டாக்டர் ரா. கலையரசன்
கிராமியப் புதல்வன், கிராமியச் செல்வன், கலைகளின் செல்வன், கலைகளின் அரசன் எனப் பல விருதுகளைப் பெற்றிருக்கும் ரா. கலையரசன், சாதனைகள் படைக்கத் துடிக்கும் இளைஞர்களின் முன்னோடி. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த இவர், இளவயது முதலே கலைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் கதை, கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல், நடனம், இசை, பட்டிமன்ற விவாதம் என பல புலங்களிலும் திறனை வளர்த்துக் கொண்டார். நாட்டுப்புறக் கலைகளின் மீது ஆர்வம் திரும்பியது. பறை இசையையும் கரகத்தையும் முறையாகக் கற்றுத் தேர்ந்து நிகழ்ச்சிகள் நடத்த ஆரம்பித்தார். அப்போது இவருக்கு வயது 14. அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா இவரது திறனைப் பாராட்டி 'கிராமியப் புதல்வன்' என்ற விருதை அளித்துக் கௌரவித்தார். அது தந்த உற்சாகம் மேலும் பல கலைகளைக் கற்கக் காரணமானது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கோலாட்டம் உள்ளிட்ட 32 நாட்டுப்புறக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தார்.



கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்ற கலையரசன், நாட்டுப்புறக் கலைகளே தனது வாழ்க்கை என்று முடிவு செய்தார். தமிழகத்து நாட்டுப்புறக் கலைகளை உலககெங்கிலும் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில், கோயம்புத்தூரில் 'கிராமியப் புதல்வன் அகாடமி' என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன்மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பறையிசை, கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கம்பாட்டம், கோலாட்டம், காவடி ஆட்டம் எனப் பல்வேறு வகையான கிராமியக் கலைகளை இலவசமாகக் கற்று கொடுத்தார். அதைத் தவிர, நாடெங்கும் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார். 2019ல், கோவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு மணி நேரம் இடைவிடாது பறை இசைத்து இவர் நிகழ்த்திய சாதனை, பரவலான கவனம் பெற்றது. கின்னஸ் உலக சாதனை, பாரத் புக் ஆஃப் ரெகார்ட்ஸ், கோல்டன் ஸ்டார் உலக சாதனை, வொண்டர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் போன்றவற்றால் இந்த சாதனை அங்கீகரிக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டது.



கலைச்செம்மல், கலைக்காவலர், கலைகாப்பான், கலைகளின் சிகரம், கலைத்தென்றல், கலைப்புயல், கலைப்பேரரசு, கலைமுரசு எனப் பல பட்டங்கள் பெற்றிருக்கும் கலையரசன், உலக அளவில் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு இளைஞர் அமைப்பு, இவரை இந்திய இளைஞர்களுக்கான தூதுவராக நியமனம் செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறந்த நாட்டுப்புறக் கலைஞர் விருது பெற்றிருக்கிறார். இவரது சேவைகளைப் பாராட்டி ஐக்கிய நாடுகள் சபை தனது 75 வது பவள விழாவை முன்னிட்டு 'குளோபல் காம்பேக்ட்' விருது வழங்கிச் சிறப்பித்தது. இந்திய அளவில் கிராமிய நாட்டுப்புறக்கலைப் பிரிவில் முதன்முறையாக இவ்விருதைப் பெறுபவர் இவர்தான். இவரது கலைத்திறமையைக் கண்டு The Diose of Asia malasiya University, டாக்டரேட் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. இவை தவிரச் சுமார் 75 நாடுகளில் இருந்து பாராட்டுச் சான்றிதழ்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு, இவரும் இவரது மாணவர்களும் ஒன்றிணைந்து நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை ஒரு மாதம் தொடர்ந்து நடத்தி மதுரை சர்வதேச தமிழ்ப் பல்கலைகழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.



"கிராமியக் கலைகள் குறித்து பள்ளி மாணவர்களும் தெரிந்து கொள்ளும் விதமாக, தமிழக அரசு பள்ளிகளில், கிராமிய நாட்டுப்புறக் கலைகளுக்கான பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும்" என்பது இவரது வேண்டுகோள்.

இவர் மற்றும் இவரது மாணவர்களின் சாதனைகளை இந்தச் சுட்டிகளில் பார்க்கலாம்.
King of Arts 32 | Phoenix Books Of Records



சாதனைப் பயணம் தொடரட்டும்.

சிசுபாலன்

© TamilOnline.com