கருமலை களவாணிகள் (அத்தியாயம் - 2)
அருண் எழுந்த சில நிமிடங்களில் தடால் புடால் என்று குளியல் அறையில் சத்தம் கேட்டது. கீதாவுக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஐந்தே நிமிடத்திற்குள் சமையல் அறைப் பக்கமாக அருண் வந்தான். கீதா கணவர் எங்கே என்று நோட்டம் விட்டார்.

ரமேஷ் மீண்டும் தூங்கப் போய்விட்டார் என்று தெரியவந்தது.

அருகில் வந்த அருணின் கையை நோட்டம் விட்டார். கையில் கொஞ்சம்கூட ஈரம் இல்லை.

"அருண், பல் விளக்கினியா?"

"பின்னே! ஏன் இப்பிடி சந்தேகப்படற?"

"கையில் ஒரு சொட்டுகூட ஈரம் இல்லையே?"

"நான் நல்லா துடைச்சிட்டு வந்தேன். ஈரமாயிருந்தா நீ அதுக்கும் திட்டுவே இல்லே?"

அருண் பேசிக்கொண்டே மேலே தட்டில் இருந்த தானிய அவல் (cereal) டப்பாவை எடுக்கப் போனான். கீதா அந்த டப்பாவைப் பிடித்தபடி மீண்டும் கேட்டார்.

"அருண், பல் விளக்கினியா?"

"யெப்" என்று சொல்லி தோளை ஒரு குலுக்கு குலுக்கினான்.

"எங்கே, கொஞ்சம் இப்படி ஊது பாப்போம்?"

அருணுக்குச் சட்டென்று கோபம் வந்தது. ஒரு வேகத்தோடு தானிய அவல் டப்பாவை எடுக்க முயற்சித்தான்.

"அருண்! வேண்டாம்."

அம்மாவை அதற்கு மேலும் சோதிக்க அவனுக்கு விருப்பமில்லை.

"ஓகே! You win!" என்று சொல்லிவிட்டு மீண்டும் குளியலறைக்குச் சென்றான். கடகடவென்று மாடிப்படி ஏறினான். கீதா புன்சிரிப்போடு அங்கு நடக்கும் டிராமாவைப் பார்த்தார். அருண் இந்த முறை திரும்பி வந்தபோது, பற்பசை வாசம் அருமையாக அடித்தது. ஈஈஈ என்று பல்லைக் காட்டியபடி கீதாவின் அருகில் வந்து நின்றான். தனது கையில் இருமுறை ஊதிவிட்டு கீதாவின் முகத்தின் அருகே வைத்தான். கீதா சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தார். அடுத்த சில நொடிகளில் அருண் ஒரு வட்டிலில் தானிய அவலைப் போட்டு, கையில் ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்தபடி சாப்பிட ஆரம்பித்தான்.

கீதா மணியைப் பார்த்தார். மணி ஒன்றைத் தாண்டியிருந்தது. மதிய உணவு சாப்பிடும் நேரத்தில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதைப்பற்றி பேசப்போய் மீண்டும் ஒரு விவாதம் தொடங்க வேண்டாம் என்று விட்டுவிட்டார்.

அப்பொழுது கொட்டாவி விட்டபடி ரமேஷ் வந்தார்.

"என்ன அருண், டோநட் சாப்பிடலாமா?" என்று அருணைப் பார்த்துக் கேட்டார்.

அருண் வழக்கம் போலக் காதில் வாங்கிக் கொள்ளாமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்.

"என்னங்க, மணி பார்த்தீங்களா இப்ப? மதிய உணவு சாப்பிடற நேரம் ஆயிடுச்சே. இப்ப போய் அந்தக் கண்றாவி எல்லாம் சாப்பிடணுமா?"

"அப்ப பேகல்?" ரமேஷும் குழந்தை போலக் கேட்டார். இதுமட்டும் அருண் காதில் விழுந்துவிட்டது.

"என்ன? பேகல்? வாங்கப்பா, போய் வாங்கிட்டு வரலாம். ஒரு சின்ன ஓட்டம் போட்டுக் கடைக்குப் போலாமா?" ரமேஷ்.

கீதாவால் அதற்குமேல் பொறுக்க முடியவில்லை. "சாப்பாட்டு நேரத்துல இதெல்லாம் தேவையா? நான் ஒருத்தி கிறுக்காட்டம் எல்லாம் பண்ணி வெச்சிருக்கேன். இவங்களுக்கு பேகல் வேணுமாம், டோநட் வேணுமாம். என்ன கூத்தாப் போச்சு உங்களுக்கு?" வெடித்துத் தள்ளினார்.

மறுபேச்சுப் பேசாமல் அப்பாவும் மகனும் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தார்கள். அருண் சாப்பிட்டுக் கொண்டிருந்த வட்டிலைக் கையில் எடுத்து சமையல் அறை அங்கணத்தில் வைத்தான்.

பத்து நிமிஷம் கழிந்தது. ஒரே அமைதி. பக்கரூ சத்தம் போடாமல் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருந்தது. அதன் முன்னால் ஒரு கிண்ணத்தில் சாப்பாடு போட்டார் கீதா. சத்தமே போடாமல் மெதுவாகச் சாப்பிட்டது பக்கரூ. மிருகங்களுக்கு ஆறாவது அறிவு இருக்கும் என்பார்களே, அதுதான் இது. நடப்பதை உணர்ந்து கொண்டு பக்கரூவும் அமைதியாக இருந்தது.

ரமேஷும் அருணும் சொல்லி வைத்தது போல் குளித்துவிட்டுப் புத்துணர்ச்சியோடு வந்தார்கள். ரமேஷின் வாசனைத் திரவியம் ஆளைத் தூக்கியது.

கீதா அவர்களின் வருகை பார்த்து சாப்பாட்டுப் பாத்திரங்களை மேசைமீது எடுத்து வைத்தார். ரமேஷும் அருணும் மற்ற வேலைகளைச் செய்தார்கள். தட்டு வைப்பது, கரண்டியை எடுத்து வைப்பது, ஊறுகாய் மற்றும் அப்பளம் வைப்பது போன்ற சின்ன வேலைகளை அருண் செய்தான்.

"கீதா, நல்லா இருக்கு ரசம்."

"பொறியல் சூப்பர். அதுவும் உருளைக் கிழங்கு ரோஸ்ட்! கலக்கிட்ட அம்மா."

"மிளகு கொஞ்சம் தூக்கல்தான்" ரமேஷ் அச்சென்று தும்மினார்.

"இன்னிக்கி என்ன கீதா, விதவிதமா பண்ணிருக்க? வாரக்கடைசிலே லைட்டாதான பண்ணுவ?"

கீதா சிரித்தார். அப்பாவும் பையனும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

ரமேஷ் எதேச்சையாக செல்ஃபோனை எடுத்துப் பார்த்தார். அதில் வந்த சில செய்திகள் இருந்தன.

"சாப்பிடும்போது வேண்டாமே!" கீதா சொன்னார்.

"அஞ்சு நிமிஷம். ப்ளீஸ்."

வந்திருந்த செய்திகளை ஒவ்வொன்றாகப் படித்து நீக்கினார். கடைசியாக இருந்த மெசேஜ் சொன்னது: "கீதாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பவும்."

அசடு வழிந்தபடி ரமேஷ் தலை நிமிர்ந்தார்...

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com