சாமியாடி
"டடட டன்டன்... டடட டன்டன்..." எனத் தாள லயத்துடன் பரோட்டா கொத்தும் சத்ததைக் கேட்டவுடன், சற்றுத் தலையைச் சாய்த்தவாறே தூங்கிக் கொண்டிருந்த மயிலம்மா டக் என்று கண்விழித்தாள்.

"டேய், கோபாலு, பரோட்டா மாஸ்டர் வந்துட்டான் போல. போடா, ரொம்பப் பசிக்குது. கொத்து பரோட்டா வாங்கிட்டு வாடா!" என்றாள் கெஞ்சலான குரலில்.

"போ, அப்பத்தா. எத்தனை தடவை ஐஸ் வண்டி வந்திருக்கு. காசு தான்னு கேட்டேன். உன் காதுல விழாத மாதிரி தூங்கிக்கினே இருந்தே. இப்போ மட்டும் காது கேக்குதா?"

"கறிக்குழம்பு பக்கத்து தெரு மீனாச்சி ஆக்குறப்ப, வாசனை நம்ம வீட்டுக் கதவைத் தட்டும். பொதுவா வாசனை, இல்லை, ஒருத்தர் பேசறதை வச்சுத்தான் நமக்குப் பசி வரும், ஆனா இந்த கொத்து பரோட்டாவுக்கு மட்டும்தான், யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னேங்கிற மாதிரி கொத்து சத்தத்தை கேட்டாலே பசி வரும்டா" என்று சொல்லிக்கொண்டே காசை நீட்டினாள்.

"இங்க அய்யா முடியாம படுத்துக் கிடக்காரு, உனக்கு பரோட்டா வேணுமா. மீதி காசை, ஐஸ் வாங்க வச்சுப்பேன், சரியா" என்று சலிப்போடு பணத்தை வாங்கினான்.

"அதுக்காகப் பட்டினியா இருக்க முடியுமா? மறக்காம அந்த முகக்கவசத்தை போட்டுக்கோ" என்று சொன்னவாறே தனது முகக்கவசத்தைச் சரிசெய்து கொண்டாள்.

கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனை. கொரோனா அரக்கனின் 2வது இன்னிங்ஸ் தமிழகத்தில் தலைவிரித்து ஆடத் தொடங்கிய நாட்கள். இன்னும் ஊரடங்கை அமல் படுத்தாத நேரம். கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து, அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து, கூடங்களிலும், மண் தரையிலும் நோயாளிகள் படுத்திருந்த அவலமான சமயம்.

பரோட்டா கடை.

"என்ன தம்பி, அய்யா எப்படி இருக்காரு?" எனக் கேட்டார் பரோட்டா மாஸ்டர். வாட்டசாட்டமான உடலமைப்பு. கருநீல பார்டர் கொண்ட சாண்டோ பனியன், என்ன நிறம் என்று தெரியாத அழுக்கேறிய கைலி.

"உள்ளே போய்த்தான் பார்க்க முடியாதே. நர்ஸ், அப்படியேதான் இருக்காருன்னு சொல்லிச்சு."

"அய்யாவுக்கு படுக்க இடம் கிடைச்சுதேன்னு சந்தோசப்படுப்பா. எவ்வளவுபேரு வெளிய படுத்து இருக்காங்கன்னு பார்த்தேயில்ல?"

"ஆமாண்ணே, நீங்க சொல்றது சரிதான். டோக்கன் வாங்கிட்டேன். பாட்டிக்கு ஒரு கொத்து பரோட்டா போடுங்க. இந்த சமயத்திலேயும் பாட்டிக்கு ஆசை அடங்கலை."

"என்ன தம்பி சொல்லறே. யார் எப்ப போவாங்கன்னு யாருக்கும் தெரியல. நேத்திக்கு 45 வயசுதான் இருக்கும். கையில சாம்பல் கொடுத்து அனுப்பிட்டாங்க. கிழவி இருக்கிறமுடிய சந்தோசமா இருக்கட்டும்" என்று சொன்னவாறே பரோட்டாவைக் கைகளால் பிய்த்துப் போட்டார். ஒரே அளவில் அழகாக அளவுகோல் வைத்து நறுக்கியது போல வெங்காயம், பச்சை மிளகாய் இத்யாதிகளோடு, ஸ்பெசல் மசாலா கலவையையும் பரோட்டாவையும் ஒன்றாகக் குவித்து, சட்டுவங்களை கொண்டு கொத்த ஆரம்பித்தார்.

"டடட டன்டன்... டடட டன்டன்..." என்ற சத்தத்துக்கேற்ப, அவரது திரண்ட தோள்களும் உருண்ட புஜங்களும் அதிர்ந்தன.

"நம்ப கடைப் பையன்தான் சொன்னான். உங்களுக்கு கொரோனா வந்தப்ப, அய்யா நல்லா கிண்ணுன்னுதான் இருந்தாராமே?"

"ஆமாண்ணே, எங்களுக்கு வந்தப்ப நல்ல சுத்திகிட்டுதான் இருந்தாரு. ஒரு மாசம் கழிச்சு, எங்க போய்ப் புடிச்சுட்டு வந்தாருன்னு தெரியல."

"நீனும் உங்க பாட்டியும்தான் இங்க இருக்கிங்கே போல இருக்கு."

"அப்பா, மாமா, அத்தை எல்லாம் ஊர்லதான் இருக்காங்க. ரொம்ப தூரம் இல்லை. ஒரு 40 கிலோமீட்டர்தான். பாட்டியை பைக்குல வீட்டுக்கு கூட்டிகிட்டு போய்டுவேன்."

தயாரான கொத்து பரோட்டாவை, ஒரு பழைய தினசரித் தாளில் வாழை இலையை வைத்து, ஒரு துண்டு எலுமிச்சையும் சேர்த்துப் பார்சல் கட்டி, ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்தார்.

முத்து பாட்டியிடம் கொத்து பரோட்டாவைக் கொடுத்துவிட்டு, மீதிக் காசில் ஏதோ வாங்கக் கடைக்குச் சென்றான்.

"என்னமா பரோட்டா போடுறான், இந்த மாஸ்டர்! நம்ம ஊருல இதுமாதிரி ஒருத்தன் இல்லையே!" என்று சொல்லிகொண்டே கொஞ்சம் பரோட்டாவை உள்ளே தள்ளினாள் பாட்டி. அந்த வயதிலும் அவளுக்கு நல்ல கெட்டியமான பல்வரிசை. ஊறிய கொத்து பரோட்டா ஆனதால் எளிதாக அவளால் சாப்பிட முடிந்தது.

"என்ன மயிலம்மா, உள்ள இருக்கற வூட்டுக்காரரைப் பத்தி கவலைப்படாம, பரோட்டாவை ஒரு கட்டு கட்டறே!" என்றான் வார்டுபாய் கந்தசாமி.

"ஏய் சாமி, உள்ளே இருக்கறது யாருன்னு தெரியுமாடா உனக்கு, சாமியாடிடா. அவரைப்பத்தி உனக்கு என்ன தெரியும். இன்னும் மூணு வாரத்துல மனுஷன் எழுந்திரிச்சு வருவாரு பாரு" என்றாள் கோவமாக மயிலம்மா. திடீரென்று அவளுக்கு எங்கிருந்து அந்தக் கோபம் வந்தது என்று தெரியவில்லை!

சற்றுப் பணிந்தவாறே கந்தசாமி, பம்மிய குரலில், "ஆத்தா, நானும் உன்கிட்ட அவரைப்பத்தி கேட்கணுமுன்னு நினைச்சேன். இவ்வளவு தைரியமா சொல்றே, யாரு அவரு?"

மயிலம்மா விவரித்தபடியே, அவனை ஒரு இருபது வருடம் பின்னோக்கித் தள்ளினாள்.

மாரியம்மன் கோவில் திருவிழா. நேர்த்திக் கடனை தீச்சட்டி, காவடி, முளைப்பாரி, பூக்குழி, மாவிளக்கு எனப் பல வழிகளில் மக்கள் தீர்த்துக்கொண்டு இருந்தனர். பிரதான சன்னதிக்கு எதிரே உள்ள நுழைவாயில் கொடிமரத்தில், கோவிலின் கொடி கம்பீரமாகப் பறந்தது. அங்கே கிட்டத்தட்ட நூறு பேர் குழுமி இருந்தனர். நடுவில் சாமியாடி சின்ன மருது! வெள்ளை வெளேர் கதர் வேட்டி. இடுப்பில் பெல்ட்போல பிள்ளையார் சிவப்புக் கலர் துண்டு. நன்கு அள்ளிமுடித்த கூந்தல். முறுக்கிய மீசை. அகன்ற நெற்றியில் துண்ணூரு, குங்குமம். மார்பில் சந்தனம். கழுத்தில் மாலை. பற்களைக் கடித்தபடி, உடலை முன்னும், பின்னும் அசைத்தபடி, சாமி ஆடிக்கொண்டு இருந்தார்.

சற்று பயத்துடனே, உடம்பெல்லாம் சிலிர்ப்புடன் அங்கு மக்கள் குழுமி இருந்தனர். பலருக்கு சாமியாடிகள்தான் சாமி. அவர்கள்மேல் சாமி வந்து விட்டால், அம்மா என்று கூப்பிடுவதுதான் வழக்கம்.

"அம்மா, நான் வெள்ளைச்சாமி வந்து இருக்கேன்."

"தெரியும்டா சொல்லு."

"இந்த வருஷம் என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலாமுன்னு யோசிக்கறோம்."

"இதுல யோசிக்க என்ன இருக்கு, தைரியமா செய்டா. வடக்க இருந்து ஒரு சம்பந்தம் தானா வரும். உன் வசதிக்கு மேலதான். தானா நடக்கும்" என்று அவர் சொல்லி முடிக்கும் முன்னே, அங்கு இருந்த நான்கு பேரும் ஆத்தா காலில் விழுந்தனர்.

"ஆத்தா, இன்னிக்கு காலையிலதான் டெல்லியில இருக்கற ஓரு சம்பந்தம்பத்தி எங்க மாமா பேசினாரு!" என்று உணர்ச்சி வசப்பட்டுக் கதறினார். அங்கு பக்தி, வெப்பமானியில் வெப்பநிலை உயர்வதுபோல சட்டென்று எகிறியது. கிட்டத்தட்ட இருபது பேர் பலவிதமான கோரிக்கைகளை அவர்முன் வைத்தனர். ஆத்தா முடியாது என்றால் முடியாதுதான். பொய்வாக்கு அங்கு இல்லை. அருள்வாக்கு சொன்னால் அப்படியே பலிக்கும்!

அடுத்து ஒரு பெரிய மனிதர் பவ்யமாக வந்து நின்றார்.

"ஆத்தா, நான் மணிமாறன் வந்து இருக்கேன்."

சின்ன மருது கண்ணை மூடி இருந்தாலும் "தெரியுது, நான் நீ அதைப்பத்தி கேட்காதேன்னு பத்து வருஷமா சொல்லறேன்ல. என் பேச்சை கேட்காம நின்ன, தோத்துப்போன."

"ஆத்தா, அடுத்த தேர்தல் இந்த வருஷம் வருது, நிக்கலாமா?"

"உன் ஆசை உன்னை விட்டுப் போகாது போல. எனக்கு என்ன செய்வ?"

அதைக் கேட்டதும் மணிமாறன் படு குஷியாகிவிட்டார். பஞ்சாயத்து, எம்.எல்.ஏ. தேர்தல் எதிலும் ஆத்தா இப்படிச் சொன்னதில்லை. துரத்திதான் விடும். பேச்சைக் கேட்காமல் தோற்றதுதான் மிச்சம்.

"ஆத்தா, உன் தேர் ரொம்பப் பழசா இருக்கு, அதைப் புதிப்பிச்சு தரேன்."

"வாக்கு சுத்தம் சரியா இருக்கணும். மக்களுக்கும் நல்லது செய்" என்று சொல்லிக்கொண்டே துண்ணூறைக் கையில் அள்ளி, தலையில் ஒரு அடி அடித்து, நெத்தியில் பூசிவிட்டார். அப்படியே மலையேறினார்!

மயிலம்மா அப்படியே அவரால் நடந்த பல அற்புதங்களை விவரிக்க, விவரிக்க கந்தசாமி வாயைப் பிளந்தான். ஆனால், முகக்கவசம் போட்டிருந்தால் வெளியே தெரியவில்லை!

"எதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுக்க ஆத்தா, அய்யா இப்ப குறி சொல்றது இல்லையா?"

"இந்தக் காலத்து பசங்களுக்கு சாமியாடிகள் மேல அவ்வளவா நம்பிக்கை இல்லை. அதுக்கு ஏத்தமாதிரி பொய் சாமியாரும் அதிகமாயிட்டாங்க. அய்யாவுக்கும் வயசு ஆயிடுச்சு இல்ல! ஒரு தடவை சாமி ஏறி, இறங்கிச்சுன்னா ஒரு நூறு மீட்டர் ஓட்டப் பந்தயம் ஓடுன மாதிரி இருக்குமுன்னு அய்யா சொல்லுவாரு."

"அப்படியா!" ஆச்சரியமாகக் கேட்டான்.

"பலபேரை வாழ வைத்தவருடா. போஸ்ட்மேன் வேலை பாத்தாரு. அஞ்சு பைசா தனக்குன்னு வாங்கிக்க மாட்டாரு. அதனாலதான் சொல்றேன், திரும்பி வருவாரு பாரு" என்று சொல்லும்பொழுதே அவள் கண்களில் தீர்க்கம் தெரிந்தது.

சிறிது நேரத்தில் திரும்பி வந்த அவளது பேரன், " வா ஆத்தா, ரொம்ப நேரமாச்சு. நாளைக்கு வந்து பார்க்கலாம்" என்றான்.

"நீ போ ஆத்தா, நான் உள்ள போகமுடியாது. ஆனா அவர்மேல ஒரு கண்ணு வச்சுக்கச் சொல்றேன்" என்றான் கந்தசாமி.

மறுநாள் காலை. கோபாலு முகக்கவசத்தைச் சரிசெய்தவாறே பைக்கை மெதுவாக பார்க்கிங் லாட்டில் நிறுத்தினான். மயிலம்மா மெதுவாக இறங்கினாள். அவர்களைப் பார்த்த கந்தசாமி, வேகமாக ஓடிவந்தான். அவனது வேகத்தைப் பார்த்தவுடன், ஏதோ சரியில்லை எனப் புரிந்துகொண்டாள் மயிலம்மா.

"என்ன சாமி, வேகமா ஓடி வர. அய்யா எப்படி இருக்காரு?"

"அதைச் சொல்லத்தான் ஓடிவந்தேன். நேத்திக்கு ராவுல இருந்து அய்யாவுக்கு மூச்சுத்திணறல் அதிகமாச்சு. ஆக்ஸிஜன் பெட்டி சுத்தமா இல்ல. நேத்திக்கு மட்டும் மூணு பேர் போய்ச் சேந்துட்டாங்க."

"வேற எங்கேயும் அந்தப் பெட்டி இல்லையா?"

"சுத்தி இருக்கற எந்த மருத்துவமனையிலும் இல்லை. இந்தியா பூராவும் இதே பிரச்சனைதான். டாக்டர் சொன்னாரு, இன்னிக்கு மதியவேளையை அய்யா தாண்ட மாட்டாருன்னு."

"அப்பத்தா…" என்று சொன்னவாறே கோபாலு கண்கலங்கினான்.

"டேய், கோபாலு. உள்ளே படுத்து கிடக்கிறது நம்ம சாமியாடிடா. எத்தனை குடும்பத்தை வாழ வச்சவரு. யாருமே பாக்காம சாவ மாட்டாருடா. நம்ம எல்லையம்மன் கோவில் பகுதியில வர சுடுகாட்டிலதான் தன்னைப் பொதைக்கணுமுன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு" என்று சொல்லிக்கொண்டே "தம்பி, கந்தசாமி. நான் பக்கத்துல இருக்கற மரத்தடி மாரியம்மன் கோவில்ல இருக்கேன்" என்று சொல்லிவிட்டு யாரையும் எதிர்பார்க்காமல் நடக்க ஆரம்பித்தாள்.

வேப்பமரத்தடி அம்மன் கோவில். சிறிய கோவில்தான். கோபுரம், நுழைவாசல் எல்லாம் கிடையாது. நடுவில் வேப்பமரம். வெள்ளையிலும், சிவப்பிலும் நேர்கோடுகள் போடப்பட்ட இரண்டு அடி மேடை. அதன் நடுவில் மண்தரை. மத்தியில் மூன்று அடி உயரத்தில் அம்மன் சிலை. அங்கு அப்போது பூசாரியில்லை. சிலர் அம்மனைச் சுற்றிக்கொண்டு இருந்தனர். அவ்வளவாக கும்பல் இல்லை. மயிலம்மா படிகளில் மெதுவாக ஏறி அம்மன்முன் அமர்ந்தாள்.

"ஆத்தா, இந்த உலகத்துல எல்லாரும் ஒருநாள் போகத்தான் போறோம். ஆனா எங்க ஊர் எல்லையம்மன் பகுதில வர சுடுகாட்டிலதான் தன்னோட கட்டை வேகணுமுன்னு சாமியாடி சொல்லிகிட்டே இருப்பாரு. முகத்தைக்கூட காட்டுறது இல்லையாம்மா, சாம்பலைக் கொடுத்துதான் அனுப்பறாங்களாம். நீதான் ஒரு வழி காட்டணும்" என்று சொன்னவாறே அங்கு இருந்த உண்டியல் பெட்டியில் தலையைச் சாய்த்தாள்.

சில மணி நேரம் கடந்தது. "ஆத்தா, ஆத்தா" என்று சந்தோசமாக ஒரு குரல். சட்டென்று கண் விழித்தாள் மயிலம்மா.

"என்னையா, அய்யா எப்படி இருக்காரு?"

"ஆத்தா, நல்ல விசயம்தான். அவர் கும்பிடற சாமி கைவிடலை!"

"விவரமா சொல்லையா."

"இன்னிக்கு காலையில, ஒரு எட்டு மணிப்போல ஒரு வி.ஐ.பி கேஸ் ஒண்ணு வந்தது. விசாரிச்சுப் பார்த்ததுல நம்ம ஊரு எம்.பி. "

"யாரு மணிமாறனா? ஏன் என்ன ஆச்சு, அவருக்கும் கொரோனாவா?"

"இரு ஆத்தா, அவசரப்படாதே, விவரமா சொல்றேன். ஆமா, மணிமாறன் அய்யாதான். இரண்டு நாளா அவர்க்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. ஆனா, டெஸ்ட் பண்ணதுல, கொரோனா இல்லையின்னு வந்துருச்சு."

"அப்ப நல்லதுதானே, ஏன் இங்க வந்தாராம்?"

"என்ன பேச விடு, ஆத்தா. இன்னிக்கு காலையில அவருக்கு திடீருன்னு மூச்சுத்திணறல் வந்திருச்சு. சுத்தி உள்ள எந்த மருத்துவமனையிலும் இடம் இல்லை. இங்க மட்டும்தான் கொரோனா இல்லாத வார்டு இருந்தது. வேற வழி இல்லாம இங்க வந்துட்டாரு."

"அய்யாவுக்கு என்ன ஆச்சுடா, அத சொல்லு."

"நான்தான் நல்ல விசயமுன்னு சொல்றேனில்ல, கொஞ்சம் பொறுமையா இரு" என அதட்டினான்.

"இவர்தான் எம்.பி ஆச்சே. தொண்டர் பசங்க எப்படியோ ஒரு ஆக்ஸிஜன் பெட்டிய உஷார் பண்ணிட்டாங்க."

"இந்தியா முழுக்கத் தட்டுப்பாடுன்னு சொன்னியேடா."

"ஏன் ஆத்தா, எந்த ஊருல இருக்க? அவர் எம்.பி. அப்புறம் இன்னிக்கு காலையில அவர் ரூமில மருந்துப்பெட்டி வைக்கப் போறப்ப, அவங்ககிட்ட ஆக்ஸிஜன் பெட்டி கிடைக்கறது எவ்வளவு கஷ்டமுன்னு சொன்னேன். அப்படியே நம்ம அய்யாவைப் பத்தி சொன்னேன். எனக்குத் தெரியாது, அவங்களுக்கு அய்யாவைத் தெரியுமுன்னு! உடனே நலம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க."

"மணிமாறன் அய்யா இந்த நிலைமையில இருக்கறதுக்கு காரணம், அய்யா சொன்ன வாக்குதான்" என்றாள் மயிலம்மா.

"அப்புறம் இரண்டு மணிநேரத்துல ஆக்ஸிஜன் பெட்டி வந்தது. நான் அங்க இல்ல. என்ன நடந்ததுன்னு தெரியல, மணிமாறன் அய்யா பெட்டி வரதுக்கு முன்னாடியே போய்ச் சேந்துட்டாரு. அவங்க பசங்ககிட்ட, ஒருவேளை அப்படி போய்ச் சேந்துட்டா, அந்த பெட்டியை அய்யாவுக்கு கொடுக்கணுமுன்னு சொல்லிட்டுப் போய்ட்டாராம்!"

"மேன்மக்கள் மேன்மக்கள்தான். அவரு கவுன்சிலர், எம்.ல்.ஏ., எம்.பி. ஆனப்புறம், என்ன வேணுமுன்னு அய்யாகிட்ட ஒவ்வோரு தடவையும் கேட்பாரு. இவரு எதுவும் கேட்கமாட்டாரு. மணிமாறன் அய்யா தான் சாகறத்துக்கு முன்னாடி உங்களுக்கு ஏதாவது செய்துட்டுதான் போவேன் பாருங்க என அடிக்கடி சொல்வாரு."

"ஆத்தா, எனக்கு என்னமோ மணிமாறன் அய்யா அதுக்காகவே இங்க வந்து இருக்காரு போல. டாக்டர் அய்யாவுக்கு ஆக்ஸிஜன் கொடுத்ததுக்கு அப்புறம், அய்யா ரொம்ப சீரா இருக்காருன்னு சொல்லிட்டாரு. இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாடுமுன்னு சொல்லிட்டாரு."

"டேய், நீ ரொம்ப நல்லவண்டா, நல்லா இருப்ப" என்று அவள் சொல்லும்பொழுது, வேப்பமரத்தில் இருந்து, சிறிய கொழுந்துடன் வேப்பம்பூ அவன் தலையில் ஆசீர்வதிப்பது போல விழுந்தது!

"சாமி, பரோட்டா மாஸ்டர் வந்துட்டான் போல இருக்கு. சத்தம் கேட்குது பாரு. காலையில இருந்து ஒண்ணும் சாப்பிடல. கொஞ்சம் வாங்கித் தரியா" எனக் கேட்டாள்.

"ஆத்தா, உன்னை என்ன செய்யலாம்! வாங்கித் தரேன்!" எனச் சிரித்துக்கொண்டே சொன்னான் வார்டுபாய் கந்தசாமி!

மருங்கர்,
லேக்வில், மின்னசோட்டா

© TamilOnline.com