ஞான விளக்கை ஏற்றுதல்
தெய்வத்தை அறிய மிகவும் ஆசைப்பட்ட ஒரு சாதகன், தனக்கு ஞானக்கண் திறக்க வேண்டுமென ஆசைப்பட்டான். குரு ஒருவர் வசித்து வந்த குகைக்கு அவன் போனான். அதில் நுழையும்போது சிறியதொரு சுடரை அவன் பார்த்தான். அவன் உள்ளே போகும்போதே அந்தச் சிறிய சுடரும் அணைக்கப்பட்டது. இருளில் நமக்கு அச்சம் ஏற்படும், பயத்தில் நாம் பகவானைத் தீவிரமாக நினைப்போம். அதனால் அவன் "நமச்சிவாய" என்று உரக்கச் சொன்னான். அதைக் கேட்டவுடன் யாரது என்று முனிவர் கேட்டார். அவரது கருணையை வேண்டி வந்திருப்பதாக அவன் சொன்னான்.

சூழ்ந்திருந்த காற்றை மட்டுமே சுவாசித்து உயிர்வாழ்ந்த அவருக்கு வந்தவனின் மனத்தை அறியும் திறன் இருந்தது. "அந்தக் கேள்விக்கு அப்புறம் பதில் சொல்கிறேன், முதலில் சற்றுமுன் அணைந்துபோன விளக்கை ஏற்று" என்றார் அவர். வந்தவன் ஒரு தீப்பெட்டியை எடுத்துப் போய் விளக்கை ஏற்ற முயன்றான், ஆனால் முடியவில்லை. "தீப்பெட்டியில் இருந்த குச்சிகள் எல்லாம் தீர்ந்து போயின, ஆனால் என்னால் விளக்கை ஏற்ற முடியவில்லை" என்று குருவிடம் சொன்னான். விளக்கில் எண்ணெய் இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னார் குரு. விளக்கைப் பார்த்துவிட்டு "விளக்கில் எண்ணெய் இல்லை, தண்ணீர்தான் இருக்கிறது" என்றான்.

"விளக்கைத் திறந்து உள்ளேயிருக்கும் தண்ணீரை வெளியே ஊற்றிவிட்டு, அதில் எண்ணெய் ஊற்றிப் பற்ற வை" என்றார் குரு. வந்தவன் அப்படி முயன்றான், ஆனாலும் விளக்கை ஏற்ற முடியவில்லை. "ஒருவேளை திரி ஈரமாக இருக்கிறதோ? அதை நன்றாக வெளியில் உலர்த்தியபின் பற்ற வை" என்றார் குரு. வந்தவன் அப்படியே செய்து, விளக்கேற்றுவதில் வெற்றியும் கண்டான். பிறகு தான் வந்த காரியத்தைச் சொல்லி, குருவிடம் உபதேசம் கேட்டான். ஆச்சரியப்பட்ட குரு, அதற்குத்தான் பதில் இதுவரை சொல்லப்பட்டது என்றார். "நான் ஒரு மூடன். எனக்கு உங்கள் உபதேசத்தின் பொருள் புரியவில்லை. தெளிவாக அதை விளக்குங்கள்" என்று கெஞ்சினான் வந்தவன்.

குரு கூறினார்: "உன் இதயம் என்னும் விளக்கில் உனது ஜீவன் என்னும் திரி இருக்கிறது. அந்தத் திரி இதுநாள் வரையிலும் புலனின்ப ஆசைகள் என்னும் நீரில் இருந்தது. அதனால்தான் உன்னால் ஞானவிளக்கை ஏற்ற முடியவில்லை. உன் இதயமாகிய அகலிலிருந்து ஆசைகள் என்னும் நீரைக் கொட்டிவிட்டு, அதில் நாமஸ்மரணம் என்னும் எண்ணெயை நிரப்பு. ஜீவன் என்னும் திரியை, வைராக்கியம் என்னும் பளிச்சென்ற வெய்யிலில் காய வை. அதிலிருந்து ஆசையென்னும் நீரைப் பிழிந்தெடு. பிறகு அதை பக்தி அல்லது நாமஸ்மரணம் என்னும் எண்ணெய் ஊற்றியுள்ள இதயத்தில் இடு. அப்போதுதான் உன்னால் ஞானமென்னும் விளக்கை ஏற்றமுடியும்."

நன்றி: சனாதன சாரதி, ஆகஸ்ட் 2021.

-

© TamilOnline.com