குன்றக்குடி ஷண்முகநாதர் ஆலயம்
குன்றக்குடி ஷண்முகநாதர் திருக்கோவில், தமிழ்நாட்டில், காரைக்குடியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. விநாயகர் வழிபாட்டிற்கு மிகவும் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி தலம் குன்றக்குடிக்கு அருகில்தான் உள்ளது.

சுவாமியின் திருநாமம் ஷண்முகநாதர், ஆறுமுகப் பெருமான். இம்மலை மயில் வடிவத்தில் காட்சி தருவதாலும், முருகப்பெருமானின் வாகனமாகிய மயில் குன்றுருவில் நின்று இத்தல இறைவனை வழிபட்டதாலும் இதற்கு மயூரகிரி, மயில் மலை, சிகண்டி மலை என்ற சிறப்புப் பெயர்கள் உண்டு. இங்கே ஷண்முகநாதர், வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். முருகனுக்குத் தனி மயிலும், வள்ளி, தெய்வானைக்கு தனித் தனி மயில்களும் வாகனமாக அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு. இத்தலத்து இறைவனை அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் உள்ளிட்ட பல பக்தர்கள் வந்து தரிசித்துள்ளனர்.

அருணகிரிநாதர்,
"பிறர்புகழ் இன்சொல் பயிலும் இளந்தைப்
பருவ மதன்கைச் சிலையாலே.."


எனத் தொடங்கும் திருப்புகழில், இத்தலத்து முருகப் பெருமானை,

"குலகிரி துங்க கிரிஉயர் குன்றக்
குடிவளர் கந்த பெருமாளே!"


என்று போற்றிப் பாடியிருக்கிறார். 18ம் நூற்றாண்டில் சிவகங்கை மன்னராகத் திகழ்ந்த பெரியமருது, ராஜபிளவை என்னும் கடும் நோய்க்கு ஆளானார். இத்தலத்து முருகனை வேண்டி வழிபட்டு நோய் நீங்கப்பெற்றார். முருகன்மீது ஆழ்ந்த பக்தி கொண்ட மருது சகோதர்கள் சிதைந்த நிலையில் இருந்த சிங்காரவேலன் ஆலயத்தைப் புதுப்பித்து திருப்பணிகள் செய்தனர். இவர்கள் உருவச்சிலைகள், அலங்கார மண்டபத்தில், உற்சவர் சன்னிதிமுன் கை கூப்பிய நிலையில் காணப்படுகின்றன.



சாகம் என்ற தீவின் அரசன் பிரபாகரனுக்குச் சூரன், பதுமன், சிங்கன், தாரகன் என்னும் சக்தி மிகுந்த நான்கு புதல்வர்கள். இதில் சூரன், பதுமன் இருவரும் முருகனுடைய வாகனமாகிய மயில் ஆகவும், கோழி ஆகவும் ஆக விரும்பிக் கடுந்தவம் செய்தனர். இதனை அறிந்த முருகப்பெருமானின் வாகனமாகிய மயில், அவர்கள் எண்ணம் ஈடேறினால், முருகனிடம் தனக்குள்ள முக்கியத்துவம் போய்விடும் என்று அஞ்சியது. அவர்கள் சிவபெருமானின் பூத கணங்களாக மாறவேண்டும் என மயில் மந்திரம் ஓதியது. அதன்படி இருவரும் சிவகணங்களாக மாறினர். தங்கள் நோக்கம் தடம்புரளக் காரணம் மயில்தான் என்பதை அறிந்தனர். மயிலுக்கு ஆலோசனை அளித்தது கருடனும் அன்னமும் என்றும் அறிந்து கொண்டனர். அநீதி செய்த மயிலை அல்லாட விட நினைத்து, மயிலைச் சந்தித்து கருடனும், அன்னமும் மயிலைப் பற்றிக் கேவலமாகப் பேசியதாகக் கூறினர். அதனை உண்மை என்று நம்பிய மயிலும், தனது தகுதியில் தலைக்கனம் கொண்டு கருடன், அன்னம் ஆகிய இரண்டுக்கும் பெருந்தொல்லை கொடுத்தது. அதனைப் பொறுக்கமாட்டாத கருடனும், அன்னமும் முருகப்பெருமானிடம் முறையிட்டன.

ஆணவத்தினால் தவறு செய்த மயிலைக் குன்றாக மாறவும், மயில், கருடன், அன்னம் மூவருக்கும் இடையே புறங்கூறிச் சச்சரவைத் தோற்றுவித்த சகோதரர்களை அசுரர்களாகப் பிறக்கவும் முருகப்பெருமான் சாபமிட்டார்.

