பாஞ்சாலி விராடனின் அரண்மனைக்குள் நுழையும்போதே, 'நான் ஒழுக்கம் நிறைந்தவள். கெட்ட எண்ணத்துடன் என்னை யார் நெருங்கினாலும் அன்றிரவே உலக்கையால் அடிபட்டு விழுவார்கள்' என்றெல்லாம் சொன்னதன் பேரிலேயே விராடன் மனைவியான சுதேஷ்ணை அவளுக்குத் தன் அரண்மணையில் இடம் கொடுத்திருந்தாள். அப்படியிருக்கும்போது, இப்போது அவளை மன்னனின் கண்ணெதிரே எட்டி உதைத்தவனான கீசகன் தப்பிவிட்டால், அது பாஞ்சாலிக்கு நல்லதில்லை. மாறாக, 'இவளை யார்வேண்டுமானாலும் தவறான எண்ணத்துடன் அணுகலாம்' என்ற எண்ணம்தான் பரவும். எனவே கீசகனைக் கொன்றேயாகவேண்டிய கட்டாயத்துக்குப் பாஞ்சலி உள்ளானாள். வலிமை நிறைந்த அர்ஜுனன் இப்போது நபும்சக வேடத்தில் இருப்பதால், அவளுக்கு உதவக்கூடிய ஒரே துணைவன் பீமன்தான் என்றாகிறது. எனவேதான் அவள் மடைப்பள்ளி எனப்படும் சமையலறையில் உறங்கிக்கொண்டிருந்த பீமனை எழுப்பினாள். அதற்குமேல், கீசகன் அவளை எட்டி உதைப்பதை பீமனும் கண்டிருந்தான். அவனுக்கும் கட்டுக்கடங்காத கோபம் இருந்தது. எனினும், தங்களுடைய சூழ்நிலையையும் தர்மபுத்திரரையும் எண்ணியே தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான். தர்மருக்கேகூடச் சினத்தால் வேர்க்கும் அளவுக்குக் கோபம் ஏற்பட்டிருந்தது. ஆனால் தர்மத்துக்கு மட்டுமே கட்டுப்பட்ட அவருடைய சிந்தனையால், தனக்கு எந்தவிதத்திலும் உதவமுடியாது என்பதைப் பாஞ்சாலி அறிந்தே இருந்தாள்.
இந்த நோக்கத்துடன் மடைப்பள்ளியில் உறங்கிக்கொண்டிருந்த பீமனை எழுப்பினாள். அவன் எழுந்தவுடன் அவனுடைய நெஞ்சில் சாய்ந்துகொண்டு 'குந்திதேவியைத் தவிர வேறு யாருக்கும் பணிவிடை செய்தறியாத என்னுடைய கைகள், சுதேஷ்ணைக்காகச் சந்தனம் அரைத்து எப்படிக் காய்த்துப் போய்விட்டன என்பதைப் பார்' என்றவாறு பீமனிடத்தில் தன் கைகளை நீட்டினாள். இவ்வாறு தன் நிலைமையைக் குறித்து—கணவனிடம்தான் என்றாலும்—பேச நேர்ந்ததே என்று எண்ணிய அவள் கண்களிலிருந்து நீர் பெருகியது. பீமன் கலங்கினான். அவளுடைய கைகளைப் பற்றித் தன் முகத்தில் ஒத்திக்கொண்டான்.
