அது 1980ம் ஆண்டு. மதுரை ராஜாஜி அரசினர் பொது மருத்துவமனை. உள்நோயாளியாகச் சிகிச்சைக்கு அந்தப் பெரியவர் சேர்க்கப்பட்டிருந்தார். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாலும், படுக்கை கிடைக்காததாலும் அவரைத் தரையில் படுக்க வைத்திருந்தனர் மருத்துவமனை நிர்வாகத்தினர். அவரும் மறுப்புச் சொல்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
சில நாட்கள் சென்ற நிலையில் அவர் அங்கிருப்பது தெரிந்து அவரைக் காண வந்தார் ஓர் அரசியல் தலைவர். வந்தவர், அந்த மனிதரைத் தரையில் படுக்க வைத்திருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். கோபத்தால் அவரது முகம் சிவந்தது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ உதவியாளர்களிடம் "இவரைப் போய் இப்படித் தரையில் படுக்க வைத்திருக்கிறீர்களே! இவர் யார் என்று தெரியுமா உங்களுக்கு?" என்றார் சினத்துடன்.
பணியாளர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மருத்துவத்துக்காக வந்திருக்கும் நோயாளி என்பதைத் தவிர அவர்கள் பிற விவரம் ஏதும் அறிந்திராததால் அந்த அரசியல் தலைவருக்குப் பதில் சொல்ல முடியாமல் மௌனமாக நின்றனர்.
கோபத்துடன் அந்தத் தலைவர்., "இவர், இந்திய அரசியலமைப்பு அவையின் உறுப்பினர். தமிழகத்தின் முன்னாள் அமைச்சர். இவருக்கு நீங்கள் தரும் மரியாதை இதுதானா?" என்றார்.
உடன் அந்த நோயாளி, அரசியல் தலைவரைத் தடுத்து, "அவர்களைக் கோபிக்காதீர்கள். அவர்களுக்கு எதுவும் தெரியாது. என்னை நீங்கள் பார்க்க வந்தது குறித்து எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்று சொல்லி வணங்கினார்.
அந்த அரசியல்வாதிக்குக் கண்கள் கலங்கிவிட்டன. அந்த முதியவருக்குத் தனி அறை ஒன்றை ஒதுக்க ஏற்பாடு செய்தார். ஆனால், பெரியவர் ஏற்கவில்லை. "நான் மக்களில் ஒருவன். அவர்களுக்கு என்ன வசதி கிடைக்குமோ அது எனக்கும் கிடைத்தால் போதும். வேறேதும் வேண்டியதில்லை" என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அரசியல்வாதி எவ்வளவோ வலியுறுத்தியும் அவர் இறுதிவரை ஏற்கவே இல்லை.
அந்த மாமனிதர் வேறு யாருமல்ல; மக்களவை மேனாள் உறுப்பினரும், காமராஜரின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் உள்பட பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளை வகித்தவருமான திரு கக்கன் அவர்கள்தான். அவரைப் பார்க்க வந்தவர் அப்போதைய முதல்வரான திரு எம்.ஜி. ராமச்சந்திரன்! மருத்துவமனையில் இருந்த மதுரை மேயர் முத்துவைச் சந்திக்க வந்த எம்.ஜி.ஆர்., யார் மூலமோ கக்கனும் அங்கு இருப்பதை அறிந்து ஓடோடி வந்தார். பின்னர் பொது வார்டிலேயே ஒரு கட்டில் ஏற்பாடு செய்ய அதனை மட்டும் ஏற்றுக்கொண்டார் கக்கன். காந்திய நெறிகளைத் தனது பேச்சில் மட்டுமன்றிச் செயலிலும் வாழ்விலும் பின்பற்றிய மாமனிதர் கக்கன்.
உண்மை, நேர்மை, எளிமை இவற்றையே தாரக மந்திரமாகக் கொண்டு இறுதிவரை வாழ்ந்த கக்கன், 1909, ஜூன் 18 அன்று, மதுரை மேலூரை அடுத்துள்ள தும்பைப்பட்டி என்னும் கிராமத்தில், பூசாரி கக்கன், குப்பி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். கக்கன் என்பது அப்பகுதி மக்களின் தெய்வத்தின் பெயர். அக்கிராமத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தெய்வத்தின் பெயராக 'கக்கன்' என்பதைச் சூட்டினால் வாழ்க்கை சிறக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. ஆண் குழந்தையானால் 'கக்கன்' என்றும் பெண் குழந்தையானால் 'காக்கி' என்றும் பெயர் சூட்டுவது அவர்கள் மரபு. அவருக்குப் பின் பிறந்த தம்பிக்கு பெரியகருப்பன் என்று பெயர் சூட்டினர்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பம். கடும் வறுமைச் சூழல். தந்தை வீராமாளியம்மன் கோவில் பூசாரி. அதே சமயம் அரசாங்கத்தின் நகர சுத்திகரிப்புத் தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தார். கக்கனுக்கு ஐந்து வயதான போது உள்ளூர் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளியில் படித்து வந்த அந்த இளவயதிலேயே தாயை இழந்தார். குழந்தைகளை வளர்ப்பதற்காகத் தந்தை 'பிரம்மியம்மாள்' என்பவரை இரண்டாவதாக மணம் செய்து கொண்டார். சிற்றன்னையின் பராமரிப்பில் வளர்ந்த கக்கனுக்கு, அவர் வழியில் சகோதரர்களாக வெள்ளைக் கக்கன், முன்னோடி, வடிவேலு, விஸ்வநாதன் கக்கன் ஆகியோர் பிறந்தனர்.
மேல்படிப்பைத் திருமங்கலத்தில் உள்ள பி.கே.என். நாடார் உயர்நிலைப்பள்ளி மற்றும் பசுமலை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் கக்கன். பள்ளிக் காலத்தில் அவர் விடுதியில் இடம் கிடைக்காமல் பள்ளித் தாழ்வாரத்திலேயே தங்கினார். அது சுதந்திரப் போராட்டம் சுடர்விட்டெழுந்த காலகட்டம். மதுரைவாழ் விடுதலை வீரர்களான டைகர் மீனாட்சிசுந்தரம், சீனிவாச வரத ஐயங்கார் உள்ளிட்ட சிலர் இரவு நேரங்களில் பள்ளியில் ஒன்றுகூடி கருத்துப் பரிமாறிக்கொள்வர். இரவில், குளிரில் நடுங்கியவாறே படுத்துறங்கும் கக்கனைக் கண்ட அவர்கள், அவரிடம் அது குறித்து விசாரித்து, வசதியின்மையால் அவர் அவ்வாறு உறங்குகின்றார் என்பதை அறிந்தனர். அவரது கல்விக்கு உதவ எண்ணினர். 'மதுரை காந்தி' என்று போற்றப்பட்டவர் அ. வைத்தியநாத ஐயர். ஹரிஜன மக்களின் வாழ்க்கை உயர்வுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர். காந்தியின் சொல்லை ஏற்று, 'ஹரிஜன சேவா சங்கம்' நிறுவி அதன் மூலம் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்குப் பலவிதங்களில் அவர் உதவி வந்தார்.
அவரிடம் கக்கனின் நிலையை எடுத்துச் சொல்லினர் அவர்கள். ஐயரும் ஹரிஜன சேவா சங்கம் மூலம் நிதி உதவி, கக்கன் விடுதியில் தங்கவும், மேற்கல்வி தொடரவும் வழிவகுத்தார். அதுமுதல் கக்கனின் கல்வி தடையின்றித் தொடர்ந்தது என்றாலும், பள்ளி இறுதித் தேர்வில் ஆங்கிலத்தில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்றார். அதனால் மீண்டும் மேல்கல்வியைத் தொடர திருமங்கலம் உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கும் அவர் தேர்வில் தோற்றுப் போனார். அவரது தோல்விக்கு முக்கியக் காரணமாய் அமைந்தவை தேச விடுதலை மீதான ஆர்வமும் முயற்சிகளுமே.
இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறாததால் மேற்கொண்டு என்ன செய்வது எனக் கக்கன் தயங்கிய நிலையில், ஏற்கனவே கக்கனைப் பற்றி நன்கு அறிந்திருந்த மதுரை வைத்தியநாத ஐயர், கக்கனை அழைத்துப் பேசியதுடன், தம்முடன் இணைந்து சமூகப்பணி ஆற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார். கக்கன் அதனை ஏற்றார். ஹரிஜன சேவாசங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட கக்கன், அச்சங்கத்தின் மூலம் பல்வேறு நலப்பணிகளை முன்னெடுத்தார். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த படிப்பறியாக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கற்பித்தார். ஏழைகள் வாழ்ந்த இடங்களில் இரவுப் பாடசாலைகளை அமைத்தார். பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி அளித்து அவர்கள் சிறப்பாகப் பயில வழிவகுத்தார். இவரது பணிகளுக்கு ஆதரவளித்தார் ஹரிஜன சேவா சங்கப் பொறுப்பாளரான வைத்தியநாத ஐயர். தனது வீட்டிலேயே கக்கனைத் தங்க வைத்த அவர், கக்கனைத் தனது மகன்களில் ஒருவராக நினைத்து அன்பு பாராட்டினார். (அதனால்தான் பிற்காலத்தில் வைத்தியநாத ஐயர் மறைந்தபோது, பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி கக்கன் தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டு ஐயருக்கான இறுதிச் சடங்குகளில் பங்கேற்றார்.)
ஐயருடன் இணைந்து தமிழ்நாடெங்கும் பயணித்து தனது சேவைப் பணிகளைத் தொடர்ந்தார் கக்கன். பள்ளியில் படிக்கும்போதே காங்கிரசாலும், காந்திஜியின் சேவைப் பணிகளாலும் அவர் ஈர்க்கப்பட்டிருந்தார். மதுரை வந்த காந்திக்குக் கக்கனை அறிமுகப் படுத்தினார் வைத்தியநாத ஐயர். கக்கனின் சேவைகளைப் பற்றி அறிந்த காந்தி, அவரை மனமுவந்து பாராட்டினார். அது கக்கனை மேலும் ஊக்குவித்தது. ஹரிஜன சேவா சங்கம் மதுரையில் பல பள்ளிகளையும், விடுதிகளையும் நடத்தி வந்தது. மதுரை மாவட்டம் மேலூரில் காந்தி ஆண்கள் விடுதி, காந்தி பெண்கள் விடுதி என்று தனித்தனி விடுதிகள் இருந்தன. கக்கன் அதற்குப் பொறுப்பாளராக, காப்பாளராக இருந்து திறம்படப் பணியாற்றினார். வீட்டைவிட நாடே பெரிது என்று வாழ்ந்தார்.
நாளடைவில் குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தியதால் திருமணத்திற்குச் சம்மதித்தார் கக்கன். சிவகங்கையைச் சேர்ந்த, கிறித்தவப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த சொர்ண பார்வதி அம்மையாருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் காந்தியத் தொண்டராக விளங்கிய தோழர் ப. ஜீவானந்தம், சிராவயலில் 'காந்தி ஆசிரமம்' என்ற அமைப்பை நிறுவி நடத்தி வந்தார். ஆசிரமத்தாரின் ஒப்புதலுடன், காந்தி ஆசிரமத்தில், 1932ல் கக்கனின் 23ம் வயதில், தோழர் ஜீவானந்தம் தலைமையில், சடங்குகள் இன்றி, காந்திய நெறிப்படி எளிய முறையில் அத்திருமணம் நடந்தது.
