கர்த்தரின் பிரியம்
பெத்லஹேம் மாட்டுத் தொழுவம். மத்திய தரைக்கடலில் இருந்து சில்லென்று வந்த குளிர்காற்று, இறைவன் அருளிய தெ‌ய்வமக‌னின் காலைத் தொட்டு வணங்கியது. மா‌ட்டு‌த் தொழுவ‌த்‌தில், உலகின் பாவங்களைப் போக்க "நான் வந்து விட்டேன், உனக்கு ஏன் கவலை" என்று சொல்வதுபோல், குழந்தை இயேசு சிரித்ததை, அங்கிருந்த சில மேய்ப்பர்களும் மேரி மாதாவும் ரசித்தனர். ஒரு மேய்ப்பர், கையில் துரட்டுக் குச்சியைப் பிடித்தபடி, சற்றுக் குனிந்தவாறு இயேசுவின் அழகை ரசித்துக்கொண்டு இருந்தார். இன்னொரு மேய்ப்பர், மேரி மாதாவைப் பார்த்து, அங்கிருந்த சிறிய விளக்கினால் அந்த இடம் பிரகாசிக்கிறதா, இல்லை குழந்தையின் திருமுகத்தினாலா என்று சொல்லி பிரமித்தார். மற்றொரு மேய்ப்பர், முட்டியிட்டபடி கண்களை மூடிக்கொண்டு ஏதோவொரு பிரார்த்தனையில் இருந்தார். அவர் பக்கத்தில் சில ஆடுகள், கால்களை மடக்கி உட்கார்ந்து இருந்தன. வேகமாக வந்த காற்று அங்கிருந்த ஒரு சிறிய வெள்ளி மணியில் பட்டு, "கணீர்' என்று ஒலித்தது.

டக்கென்று விழித்துக் கொண்டான் பரிசுத்தம். விடியற்காலை ஐந்து மணி இருக்கும்.

"இன்னிக்கு என்ன கனவு, நம்ம வீட்டுல இருக்கிற எந்தப் பொருளைப் பார்த்தீங்க" எனக் கேட்டாள் அவனது மனைவி பனிமலர்.

பரிசுத்தம் தலையைச் சொரிந்து கொண்டே "இயேசப்பா மாட்டுத் தொழுவத்தில குழந்தையா இருக்கற காட்சி, நம்ம ஜோசப் சின்ன வயசில குழந்தையா இருக்கறப்ப, ஒரு வெள்ளி மணி வச்சு விளையாடுவான் ஞாபகம் இருக்கா. அதுதான் வந்தது" என்று சொன்னான்.

"கர்த்தரே" என்று சொல்லிக்கொண்டே சிலுவைக்குறி போட்டுகொண்டாள். பரிசுத்ததிற்கு இப்படித்தான் வித்தியாசமாக்க கனவு வரும்! அதில் ஒரு சிறப்பு என்னவென்றால், அவனுக்குப் பரிச்சயமான சில பொருள்களோ, காட்சி அமைப்புகளோ அந்தக் கனவில் வரும்.

"பனி, ஃபாதர் பிரிட்டோ ஏழு மணிக்கெல்லாம் வந்துவிடச் சொன்னாரு" என்று சொல்லிக்கொண்டே குளியல் அறைக்குள் சென்றான்.

ஏழு மணி. பனிமலை என்னும் சிறிய நகரத்தில், கோத்திக் கட்டட வடிவமைப்பில், ஒரு பெரிய தேவாலயம் இருப்பதை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். 16ஆம் நூற்றாண்டில், திருத்தூதர் புனிதர் தோமாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் ஆலயம்.

கோத்திக் கட்டட பாணியில் உயர்ந்த கோபுரங்கள் எழுப்புவது அதன் சிறப்பு. பரிசுத்தம் தினமும் பார்க்கும் தேவாலயம்தான், ஆனால் அதன் கம்பீரத் தோற்றத்தைப் பார்த்தாலே அவனுக்கு ஒரு புத்துணர்ச்சி வரும். கடவுளை வணங்கியபடியே உள்ளே சென்றான். தேவாலயத்தின் உட்பகுதி நீளவாக்கில் கிட்டத்தட்ட 100 அடிக்கு மேல் இருக்கும். பெரிய சாளரங்கள் நிறைய இருந்தன. ஒவ்வொன்றிலும் ஒரு நிறப்பதிகைக் கண்ணாடி அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு இருந்த ஒரு பெரிய நிறப்பதிகைக் கண்ணாடியில் இயேசு தோமாவுக்குத் தோன்றும் காட்சி எழிலுற வடிக்கப்பட்டு இருந்தது. அதன் வழியே வந்த கதிரவன் ஒளி அங்கு இருந்த இயேசுவின் பின்புறம் சிறகு விரித்ததுபோலக் காட்சி தந்தது.