மிக நீளமான வருணனைகளைக் கொண்ட இந்தப் பகுதியின் அவசியம் கருதி, கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பை அருட்செல்வப் பேரரசனின் தமிழ் மொழிபெயர்ப்பில் ஒரு சிறு பகுதியை மட்டும் மேற்கோளாகத் தருகிறேன். பீமன் {திரௌபதியிடம்} சொன்னான், "உனது இந்தக் கரங்கள் முன்பு சிவந்திருந்தன, இப்போதோ அவற்றில் ஆணித்தழும்புகள் பரவியிருக்கின்றன. எனது கரங்களின் வலிமைக்கு இகழ்ச்சி; பல்குனனின் {அர்ஜுனனின்} காண்டீபத்துக்கு இகழ்ச்சி. விராடனின் அவையில் நானொரு படுகொலையைச் செய்திருப்பேன், (ஆனால் அதைத் தடுக்கும் வண்ணம்) குந்தியின் மகன் {யுதிஷ்டிரர்} வலிமைமிக்க யானையைப் போல என்னைப் பார்த்தார். இல்லையெனில் அரசு அதிகாரம் கொடுத்திருக்கும் கர்வத்தால் போதையிலிருக்கும் கீசகனின் தலையைச் சந்தடியில்லாமல் நசுக்கியிருப்பேன். ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, கீசகனால் நீ உதைக்கப்பட்டதை நான் கண்ட அந்தச் சமயத்தில் மத்ஸ்யர்கள் அனைவரையும் மொத்தமாகப் படுகொலை செய்ய நினைத்தேன். எனினும் யுதிஷ்டிரர் தனது பார்வையால் என்னைத் தடுத்துவிட்டார். ஓ! அழகிய பெண்ணே, அவரது {யுதிஷ்டிரனின்} நோக்கத்தைப் புரிந்து கொண்ட நான் அமைதியடைந்தேன். நாம் நாட்டை இழந்திருக்கிறோம், நான் இன்னும் குருக்களைக் கொல்லவில்லை. கர்ணன், சுயோதனன், சுபலனின் மகன் சகுனி, தீய துச்சாசனன் ஆகியோரின் தலைகளை நான் இன்னும் எடுக்கவில்லை. ஓ! பெண்ணே, இந்தச் செயல்களும், விடுபட்ட செயல்களும் எனது ஒவ்வோர் அங்கத்தையும் எரித்துக் கொண்டிருக்கின்றன. எனது இதயத்தில் பதிந்த எறிவேலாக இந்த எண்ணம் இருப்பதாக நான் கருதுகிறேன். ஓ! அழகிய இடை கொண்டவளே, அறத்தைத் துறக்காதே. ஓ! உன்னத இதயம் படைத்த பெண்ணே, உனது கோபத்தை அடக்கு. இதுபோன்ற உனது கடிந்துரைகளை மன்னர் யுதிஷ்டிரர் கேட்டால், நிச்சயம் தனது உயிருக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துக் கொள்வார். நீ இப்படிப் பேசுவதை, தனஞ்சயனோ {அர்ஜுனனோ}, இரட்டையரோ {நகுல சகாதேவரோ} கேட்டால், அவர்களும் தங்கள் உயிரைத் துறப்பார்கள். ஓ! கொடியிடை கொண்ட பெண்ணே, அவர்கள் தங்கள் உயிரை விட்டால், என்னால் எனது உயிரைத் தாங்கிக்கொள்ள இயலாது". இதைக் கேட்ட பாஞ்சாலி, கீசகனை பீமன் கொல்வதையே விரும்பினாள். பீமனைப் பார்த்துப் பின்வருமாறு சொன்னாள்:
ஓ! பீமரே, மன்னன் {விராடன்} என்னிடம் மயங்கிவிடக் கூடாது என்று {நினைத்து}, எனது அழகில் பொறாமை கொண்டுள்ள கைகேயி {சுதேஷ்ணை} எடுக்கும் முயற்சிகள் எனக்கு எப்போதும் வலியைத் தருகின்றன. அவளது நிலையைப் புரிந்துகொண்ட தீய ஆன்மா கொண்ட முறைகேடனான கீசகன் விடாமல் என்னிடம் கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கிறான். இதனால் அவனிடம் கோபமடைந்த நான் எனது கோபத்தை அடக்கிக்கொண்டு, காமத்தால் புத்தியிழந்த அந்த இழிந்தவனிடம், "ஓ! கீசகா, உன்னைப் பாதுகாத்துக்கொள். நான் ஐந்து கந்தர்வர்களின் மனைவியும், அவர்களின் அன்புக்குரிய ராணியுமாவேன். அந்த வீரர்கள் கோபமடைந்தால், தீயவனான உன்னைக் கொன்று போடுவார்கள்" என்று பதிலளித்தேன். இப்படிச் சொல்லப்பட்ட தீய ஆன்மா கொண்ட கீசகன், என்னிடம், "ஓ! இனிய புன்னகை கொண்ட சைரந்திரி, கந்தர்வர்களிடம் எனக்கு எந்தப் பயமும் கிடையாது. போர்க்களத்தில் அவர்களுடன் மோதும் நான் ஒரு லட்சம் கந்தர்வர்களைக் கூடக் கொல்வேன். எனவே, ஓ! அச்சமுள்ளவளே, நீ ஒப்புதல் அளிப்பாயாக!" என்று மறுமொழி கூறினான்.
- S., Arul Selva Perarasan; செ., அருட்செல்வப்பேரரசன். விராட பர்வம்: Virata Parva (முழுமஹாபாரதம் Book 4) (Tamil Edition) . Kindle Edition.
