ரொட்டி மசாலா ரோல்
தேவையான பொருட்கள்
ரொட்டித் துண்டுகள் - 6
உருளைக்கிழங்கு - 4
வெங்காயம் (நறுக்கியது) - 1 கிண்ணம்
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
பச்சைமிளகாய் - 4
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
கடலைமாவு - 1/4 கிண்ணம்
அரிசிமாவு - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து உரித்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் எல்லாம் போட்டு கிழங்கை மசித்துப் போடவும். கரம் மசாலா, மஞ்சள்பொடி, உப்பு போட்டு பொரியல் போலச் செய்து, எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்கவும். கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். ஒரு கிண்ணத்தில் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, காரப்பொடி போட்டு, பஜ்ஜிமாவு போலக் கரைக்கவும். பிரெட்டைச் சிறிதே நீர் தொட்டுக்கொண்டு ஓரங்களை நீக்கிவிட்டு அப்பளக் குழவியால் லேசாக இட்டு, அதன் நடுவில் உருளைப் பொரியலைத் தடவி சுருட்டி ரோல் போலச் செய்து, பஜ்ஜிமாவில் தோய்த்து, எண்ணெய் காய்ந்ததும் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

இட்லித் தட்டில் ஆவியில் வேகவைத்தும் செய்யலாம். அதுவும் சுவையாக இருக்கும். கெச்சப் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

அமரர் தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி

© TamilOnline.com