நீங்க ரெண்டு பேரும் ரெண்டு மாதத்திற்குக் கச்சேரியெல்லாம் கேன்சல் பண்ணிடுங்க. இன்னும் கொஞ்ச நாளுக்கு இதே மாதிரி வாய் பிளந்த மாதிரியேதான் இருக்கப் போறீங்க. பாட்டெல்லாம் வராது."

சொல்லி விட்டுப் பெரிதாக சிரித்தபடி கிளம்பினார் புரொஃபசர்.

சி.டி., ப்ளேயரில் சுழன்று கொண்டிருந்தது. அதைவிட வேகமாகச் சுழன்று கொண்டிருந்தன அவர்கள் இருவரின் எண்ணங்களும்.

குமார் ராமசுப்ரமணியன்,
பெல்மீடு, நியூ ஜெர்சி

© TamilOnline.com