பரிசுத்தம் புல்லரித்துப் போய், "இயேசப்பா" என்று சொன்னவாறே சிலுவைக் குறி போட்டுக்கொண்டான்.

"என்ன பரிசுத்தம், காலையிலே ரொம்ப உருகிப் போயிட்ட போல இருக்கு?" பின்பக்கத்தில் இருந்து ஃபாதர் பிரிட்டோவின் குரல்.

"தோத்திரம், ஃபாதர்! இந்தக் காட்சி வேற எந்த ஊரிலேயும் கிடைக்காது. இதுதான் நம்ம தேவாலயத்தின் சிறப்பு."

"சரியா சொன்னே. ஜெபமாலை இப்பதான் முடிஞ்சது. திருப்பலி (மாஸ்) வழிபாடு ஒன்பது மணிக்கு மேல நடக்கும். நீ போய் அப்பத்தையும் ரசத்தையும் எடுத்து வை" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ஃபாதர் பிரிட்டோ கிட்டத்தட்ட 5 1/2 அடி உயரம், கருமையான தேகம். 55 வயது இருக்கும். சதுரமான கண்ணாடி, படிந்து வாரிய முடி. அதன் அடர்த்திக் குறைவால் அவரது தலையின் மேற்பகுதி நன்றாகத் தெரிந்தது. அச்சு வைத்தாற்போல் பல்வரிசை. அவரின் குணத்தை கணக்கில்கொண்டு, "கருப்புத்தங்கம்" என்று அவரை வட்டாரத்தில் அழைப்பார்கள். வெள்ளை அங்கி அவரது மனதின் தூய்மையை பிரதிபலித்தது. பரிசுத்தம் அவரது வலது கை என்று சொல்லலாம். எடுபிடி வேலையில் இருந்து, பூசைக்கு உதவுவதுவரை எல்லாம் அவன்தான்.

ஒன்பது மணிக்கெல்லாம் கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள், திருப்பலிக்காக வந்து சேர்ந்தனர். ஃபாதர் பிரிட்டோ இறைவாக்கு அறிவிப்பை ஆரம்பித்தார். அல்லேலூயா வாழ்த்தொலியில் மக்கள் பக்தி வெள்ளத்தில் மூழ்கினர். ஃபாதர் பிரிட்டோ அப்பத்தையும் ரசத்தையும் ஒப்புக்கொடுத்து, நன்றி மன்றாட்டுடன் முடித்தார். ஃபாதர் பிரிட்டோ ஒரு முக்கிய அறிவிப்பு உள்ளதாகச் சொல்லிவிட்டு மேடையில் ஏறினார்

மைக்கில் "இன்று திருப்பலிக்கு வந்த அனைவருக்கும் நன்றி. ஒரு முக்கியமான செய்தி. மிகவும் சந்தோசமான செய்தி." தொண்டையைச் சற்று கனைத்துவிட்டுத் தொடர்ந்தார்.

"அன்பர்களே, உங்களுக்கு நன்றாகத் தெரியும், அடுத்த மாதம், கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை போப்பாண்டவர் இந்தியா வரவுள்ளார். அவர் வருகையில் இங்குள்ள அரசியல் மற்றும் மதத் தலைவர்களையும் சந்திக்கிறார். சில கத்தோலிக்க தேவாலய வருகையும் அவர் நிகழ்ச்சி நிரலில் உள்ளது. அதன்படி, சிறிய நகரத்தில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு வரவேண்டும், அதுவும் புனித திருத்தூதர் தோமாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேவாலயமாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அவரது உதவியாளர்கள் ஆய்வு செய்த பொழுது, நமது தேவாலயம் அவர்கள் பார்வைக்கு வந்துள்ளது. மலைசார்ந்த நமது ஊரும், கோத்திக் கட்டட வடிவமைப்பில் அமைந்த நம் தேவாலயமும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. நமது தேவாலயத்திற்கு போப்பாண்டவர் வரப் போகிறார்!" என்று சொல்லும்பொழுதே கைதட்டல் ஆரவாரம் தொடங்கியது. சிலர் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டனர். சிலர் மண்டியிட்டு, 'பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்' என்று சொல்லிச் சிலுவைக்குறி இட்டனர். சிலர் சந்தோஷத்தில் எம்பிக் குதித்தனர், சிலர் சந்தோஷத்தைக் கண்ணீரில் காட்டினர்.

