நினைவு என்பது ஒரு தனிமனிதருக்கு அடையாளம் ஒன்றை அளிப்பது போல, வரலாறு நமக்கு அடையாளத்தை அளிக்கிறது. இந்த அடையாள மீட்பு இயக்கத்தில் வரலாறு எத்தகைய வகிபாகம் ஆற்றுகிறது என்பதனை அறிவு பூர்வமான தேர்ந்தெடுப்புக்களுக்கான பிரக்ஞையாகவும் முறைமையாகவும் வளர்த்தெடுத்த வரலாற்றாய்வாளர்களுள் பேராசிரியர் கே.ஏ நீலகண்ட சாஸ்திரி (1892 - 1975) முக்கியமானவர், முதன்மையானவர். இவர் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுத்துறையில் புதிய தடங்கள் புதிய களங்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர். வரலாறு ஒரு அறிவியல் கற்கை நெறியாகவும் ஆய்வுத்துறையாகவும் பல்பரிமாணம் பெற்று, தமிழ்ச்சிந்தனையில், அதன் அனுகுமுறையில் மாற்றங்கள் உருவாகவும் காரணமாக இருந்துள்ளார்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக் குறிச்சியில் நீலகண்டன் என்ற சாஸ்திரி 1892 ஆகஸ்ட் 12ந் தேதி பிறந்தார். திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் படித்து இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் முதுகலைப் பட்டம் பெறச் சென்னைக்குச் சென்றார். அப்பொழுது குடும்ப வசதியின்மை காரணமாக இவரது தந்தையார் படிப்பை விட்டுவிடும்படி கூறினார். ஆனால் இவரது மூத்த சகோதரர் படிப்பின் உயர்வினை மனத்திற் கொண்டு படிப்பபைத் தொடரச் சொல்லி இவருக்கு உதவி செய்தார்.
சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் டாக்டர் மேக்பெல் என்ற வரலாற்றுப் பேராசிரியரிடம் நீலகண்டர் பயின்றார். அப்பொழுது இவர் சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் முதன்மையான மதிப்பெண்கள் பெற்றார். இதனால் உதவிச்சம்பளம்பெற்று தொடர்ந்து படிப்பைத் தொடர சாதகமான நிலைமை ஏற்பட்டது. முதுகலைப்பட்ட வகுப்பில் 1913ல் மாகாணத்தில் முதல் மாணவராக திகழ்ந்தார்.
முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் 1913 முதல் 1918 வரை திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். தொடர்ந்து 1918 முதல் 1920 வரை காசி இந்து பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். 1920 முதல் 1929 வரை சிதம்பரம் மீனாட்சி கல்லூரியில் முதல்வராகவும் பணிபுரிந்தார். வரலாற்றுத் துறையில் நுட்பமான அறிவியல் கண்ணோட்டம் மிக்க பேராசிரியராக இவர் விளங்கி வந்தார். இவரது புலமையும் ஆய்வுநுட்பமும் பலரால் மதிக்கப்பெற்று வந்தன. இவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரலாற்றுத்துறையில் முக்கியத்துவம் மிக்கவையாகத் திகழ்ந்தன.
1929 முதல் 1947 வரை 18 ஆண்டுகள் சென்னை பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் இவர் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் 1952 -1950 வரை மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் (Indology) பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1952 இல் சில மாதங்கள் நேபாளம் சென்று திரிபுவன் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பண்பாடு பற்றிச் சிறப்புரை ஆற்றினார். சென்னையிலுள்ள தென்கிழக்கு ஆசியப் பண்பாட்டு மையத்தில் 1959 முதல் 1971 வரை 12 ஆண்டுகள் இயக்குனராகப் பணிபுரிந்தார். தொடர்ந்து இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் இடம்பெற்ற பல்வேறு கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகள் வாசித்தும், கருத்தரங்குகளை தலைமையேற்று நடத்தியும் உள்ளார். 1950 களுக்கு பின்னர் தென்னிந்திய வரலாற்றுப் பேரறிஞராகத் திகழ்வதற்கான புலமைத்தளம் அகல்விரி பண்பாக உருப்பெற்றது.
