குறிஞ்சிவேலன்
தமிழ் படைப்பிலக்கிய உலகில் இலக்கிய வளர்ச்சிக்காகவே தம்மை அர்ப்பணித்து வாழும் எழுத்தாளர்கள் சிலர் உண்டு. அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் குறிஞ்சிவேலன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்ல படைப்புகளை வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதையே தனது லட்சியமாகக் கொண்டு இயங்கி வரும் இவர், ஜூன் 30, 1942ல் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள மீனாட்சிப்பேட்டையில் பிறந்தார். இயற்பெயர் செல்வராஜ். உள்ளூர் அரசுப்பள்ளியில் உயர்நிலைக் கல்விவரை பயின்றார். பள்ளிப் பருவத்திலேயே மொழிவாரி மாகாணங்கள் பிரிவினை எதிர்ப்புப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்டார். தறி நெய்யக் கற்றுக்கொண்டு, விடுமுறை நாட்களில் நெசவு செய்து அந்த வருமானத்தில் புத்தகங்கள் வாங்கி வாசிப்பார். உள்ளூர் நூலகத்தில் வாசித்த கல்கியின் 'பொன்னியின் செல்வன்' இவரை மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து நிறைய வாசித்தார்.

அயல்மொழி இலக்கியங்களின் மீது ஆர்வம் குவிந்தது. அப்படி வாசித்த நூல்களுள் ஒன்று, சுந்தரராமசாமி மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த தகழியின் 'செம்மீன்'. அந்நாவலை அம்மொழியிலேயே படிக்க ஏக்கம் இவருள் எழுந்தது. அதற்காக மலையாள மொழியைக் கற்கும் உந்துதல் ஏற்பட்டது. அதுவே இவரது மொழிபெயர்ப்பு ஆர்வத்துக்கான விதை எனலாம். தொடர்ந்து ரஷ்ய இலக்கியங்களின் மொழி பெயர்ப்புகள், பிற இந்திய மொழி இலக்கியங்களின் மொழியாக்கங்களை வாசிக்க வாசிக்க எழுத்தார்வம் சுடர் விட்டது. எழுதத் தொடங்கினார். ஐந்து சிறுகதைகளையும் ஒரு குறுநாவலையும் எழுதினார் என்றாலும் எழுதுவதைவிட வாசிப்பிலேயே இவரது கவனம் சென்றது.



கால்நடை ஆய்வாளர் பயிற்சியை நிறைவு செய்த இவருக்கு, சூழல்களால் கேரள எல்லையோரம் பணியாற்றும் வாய்ப்பு அமைந்தது. மிகக் கடினமான அந்தச் சூழலில் இவருக்குத் துணையாக இருந்தவை புத்தகங்கள் மட்டுமே. அக்கால கட்டத்தில் அங்கு கடைகளில் தொங்கிக் கொண்டிருந்த மலையாள இதழ்களைப் பார்த்ததும் மீண்டும் மலையாளம் கற்கும் ஆர்வம் எழுந்தது. பள்ளி மாணவர்களிடம் மலையாள எழுத்துக்களைக் கற்றார். பின் 'மலையாள மனோரமா', 'மாத்ருபூமி' போன்ற இதழ்களை வாங்கி வாசிக்கக் கற்றார். தளராத முயற்சி, உழைப்பு மற்றும் ஆர்வத்தினால் ஆறே மாதங்களில் மலையாளத்தில் தேர்ந்தவரானார். தொடர் வாசிப்பு மூலமும், மலையாள மக்களுடன் பழகியும் அவர்களின் வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் புரிந்துகொண்டார்.



சொந்தமாக எழுதுவதைவிட பிறமொழிகளில் உள்ள நல்ல படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. நந்தனார் என்னும் புனைபெயர் கொண்ட மலையாள எழுத்தாளர் பி.சி. கோபாலனின் சிறுகதையை 'பலியாடுகள்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். அது அன்றைய 'கண்ணதாசன்' இலக்கிய இதழில் வெளியானது. 'தீபம்' இதழின் ஆசிரியர் நா. பார்த்தசாரதியின் நட்பும், சந்திப்பும் இவரது வாழ்வில் முக்கியத் திருப்புமுனை ஆனது. அவர் இவரை எழுதவும், மலையாள இலக்கியங்களை மொழிபெயர்க்கவும் ஊக்குவித்தார். அதுவரை தனது இயற்பெயரான 'செல்வராஜ்' என்ற பெயரிலும், மீனாட்சி மைந்தன், ஏ.எஸ். ராஜு போன்ற புனைபெயர்களிலும் இயங்கிவந்தவர், 'தீபம்' இதழுக்காகக் 'குறிஞ்சிவேலன்' ஆனார். 'மலையாள நாடு' வார இதழில் வி.பி.சி. நாயர், மலையாள எழுத்தாளர்களின் நேர்காணல்களைத் தொடராக எழுதி வந்தார். அவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்து, 'முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்' என்ற தலைப்பில் தீபம் இதழில் எழுதினார். தொடர்ந்து மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் 'சல்லி வேர்கள்', 'ஐந்து சென்ட் நிலம்' போன்ற நாவல்களை மொழிபெயர்த்தார். தீபம் மாத இதழில் தொடர்ந்து வெளியான இந்த மூன்று தொடர்களும் தமிழ் இலக்கியப் பரப்பில் குறிஞ்சிவேலனைப் பரவலாகக் கொண்டு சேர்த்தன.