இதைக் கேட்டதும் பீமன் கீசகனைக் கொல்லும் எண்ணத்தில் வலிமையுற்றான். 'நீ போய் அந்தக் கீசகனை நடன அரங்குக்கு அழைத்து வா. நான் அவனை அங்கே கொல்கிறேன்' என்று பாஞ்சாலியைச் சமாதானப்படுத்தினான். பீமன் சொன்னபடி, பாஞ்சாலியும் கீசகனிடத்தில், 'உங்களோடு தனிமையில் இருக்க விரும்புகிறேன். நடன அரங்குக்கு வாருங்கள்' என்று சொன்னாள். மோகாவேசத்தில் தன்னை இழந்த கீசகன், 'பெண்ணே! அந்த இடம் சரியான இடம்தான். நான் அங்கே தனியாக வருகிறேன். ஒருவரும் அறியாமல் அங்கே சந்திக்கலாம்' என்று பதில் சொன்னான். இந்த இடத்தில், மூலத்தில் பின்வருமாறு பொருள்படும் ஒரு வாக்கியம் இருக்கிறது:
'இந்த உரையாடலைப் பேசியபோது திரௌபதிக்கு ஒவ்வொரு கணமும் ஒரு மாதம்போல் கழிந்தது. கீசகனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.' சொன்னபடி அவன் நடன அரங்கத்துக்கு வந்தான். கட்டிலில் பாஞ்சாலிக்கு பதில் பீமன் படுத்திருந்தான்! மானைக் கொல்வதற்காகக் காத்திருக்கும் சிங்கத்தைப் போல அங்கே கிடந்தான். படுத்திருப்பது சைரந்திரி என்று நினைத்த கீசகன் பீமனைத் தொட்டான். காமவசப்பட்டிருந்த கீசகனுக்கு, தொடுவது பீமனைப் போன்ற முரட்டு பலசாலியான ஓர் ஆணை என்பதைக்கூட உணர முடியவில்லை. பீமன் சீறிக்கொண்டு எழுந்தான். சற்று நேரத்தில் 'இது ஓர் ஆண்' என்பதைக் கீசகன் உணர்ந்தான். இருவருக்கும் கோரமான யுத்தம் நடந்தது. பீமன் அடித்த அடியில் கீசகனுடை தலை, அவனுடைய வயிற்றுக்குள் போய்விட்டது என்று சொன்னால் போதும். கோபம் தீராமல் அவனை பீமன் தலை, கால், வயிறு என்று அடையாளம் காணமுடியாத மாமிசப் பிண்டமாக உருட்டினான். 'என்னைத் தவறான எண்ணத்துடன் தொட்டால், அன்றிரவே அவர்கள் உலக்கையால் அடியுண்டு சாவார்கள்' என்ற பாஞ்சாலியின் வாக்கியத்துக்கு வெகு பொருத்தமாக இருந்தது அந்தக் கீசகப் பிண்டம். வெளியே வந்து, திரௌபதியைப் பார்த்து, 'பெண்ணே! உன்னிடம் ஆசை கொண்டவனான கீசகனை நான் கொன்றுவிட்டேன். உள்ளே போய்ப் பார்' என்று சொல்லிவிட்டு, தன் மடைப்பள்ளிக்குச் சென்று குளித்து, சந்தனம் பூசிக்கொண்டு படுத்தான்.
பாஞ்சாலி அரங்கின் காவலாளிளை அழைத்து உருவம் சிதைந்து கிடக்கும் கீசகனைக் காட்டினாள். மிகுந்த பலசாலியான கீசகன் அப்படி உருத்தெரியாமல் கிடப்பதைப் பார்த்து அனைவருக்கும் அச்சமே ஏற்பட்டது.
மறுநாள் பொழுது விடிந்ததும் உபகீசகர்கள் உருவம் சிதைந்து கிடக்கும் தங்கள் அண்ணனைப் பார்த்ததும், இவனைத் தூக்கும் பாடையிலேயே இவளையும் கட்டிப்போட்டு, இருவரையும் ஒன்றாக எரிப்போம்' என்று முடிவு செய்தார்கள். மீண்டும் துன்பத்துக்கு உள்ளான பாஞ்சாலி, தங்களுக்குள் உள்ள சங்கேதப் பெயரால் பீமனை அழைத்தாள். அவசரத்தைப் புரிந்துகொண்ட பீமன், மதில்களைத் தாண்டிக் குதித்து அங்கே வந்து, உபகீசகர்கள் 105 பேரையும் கொன்றான்.
நெருங்கவே முடியாதவனான கீசகனையும் 105 உபகீசகர்களையும் 'யாரோ ஒரு கந்தர்வன்' கொன்றுவிட்டான் என்ற செய்தி துரியோதனனுக்கு ஒற்றர்கள் மூலமாகப் போனது. அவன் இதற்காகத்தானே காத்திருக்கிறான்!
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |