எங்கிருந்தோ வந்த விதை
அத்தியாயம் - 12
"அம்மா, அம்மா" அருண் கூப்பிட்டான். ஏற்கனவே வழியில் பார்த்த முரடர்களால் பயந்து போயிருந்த கீதா, அருண் கத்திய கத்தலில் என்னமோ ஏதோ என்று ஓடிவந்தார்.

"என்னாச்சு கண்ணா? என்னாச்சு?" கீதா பதற்றத்தோடு பேசினார். அவருக்கு ஓடி வந்ததில் மூச்சு வாங்கியது. அருணைத் தொட்டுப் பார்த்தார். "அந்த முரடனுங்க இங்க வந்தாங்களா கண்ணா? நான் போலீஸைக் கூப்பிடட்டுமா?" கீதா பயத்தில் அடுக்கிக்கொண்டே போனார்.

அருண் அமைதியாக அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தான். அருணின் செய்கை கீதாவை குழப்பியது. என்னடா கத்தினவன் இப்படிச் சிரிக்கிறானே என்று கோபம்கூட வந்தது. அருணைப் பளீர் என்று அடித்தார்.

"என்னது இது? விளையாட்டாப் போச்சா என்ன உனக்கு? என்ன திமிர் இருந்தா என்ன இப்படி பயமுறுத்துவ? அதிகப் பிரசங்கி"

இன்னும் இரண்டு அடி வைத்தார்.

அடித்த அடி வலித்தது. அழுதுகொண்டே அம்மாவிடம் தன் கையில் இருந்த கடிதத்தைக் கொடுத்தான். கீதா கடிதத்தைப் படித்தார். சந்தோஷத்தை அடக்கமுடியாமல் விக்கித்து நின்றார்.

"கண்ணா, நான் இப்படி ஒரு முட்டாளா இருப்பேன்னு நினைக்கலையே! என்னன்னு தெரிஞ்சுக்காம உன்னை அடிச்சுட்டேனே!"

"பரவாயில்லை அம்மா. நமக்கு நிறைய வேலை பாக்கி இருக்கு. நம்ம கையில இப்ப சாட்சி இருக்கு. We are going to nail ஹோர்ஷியானா." அருண் போர்வீரனைப் போலே முழக்கமிட்டான். அம்மா மறுவார்த்தை பேசுமுன் மாடிப்படிகளில் இரண்டு இரண்டாக ஏறித் தன் அறைக்குச் சென்றான். கீதா பெருமிதத்தோடு அருணைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அறையின் உள்ளே நுழைந்த அருண் தனது கணினியை இயக்கினான். தடதட என்று விசைப்பலகையைத் தட்டினான். மடமடவென்று முகநூலைத் திறந்து, அதில் தனது பள்ளிக்கூடப் பக்கத்தில் எழுத ஆரம்பித்தான். கையிலிருந்த SD அட்டையை கம்ப்யூட்டரில் சொருகினான். அதில் இருந்த படங்களையும் வீடியோக்களையும் பார்த்துப் பார்த்து முகநூலில் பதிவு செய்தான். அவன் கண்களில் ஒரு வெறி. அவனுக்கு ஹோர்ஷியானா நிறுவனத்தோடு மல்லுக்கட்டுவது புதிதல்ல. ஆனால், இம்முறை தன் நெருங்கிய தோழிக்கு அவர்கள் செய்ததை அவனால் மன்னிக்கவே முடியவில்லை.

"மிஸ்டர் டேவிட் ராப்ளே, இப்ப பாரு எங்க பலத்தை. கையும் களவுமா மாட்டிகிட்டீங்களா? உண்மை என்றைக்கும் சக்தி வாய்ந்தது. சத்தியமேவ ஜயதே! வேணும்னே நீங்க தப்புப் பண்ணிட்டு, சாராவை வம்புல மாட்டிவிடுறீங்களா? இது இண்டர்நெட் காலம். சுவத்துக்கூட கண்ணும் காதும் இருக்கிற காலம். யாரையும் ஏமாத்த முடியாது." தனக்குத்தானே பேசிக்கொண்டு எழுத வேண்டியதை எழுதினான்.