துயருற்ற மயில், மயிலோனைத் துதித்து, சாப விமோசனம் வேண்டியது. கருணை கொண்ட முருகன் குன்றுருவத்தில் மயிலைத் தவமியற்றுமாறும் அசுரர்களை அழித்து அவர்களுக்குச் சாப விமோசனம் தந்த பின்னர், குன்றாக இருக்கும் மயில்மீது எழுந்தருளி விமோசனம் அளிப்பதாகவும் அபயமளித்தார். சூரனையும் பத்மனையும் ஒரே உருவத்தில் சூரபத்மன் ஆகப் பிறக்குமாறும், தக்க தருணத்தில் அவர்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும் அருளினார்.

அவ்வாறே அனைத்தும் நடக்க, முருகனுக்கும் அசுரர்களுக்கும் நடைபெற்ற போரில், முருகன் கை வேலால், சூரபத்மன் உடல் இரண்டாகப் பிளந்து, ஒரு பிரிவு மயிலாகவும் ஒரு பிரிவு கோழி ஆகவும் மாறியது. முருகப்பெருமான் மயிலை வாகனமாகவும், கோழியைக் கொடியாகவும் ஏற்றுக்கொண்டார். பின் மயில் குன்றாக இருந்து தவம் செய்த இடத்திற்குச் சென்று மயிலுக்குச் சாபவிமோசனம் அளித்தார்.



ஆலய அமைப்பு
கருவறையில், ஆறடி உயரத்தில், ஆறுமுகங்கள், பன்னிரண்டு கரங்களுடன் ஷண்முகநாதப் பெருமான் காட்சி அளிக்கிறார். மயில் வாகனத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். உடன் வள்ளியும் தெய்வானையும் தனித்தனி மயில்களில் காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பு. மலையுச்சிக்குச் செல்லப் படிக்கட்டுகள் உள்ளன. மலைமீது ராஜகோபுரத்துடன் ஒரே ஒரு பிரகாரத்துடன் கோவில் அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சொர்ண கணபதி, தட்சிணாமூர்த்தி, நடராஜர், பைரவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. மயிலின் வேண்டுகோளுக்கிணங்க, முருகப்பெருமான், தமது கைகளால் அமைத்தளித்த சரவணப் பொய்கை தீர்த்தம் மலை அடிவாரத்தில் காட்சியளிக்கிறது. இதில் நீராடுபவர்கள் கொடிய நோயிலிருந்து குணம் அடைகின்றனர். புத்திரப்பேறு இல்லாதவர்கள் மகப்பேறு பெற்று மகிழ்கின்றனர்.

இம்மலையின் அடிவாரத்தில் "தோகையடி விநாயகர்" ஆலயம் உள்ளது. மலையின் நுழைவாயில் தோகை வடிவமாதலால் அதனருகில் வீற்றிருக்கும் விநாயகருக்குத் இப்பெயர் வந்தது. அதன் எதிரே தண்டாயுதபாணி சுவாமி கோயிலும், சரவணப் பொய்கைத் திருக்குளமும் அமைந்துள்ளன. குளத்துக்கு எதிரே செல்லும் பாதையில் மேலே ஏறினால் அந்த மலைமீது பல சமணர்களின் கற்படுக்கைகள் காணப்படுகின்றன. பிராம்மி எழுத்துக்களால் ஆன கல்வெட்டுக்களும் உள்ளன.

மலையின் கீழே மிகப் பழமையான குடைவரைக் கோயில் உள்ளது. சிவன், திருமால், விநாயகர், துர்கை, சாஸ்தா சன்னிதிகள் மிகவும் சிதிலமடைந்து உள்ளன. தொல்பொருள் இலாகாவின் கட்டுப்பாட்டில் இக்குடைவரைக் கோயில் உள்ளது. பழமையான இக்கோயில் 7 அல்லது 8ம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இங்கு ஏராளமான கல்வெட்டுக்களும் காணக் கிடைக்கின்றன.

இங்கு நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி விசாகம், ஐப்பசி சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியன குறிப்பிடத்தக்கவை. சஷ்டி இங்கு மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தின் போது பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வருவது கண்கொள்ளாக் காட்சி. திருவிழாவின்போது குன்றக்குடி வீதிகளில் தேரோட்டம் நடக்கும். இத்தேர் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டது. புகழ்பெற்ற குன்றக்குடி ஆதீனம் இவ்வூரில் அமைந்துள்ளது. இத்தலம் காரைக்குடி - திருப்பத்தூர் மார்க்கத்தில் பிள்ளையார்பட்டிக்கு வெகு அருகே அமைந்துள்ளது.

ஆலயம் காலை 6 மணி முதல் 12.30 மணி வரையும் மாலை 4.30முதல் மணி முதல் இரவு 8.00 மணி வரையும் திறந்திருக்கும்.

சீதாதுரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com