தீர்க்கதரிசனம்
யூதேயா நாட்டை ஏரோது ஆட்சி புரிந்த நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்டவன் ஒருவன் இருந்தான். அவனுடய மனைவி எலிசபெத் ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி.

அவர்கள் இருவரும் உலகளந்த கர்த்தரின்பால் மிகுந்த பக்தியும் வேதத்தில் விவரித்துள்ள சகல கற்பனைகள் மற்றும் நியமங்களின்படியேயும் நடந்து, இறையின் முன் நீதியும் பிரியமும் உள்ளவர்களாகவும் வாழ்ந்து வந்தார்கள்.

சகாரியா தனது ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவ சன்னிதியிலே ஊழியம் செய்து வந்தார். அத்தனை அருமையான தம்பதிகளுக்கு ஒரு பெரிய மனக்குறை இருந்தது. ஆம், எலிசபெத் குழந்தைப்பேறு அற்றவளாயிருந்தாள். இருவரும் வயது சென்று, முதிர் பருவத்தை எட்டியிருந்தார்கள்.

அப்படியிருக்க ஒரு நாள் ஆசாரிய ஊழிய முறைமையின் படி சகாரியா தேவாலயத்துக்குள் பிரவேசித்து தூபங்காட்டுதற்குச் சீட்டைப் பெற்றார்.

அந்த தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாம் கூட்டமாய் வெளியே கர்த்தரை நோக்கிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். மிகுந்த பணிவோடும் ஜெபத்தோடும் சகாரியா தேவாலயத்தினுள் தூபம் காட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கர்த்தருடைய தேவதூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே அவருக்குத் தரிசனமானான்.

அப்படி அவன் தோன்றியதைக் கண்டு சகரியா நடுங்கி, கலங்கி, பயமடைந்தார். தூதன் அவருடைய பயத்தைப் போக்கும்படிக்குக் கனிவோடு அவரை நோக்கிக் கூறியதாவது: "சகரியாவே, பயப்படாதே! உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக."

"இனி உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் உலகில் அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தரைத் துதிப்பதிலும், பக்தியிலும் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் அவன் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே கர்த்தருடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்."

"அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை நல்வழிப்படுத்தி அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். அவன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எலியா தீர்க்கதரிசி போன்று தேவ ஆவியும், பலமும் உடையவனாய் அவர்களுக்கு முன்னே நடப்பான்."

இதைக் கேட்ட சகரியா வியந்து தேவதூதனை நோக்கி "இதை நான் எதனால் அறிவேன்; நானோ கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாயிருக்கிறாளே" என்று குழப்பத்தோடு வினவினார்,.

தேவதூதன் சகரியாவின் கேள்விக்கு "நான், இந்த உலகை வார்த்தையினால் அழைத்த மகா பெரிய இறைவனின் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும்தான் நான் அனுப்பப்பட்டு வந்தேன்."

"இதோ, தகுந்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால், இவை சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய்" என்றபடி சகரியாவின் பதிலுக்குக் காத்திராமல் பட்டென மறைந்தான்.

சகரியாவும் விக்கித்துப் போனார். ஆம் உண்மையாகவே வார்த்தைகள் வராது தொண்டையில் சிக்கிக் கொண்டது போன்று உணர்ந்தார். வெளியே காத்திருந்த ஜனங்கள் சகரியாவின் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.

அவர் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேச முடியாமல் இருந்ததைக் கண்ட மக்கள் அவர் தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று புரிந்து கொண்டார்கள். அவரும் அவர்களுக்குச் சைகையினால் நிகழ்ந்ததை உரைத்தார்.

இவ்வாறு அவருடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறிய பின்னே தன் வீட்டுக்குப் போய், தன் பிரிய மனைவியிடம் தன்னால் இயன்ற முறையில் நிகழ்ந்ததை விளக்கிச் சொன்னார். அதைக் கேட்ட அவள் அதிசயத்துப் போனாள்.

சில நாட்களுக்கு பின் எலிசபெத் தேவதூதன் உரைத்த வண்ணமே கர்ப்பம் தரித்தாள், அவள் கர்த்தரை நோக்கி, "இறைவா, மலடி என்ற எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் நீர் என்மேல் கடாட்சம் வைத்து, இப்படிச் செய்தருளினீரே" எனப் போற்றி மகிழ்ந்தாள். எலிசபெத் ஐந்து மாதம்வரை வீட்டைவிட்டு வெளிப்படாதிருந்தாள்.

