தென்றல் பேசுகிறது...
மட்டற்று ஏறும் விலைவாசிகளைக் குறைக்க மத்திய வங்கிகள் கையில் எடுக்கும் ஓர் ஆயுதம் வட்டி விகிதத்தை உயர்த்துதல். வட்டி விகிதம் ஏறினால் பணப்புழக்கம் குறையும், பொருட்களைத் துரத்துகிற உபரிப் பணக் கையிருப்பு குறையும், அதனால் விலைவாசி ஏறுவது மட்டுப்படும் என்பது சரிதான். ஆனால் அது சாதாரண காலத்துக்குத்தான் பொருந்தும். இப்போது நாம் இருப்பது அசாதாரணமான காலம். கோவிட் கொள்ளை நோய் பலரது வாழ்வாதரங்களை மட்டுமின்றி வாழ்க்கையையே பறித்துவிட்ட காலம். இது போதாதென்று தவறான இறக்குமதி மற்றும் குடிவரவுக் கொள்கைகள் கச்சாப்பொருள் வரத்தையும், பணியாளர் எண்ணிக்கையையும் வற்றடித்து விட்டன. இவற்றின் விளைவாக மட்டுமின்றி, போட்டியில்லாத சில மெகா நிறுவனங்கள் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு தமது சேவைகள் மற்றும் பொருள்களின் விலையை, லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, கன்னாபின்னாவென்று உயர்த்திவிட்டன. எல்லாமாகச் சேர்ந்து சராசரி மனிதனைக் கண் பிதுங்கச் செய்துள்ளது. இந்த நிலையில் மேலும் வட்டி விகிதத்தை ஏற்றுவது சமுதாய ரீதியில் மிகப் பாதகமான, எண்ணவே அச்சம் தரும் விளைவுகளை ஏற்படுத்தும். மைய அரசும் மாநில அரசுகளும் மிகுந்த எச்சரிக்கையோடும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் பலமுனைச் செயல்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டிய தருணம் இது என்பதை நாம் மீண்டும் கவனப்படுத்த விரும்புகிறோம்.

★★★★★


உலக நாடுகள் யாவும் கோவிட் தீநுண்மியின் பல உருமாற்றங்களுடனான போரில் தமது செல்வம், மக்கள் எல்லாவற்றையும் பணயம் வைத்துவிட்ட நிலையில் மற்றும் ஒரு போர் வெடிக்குமானால் அது பேரழிவில் முடியும். வல்லரசுகள் எனப்படுகிற நாடுகளுக்குக்கூட போரில் ஈடுபடும் ஆர்வமோ, திராணியோ இப்போது இல்லை. இந்த நிலையில் உக்ரெய்ன் நாட்டைக் கையகப்படுத்த ரஷ்யா வகுக்கும் வியூகங்களும், அவற்றுக்கு எதிராக அமெரிக்கா, NATO நட்புநாடுகளின் ஒருங்கிணைந்த படை திரட்டலும் உலகத்தை அபாய விளிம்பில் கொண்டு நிறுத்தியுள்ளன. திபெத், தைவான், இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் போன்ற இடங்களில் சீனாவும் இப்படிப்பட்ட ஏகாதிபத்திய நோக்கோடு பல செயல்களில் ஈடுபடுகிறது. பொருளாதாரம், மனிதநலம் இவற்றுக்கெல்லாம் ஒரு போர் எவ்வளவு ஊறு விளைவிக்கும் என்பதைக் கற்பனைகூடச் செய்ய முடியாது. ஆகவே ஏகாதிபத்திய எண்ணம் கொண்ட நாடுகள் ஆக்கிரமிப்புச் செயல்களில் ஈடுபடாமலும், போரைத் தூண்டாமலும் இருக்கட்டும் என நாம் பிரார்த்திப்போமாக.

★★★★★


வாசகர்களுக்கு வேலன்டைன் தின வாழ்த்துகள்.

தென்றல்.
பிப்ரவரி 2022

© TamilOnline.com