இறைவனை நம்பினவருக்கு இந்த விளையாட்டைப் புரிந்துகொள்ள முடியும். என் கணவர் ஓர் அரசாங்க மருத்துவர். ஆனாலும் அவர் ஒரு செயின் ஸ்மோக்கர். முதல் சிகரெட்டில் அடுத்ததைப் பற்றவைப்பார். ஒரு பாக்கெட் தீர்ந்தால் உடனே இன்னொரு பாக்கெட்டைப் பிரிப்பார். என்னால் முடிந்தமட்டும் சொல்லிப் பார்த்தேன். அவர் திருந்துவதாக இல்லை. சரி என்று விட்டுவிட்டேன். மதுவாவது குடித்தவனைக் கெடுக்கும். ஆனால், இந்த சிகரெட் புகை அருகில் உள்ளவர் உடலுக்கும் கேடு செய்யும். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். டாக்டரான இவருக்குத் தெரியாதா என்ன?
எனக்கு இரண்டு பையன்கள். அப்போது ஒருவனுக்கு 12 வயது. இன்னொருவனுக்கு எட்டு வயது. அந்தச் சமயத்தில் உறவினர் ஒருவர் நாகர்கோவிலில் இருந்தார். அவர் வீட்டுத் திருமணத்துக்குப் பையன்களையும் அழைத்துக்கொண்டு ரயிலில் சென்றோம். திருமணம் முடிந்து ஊருக்குக் கிளம்பும் சமயம், நான் அருகிலுள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குப் போகவேண்டும் என்று சொன்னேன். அதற்கு என் கணவர், "இப்போது வேண்டாம்; இன்னொரு முறை வரலாம். நமக்கு மாலை 6.00 மணிக்கு சென்னை ரயில்" என்றார். நான் பிடிவாதமாக, "அதெல்லாம் முடியாது. முருகனைப் பார்க்காமல் நான் வரமாட்டேன்" என்று சொன்னேன். 'ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்துகொண்டு கிளம்பினோம்.
கோவிலில் இருந்த ஊழியர், "சார் சீக்கிரம் போங்க. பகல் நடை சாத்துற நேரம் ஆச்சு" என்று துரிதப்படுத்தினார். நாங்களும் அவசர அவசரமாக உள்ளே சென்று தரிசனம் செய்து, பிரசாதம் எல்லாம் பெற்று வெளியில் வந்தோம். அப்போது ஒரு குருக்கள், இன்னொருவரிடம், "என்னங்க இது. மணி ஒண்ணு ஆச்சே! இன்னுமா நடை சாத்தலை" என்று கேட்க, மற்றவர், "இப்பதானே மணி 11 ஆகிறது. 12க்குத் தானேய்யா நடை சாத்துவோம்" என்றார். மற்றவர், "ஓய்.. நீர் என்ன நல்ல புத்தியுடன்தான் பேசுகிறீரா?" என்றார். அதற்கு அந்தக் குருக்கள் சுவரில் மாட்டியிருந்த பெரிய கடிகாரத்தைக் காட்டினார். "இது! 11 மணியோடு நின்றுபோய் இருக்கிறது. போய்ச் சாவி கொடுத்து, நேரத்தை மாற்றி வையும்" என்றார் அவர்.
இந்த உரையாடல் எங்கள் காதில் விழுந்தது. ஏதோ அவர்களுக்குள் சம்பாஷணை என்று எண்ணிக் காரில் ஏறிக்கொண்டோம். பையன்கள் காரிலேயே தூங்கிவிட்டனர்.
என் கணவர் மெதுவாக என்னிடம் சொன்னார், "இந்தா... நான் அந்த முருகனிடம் ஒரு வேண்டுதல் வைத்தேன். 'முருகா எப்படியாவது உன் தரிசனம் இன்றைக்குக் கிடைத்தால், பிறகு இந்த சிகரெட்டைக் கையால்கூடத் தொடமாட்டேன்' என்று. அந்த முருகன்தான் கடிகாரத்தை நிறுத்தி நமக்கு தரிசனம் கொடுத்து விட்டானே. இதோ இப்போதே இந்த சிகரெட் பாக்கெட்டைத் தூக்கிப் போட்டு விடுகிறேன்" என்று சொல்லி, கார் ஜன்னல் வழியாக அதை வெளியே எறிந்துவிட்டார்.
அன்றிலிருந்து இன்றுவரை அவர் சிகரெட்டைத் தொடவில்லை. அதாவது, கடந்த 40 வருட காலமாக அவர் புகை பிடிப்பதில்லை.
இது எப்படி? மனைவியால் முடியாததை அந்தச் செந்தூர் முருகன் சாதித்துவிட்டானே! இயக்குபவன் அவன், இயங்குவது நாமல்லவா!
குருபிரியா, தென்கலிஃபோர்னியா |