தமிழராக இருந்தாலும் கேரள மக்களோடு நெருங்கிப் பழகியதாலும், அம்மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் நேரில் கண்ட அனுபவத்தாலும், இவரது மொழிபெயர்ப்புகள், மொழிபெயர்ப்பு என்பதே தெரியாதவண்ணம் மலையாளத்துக்கே உரிய தனித்தன்மையுடனும் மண்ணின் உயிர்ப்புடனும் விளங்கின. தன்னுடைய மொழிபெயர்ப்புப் பற்றி குறிஞ்சிவேலன் நேர்காணல் ஒன்றில், "ஒரு மொழிபெயர்ப்பாளன் மூலமொழிப் படைப்பின் கதைக்களனையும், மொழியையும், நடையையும், அப்படைப்பில் உள்ளார்ந்து நூலிழையாக ஓடும் ஆத்மாவையும் உணர்ந்து கொண்டால் மொழியாக்கமும் மிகச்சிறப்பான இடத்தைப் பெற்று வெற்றிபெறும்" என்கிறார். மேலும் அவர், "நான் எந்தப் படைப்பாளியின் படைப்பை மொழியாக்கம் செய்கிறேனோ அந்தப் படைப்பாளியின் மொழிநடையையும் மொழியாக்கத்தில் கொண்டுவர முயல்கிறேன். அது மட்டுமல்ல, நான் பணத்திற்காக மட்டும் மொழிபெயர்ப்பதில்லை. என் மனதுக்காகவே மொழியாக்கம் செய்கிறேன்" என்கிறார்.



எஸ்.கே. பொற்றேக்காட்டின் 'விஷக்கன்னி' நூலைத் தமிழில் தந்ததற்காக, இவருக்கு, 1994ம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. அந்த வகையில், மலையாளத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்தவர்களின் வரிசையில் சாகித்ய அகாதெமி விருதை முதலில் பெற்றவர் குறிஞ்சிவேலன் தான். அதுவரை தமிழில் மொழிபெயர்ப்புக்கான விருது பன்மொழிப் புலவர் மு.கு. ஜகந்நாத ராஜா (1989, தெலுங்கிலிருந்து தமிழுக்கு; கிருஷ்ணதேவராயரின் ஆமுக்த மால்யதா), டி.பி. சித்தலிங்கையா, (1990, கன்னடத்திலிருந்து தமிழுக்கு; சிவராம் காரந்த்தின் 'மரலி மண்ணிகே'- தமிழில்: 'மண்ணும் மனிதரும்') கா.ஸ்ரீ.ஸ்ரீ. (1990, மராத்தியிலிருந்து தமிழுக்கு, வி.எஸ். காண்டேகரின் 'யயாதி'), கே. வெங்கடாசலம் (கன்னடத்திலிருந்து தமிழுக்கு: மெளன ஓலம்), சரஸ்வதி ராம்நாத் (1993, 'இந்திய மொழி நாடகங்கள்' நூலின் தமிழாக்கம்) போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அவ்விருது மேலும் பல கேரள எழுத்தாளர்களைத் தமிழுக்கும் அறிமுகம் செய்யும் உத்வேகத்தைக் குறிஞ்சிவேலனுக்குத் தந்தது. எம்.டி. வாசுதேவன் நாயர், தகழி சிவசங்கரன் பிள்ளை, ஆனந்த், ஐயப்ப பணிக்கர், இ.எம். அஷ்ரப், கே.பி. ராமனுண்ணி, வேணுகோபால், கிரேசி, சேது எனப் பல மலையாள எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் குறிஞ்சிவேலன்.



