பால சாகித்ய புரஸ்கார்
குழந்தை இலக்கியத்திற்கு, எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுவது பால சாகித்ய புரஸ்கார் விருது. மா. கமலவேலன், ம.லெ. தங்கப்பா, ரேவதி, கவிஞர் செல்லகணபதி, இரா. நடராசன், குழ. கதிரேசன், கிருங்கை சேதுபதி, தேவி நாச்சியப்பன், கொ.மா. கோதண்டம், யெஸ். பாலபாரதி வரிசையில் 2021ம் ஆண்டுக்கான விருது கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் மு. முருகேஷ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர் எழுதிய 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' என்னும் நூல் இவ்விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மு. முருகேஷ் புதுக்கோட்டையில் பிறந்தவர். கவிஞர், எழுத்தாளர், சிற்றிதழாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் எனப் பல திறக்குகளில் இயங்கி வருபவர். தமிழின் முக்கிய ஹைக்கூ கவிஞர்களில் ஒருவர். இவரது ஹைக்கூ கவிதைகள் இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவரது கவிதைகள் 'நிலா முத்தம்' எனும் பெயரில் தொகுக்கப்பட்டு தனிநூலாக மலையாளத்தில் வெளியாகியுள்ளது. சாகித்திய அகாதமியின் சார்பில் டார்ஜிலிங், மைசூரு, விஜயவாடா போன்ற இடங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றவர். குழந்தை இலக்கியத்திலும் தீவிரமாக இயங்கி வருபவர். அதற்காகப் பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார். அவரது சாதனை மகுடத்தில் மற்றுமோர் இறகு இந்த விருது. (மு. முருகேஷ் பற்றி விரிவாக வாசிக்க)

முனைவர் பூமி செல்வன், முனைவர் தேவி நாச்சியப்பன், முனைவர் ய. மணிகண்டன் அடங்கிய குழு இவரது படைப்பை விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. விருது ரூ.50000/- ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் கொண்டது.

மு. முருகேஷுக்குத் தென்றலின் வாழ்த்துக்கள்.

© TamilOnline.com