"Let me unleash the power of social media. ஹா ஹா! Let me unleash!" ஏதோ ஒரு பிசாசு அவனுள் நுழைந்ததுபோல நடந்துகொண்டான்.

கீதா அருணின் அறைக்குள் வரவே இல்லை. அவர் முதலில் சூஸனுக்கு ஃபோன் செய்ய எண்ணினார். பின்பு, தான் ஏன் வரப்போகும் உற்சாக சுனாமியை முந்திரிக் கொட்டை மாதிரி உடைக்கவேண்டும் என்று இருந்துவிட்டார். என்ன நடக்கப் போகிறது என்று கீதாவுக்குத் தெரியும்.

அருண் வலையேற்றிய சில நிமிடங்களில் எதிர்பார்த்தது போலேவே பள்ளிக்கூட முகநூல் பக்கத்தில் பரபரப்பு உண்டானது. ஊரிலிருந்த எல்லா வயதினரும் படங்களையும் வீடியோக்களையும் பார்த்து கொதித்துப் போயினர்.

★★★★★


செய்தி ஊரெங்கும் பரவியது. ஞாயிற்றுக் கிழமையிலும் ஹோர்ஷியானாவின் தலைமை அதிகாரிகள் அவசரக் கூட்டம் போட்டனர். டேவிட் ராப்ளே காச்சுமூச்சென்று கத்தித் தள்ளினார். அவர் முகம் கோபத்தில் தகதகத்தது.

ஹோர்ஷியானாவின் வக்கீல்கள் வேகமாகச் சென்று சாராவின் வீட்டை அடைந்தார்கள். கதவைப் படபடவென்று தட்டினார்கள். வேண்டுமென்றே மெதுவாகத் கதவைத் திறந்தார் சாராவின் அப்பா. அவர் முகத்தில் கொஞ்சம் வெறுப்பு, கொஞ்சம் வெற்றியின் சிரிப்பு.

கையில் காகிதங்களோடு நின்ற ஹோர்ஷியானாவின் வக்கீல்களை துச்சமாகப் பார்த்தார் பீட்டர். அவர்களை வீட்டுக்குள்ளே அழைப்பதா வேண்டாமா என்று யோசித்தார். சூஸன் வக்கீல்களை உள்ளே வரவிடமால் அவர்களிடமிருந்து காகிதங்களைப் பெற்றுக்கொண்டு திரும்பிப் போகச்சொன்னார்.

வந்தவர்கள் போன பின்னர், பீட்டர் தன் மனைவியை நெகிழ்ச்சியுடன் அரவணைத்தார்.

★★★★★


அருண் வீட்டில் ஃபோன் மணி அடித்தது. கீதா எடுத்தார். மாடியை நோக்கிச் சத்தம் போட்டார்.

"அருண்! அருண்! சாரா ஃபோன்ல. கீழ வந்து பேசு."

அருண் மாடிப்படியின் கைப்பிடியில் சர்ரென்று சறுக்கியபடி, ஒரு தமிழ்ப் பாடலை விசில் அடித்துக்கொண்டே இறங்கினான்.

"ஹலோ, அருண் பேசறேன். சொல்லு சாரா."

மறுமுனையில் சாராவின் சந்தோஷக் கூப்பாடு கேட்டது. "டேய் அருண், ஹோர்ஷியானா கேஸை வாபஸ் வாங்கிட்டாங்க! கேஸை வாபஸ் வாங்கிட்டாங்க! Hooray! அதுவுமில்லாம, அவங்க எங்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்போறாங்கடா… எங்களிடம் கேட்டதைப் போல இரண்டு மடங்கு!"

"அபாரம் சாரா! பட்டையக் கிளப்பிட்ட!"

"டே லூசு, உனக்குத்தாண்டா நா தேங்க்ஸ் சொல்லணும்."

"இருக்கட்டும் சாரா. நாம அவங்க மென்னிய முறிச்சுட்டோம். அதுதான் முக்கியம்."

"சத்யமேவ ஜயதே!"

"உண்மையே வெல்லும்!" அருண் ஃபோனை வைத்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

(நிறைவடைந்தது)

ராஜேஷ்

© TamilOnline.com