2022ம் ஆண்டின் வெளியீடாக அகநி பதிப்பகம் மூலம், T.D. ராமகிருஷ்ணனின் 'மாதா ஆப்பிரிக்கா' என்ற நூல் குறிஞ்சிவேலனின் மொழிபெயர்ப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. கேரளத்தில் இருந்து ஆப்பிரிக்காவின் உகாண்டாவிற்கு ரயில்பாதை அமைக்கச் சென்றவர்களின் வம்சாவழி வந்தவர்களின் கதை இது. உகாண்டாவின் இடி அமீன் ஆட்சிக் காலத்தின் அலங்கோலத்தை இது விவரிக்கிறது.

குறிஞ்சிவேலனின் மொழிபெயர்ப்பு நூல்கள்
எஸ்.கே.பொற்றேக்காட்டின் படைப்புகள்: விஷக்கன்னி, பாரதப் புழையின் மக்கள்
மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் படைப்புகள்: ஐந்து சென்ட் நிலம், சல்லி வேர்கள், காட்டு வெளியினிலே, ஒரு நெஞ்சத்தின் ஓலம், ஆறாம் விரல், நெட்டூர் மடம், அமிர்தம் தேடி, மற்போர், தேர்ந்தெடுத்த கதைகள், மனமே மாணிக்கம், மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் நாவல்கள்.
வி.பி.சி. நாயர்: முழுமையைத்தேடும் முழுமையற்ற புள்ளிகள் பாகம் 1 & 2.
எம்.டி. வாசுதேவன் நாயர்: இரண்டாம் இடம், வானப்பிரஸ்தம்.
தகழி சிவசங்கரம் பிள்ளை: இரண்டு ஜென்மங்கள், கண்ணாடியில் தோன்றும் உருவங்கள்
ஐயப்ப பணிக்கர்: ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா, தகழி
கே. வேணுகோபால்: சிதைந்த சிற்பங்கள், முனைப்பு
இ.எம். அஷ்ரப்: பஷீர், காலம் முழுதும் கலை
T.D. ராமகிருஷ்ணன்: ஆல்ஃபா, சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி
சேது: அடையாளங்கள், ஆறாவது பெண்
கிரேசி: இப்போது பனிக்காலம்
கே.பி. ராமனுண்ணி: சூஃபி சொன்ன கதை
சி.எஸ். சந்திரிகா: பிறை
ஆனந்த்: கோவர்த்தனின் பயணங்கள்
நான்கு முகங்கள் (பல எழுத்தாளர்களின் கதைகள்); ராஜவீதி (பல எழுத்தாளர்களின் கதைகள்)
எம்.கே. மேனன் (என்ற) விலாஸினி: வாரிசுகள் (அச்சில்)
மற்றும் பல.


மொழிபெயர்ப்பு நூல்களை மேலும் பரவலாகத் தமிழ் இலக்கிய உலகிற்குக் கொண்டு வரும் எண்ணத்திலும், மொழிபெயர்ப்பாளர்களுக்குச் சிறந்ததோர் களத்தை, அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற எண்ணத்திலும் குறிஞ்சிவேலன் 2003ல் 'திசை எட்டும்' என்னும் காலாண்டு இலக்கிய இதழை ஆரம்பித்தார். அர்ப்பணிப்போடு, பெரிய அங்கீகாரம் ஏதுமில்லாமல் இலக்கியச் சேவை புரிந்து வரும் மொழிபெயர்ப்பாளர்களைச் சிறப்பிக்க எண்ணினார், கலை, இலக்கியச் செயல்பாடுகளுக்கு எப்போதும் ஆதரவளித்து வரும் நல்லி குப்புசாமிச் செட்டியாரின் ஆதரவுடன், 'நல்லி – திசை எட்டும்' மொழியாக்க விருது வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. தமிழிலிருந்து பிற இந்திய மொழிகளுக்குச் செல்லும் நூல்கள், பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் நூல்கள், ஆங்கிலப் புனைவிலக்கியங்களின் தமிழாக்கங்கள், ஆங்கிலம் அல்லது பிற அயல்மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் புனைவு இலக்கியம் அல்லாத நூல்கள் இவற்றுடன் மூத்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, மாணவர் விருதுகள் என்று இதுவரை மொழியாக்கம் சார்ந்து 146 மொழிபெயர்ப்பாளர்கள் பரிசுத் தொகையுடன் பாராட்டிதழும் பட்டயமும் தந்து சிறப்பிக்கப்பட்டுள்ளனர். 2004ம் ஆண்டுமுதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.



அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களையும், 67 'திசை எட்டும்' இதழ்களையும் கொண்டு வந்திருக்கிறார் குறிஞ்சிவேலன். 'திசை எட்டும்' இதழ் ஒவ்வொன்றுமே ஒரு புத்தகம் என்று சொல்லத்தக்க அளவுக்குத் தரத்திலும் உள்ளடக்கத்திலும் சிறந்து விளங்குகின்றது. இவ்விதழ் மூலம் இதுவரையில் நோபெல் இலக்கியச் சிறப்பிதழ், புக்கர் இலக்கியச் சிறப்பிதழ், சர்வதேச இலக்கியச் சிறப்பிதழ், ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழ், ஸ்பானிஷ் இலக்கியச் சிறப்பிதழ், உலக வாய்மொழி இலக்கியச் சிறப்பிதழ், ஸ்கேண்டிநேவியன் இலக்கியச் சிறப்பிதழ், உலக அறிவியல் இலக்கியச் சிறப்பிதழ், கொரியமொழி இலக்கியச் சிறப்பிதழ், அரபி இலக்கியச் சிறப்பிதழ், உலகக் குழந்தை இலக்கியச் சிறப்பிதழ், உலகச் சுற்றுச்சூழல் இலக்கியச் சிறப்பிதழ், உலக ஹைக்கூ சிறப்பிதழ் என்று பல வகைச் சிறப்பிதழ்கள் வெளியாகியுள்ளன. இந்திய அளவில் மைதிலி மொழி, தெலுங்கு, வடகிழக்கிந்திய மொழிகள், கன்னடம், இந்தோ-ஆங்கிலம், கொங்கணி, குஜராத்தி, பஞ்சாபி எனப் பல இந்திய மொழிச் சிறப்பிதழ்களும் வெளியாகியுள்ளன. இதற்காக எவ்விதப் பிரதிபலனையும் எதிர்பாராது, தனது ஓய்வூதியப் பணத்தைக் கொண்டும், சந்தா நன்கொடையாளர்களின் ஆதரவாலும் செயல்பட்டு வருகிறார் குறிஞ்சி வேலன். 'திசை எட்டும் இதழ்' தமிழின் முன்னணி மொழியாக்க இதழாக, கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் பலருக்கும் அவர்களது ஆய்வுகளுக்கு உறுதுணையான இதழாக அமைந்துள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சிறந்த சிற்றிதழுக்கான விருதையும் 'திசை எட்டும்' பெற்றுள்ளது.



ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்பு இலக்கிய உலகில் செயல்பட்டு வரும் குறிஞ்சிவேலனின் இந்த முன்முயற்சியால் இன்றைக்குப் பல பதிப்பகங்கள் மொழியாக்க நூல்களை அதிகம் வெளியிடுகின்றன. மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தகுந்த அங்கீகாரமும் கிடைத்துள்ளது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினர் ஆண்டுதோறும் சிறந்த மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு விருதுகள் அளித்துக் கௌரவிக்கின்றனர். ஆனந்த விகடன் போன்ற இதழ்களும் சிறந்த மொழியாக்கங்களை கவனப்படுத்துகின்றன.



தமிழக அரசினால் வழங்கப்பட்ட, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யும் பொறுப்பை மிகத் திறம்படச் செய்தவர் குறிஞ்சிவேலன். தனது படைப்பாக்க முயற்சிகளுக்குப் பல்வேறு விருதுகளும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார். 'இரண்டாவது இடம்' மொழிபெயர்ப்பு நூலுக்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் விருது கிடைத்தது. 'பாண்டவபுரம்' மொழியாக்கத்திற்கு திருப்பூர் தமிழ்ச்சங்க விருது கிடைத்தது. 'முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்' தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் விருதைப் பெற்றது. நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் சிறந்த எழுத்தாளர் விருது, காரைக்குடி புத்தகக் கண்காட்சியின் சிறந்த எழுத்தாளர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, மணிமேகலை மன்ற விருது, கரிசல் கட்டளை விருது உள்படப் பல்வேறு விருதுகளும் பெற்றிருக்கிறார் குறிஞ்சிவேலன். இவரது மொழியாக்கங்கள் சிலவற்றைப் பின்வரும் சுட்டியில் வாசிக்கலாம்.



மிக எளியவர், பழகுவதற்கு இனிய பண்பாளர் என்று சக இலக்கியவாதிகளால் விதந்தோதப்படும் குறிஞ்சிவேலன், குடும்பத்துடன் குறிஞ்சிப்பாடியில் வசித்து வருகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com