1937ல் நடந்த சென்னை மாகாண சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ராஜாஜி முதல்வரானார். அவர் பல சீர்த்திருத்தங்களை அமல்படுத்தினார். குறிப்பாக, சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கும் மக்கள் உயர்வடைவதற்காகப் பல நலத்திட்டங்களை அவர் கொண்டு வந்தார். அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம் என்ற சட்டத்தை ராஜாஜி அரசு 1939ல் கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தின் பயனாக தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் ஆலயம் நுழைவதற்கான தடை நீங்கியது. இதன் முதல் படியாக, 1939ம் ஆண்டு ஜூலை எட்டாம் தேதி காலை மணி சரியாக 8.50க்கு மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் ஹரிஜனங்கள் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்தது. இதனை முன்னெடுத்தவர் அ. வைத்தியநாத ஐயர். அவருக்கு வலதுகரமாக இருந்து செயல்பட்டவர் கக்கன். உறுதுணையாய் இருந்தவர்கள் ஹரிஜன காங்கிரஸ் தலைவர்களான சாமி. முருகானந்தம், முத்து, வி.எஸ். சின்னையா, வி.ஆர். பூவலிங்கம் ஆகியோர். இவர்களுடன் விருதுநகரைச் சேர்ந்த தலைவர் எஸ்.எஸ். சண்முக நாடாரும் ஆலய நுழைவில் கலந்து கொண்டார்.
ரத்தக்களறி, அடிதடி, வன்முறை ஏதுமில்லாது நிகழ்ந்த இப்புரட்சி நிகழ்வை ராஜாஜி 'குருதி சிந்தாப் புரட்சி' என்று பாராட்டினார். மகாத்மா காந்தியும் பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தொடர்ந்து மதுரையின் புகழ்பெற்ற அனைத்துக் கோயில்களுக்கும் ஒதுக்கப்பட்டவர்கள் சென்று வழிபடத் திறந்து விடப்பட்டன. மதுரையைத் தொடர்ந்து தென்காசி, குற்றாலம், திருநெல்வேலி, தஞ்சாவூர் என தமிழகத்தின் அனைத்து ஆலயக் கதவுகளும் தாழ்த்தப்பட்டவர்கள் தரிசனத்திற்காகத் திறந்தன.
பல எதிர்ப்புகள் இருந்த போதிலும் நாடெங்கும் இச்சட்டத்தை அமல்படுத்தி சமூகப் புரட்சியைக் கொண்டு வந்தார் ராஜாஜி. அதற்கு வைத்தியநாத ஐயரும், கக்கனும் பலவிதங்களில் துணை நின்றனர். தமிழகத்தைத் தொடர்ந்து கேரளத்திலும் ஆலய நுழைவுப் போராட்டத்தை வைத்தியநாத ஐயரும் கக்கனும் இணைந்து முன்னெடுத்தனர். இவ்வாறு பல போராட்டங்களை முன்னெடுத்த கக்கன், காந்தியாரின் ஆணைக்கிணங்க வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். அதற்காக அவரைக் கைது செய்து தஞ்சைச் சிறையில் அடைத்தது ஆங்கில அரசாங்கம். கைது செய்தது மட்டுமல்லாமல் கக்கனுக்குக் 'கசையடி' கொடுத்தும் தனது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டது. கம்பத்தில் கட்டி வைத்துக் கக்கன் துன்புறுத்தப்பட்டார். ஆங்கிலேயரின் முரட்டுத்தனமான ஒவ்வொரு கசையடிக்கும் கக்கன், அவ்வலியைத் தாங்கிக்கொண்டு உரத்த குரலில், "மகாத்மா காந்திக்கு ஜே", "காமராஜுக்கு ஜே" என்று கோஷமிட்டார். இது ஆங்கிலேயக் காவலர்களுக்கு மேலும் கோபத்தை உண்டாக்கவே அவர்கள் மேலும் பலவாறாகக் கக்கனை அடித்துத் துன்புறுத்தினர். சுமார் 18 மாதக் கடுங்காவல் தண்டனையால், சிறையில் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டார் கக்கன். தேச விடுதலைக்காக அனைத்துத் துன்பங்களையும் தாங்கிக் கொண்டார்.
1947ல் அந்நியர் ஆட்சியிலிருந்து நாடு விடுதலை பெற்றது. கக்கன் மிகுந்த மனநிறைவுடன் தனது சமூகப் பணிகளைத் தொடர்ந்தார். 1952ல் நடந்த முதல் பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்துக்கு மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சீரிய முறையில் தனது உறுப்பினர் பணியைச் செய்தார். 1955ல் நடந்த ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் கக்கன், தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸில் ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக வந்தது அதுவே முதல்முறை. (இன்றுவரை அதுவே இறுதியாகவும் உள்ளது) தொடர்ந்து 1957ல் நடந்த இரண்டாவது சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மேலூர் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்றார். 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற தார்மீக அறத்தின்படி உடனடியாகத் தனது காங்கிரஸ் தலைவர் பதவியைத் துறந்தார்.
காமராஜர் முதல்வரானார். கக்கன் அமைச்சரானார். பொதுப்பணித் துறை, உணவு, வேளாண்மை, ஹரிஜன நலம் போன்ற துறைகளின் பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டன. மிகச் சீரிய முறையில் அத்துறைகளில் பணியாற்றி பல நல்ல திட்டங்களை முன்னெடுத்தார். 1962ல் நடந்த மூன்றாவது பொதுத் தேர்தலில் பக்தவத்சலம் முதல்வரானபோதும் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரரான கக்கனுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இவரது திறமையும் நேர்மையும், எளிமையும் சக அமைச்சர் முதல் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரையும் கவர்ந்தன. மதுரை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பாசனக் கால்வாய்கள் எனப் பல வருவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் கக்கன்தான். இவர் அமைச்சர் பொறுப்பு வகித்த காலத்தில்தான் வைகை அணை கட்டப்பட்டது. இரண்டு விவசாயப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. தாழ்த்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் பல பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப்பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்தது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது எனப் பல நற்பணிகளைத் தமிழகத்தில் தொடங்கி வைத்தது கக்கன் தான்.
காமராஜர் மறைவுக்குப் பின்னர் அரசியலிருந்து முற்றிலுமாக ஒதுங்கினார் கக்கன். விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக அவருக்கு அளிக்கப்பட்ட நிலத்தைக்கூட வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்டு, ஒரு சாதாரண வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தார். முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், சுதந்திரப் போராட்டத் தியாகி என்று எந்தவிதச் சலுகைகளையும் கோராமல் மக்களுடன் மக்களாக வாழ்ந்தார். சாமானிய மக்களுள் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். உடலநலக் குறைவால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கக்கன், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்த உதவிகளையும் ஏற்க மறுத்து சாதாரண நோயாளியாகச் சிகிச்சை பெற்றார். உடல்நலம் தேறிச் சென்னைக்கு வந்தபோதும் எளிய வாடகை வீட்டிலேயே வசித்தார்.
ஆனால், அங்கும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., கக்கனுக்கு எவ்வளவு உயர்ரக சிகிச்சை அளிக்க முடியுமோ அவ்வளவையும் செய்யும்படி மருத்துவக் குழுவினருக்கு ஆணையிட்டார். சுயநினைவின்றி நீண்ட காலம் இருந்த கக்கன், டிசம்பர் 23, 1981 நாளன்று காலமானார். பிறந்தபோதும் எளிமை; வாழும்போதும் எளிமை; உயர் பதவிகள் வகித்தபோதும் ஆடம்பரத்தை அண்டவிடாது எளிமையாக, நேர்மையாக வாழ்ந்து மறைந்த மாமனிதர் கக்கன். தமிழக அரசியல் வரலாற்றில் நேர்மை என்னும் சகாப்தத்தின் ஒரு முக்கிய அத்தியாயம், அவர் மறைவோடு முற்றுப்பெற்றதோ!
தமிழர்கள் என்றுமே மறக்கக்கூடாத மாமனிதர் கக்கன்.
பா.சு. ரமணன் |