சாஸ்திரி எழுதிய கட்டுரைகளும் நூல்களும் வரலாற்றுத்துறையில் ஒரு புதிய வெளிச்சம் பாய்ச்சின. சென்னைப் பல்கலைக்கழக இதழ், இந்திய வரலாற்று மலர், இந்தியன் ஆன்டிகுயரி, இந்தியன் ஹிஸ்டாரிகல் குவார்டர்லி, எபிகிராபிஃகா இந்திகா, கல்கத்தா ரிவ்யூ ராயல் ஏஷியாடிக் சொசைட்டி மலர், கல்ச்சுரல் ஹெரிடேஜ் ஆப் இந்தியா போன்ற பல வரலாற்று இதழ்களில் இவரது கட்டுரைகள் இடம்பெற்றன.
இவை புதிய ஆய்வுக் களங்களுக்கான களத்தை மேலும் அகலித்து ஆழப்படுத்தின. புதிய உண்மைகளையும் அவற்றின் உறவுகளையும் விளக்கங்களையும் தந்தன. வரலாற்று வரைவியல் பற்றிய தெளிந்த கண்ணோட்டம் மிக்கவராகவும் புதிய ஆராய்ச்சி நெறிமுறைகளைக் கடைப்பிடித்து புதிய ஆராய்ச்சிச் செல்நெறி உருவாகி வளர்ந்து வரவும் இவர் காரணமாக இருந்துள்ளார். இவர் 22 நூல்களையும் 160க்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவற்றுள் சில பிற வரலாற்றறிஞர்களுடன் இணைந்து எழுதப்பட்டவையாகும். 1929ல் பாண்டிய அரசு (The Pandyan Kingdom) எனும் முதல் நூல் வெளிவந்தது. தொடர்ந்து சோழர்கள் (1935) எனும் நூலை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
சோழர்கள் என்ற நூல் அடிப்படையான ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டது. இத்தகு சிறப்பு முயற்சியை இதற்கு முன்னர் வேறு எவரும் மேற்கொண்டதில்லை. குறிப்பாக சோழர்காலத்தின் முழுமையான வரலாறு, சோழ பேரரசின் ஆட்சிமுறை, வரி விதிப்பு, நிதி, மக்களின் வாழ்க்கை முறை, தொழில், வாணிபம், விவசாயம், நில உரிமை, கல்வி, சமயம், கலை இலக்கியம்... என பல நிலைகளில் சோழர் காலத்தை விளங்கிக் கொள்ளும் விதத்தில் தக்க சான்றுகளுடன் ஆராய்ந்து வெளிப்படுத்தி உள்ளார். சாஸ்திரியாரது குறுக்கிடு மூலம் தான் சோழர்கள் பற்றிய வரலாறு முதல் முறையாகச் செய்யப்படும் ஆராய்ச்சிக்கான தளத்தை அமைக்கிறது. அதாவது சோழர் வரலாற்றுக்கு ஒரு ஆய்வு முறையியலை உருவாக்கினார்.
சோழர் கால ஆராய்ச்சிக்கு ஏற்பட்ட இடையூறுகளை இந்நூலுக்கு எழுதிய முகவுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 'தொல் பொருள்துறையோ தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களோ பாதுகாக்கப்பட்டுள்ள இடங்களை முறைப்படி ஆராய்ந்து அவற்றின் விளக்கங்களையும் புகைப்படங்களையும் வரைபடங்களையும் தயாரித்து வழங்க முன்வந்தால் தான் இந்த இடையூறு நீங்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், 'மூலங்களை என் கருத்திற்கிணங்க படித்து அதன் அடிப்படையிலேயே நான் எழுதியிருக்கிறேன். இந்த துறையின் அறிஞர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று மிகுந்த தன்னடக்கத்துடன் தான் பிற அறிஞர்களுக்கு கடமைப்பட்டுள்ளதை சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.
சாஸ்திரியாரது சோழ வரலாறு தான் பின்னர் தி.வை சதாசிவபண்டாரத்தார் 'பிற்காலச் சோழர்" எனும் நூலை எழுதக் காரணமாக இருந்தது. இன்றுவரை பல்வேறு ஆய்வாளர்கள் சோழர்காலம் குறித்து ஆய்வு செய்வதற்கு சாஸ்திரியின் சோழர்காலம் என்னும் நூல் மிகவும் அடிப்படையாகவும் முன்னோடியாகவும் இருந்ததை யாரும் மறுக்கமுடியாது. நொபொரு கராஷிமாவின் 'வரலாற்றுப் போக்கில் தென்னக சமூகம்- சோழர் காலம் (850 - 1300)" என்ற ஆய்வு நூலையும் நாம் இந்தப் பின்புலத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ளவேண்டும்.
