ஸ்ரீகாந்த்
தனித்துவமான நடிப்பால் மக்களின் மனம் கவர்ந்த பழங்கால நடிகர் ஸ்ரீகாந்த் (81) காலமானார். மார்ச் 19, 1940ல், ஈரோட்டில் பிறந்த ஸ்ரீகாந்தின் இயற்பெயர் வெங்கட்ராமன். மேற்கல்வியை முடித்ததும் சென்னை அமெரிக்க தூதரகத்தில் வேலை கிடைத்தது. வாசிப்பார்வம் கொண்டிருந்த ஸ்ரீகாந்திற்கு நாடக நண்பர்களுடன் ஏற்பட்ட நட்பு அவரை நடிகனாக்கியது. நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தில் இவர் நடித்த பாத்திரத்தின் பெயர் 'ஸ்ரீகாந்த்'. நாளடைவில் அதுவே இவரது பெயராக நிலைத்தது.

நண்பர் சக்ரவர்த்தியின் மூலம், தனது திரைப்படத்திற்குப் புது முகங்களைத் தேடிக் கொண்டிருந்த இயக்குநர் ஸ்ரீதரின் அறிமுகம் கிடைத்தது. அவரது 'வெண்ணிற ஆடை' படத்தில் நாயகனாக அறிமுகமானார். உடன் அறிமுகமானவர்கள் தான் ஜெயலலிதா, வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா. அதுமுதல் பல படங்களில் நாயகனாகவும், துணை நடிகராகவும், சிறப்புக் கதாபாத்திரமாகவும் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்தார்.

அழகான தோற்றம், தெளிவான தமிழ் உச்சரிப்பு, நாடக அனுபவங்களால் மிகையில்லாத அசத்தலான நடிப்பு போன்றவற்றால் இயக்குநர்களின் மனம் கவர்ந்த நடிகரானார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படமானபோது அதில் நாயகனாக நடித்து அந்தப் பாத்திரத்திற்கு நியாயம் செய்தார் ஸ்ரீகாந்த். ஏற்கனவே ஜெயகாந்தனின் நண்பராக இருந்ததால், அந்தப் பாத்திரத்தை உள்வாங்கி மிகையில்லாமல் நடித்து ஜெயகாந்தன் உள்ளிட்ட பலரது பாராட்டுதல்களைப் பெற்றார். ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' படத்திலும், எழுத்தாளர் ரங்காவாக நடித்துப் பலரது மனதைக் கவர்ந்தார்.

கதாநாயகனாக மட்டுமல்லாது ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்றோருடன் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து முத்திரை பதித்தார். 'தங்கப்பதக்கம்' படத்தில் சிவாஜியுடன் இணைந்து நடித்துச் சாதனை புரிந்தார். வில்லன் மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்கள் மட்டுமல்லாது, நகைச்சுவை வேடங்களிலும் 'காசேதான் கடவுளடா', 'பாமா விஜயம்', 'காசி யாத்திரை' போன்ற படங்களில் நடித்துத் தனது திறமையை நிரூபித்துள்ளார். சிவகுமார், ரஜினி, கமல் என பிற்காலக் கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார்.

© TamilOnline.com