கோபத்துக்கு மருந்து உண்டா?
அன்புள்ள சிநேகிதியே,
மனைவி கோபித்துக் கொண்டு போய்விட்டாள். நான் ஒரு கோபக்காரன். ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டி விடுகிறேன். அப்புறம் வருத்தப்படுவேன். மன்னிப்புக் கேட்பேன். ஆல்கஹால், டிரக்ஸ் என்று எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால், இந்தக் கோபத்தை மட்டும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு போய்விட்டாள். இந்தியாவிலேயே வேலை தேடிக்கொண்டு சொல்லிக்கொள்ளாமல் இருந்து விட்டாள். நான் சம்மர் முடிந்து இந்தியாவிலிருந்து திரும்பி வருவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, குழந்தைகளை அங்கேயே படிக்க வைத்து விட்டதாகக் கேள்விப்பட்டேன். கோபத்தில் ஃபோனில் கத்திவிட்டேன். அப்புறம் ஃபோன் தொடர்பும் நின்றது. மன்னிப்புக் கேட்டேன். பதில் இல்லை. 'கோவிட்' சமயத்தில் அதுவும் 'விசா' நிரந்தரம் இல்லாத நிலையில் போய்ப் பார்க்கவும் முடியவில்லை தனிமை வெறுக்கிறது. குழந்தைகளைப் பார்க்க ஆவலாக இருக்கிறது. எப்படியாவது என் மனைவியைத் திருப்பி அழைத்துக் கொண்டு வந்து அவளை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நல்ல புருஷனாக இருக்க வேண்டும், நல்ல அப்பாவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், இந்தக் கோபத்தால் பல நண்பர்களையும் இழந்து விட்டிருக்கிறேன். Anger Management Course முயன்று பார்த்து விட்டேன். நீங்கள் ஏதாவது அட்வைஸ் செய்தால் நான் கண்டிப்பாக அதன்படி நடந்து கொள்கிறேன். தயவுசெய்து என் குடும்பத்துடன் ஒன்று சேர உதவி செய்யுங்கள்.

வணக்கம்

இப்படிக்கு,
.................


அன்புள்ள சினேகிதரே
கோபம் என்பது ஒரு உணர்ச்சி. தன்னை மீறிய, தனக்குப் பிடிக்காத செயல்கள் நடக்கும் போது, அதுவும் பிறர் நடந்து கொள்ளும்போது, அது செயலில் வெளிப்படுகிறது. புருவத்தைச் சுருக்குதல், கண்களை விரித்தல், கை ஓங்குதல், சொல்லால் தாக்குதல் என்பதெல்லாம் சகஜமாக நடப்பது. சிலருக்கு அந்தக் கோபம் வெறியாக மாறும்போது வார்த்தைகளால் வெடிப்பார்கள். கையில் இருக்கும் எதையும் வைத்துத் துன்புறுத்துவார்கள். சிலருக்கு உள்ளுக்குள்ளே பொங்கி வெளிப்படுத்தத் தெரியாமல் வெளியே போய்விடுவார்கள். பல நாட்களுக்குப் பேசமாட்டார்கள். ஒவ்வொருவர் மனோபாவத்தைப் பொறுத்தும், அவர்களால் விரும்பப்படாத, வெறுக்கும் செயல்களைப் பார்க்கும்போதும், அறியும்போதும் அந்தக் கோபம் உக்கிரத்தை அடைகிறது.

அந்தக் கோபம் சிணுங்கலில் ஆரம்பிக்கலாம்; சிறிய விளையாட்டில் ஆரம்பிக்கலாம். வாதத்தில் ஆரம்பித்துச் சண்டையில் போய், உள்ளுக்குள் இருக்கும் மிருக உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, உறவுகளுக்கு, ஏன் வாழ்க்கைக்கே, ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது இந்தக் கோபம். விவாகரத்துவரை சென்ற பல கணவன் மனைவியருக்கு இதுபோன்று நேர்ந்திருக்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தன் உடம்பில் உள்ள சர்க்கரையை பேலன்ஸ் செய்வது போலத்தான் இந்த கோபமும். ஆனால், இதற்கு இஞ்செக்‌ஷன், மாத்திரை, டாக்டர் விசிட் தேவையில்லை. நிறையப் பேர் Anger Management treatment-க்குப் போயிருக்கிறார்கள். சிறிது காலம் சரியாக இருப்பார்கள். பிறகு பழைய கதைதான். நமது சிந்தனையில் எத்தனையோ அருமையான உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறோம். அப்படியிருக்க, இந்தக் கோபத்தையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சிரமம் இல்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு சிலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினால்தான் தங்களுக்கு அதிகாரம் இருப்பதைப் போல் உணர்வார்கள். "நான் ஒரு வாங்கு வாங்கினேன்", "சூடாக ஒரு கேள்வி கேட்டேன்" என்று பெருமையோடு சொல்வார்கள். அவர்களைப் பார்த்து எனக்குச் சிறிது பரிதாபமாகத்தான் இருக்கும். தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாதவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்க முடியும்? தனக்குக் கோபம் வருவதையும் பெருமையாக நினைப்பவர்கள் இருக்கிறார்கள். நான் இந்தக் கோப ரக மனிதர்களைப் பற்றி ஒரு நாவலே எழுதி விடலாம். அந்த அளவுக்குக் கோபம் மனித இனத்தில் நிரம்பி வழிகிறது. இதெல்லாம் எதற்கு எழுதுகிறேன் என்றால், நீங்கள் மட்டும் இதில் மாட்டிக் கொண்டவர் அல்ல.

உங்கள் விஷயத்தில் நீங்கள் உங்கள் கோபத்தை உணர்கிறீர்கள். அதன் விளைவுகளை அனுபவித்து வருத்தப்படுகிறீர்கள். நீங்கள் ஒரு பாசமுள்ள கணவராக, தந்தையாக, நேசமுள்ள நண்பராக பிறருக்கு உதவி செய்யும் நல்ல மனிதராக இருக்கக்கூடும். கோபத்தைக் குறைக்க எனக்கு தெரிந்த சில உத்திகளைச் சொல்கிறேன். சிலருக்கு இது உதவியிருக்கிறது.

1. தினமும் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது, மிகவும் வெறித்தனமான கோபமாக முகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு, மெல்ல அந்தக் கண்களை, இறுக்கத்தை, முகத்தின் சுருக்கத்தைத் தளரவிட்டு சாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள். பிறகு ஒரு புன்னகையைச் சேர்த்துக்கொள்ளுங்கள். அந்தப் புன்னகை முகத்துடனேயே ஒரு ஐந்து நிமிடம் படுத்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு 'செல்ஃபி' எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய 'ஸ்மைலிங் ஃபேஸ்' பிடிக்க ஆரம்பிக்கும். ஐந்து நிமிடத்தில் தொடங்கி நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

2. தினம் பதில் கிடைக்காவிட்டாலும் நல்லதாக ஏதேனும் செய்தி அனுப்பிக் கொண்டிருங்கள். Your way of communication should change. அவர்களுக்கு உங்கள் கோபமும், அதைத் தொடர்ந்த மன்னிப்பும் பழகிப்போய், உங்களிடம் நம்பிக்கை போய்விட்டிருக்கிறது. மெல்ல மெல்லத்தான் உங்கள் மாற்றத்தைப் புரிந்து கொள்வார்கள்.

3. தியானம், யோகம், சமூகசேவை, சத்சங்கம் எல்லாம் இந்தக் கோப உணர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளுகிறது. செய்து பார்க்கலாம்

4. உங்களுக்குள்ளே ஒரு 'கமிட்மென்ட்' தேவை; ஒரு மனவுறுதி தேவை. இது உங்கள் உணர்ச்சி. நீங்கள்தான் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். வேறு மருந்து எதுவும் வேலை செய்யாது.

கண்டிப்பாகச் செய்வீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்க வளர்க

இனிய நல் வாழ்த்துக்கள்
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com

© TamilOnline.com