துரியோதன சாமர்த்தியம்
பாஞ்சாலி, விராடனுடைய அரண்மனைக்குத் திரும்பியதும் அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 'இவள் அழகு நிறைந்தவளாக இருக்கிறாள். ஆனால் இவளை 'ஏறெடுத்துப்' பார்ப்பவர்கள் கந்தர்வர்களால் கொல்லப்படுகிறார்கள். எனவே, இவளை அரண்மனையை விட்டு அனுப்பிவிடு' என்று அரண்மனையைச் சேர்ந்தவர்கள் சுதேஷ்ணையிடத்தில் முறையிட்டார்கள், தன் தம்பியான கீசகனும் உபகீசகர்களும் கொல்லப்பட்ட காரணத்தால் சுதேஷ்ணைக்கும் அச்சம் மேலோங்கியிருந்தது. 'அரண்மனையை விட்டு உடனடியாகப் போ' என்று அவள் பாஞ்சாலியிடத்தில் சொன்னாள். தனக்குச் சற்றே அவகாசம் வேண்டும் என்று பாஞ்சாலி கேட்டுக்கொண்டாள்.

முக்கியமான இந்தக் கட்டத்தில்தான் நமக்கு மொழிபெயர்ப்பின் துன்பங்கள் தொடங்குகின்றன. 'தனக்கு முப்பது நாள் அவகாசம் தரவேண்டும்' என்று சைரந்திரியான பாஞ்சாலி கேட்டுக்கொண்டதாக வர்த்தமானன் பதிப்பும், கும்பகோணம் பதிப்பும் சொல்கின்றன. ஆனால் அங்கே முப்பது நாள் மிகுந்திருக்கவில்லை. எஞ்சியிருந்தது 13 நாட்கள்தான். மூலபாடம் என்ன சொல்கிறது என்று தேடிப் பார்த்தால் பாரதம் சம்ஸ்கிருதப் பதிப்பில் trayodaśāha mātraṃ me rājā kṣamatu bhāmini என்றிருக்கிறது. அரசர் என்னைப் பதின்மூன்று நாட்களுக்கு மட்டும் பொறுத்துக் கொள்ளட்டும்' என்று பொருள். த்ரயோதச என்றால் பதின்மூன்று என்று பொருள். இதையே முப்பது என்று வெகுமுக்கியமான மொழிபெயர்ப்பான கும்பகோணம் பதிப்பில் சொல்லியிருக்கிறார்கள் என்பது தெளிவு. ஆனால் காலக்கணக்கு இடிக்கிறது. கிஸாரி மோஹன் கங்கூலி மொழிபெயர்ப்பிலோ 'O beauteous lady, let the king suffer me to live here for only thirteen days more. Without doubt, the Gandharvas also will be highly obliged at this' என்று இருக்கிறது. அருட்செல்வப் பேரரசனின் தமிழ் மொழிபெயர்ப்பு: அதற்குச் சைரந்திரி {திரௌபதி சுதேஷ்ணையிடம்}, "ஓ! அழகான பெண்ணே {சுதேஷ்ணை}, இன்னும் பதிமூன்று {13} நாட்களுக்கு மட்டும் மன்னர் {விராடர்} என்னைப் பொறுத்துக் கொள்ளட்டும். கந்தர்வர்களும் இதற்கு மிகவும் இணக்கமாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. பிறகு, அவர்கள் {கந்தர்வர்கள்} தங்களை வெளிப்படுத்திக் கொண்டு, விராடருக்கு ஏற்புடையதைச் செய்வார்கள். இப்படிச் செய்வதால், தனது நண்பர்களுடன் கூடிய மன்னர் {விராடர்} பெரிய நன்மை அடைவார் என்பதில் சந்தேகமில்லை" என்றாள் {திரௌபதி}. S. Arul Selva Perarasan; செ. அருட்செல்வப் பேரரசன். விராட பர்வம்: Virata Parva (முழுமஹாபாரதம் Book 4) (Tamil Edition). Kindle Edition.

எனவே, அங்கே எஞ்சியிருந்தது 13 நாட்கள்தாம்; முப்பது நாட்களில்லை என்பது தெளிவாகிறது. கும்பகோணம் பதிப்பில் மிக அரிதாக வந்துள்ள மொழிபெயர்ப்புக் குழப்பம் இது என்று எடுத்துக் கொள்ளளலாம். முக்கியமான இடத்தில் இப்படி வந்திருப்பதும், அது வர்த்தமானன் பதிப்பிலும் அதே இடத்தில், அதே பிழை ஏற்பட்டிருப்பதுதான் துன்பம். எப்படியோ, காலக் கணக்குப்படி பதின்மூன்று நாட்கள்தாம் மிகுந்திருக்கின்றன. முப்பதுநாள் என்பது காலக் கணக்குக்குப் பொருந்தவில்லை என்பது நமக்குள்ள ஆறுதல்.

விராட நகரில் இவ்வாறு நடந்து கொண்டிருக்கும்போது, ஹஸ்தினாபுரத்தில் துரியோதனன், பாண்டவர்கள் எங்கே மறைந்து வாழ்கிறார்கள் என்று ஒற்றர்கள் மூலம் ஆராயத் தொடங்கினான். 'பாண்டவர்கள் வாழும் இடத்தில், மழை தவறாது பெய்யும்' என்று பீஷ்மர் சொல்லியிருந்தார். ஆனால், அதைவிட எளிதான குறிப்பு, ஒரே இரவில் கீசகனும் உபகீசகர்களும் கொல்லப்பட்ட உண்மையில் மறைந்திருந்தது. கீசகனும் உபகீசர்களும் அடுத்தடுத்த நாளில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட செய்தி, பல உண்மைகளைச் சொன்னது. 'மல்யுத்தத்திலும் போரிலும் சமமானவர்கள் என்றால் நான்கு பேர் இருக்கிறார்கள். மத்ர நாட்டு மன்னனான சல்லியன், எங்கள் குருநாதரான பலராமர், பீமன், கீசகன் ஆகிய நால்வரே அவர்கள். எனவே, கீசகனையும் உபகீசகர்களையும் கொல்லக்கூடியவன் என்றால், அது ஐயத்துக்கிடமில்லாமல் பீமன்தான்' என்றான் துரியோதனன். 'சைரந்திரி என்ற பெயரோடு அங்கே வாழ்பவள் திரௌபதியாக இருக்கலாம்' என்றும் அவன் சந்தேகித்தான். பீஷ்மர் சொன்ன இயற்கை அடையாளங்கள் விராட நகரில் இருக்கின்றன. அந்த நாடு செழிப்பாக இருக்கிறது. எனவே, பாண்டவர்கள் மிக நிச்சயமாக விராட நகரில்தான் வாழ்கிறார்கள்' என்றான் துரியோதனன்.

அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களில் முக்கியமானவன் திரிகர்த்த நாட்டின் மன்னனாகிய சுசர்மா. இவன்தான் பதின்மூன்றாம் நாள் யுத்தத்தில் யுதிஷ்டிரனைப் பிடிப்பதற்கு வசதியாக அர்ஜுனனைத் தனியே இழுத்துச் சென்றவன். இதனால்தான் அபிமன்யு கொல்லப்பட்டான். 'தங்கள் உயிரே போனாலும் சபதம் மீறாதவர்கள்' என்ற பொருளுள்ள சம்சப்தகர்கள் என்ற பெயராலும் இந்தத் திரிகர்த்தர்கள் அறியப்படுவார்கள். எல்லாவற்றுக்கும் மூலமாக, விராட நகரத்து கோகிரஹண (ஆநிரை கவர்தல்) என்ற படையெடுப்பு காரணமாக இருந்தது. ஒரு பிரிவுச் சேனையுடன் சுசர்மா முதலில் விராட தேசத்துக்குள் நுழைவது; துரியோதனன் தலைமையிலுள்ள கௌரவர்கள் இன்னொரு பிரிவாகச் சென்று விராடனுடன் போர் புரிவது' என்று தீர்மானிக்கப்பட்டது. துரியோதனன் துச்சாதனனைப் பார்த்து, 'துச்சாதனா! பெரியோர்களைக் கலந்தாலோசித்து உடனே சேனையைத் திரட்டு. நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து மச்ச நாட்டை (விராட நாட்டை) அடைவோம். சுசர்மா சேனையுடன் விராட நாட்டுக்குள் நுழையட்டும். பசு மந்தைகளைக் கவர்ந்து வரட்டும். நாம் சேனையை இரண்டாகப் பிரித்துக்கொண்டு விராடனுடன் போர்புரிவோம்' என்று உத்தரவிட்டான்.

துரியோதனன் கட்டளைப்படி சுசர்மா மச்ச நாட்டின் மீது படையெடுத்தான். அது கிருஷ்ணாஷ்டமி இரவு. அதாவது, பௌர்ணமியை அடுத்த எட்டாவது நாள். ஒரு பெரிய படையைத் திரட்டிக்கொண்டு அவன் விராட நகரத்தின் பசுக்களைக் கவர்ந்து வந்தான். மறுநாள் கௌரவர் அனைவரும் ஒன்று சேர்ந்து நவமி திதியில் விராடனுடைய ஆயிரக்கணக்கான பசுக்கூட்டங்களைப் பிடித்தார்கள். திதிகளைக் கவனியுங்கள். எட்டாம் நாள், ஒன்பதாம் நாள் என்று அடுத்தடுத்த நாட்கள்.

மலைப்பகுதியைத் தாண்டிய முல்லை நிலத்தில் மாடுகள் இருக்கும். முதலில் ஒரு பிரிவு பசுக்களைக் கவர்ந்தால், அதைவிடப் பெரிய பிரிவு—பீஷ்மர் துரோணர், துரியோதனன், துச்சாதனன், கர்ணன் முதலானவர்கள் அடங்கிய பெரும்பிரிவு— விராட நகரைத் தாக்கும். அப்படித் தாக்கும்போது, பாண்டவர்கள் எந்த வேடத்திலிருந்தாலும் எதிர்க்க வருவார்கள் என்பது துரியோதனனுடைய கணக்கு.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com