தமிழகத்தில் கோச்செங்கட் சோழன் கணக்கற்ற கற்கோயில்கள் கட்டிச் சோழர் பரம்பரைக்குப் பெருமை சேர்த்தவன். காவிரிக் கரையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்திற்கு அருகில் உள்ள பேரளத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருமீயச்சூர்க் கோயிலும் அவற்றில் ஒன்று. தொன்மை வாய்ந்த திருக்கோயிலும் இளங்கோயிலும் ஆக இரண்டு கோயில்கள் இத்திருக் கோயிலுக்குள்ளேயே உள்ளது மற்றொரு சிறப்பு.
சோழர்காலக் கற்கோயில்களில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகளின் அழகு இங்கு சிறப்பாக அமைந்திருக்கக் காணலாம். திருமீயச்சூர் கோயிலின் அழகுக்கு அழகு சேர்ப்பது இக்கோயிலின் விமான அமைப்பின் நூதன வடிவம். யானையின் பின்புறம் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள 'கஜப்ரஷ்ட விமானம்' மூன்று கலசங்களுடன் காணப்படுகிறது.
தனக்கேற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்ள சூரியன் பார்வதி பரமேச்வரனைக் கஜவாகன ரூபத்தில் வழிபட்டதால் விமானம் இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது.
புராணேச்வரரும் சாந்தநாயகியும்:
பொதுவாகச் சிவன் கோயிலிலுள்ள மூர்த்தியை ஈச்வரன் என்றுதான் அழைப்பது வழக்கம். இங்குள்ள ஈச்வரன் §க்ஷத்ர புராணேச்வரர் என்று அழைக்கப்படுகின்றார். கோயிலின் தொன்மையும் தேவாரப்பாடல் பெற்றதும் இதற்குக் காரணங்களாக இருக்கலாம். திருமீயச்சூரைத் திருஞான சம்பந்தரும், இளங்கோயிலைத் திருநாவுக்கரசரும் பாடியுள்ளனர்.
சிவபெருமான் சாபத்தால் மேனி கருகிப் போன சூரியன் சாப விமோசனம் பெற திருமீயச்சூரில் 7 மாத காலம் கடுந்தவம் புரிந்தும் மேனி நிறம் மாறாததால் வாய்விட்டு அலறி இறைவனை அழைக்க இறைவனோடு தனித்திருந்த பார்வதி இக்கூக் குரலால் தம்முடைய ஏகாந்தத்திற்குப் பங்கம் விளைவித்த சூரியனுக்குச் சாபம் அளிக்க நினைத்தாள்.
முன்னரே சாபத்தால் வருந்திக் கொண்டிருக்கும் சூரியனை மேலும் வருத்த வேண்டாம் என்றும் அமைதி கொள்ளுமாறும் கூற, பார்வதி சாந்தநாயகி ஆனாள். இச்சம்பவத்தைச் சித்தரிக்கும் விதமாகக் கோவில் விமானத்தின் கீழ் தெற்கில் §க்ஷத்ர புராணேச்வரர் பார்வதியின் முகவாயைப் பிடித்துச் 'சாந்தநாயகி'யாய் இருக்கச்சொல்லி வேண்டுவது போன்ற வடிவில் காணப்படும் சிற்ப அழகை வேறெந்தக் கோயிலிலும் காண்பது அரிது.
மேகநாதர் லலிதாம்பிகை
திருமீயச்சூர் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் மேகநாதர். இறைவன் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி அமைந் துள்ள ஏகப்பட்ட மண்டபங்களும் துவார பாலகர்களாகச் செதுக்கப்பட்டுள்ள கணபதி சிலைகளும் கல் தூண்களும் சோழர்காலச் சிற்பக் கலை அழகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. மேகநாதர் கோயிலின் வடக்கே திருமீயச்சூர் இளங்கோயிலில் கிழக்கு நோக்கி இறைவன் சகல புவனேச்வரரும், தெற்கு நோக்கி இறைவி மின்னும் மேகலையாளும் தனித்தனி கருவறையில் வீற்றிருக்கக் காணலாம். கோயிலின் உட்பிரகாரத்தை விட்டு வெளியே வந்தால் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் லலிதாம்பிகை கோயிலைக் காணலாம். உலகிலேயே இது போன்ற கலை அழகு மிக்க இறைவி உருவை வேறெந்தக் கோயிலிலும் காண முடியாது. அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாகக் காட்சி அளிக்கும் அம்பாளின் இருப்பிடம் ஒரு ராஜ தர்பார் போன்ற உணர்வைத் தருகிறது.