ஃபாதர் பிரிட்டோ சற்று கையை மேலே உயர்த்தி, அமைதி காக்கச் சொன்னார்.

"அன்பர்களே, உங்களது மகிழ்ச்சி எனது மகிழ்ச்சி! இதைவிட இரட்டிப்பான சந்தோசமான செய்தியும் உள்ளது."

அங்கு கூடியிருந்த மக்கள் திகைப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மேலும் தொடர்ந்தார்.

"போப்பாண்டவர், அன்றைய இரவு உணவை, நமது பனிமலையில் உள்ள ஒரு குடும்பத்துடன் சாப்பிட விரும்புகிறார். நான் சென்னையில் உள்ள நமது பேராயருடன் பேசினேன். நமது தேவாலயத்திற்கு உண்மையாக சேவை செய்து வரும் 10 குடும்பங்களை நான் தேர்வு செய்துள்ளேன்" என்று சொல்லிவிட்டு அவர் பட்டியலைப் படித்தார். சிலர் தங்கள் பெயர் பட்டியலில் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அவர்கள் ஃபாதர் பிரிட்டோவின் மீதுள்ள மரியாதையால் ஏமாற்றத்தை வெளியே காட்டவில்லை.

"அன்பர்களே, அடுத்த ஞாயிற்றுக்கிழமை, திருப்பலிக்குப் பின்னர், நீங்கள் வாக்களித்து ஒரு குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். நன்றி, இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக!" என்று சொல்லிவிட்டு மேடையைவிட்டு இறங்கினார். தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு, மற்றக் குடும்பங்கள் வாழ்த்து தெரிவித்தன. பரிசுத்தம் பெயர் பட்டியலில் இல்லை!

அங்கிருந்த எல்லோரும் பட்டியலில் இருந்த மூன்று குடும்பங்களுக்கு வாய்ப்பு உள்ளதாக பேசிக் கொண்டனர். தேவாலயத்தை வரும் வழிகளில் சாலைகள் அமைப்பதில் முக்கியப் பங்கு வகித்த உள்ளூர் கவுன்சிலர் ஆரோக்கியசாமி, தேவாலய செலவுகளைக் கவனித்துக்கொள்ளும் தொழிலதிபர் ஆப்ரகாம் மற்றும் ஒரு மருத்துவர் ஆல்பர்ட். அவர்கள் நேர்மையானவர்களா எனக் கேட்டால் "இல்லை" எனத்தான் பதில் வரும். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான், ஆனால் நடைமுறை வாழ்க்கை நடத்தும் அற்ப மனிதர்கள். ஃபாதர் பிரிட்டோவுக்குச் சற்றும் உடன்பாடு இல்லைதான், தேவாலயத்திற்கு எது நல்லது என்பதன் அடிப்படையில் அவர்களைப் பட்டியலில் சேர்த்தார்.

அடுத்த ஞாயிறு மாலை. போப்பாண்டவருடன் இரவுணவு சாப்பிடப் போகும் குடும்பம் யார் எனத் தீர்மானிக்கும் நாள். கவுன்சிலர் ஆரோக்கியசாமிக்கும், தொழிலதிபர் ஆப்ரகாமுக்கும் சரியான போட்டி. அவர்கள் தமக்கே வாக்களிக்கப் பல குடும்பங்களை வற்புறுத்தினார்கள். ஃபாதர் பிரிட்டோவுக்கு அவர்கள் அணுகிய முறை சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. ஆனால் வேறு வழியும் தெரியவில்லை. எப்படியோ தேர்தல் நடந்து முடிந்தது. கவுன்சிலர் ஆரோக்கியசாமிதான் வெற்றியாளர். எல்லோருக்கும் ஏதோ ஓர் ஆதாயம் அவரால் தேவைப்பட்டது போலும்.

பரிசுத்தம் வீட்டினுள் நுழைந்தவுடன் பனிமலர் "யார் அந்த அதிர்ஷ்டசாலி?" என ஆர்வத்துடன் கேட்டாள்.

"வேறு யாரு, இதுல உனக்கு சந்தேகம் வேற, நம்ம கவுன்சிலர் ஆரோக்கியசாமி அய்யாதான்."

"பணம் படைச்சவரு, எதிர்பார்த்ததுதான்" என்று முனகினாள்.

"ஏய் பனி, என்ன பேசற. நம்ம தேவாலயத்துக்கு நிறைய உதவி இருக்காரு, அவர் மேலும் உதவி செய்வாரு. நம்ம கர்த்தர் எது செய்தாலும் ஒரு காரணம் இருக்கும். அவர் மாறுவதற்காக ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறார் போல. பசிக்குது, எனக்கு சாப்பாடு போடு" எனப் பேச்சை மாற்றினான்.

பனிமலரும், பரிசுத்தமும் தங்கள் பெயர் அந்தப் பட்டியலில் இல்லை என யோசித்ததும் இல்லை, வருத்துப்பட்டதும் இல்லை. ஒரு தகுதியான நபர் போப் ஆண்டவரைப் பார்க்கவேண்டும் என்பதே அவர்கள் நோக்கம்.

சில நாட்கள் ஓடின.

★★★★★


ஜெருசலேம். இயேசுவின் இறுதி இராவுணவு நடந்த செனாக்கிள் அறை. மூன்று மிகப்பெரிய தூண்கள் செங்குத்துக் கட்டமைப்பில் அந்த அறையை தூக்கிப் பிடித்தாற்போல் இருந்தன. ஆறு தூண்கள் பக்கவாட்டுச் சுவர்களைச் சுற்றி இருந்தன. நடுவில் மிக நீண்ட உணவருந்தும் மேசை. நடுவில் இயேசுநாதர் கையில் அப்பத்துடன் "நான் உன் தேவன்! உன் கவலையை என்னிடம் விட்டு விடு" என்று சொல்வது போல வீற்றிருந்தார். பீட்டர், ஆண்ட்ரூ, ஜேம்ஸ், ஜான், ஃபிலிப், பர்த்தலோமியூ, மத்தேயு, தாமஸ், ஜேம்ஸ், சைமன், யூதாஸ் மற்றும் துரோகியாக மாறிய யூதாஸ் இஸ்காரியட் எனப் பன்னிரெண்டு சீடர்களும் அருகில் இருந்தனர்.

இயேசுவின் முன்னர் இருந்த மேசையில் அப்பமும், திராட்சைப்பழ ரசக் கிண்ணமும் இருந்தன. அவர்கள் உண்ண ஆரம்பித்தனர். இயேசு அப்பத்தை எடுத்து, அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து, 'இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்' என்றார்.

பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், “இது நான் பலருக்காகச் சிந்துகிற ரத்தம்" என்று சொல்லியவாறே பல நல்ல செய்திகளைச் சீடர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

சிறிது நேரம் கழிந்தது. அவர் அறையின் ஓரத்தை பார்ப்பதுபோல இருந்தது.

திடுக்கிட்டு எழுந்தான் பரிசுத்தம். அவனுக்கு என்றும் அவ்வளவு வியர்த்தது இல்லை. ஒரு நடுக்கம். அவன் எழுந்த வேகத்தில் பனிமலரும் எழுந்துவிட்டாள்.

"என்ன நடந்தது, எதுக்கு உங்களுக்கு இவ்வளவு வேர்த்திருக்கு? ஏதாவது கெட்ட கனவா?" என்று பதட்டத்துடன் கேட்டாள்.

"நல்ல கனவுதான். கர்த்தரோட இறுதி இராவுணவு கனவு. நான் அவரையும், அவருடைய பன்னிரெண்டு சீடர்களையும் பார்த்தேன். அவர் சொன்ன நற்செய்திகளையும் கேட்டேன். பனி, அதுமட்டும் அல்ல, ஒவ்வொரு கிறிஸ்துமஸுக்கும் நீ பிளம்கேக் செய்வியே, அதை நான் ஒரு தட்டில் வச்சுக்கிட்டு அந்த அறையின் மூலையில் நின்றது போல இருந்தது. அதான் டக்கென்று பயத்தில் எழுந்துவிட்டேன். ஒருவேளை இரண்டும் தனித்தனி நிகழ்வுகளோ? " என்று சொல்லி, புரியமால் முழித்தான்.

அதைக் கேட்டவுடன், " கர்த்தர் ஏதோ உன்கிட்ட சொல்ல நினைக்கிறாரு!" என்று சொல்லிவிட்டு, பனிமலர் வீட்டிலிருந்த இயேசு படத்தின்முன் மெழுகுவர்த்தியை ஏற்றிக் கடவுளிடம் பிரார்த்தனை செய்தாள்.

