சிறந்த கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடல் ஆசிரியருமான பிறைசூடன் (65) காலமானார். ