பிரபல பாடகரும் நடிகருமான மாணிக்கவிநாயகம் (78) மாரடைப்பால் காலமானார். பிரபல பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளையமகன் இவர். இளவயது முதலே இசையர்வம் கொண்டிருந்த இவர், களக்காடு நாராயணனிடம் இசை கற்றார். தொடர்ந்து தனது தாய்மாமாவும் குருவுமான சி.எஸ். ஜெயராமன் அவர்களிடம் முறையாகத் தமிழிசை பயின்றார். டி.எச். விநாயக்ராம் அவர்களின் தந்தையான ஹரிஹர சர்மாவிடம் மிருதங்கம் கற்றார். நட்டுவாங்கத்திலும் தேர்ந்த மாணிக்கவிநாயகம், இசைக் கலைஞராகத் வாழ்க்கையைத் தொடங்கினார். ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் நாட்டுப்புறப் பாடல் ஆல்பங்களுக்கு இசையமைப்பாளர் மற்றும் இசைத் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
50 வயதுக்கு மேல்தான் திரைப்படங்களில் பின்னணி பாடத் தொடங்கினார். நூற்றுக்கணக்கான படங்களுக்குப் பின்னணி பாடியுள்ளார். இவரது வித்தியாசமான குரல் தில், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், திருப்பாச்சி, சந்திரமுகி, பருத்தி வீரன், சிங்கம் என பல வெற்றிப் படங்களில் ஒலித்திருக்கிறது. தெலுங்குப் படங்களிலும் பாடியிருக்கிறார். திருடா திருடி, பேரழகன், போஸ், திமிரு, கிரி, வேட்டைக்காரன், யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துமுள்ளார். உலகெங்கும் பயணித்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர். தன் தந்தையாரின் நினைவைப் போற்றும் வகையில் வழுவூர் செவ்வியல் நடனம் மற்றும் இசைப் பள்ளியை ஆரம்பித்து நடத்தினார்.
தமிழக அரசின் 'கலைமாமணி', உலக அமைதி அமைப்பின் 'கலா ரத்னா', முத்தமிழ்ப் பேரவையின் 'இசைச்செல்வம்' உள்படப் பல விருதுகளைப் பெற்றவர். பழகுவதற்கு மிக இனிமையானவர், எளிமையானவர் என்று திரையுலகத்தைச் சார்ந்தவர்களால் போற்றப்படுபவர், மாரடைப்பால் காலமானார். |