உணர்வுகளின் அஜீரணம்
அன்புள்ள சிநேகிதியே,

நான் ஒரு மல்டிநேஷனல் கம்பெனியில் புராஜக்ட் மேனேஜர். நான் எழுதப்போவது என்னைப்பற்றியது அல்ல. என் டீமில் சமீபத்தில் சேர்ந்திருக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது. அவள் வந்து ஆறு மாதம் ஆகியிருக்கும். இந்தியாவில் வடக்கில் ஒரு கிராமத்தில் இருந்து வந்திருக்கிறாள். இங்கிலீஷ் சுமாராகத்தான் பேசுவாள். அதனால் மற்றவர்களுடன் பழகுவதற்குக் கொஞ்சம் கூச்சப்படுவாள். இங்கேதான் கம்ப்யூட்டர் சயன்ஸின் மாஸ்டர்ஸ் செய்திருக்கிறாள். திருமணமாகி ஆறு வயதில் ஒரு பையன் இருக்கிறான். கணவர், பையன் என்று ஒரு குடும்பமாக இருந்திருக்கிறார்கள், இரண்டு வருடங்களுக்கு முன்னால். கோவிட் சமயத்தில் மாமியாருக்கு உடம்பு சரியில்லை என்று தன் குழந்தையையும் அழைத்துக்கொண்டு அவர்கள் கிராமத்திற்குச் சென்றுவிட்டார் கணவர். இவள் தனியே முன்பிருந்த இடத்தில் இருந்திருக்கிறாள். அங்கே இந்தி பேசும் ஓரிரு நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். இங்கே என்னுடைய கம்பெனியில் கன்ஸல்டன்ட் ஆக வந்திருக்கிறாள். எது சொன்னாலும் கிரகித்துக் கொள்வாள். உடனே செய்து முடித்துவிடுவாள். ஆனால், எதையும் இந்தியில் சொன்னால் டக்கென்று புரிந்து கொள்கிறாள். நான் அவளுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றிக் கேட்டதில்லை.

இரண்டு வாரமாக மிகவும் டல்லாக இருந்தாள். Omicron பற்றி மிகவும் பயந்துவிட்டாள். கணவர், பையன் எப்போது திரும்ப முடியும் என்று தெரியவில்லை. கணவருக்கு வேலையும் போய்விட்டது. நானே வற்புறுத்திக் கேட்டபோது தெரிந்த விஷயம். குடும்பத்தை மிகவும் மிஸ் செய்கிறாள். மகன், "அம்மா எப்போ வருவாய்?" என்று கேட்டுக்கொண்டே இருக்கிறானாம். விசா பிரச்சனையால் அவளால் போகவும் முடியவில்லை. "அமெரிக்கா ஆசை அனுபவித்தது போதும். நீ கிளம்பி வந்துவிடு. இங்கே ஏதாவது வேலை பார்த்துக் கொள்ளலாம்" என்று கணவர் விரக்தியில் பேசுகிறாராம். படிப்பதற்கு நிறையக் கடன் வாங்கி இருக்கிறாள். அதைத் தவிர்த்து அவர்கள் கிராமத்தில் இவளைப்போல் படித்த பெண்கள் அதிகம் இல்லையாம். அதனால் மாமியார், நாத்தனார் என்று கிராமம் முழுவதும் இவர்களுடைய உறவுதான். எது சொன்னாலும் எது செய்தாலும் ஊர் முழுவதும் பரவிவிடும். அதனால் தன்னுடைய பிரச்சினைகளை யாரிடமும் சொல்வதில்லையாம். இங்கே யாரும் நண்பர்கள் இல்லை. வாரத்திற்கு ஒருமுறைதான் அலுவலகம் வரவேண்டும். மீதி நாட்கள் ரிமோட்டில்தான். ஆகவே மிகவும் தனிமையாக உணர்கிறாள். வார இறுதி ஆனால் மனச்சோர்வு (depression) வந்துவிடுகிறதாம்.