அவளுடைய ஆறாம் மாதத்திலே சகரியாவிடம் தோன்றிய காப்ரியேல் என்ற அத்தேவதூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் சிற்றூரில் மிகுந்த பக்தியும், குணசாலியுமான மரியாள் என்ற கன்னிகைமுன் தோன்றினான், மரியாள் அரசன் தாவீதின் வம்சத்தில் வந்த யோசேப்பு என்பவனுக்கு நிச்சயிக்கப்பட்டியிருந்தாள்

மரியாள் பிரார்த்தித்து கொண்டிருந்த போது அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து, "கிருபை பெற்றவளே, நீ வாழ்க. கர்த்தர் உன்னுடனே இருக்கிறார். உலகில் உள்ள சகல பெண்களைக் காட்டிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்" என்றான்.

மரியாளோ தேவதூதனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, "இது என்ன? இந்த வாழ்த்துதலின் பொருள் என்னதோ" எனச் சிந்தித்தாள்.

அவள் சிந்தையை அறிந்தவனாய் தேவதூதன் அவளை நோக்கி, "மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு (எபிரேய மொழியில் இரட்சகர் என்று பொருள்) என்று பெயரிடுவாயாக."

"அவர் சகலத்திலும் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் எனக் கொண்டாடப்படுவார்; அவர் என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது" என்றான்.

அதற்கு மரியாள் நடுக்கத்தோடே தேவதூதனை நோக்கி, "இது எப்படி நடக்கும்? எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே, என் புருஷனை அறியேனே" என்றாள்.

தேவதூதன் அவளிடம் "கர்த்தரின் பரிசுத்த ஆவி உன்மேல் இறங்கி, உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் குழந்தை பரிசுத்தமுள்ளது, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும்" என்றான்.

மேலும் அவளுக்கு இன்னும் விளங்கும்படி தேவதூதன் "இதோ, உன்னுடைய உறவினளாகிய எலிசபெத் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந் தரித்திருக்கிறாள்; அவளுக்கு இது ஆறாம் மாதம். தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை" என்று உத்தரவாதம் தந்தான்.

அதைக் கேட்ட மரியாள் "கர்த்தர் சித்தம் என் பாக்கியம். உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது" என்று வணங்கினாள்.

பின் தேவதூதன் உரைத்தது போன்றே சூல்கொண்ட மரியாள், மலைநாடான யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், தன் உறவினர்களாகிய எலிசபெத் சகரியாவின் வீட்டுக்குச் சென்றாள். வீட்டினுள் பிரவேசித்து, எலிசபெத்தைக் கண்டதும் வாழ்த்திப் பாடினாள்.

மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, எலிசபெத் வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; உடனே எலிசபெத் தேவ ஆவியினால் நிரப்பப்பட்டு, உரத்த சத்தமாய்: "மரியாளே, நீ அனேக ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என் தேவனின் தாய் என்னைக் காண வந்தது எனக்கு எத்தனை பெரும்பேறு" என்று கர்த்தரின் அன்பில் உருகினாள்.

இன்னும் "மரியாளே! தெரியுமா நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள குழந்தை களிப்பாய்த் துள்ளிற்று. விசுவசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவை நிறைவேறும் என்பது எத்தனை உண்மை" என்று பரவசத்தோடு கூறி மகிழ்ந்தாள்.

அகம் இன்புற்ற மரியாள் "அப்படியா! கர்த்தருக்கே மகிமை! என் ஆத்துமா இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. அவர் தம்முடைய கருணையினால் என்னை நோக்கிப் பார்த்தார்; வல்லமையுடையவர் அற்புதமானவற்றை எனக்குச் செய்தார்; அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது. சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களைத் தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பினார்" என இறைவனைப் போற்றினாள்.

மரியாள் எலிசபெத்துடன் ஏறக்குறைய மூன்றுமாதம் இருந்தபின் தன் வீட்டுக்குத் திரும்பி போனாள்.

எலிசபெத் ஏற்ற காலத்தில் ஓர் அழகான மகனைப் பெற்றெடுத்தாள். அவள் அயலகத்தாரும் உறவினர்களும் அவளுக்குக் கடவுள் செய்த அனுக்கிரகத்தை எண்ணி எண்ணி அவளுடன் சேர்ந்து ஆனந்தித்தார்கள். அவர்கள் யூத வழக்கப்படி எட்டாம் நாளிலே பிள்ளைக்கு விருத்த சேதனம் செய்து தகப்பனுடைய பெயர் விளங்கும்படி மகவிற்கு சகரியா என்று பெயரிடப் போனார்கள். அப்பொழுது எலிசபெத் குறுக்கிட்டு "யோவான் எனப் பெயரிடுங்கள்" என்றாள்.

அதற்கு அவர்கள் "உங்கள் உறவின் முறையில் யாரும் இந்த பெயரில் இல்லையே" என வியந்து வினவினார்கள். குழப்பம் நீங்க அவர்கள் சகரியாவை நோக்கி "என்ன பெயரிட நீர் மனதாயிருக்கிறீர்" என்று சைகையினால் கேட்டார்கள். அவர் எழுத்துப் பலகையில் "இவன் பேர் யோவான்" என்று எழுதினார். அக்கணமே சகாரியாவின் வாயும் நாவும் கட்டவிழ்க்கப்பட்டது. உடனே அவர் கடவுளைத் துதித்து ஸ்தோத்திரித்தார்.

இவற்றையெல்லாம் கேள்விப்பட்டவர்கள் தங்கள் மனதிலே பயந்து "இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ" என்று கிடந்தார்கள். ஆனால் கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது. யோவான் ஆவியிலே பலங்கொண்டு கண் வளர்ந்தான்.

இந்த நிலையில் மரியாளுக்கு நிச்சயிக்கப் பட்டிருந்த புருஷனாகிய யோசேப்பு அவளுடைய கர்ப்பம் குறித்தறிந்து பொதுவிலே அவளை அழைத்து அவமானப்படுத்த மனதில்லாமல், ரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குத் தோன்றி "யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உள்ள குழந்தையானது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" என்றான்.

இதனால் 700 ஆண்டுகளுக்கு முன் உரைக்கப்பட்ட ஏசாயா தீர்க்கதரிசியின் வாக்கு நிறைவேறும் என்றான். ஏனெனில் அது இப்படியாய்ச் சொன்னது: "இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்" என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று பொருள்.

யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே மரியாளைத் தன் மனைவியாய்ச் சேர்த்துக்கொண்டான்.

அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று ரோமானியப் பேரரசரான அகஸ்துராயன் கட்டளையிட்டார்.

அதனால் குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தத்தம் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது தாவீதின் வம்சம் வந்தவனாகிய யோசேப்பும் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, தான் வசித்த கலிலேயா நாட்டின் நாசரேத்திலிருந்து அவன் பூர்வீகமான யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

அங்கே அவர்கள் இருக்கையில், மரியாளுக்குப் பிரசவ வலி வந்து அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்த படியினால், பிள்ளையை கந்தைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.

அப்பொழுது மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, ராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து தோன்றினான், அவனைச் சுற்றிலும் ஒளி வெள்ளத்தைக் கண்டு அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி, "பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றான்.

அந்த கணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றித் துதித்து ஆர்ப்பரித்தது:

தேவதூதர்கள் அவர்களை விட்டுப் போனபின்பு, ஆச்சரியமடைந்த மேய்ப்பர்கள் "வாருங்கள்! நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட காரியத்தைப் பார்ப்போம் என்று சொல்லி வந்து மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.

அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்டதை எல்லோருக்கும் சொல்லி மகிழ்ந்தார்கள். அதைக் கேட்ட யாவரும் ஆச்சரியப்பட்டார்கள். மகனின் விருத்த சேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, தேவதூதனால் சொல்லப்பட்டபடியே குழந்தைக்கு இயேசு என்று பேரிட்டார்கள்.

இப்படியாகக் கர்த்தரின் மிகுந்த கருணையினால் அன்பை மட்டும் ஆயுதமாய்த் தாங்கிய தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் அவருக்குமுன் சென்று அவருக்காய் பாதைகளைப் பண்படுத்திய அவருடைய சகோதரன் யோவானும் இப்பூவுலகம் அன்பில் ஜெயிக்க, அமைதி செழிக்கத், மனிதம் தளிர்க்கத் தோன்றினார்கள்!

அனைவருக்கும் மனங்கனிந்த கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள்!

(பரிசுத்த வேதாகமம் புத்தகம் லூக்கா, மத்தேயுவில் இடம் பெற்றுள்ள வரலாற்றுச் செய்திகளுடன் சிறிது கற்பனை கலந்து இந்த கதை வரையப்பட்டுள்ளது.)

தேவி அருள்மொழி,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com