லலிதா சஹஸ்ரநாமம்
இறைவன் வேண்டிக் கொண்டதற்கு இணங்கச் சாந்தநாயகியான அன்னையின் வாயிலிருந்து வெளிப்பட்ட 'வசினீ' என்ற வாக்தேவதைகள் வாழ்த்திப் பாடிய வாழ்த்துரைகளான ஆயிரம் திருநாமங்கள்தாம் சஹஸ்ரநாமம் என்ற பெயர் பெற்றது.
லலிதாம்பிகையைக் குறித்தவை என்பதால் லலிதா சஹஸ்ரநாமம் ஆயிற்று. இந்து மதத்தினரால் பெரிதாகப் போற்றப்படும் லலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய இடம் திருமீயச்சூர் என்பது இவ்வூருக்குப் பெருமை சேர்க்கும் வரலாறாகும். ஒருமுறை ஹயக் கிரீவர் அகத்தியருக்கு லலிதா சஹஸ்ர நாமத்தை உபதேசித்ததுடன் லலிதாம்பிகையின் இருப்பிடம் பூலோகத்தில் உள்ள திருமீயச்சூர் என்றும் வழிகாட்டினார். ஹயக்கிரீவர் அறிவுரைப்படி திருமீயச்சூர் வந்த அகத்தியர் அங்கு சூரியன் மூலவருக்குச் சிறப்பான வழிபாடு செய்வதைக் கண்டு தாமும் அவனைப்போலவே வழிபட்டுச் சிறப்புற்றார். பௌர்ணமி நாளில் இங்கு செய்யப்படும் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை சிறப்பான ஒன்றாகும்.
சூரிய வழிபாடு
ஒவ்வொரு வருஷமும் சித்திரை மாதம் 21ந்தேதி முதல் 27ந்தேதி வரை உதய காலத்தில் சூரியன் மூலவர் மேகநாதரைச் சிறப்பாகப் பூஜிக்கின்றான் என்று கூறப்படுகின்றது. அந்த 7 நாட்களிலும் சூரியனது கிரணங்கள் கருவறையிலுள்ள லிங்கத்தின் மீது விழுவதை இன்றளவும் காண முடிவது வியப்புக்குரிய செய்தி. இங்குள்ள லிங்கத்தை எம பகவான் 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டுப் பல நன்மைகள் அடைந்தான். எனவே தீராப் பிணியால் துன்பப்படுபவர் இங்குள்ள இறைவனை 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டால் எமபகவான் அருள் பெற்று, பிணி நீங்கி நலம்பெறுவர் என்று நம்பப்படுகிறது.
இன்றும் தொடரும் அதிசயம்
மிகச் சமீப காலத்தில் பெங்களூரிலுள்ள ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பக்தி மிகுந்த ஒரு பெண்ணின் கனவில் திருமீயச்சூர் இறைவி லலிதாம்பிகை தோன்றி “எனக்குக் காலில் அணிந்து கொள்ளக் கொலுசு ஒன்று செய்து தருவாயா?” என்று கேட்டதாம். தன் கனவில் வந்தது எந்த ஊரில் குடிகொண்ட தெய்வம் என்றறியப் பெரும் பாடுபட்டு எல்லாக் கோயில்களிலுமுள்ள இறைவி படங்களை வரவழைத்து, தான் கனவில் கண்டது திருமீயச்சூர் லலிதாம்பிகை உருவே என அடையாளங் கண்டாராம்.
தங்கக்கொலுசு செய்து கொண்டுபோய்க் கொடுக்க, சிலையின் பாதத்தைச் சுற்றிக் கொலுசை இணைப்பது எப்படி என்று கோயில் நிர்வாகிகள் திகைத்தனர். அப்போது கால்களின் அருகே ஒரு துளை இருக்கக் கண்டு வியந்தனர். பின்னர் கொலுசை அதில் நுழைத்து இணைத் தனராம். அந்தத் துளையை அர்ச்சகர் எனக்குக் காட்ட, அதில் இணைத்திருந்த கொலுசையும் பார்க்க முடிந்தது. அதிசயங்கள் இன்றும் தொடர்கின்றன.
முனைவர் அலர்மேலு ரிஷி |