எந்த வேலையும் செய்யப் பிடிக்கவில்லை. சமையல்கூடச் செய்வதில்லை. "இங்கே எனக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது. எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம். எங்கு வேண்டுமானாலும் போகலாம். எதை வேண்டுமானாலும் செய்யலாம். குடும்பம், நண்பர்கள் இல்லாதது ஒரு குறை. நானும் மிகவும் கூச்சப்படுபவள். எங்கே நான் திரும்பி ஊருக்கே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. என் பையனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்தப் பதவி, இந்தப் பணம் எனக்கு அங்கே கிடைக்க வாய்ப்பில்லை. எனக்குக் கடன் வேறு அடைக்க வேண்டும்" என்று மிகவும் வருத்தப்பட்டாள். என் வீட்டிற்கு அவளைக் கூப்பிட முடியாத நிலை. மாமியார், மாமனார், அம்மா, குழந்தைகள் என்று என் குடும்பம் பெரிது. அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே புரியவில்லை. உங்களுக்கு இந்தி தெரியுமா? போன் நம்பர் பகிர்ந்தால், அவள் உங்களுடன் பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு வார்த்தை இங்கிலீஷில் பேசினால் ஒன்பது வார்த்தை கடகடவென்று இந்தியில்தான் பேசுகிறாள். படிக்கத் தெரிகிறது ஆனால், பேசக் கஷ்டப்படுகிறாள். என்னால், "கவலைப்படாதே! சுவாமியை வேண்டிக் கொள்" என்றுதான் சொல்ல முடிகிறது.

நன்றி.

இப்படிக்கு,
.................


அன்புள்ள சிநேகிதியே:
அந்தப் பெண்ணின் நிலைமை கொஞ்சம் பாவமாகத்தான் இருக்கிறது. வீட்டில் தனிமை, நிலையில்லாத எதிர்காலம், அரவணைக்கக் குடும்பம், நண்பர்கள் இல்லாத நிலை, பணப்பிரச்சனை, தொடர்பு சிறிது அறுந்துவிட்ட கலாசாரத்தால் ஏற்பட்ட பழக்க வழக்கங்கள் எல்லாம் சேர்ந்து ஒருவருக்கு மனச்சோர்வு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதுவும் she seems to be a private person. யாரிடமாவது தன் குறைகளைச் சொல்லும் போது, உணர்ச்சிகளை, விருப்பு, வெறுப்பு, பயம் போன்றவற்றை, பகிர்ந்து கொள்ளும்போது கொஞ்சம் வெறுமை குறையும். உடம்பில் அஜீரணம் இருந்தால் வீட்டு வைத்தியமோ, டாக்டர் வைத்தியமோ செய்து கொள்கிறோம். ஆனால், இது போன்ற emotional indigestion இருக்கும்பொழுது, நம்மில் பலபேர் அதைத் தீர்க்க முடியாமல் அனுபவித்துக்கொண்டே அவஸ்தைப்படுகிறோம்.

காரணங்கள்:
* நாம் எப்படி எதிர்பார்க்கிறோமோ அப்படி நடக்காவிட்டால் frustration/depression
* ஒரு செயலை நம்மால் கட்டுப்படுத்த முடியாமல் செயலிழந்து போனால் anger/depression.
* நம் உணர்ச்சிகளைப் பிறர் புரிந்துகொண்டு அதன்படி நடக்காவிட்டால் sadness/depression.

இப்படி நான் அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தப் பெண் தன்னுடைய தனிமையைப் போக்கிக்கொள்ள வேறு வழிகளை தேடிக்கொள்ள முயலவில்லை. இந்த இயற்கை விபரீதங்களுக்கு இடையே எத்தனையோ குடும்பங்கள் இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் பிரிந்துதான் இருக்கிறார்கள். ஆனால், அங்கேயும் தன் கணவர், குழந்தை நல்ல நிலையில் இருக்கிறார்கள். இங்கேயும் நல்ல வேலை, பணவசதி என்று சுதந்திரமாக இந்தப் பெண் இருக்கிறாள். தினமும் வீடியோ காலில் கணவர், குழந்தையுடன் பேசும் வசதி வேறு இருக்கிறது. இந்த வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்ந்தால் உங்கள் சிநேகிதி குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் நீங்கள் அழகாக எடுத்துச் சொல்லி அடிக்கடி அவளுடன் பேசிக்கொண்டு இருங்கள். அவள் இந்தச் சோர்வில் இருந்து விடுபட்டு விடுவாள். கொஞ்சம் ஆங்கிலத்திலேயே பேசிப் பாருங்கள். நம்பிக்கை வரும். கடந்த காலம் ஓர் அனுபவம். நிகழ்காலம் ஒரு செயல். எதிர்காலம் ஒரு நம்பிக்கை. கடந்த காலத்தைக் கசப்பாகவும், நிகழ்காலத்தை அலுப்புடனும், எதிர்காலத்தைப் பயத்துடனும் அனுபவித்தால் எல்லாருக்கும் depression தான் வரும்.

உங்களுக்கும், அந்தப் பெண்ணுக்கும் 2022ம் ஆண்டு நன்றாக அமைய நல்வாழ்த்துக்கள்.

டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com

© TamilOnline.com