வரலாற்று ஆராய்ச்சி உலகில் கால ஆராய்ச்சி என்பது ஒரு கலங்கரை விளக்கம். சாஸ்திரி கால ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான திட்பநுட்பத்தை ஒரு கலையாக வரலாற்று மாணவர்களுக்கு தம் ஆய்வுக் கொடையாகக் கையளித்துள்ளார்.
பேராசிரியர் வையாபுரிபிள்ளைக்கு சாஸ்திரியாருடன் மிக நெருங்கிய உறவு உண்டு. இவரது 'புலமை', 'ஆய்வு' கண்ணோட்டங்கள் வையாபுரிபிள்ளையிடம் அதிகம் செல்வாக்கு செலுத்தியுள்ளமையை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் காலஆராய்ச்சி தொடர்பில் வையாபுரிபிள்ளை காட்டிய ஆர்வத்தின் பின்னால் நீலகண்ட சாஸ்திரி இருந்துள்ளார்.
தமிழகத்தின் வரலாறு பொதுவாக சங்க இலக்கியத்துடன் தொடங்குவதாகக் கருதப்படுகிறது. இக் கருத்துக்கு அடிப்படையாக இருப்பது சங்க இலக்கியங்களாகும். சங்கஇலக்கியங்கள் இலக்கியவாதிகளிடையேயும் வரலாற்று ஆசிரியர்களிடேயேயும் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. இதன் காரணமாக தமிழகத்தின் வரலாற்றை சங்க காலத்துக்கு முற்பட்டகாலம், சங்க காலம், சங்கமருவியகாலம் என சங்க இலக்கியங்களை முன்னிறுத்தி ஆய்வுகள் பெரும்பாலும் உருவாக்கப்பட்டு உள்ளது.
இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கிய காலம் எனும் வரையரை தொடர்பில் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. பேராசிரியர்கள் வையாபுரிபிள்ளை, நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் சங்க காலத்தை ஏறத்தாழ கி.மு 100 முதல் கி.பி 250 வரையுள்ள காலமெனக் கொள்வர் பேராசிரியர் காமில்சுவலபில் கி.மு 100 முதல் கி.பி 250 வரையுள்ள காலப்பகுதியினைச் சங்ககாலம் என்று கொள்வர் ஆனால் இன்று ஐராவதம் மகாதேவன் நூல் மூலம் காலநீட்சி வரையறை மாற்றப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த இடத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பி 'தமிழில் இலக்கிய வரலாறு' எனும் நூலில் நீலகண்டசாஸ்திரி குறித்து கூறிய கருத்து இங்கு ஈண்டு நோக்கத்தக்கது. 'இலக்கிய வரலாறு தொடர்பான மற்ற முக்கிய எழுத்துத்தொகுதி தமிழ் மொழி, தமிழ் நாடு பற்றிய வரலாற்று ஆய்வுகளாகும். எஸ் கிருஷ்ணசாமி ஐயங்கார், பி.ஆர். ஸ்ரீநிவாஸ் ஐயங்கார் போன்ற அறிஞர்களின் ஆக்கங்கள் இத்தொகுதிக்குள் அடங்கும். இவ்விரு அறிஞர்களும் இலக்கியச் சான்றுகளைக் கையாளும் வழியில் வேறுபாடுகள் உடயோராகக் காணப்பட்டனரெனினும் சங்க இலக்கியங்களிற் காணப்பட்டவற்றைச் சான்றுகளாகக் கொண்டு தமிழ் நாட்டின் வரலாறுப் பற்றிய தரமான இந்தியா முழுவதிலும் ஏற்புடைமை கவர்ச்சி பெற்று விளங்கிய நூல்களை எழுதினர் இந்திய பண்பாட்டினை முழுமையாக விளங்கிக் கொள்வதற்குத் தென்னிந்தியாவில் ஏற்பட்ட வளர்ச்சிகளை உன்னிப்பாக ஆராய்தல் வேண்டும் என்பதனை இந்திய வரலாற்று ஆசிரியர்களிடையே வற்புறுத்தித் தென்னிந்திய வரலாற்றினைத் தாம் எழுதிய வகையாலும் எழுதியவற்றாலும் வன்மையான தளநிலைப்படுத்திய நீலகண்டசாஸ்திரியின் வருகையுடனேயே சங்க இலக்கியத்தை வரலாற்றுச் சான்றாகப் பயன்படுத்துவதிலுள்ள பிரச்சினைகள் தெளிவுற விளங்கப்படுகின்றன."
சாஸ்திரி தாம் கொண்டிருந்த கருத்துகளைப் பின்னர் அறிவியல் நிலை நின்று நோக்கிய பொழுது தாக்குப்பிடிக்க முடியாத வகையில் மாற்றிக்கொண்டு விட்டார். (1966 இல் வெளிவந்த தமிழர்களின் வரலாறும் பண்பாடும் எனும் நூலில்.) ஆரம்பத்தில் இவர் சங்க இலக்கியத்தை தமிழ் மக்களின் வரலாற்றுக்கான உண்மையான சான்றாகக் கொள்வதற்கான பயன்பாட்டை மிகத்தெளிவாக எடுத்துக்கூறியிருந்தார்.
'காலவரன் முறைப் பற்றிய அறிவு இல்லாது மொழியின் வளர்ச்சியை பற்றிய ஆய்வு சாத்தியமற்றதென்பதனால், இந்த இலக்கியத் தொகுதியின் காலவரிசையை வரலாற்றாய்வாளர் முடிவு செய்வதை மொழியியலாளர் எதிர் நோக்கி நிற்கின்றனர் மறுபுறத்தில் வரலாற்றாய்வாளரோ, இப் பிரச்சனைப்பற்றிய சான்றுகள் வழிவருவன தீர்க்கமான முடிவு எதற்கும் இடம் தராதவையாகவுள்ளன என்பதைக் கண்டு, மொழிவளர்ச்சி ஆய்வின் வழியாக சில தீர்க்கமான முடிவுகள் வருமென நம்பி நிற்கின்றார். எனவே பல்வேறு அனுகுமுறைகளிடையே ஓர் இணைப்பு நிலை ஏற்படுத்தப்படுவதற்கும், இந்த இலக்கியத் தொகுதியின் காலவைப்பு முறை தெளிவாகத் தெரிந்துகொள்ளப்படுவதற்கும் நாம் காத்திருக்க வேண்டியுள்ளது" என்று சாஸ்திரி 1932 இல் எழுதும்பொழுது குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம் சங்க இலக்கியத்தை வரலாறாகக் கொள்வதிலுள்ள பிரச்சினைகள் மேலும் மிகத் தெளிவாகிறது. இதற்கான விளக்கமாகவும் அமைகிறது. இந்த பணியே அடுத்துவரும் காலகட்டத்தில் எஸ். வையாபுரிப்பிள்ளை போன்ற அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டதாகும்.
மேற்குறித்த பின்புலத்தில் நீலகண்ட சாஸ்திரியின் முக்கியத்துவம் எத்தகையது என்பது நன்கு புலனாகிறது. இலக்கியமும் வரலாறும் நோக்காலும் போக்காலும் வேறுபட்டவை என்பதை தெளிவாக உணர்த்துகிறார்.
தென்னிந்திய வரலாறு, தென்னிந்தியாவைப் பற்றிய அயலார் குறிப்புகள் போன்ற நூல்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் யாவும் நீலகண்டசாஸ்திரி மிகச் சிறந்த கல்வியாளர், ஆராய்ச்சியாளர், அறிவியல் கண்ணோட்டமிக்கவர் போன்ற தகுதிகளை தெளிவாக உணர்த்துகின்றன.
தென்னிந்திய மற்றும் தமிழர் வரலாறு வரைவியலில் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி ஒரு மடைமாற்றத் தளம் - முன்னோடி என்றுதான் கூறவேண்டும். இன்று ஆய்வுலகம் பல்வேறு புதிய தளமாற்றங்கள் நோக்கி பயனிக்கின்றது. ஆனால் சாஸ்திரி அமைத்துக் கொடுத்த ஆய்வுத்தளம் அடிப்படையானதும் முக்கியமானதுமாகும். அத்தகைய பெருந்தகை ஜூன் மாதம் 15ஆம் தேதி 1975ஆம் ஆண்டு இந்த உலகை விட்டுப் பிரிந்தார். ஆனால் ஆராய்ச்சி உலகில் நிலைத்து நின்கின்றார். இந்திய அரசு இவரது அளப்பெரிய சேவையைப் பாராட்டி 1958ஆம் ஆண்டு 'பத்மபூஷன்' என்னும் உயர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.
மதுசூதனன் தெ. |