ஒரு மாதம் வேகமாக ஓடியது. கவுன்சிலர் ஆரோக்கியசாமி இரட்டிப்பு சந்தோஷத்தில் தேவாலயத்தை மின்னொளியில் ஒளிர வைத்தார். வழி நெடுகும் கட் அவுட், பேனர் என்று அமர்க்களப்படுத்தி இருந்தார். போப்பாண்டவரை மிகச் சிறப்பாக வரவேற்றனர். சிறப்பு திருப்பலி தொடக்க வாழ்த்துடன் தொடங்கியது. வானவர் கீதம் பாடினர். இறைவாக்கு அறிவிப்பில் முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள் படிக்கப்பட்டன. கடைசியாக, போப்பாண்டவரின் உரையோடு முடிந்தது. இரவுணவுக்கு பனிமலைக்கு வருவதாக சொல்லிவிட்டு, அருகிலிருந்த ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்குக் கிளம்பிச் சென்றார்.

திருப்பலி சிறப்பாக நடந்ததில் எல்லோரும் சந்தோஷத்தில் இருந்தனர்.

பரிசுத்தம் ஃபாதர் பிரிட்டோவைப் பார்த்து "சந்தோசம் ஃபாதர், உங்களால் போப்பாண்டவரைக் காணும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. பனிமலரை வீட்டில் இறக்கி விட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பி வரலாமா?" எனக் கேட்டான்.

"பரிசுத்தம், இங்க என்ன நடத்ததுன்னு கேட்டா, நீ இங்கேயே தங்கிவிடுவே" என ஒரு கொக்கி போட்டார்.

"ஃபாதர், என்ன சொல்லறீங்க, ஒன்னும் புரியவில்லை" எனக் குழப்பத்துடன் சொன்னான்.

"பரிசுத்தம், நம்ம ஜெனிஃபர் மற்றும் அவரது கணவர் கொயரில் (பாடும் குழு) பாடிக்கொண்டு இருந்தபொழுது, அவர்களின் குழந்தைக்கு உதவி தேவைப்பட்டது. நீ கொஞ்சம்கூட யோசிக்காம, அந்தக் குழந்தையின் மலத்தைச் சுத்தம் செய்ததைப் போப்பாண்டவர் பார்த்தாரு போல. உன்னையப்பற்றி என்கிட்ட விசாரிச்சாரு. நீ உன் சிறு வயதிலிருந்தே, இந்த தேவாலயத்திலதான் வேலை செய்யறே என்று அவரிடம் சொன்னேன். உன்னைப்பற்றி பல விஷயங்கள் சொன்னேன். கடவுள்மேல உனக்கு இருக்கற நம்பிக்கை, தேவாலயத்தின்மேல் உள்ள அர்ப்பணிப்பு எல்லாம் கேட்டு ரொம்ப ஆச்சரியப்பட்டாரு!" என்று சொல்லும்பொழுது, அவர்முன் பரிசுத்தம் மண்டியிட்டான்.

"ஃபாதர், நான் ஆசீர்வதிக்கப்பட்டவன், அவர் என்னைப் பார்த்து, என்னைப்பற்றி பேசுவதற்கு, நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவன்" என்று மீண்டும் மீண்டும் அதையே சொன்னான்.

"பரிசுத்தம், நான் சொல்லுகிற இன்னொரு விஷயத்தைக் கேட்டா, நீ வானத்துல பறப்ப?" என்று சற்றுப் பீடிகை போட்டார்.

"ஃபாதர், என்ன சொல்றீங்க" என மீண்டும் குழப்பத்துடன் கேட்டான்.

"உன்னையும், பனிமலரையும் அவரோட இரவுணவு சாப்பிட கூப்பிட்டிருக்காரு!!!" என்று சொன்னதும் அவன் பறக்க மட்டுந்தான் இல்லை! மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த சில நிமிடங்கள் எடுத்தது. சிறிது நேரத்தில்

"ஃபாதர். நான் சென்று பனிகிட்ட சொல்லணும். என்னையவிட ரொம்ப சந்தோசப் படுவாள்."

"பரிசுத்தம், பனிமலர் ஒவ்வொரு கிறிஸ்துமஸுக்கும் செய்யும் பிளம் கேக்கை, இன்று இரவு டின்னருக்குக் கொண்டு வரச் சொல்லமுடியுமா?" எனக் கேட்டார்.

பரிசுத்தத்தின் உடல் புல்லரித்தது. இயேசுவின் இறுதி இராவுணவு பற்றிய கனவையும், தான் பிளம் கேக்குடன் நின்றதையும் ஃபாதரிடம் சொன்னான். அதைக் கேட்ட ஃபாதர் பிரிட்டோ "உன்மேல கர்த்தருக்கு எப்பொழுதும் பிரியம் அதிகம்" என்று சொல்லிவிட்டு சங்கீதம் 37-23ஐ அவனிடம் பகிர்ந்தார்.

"நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்"

மருங்கர்,
லேக்வில், மின்னசோட்டா

© TamilOnline.com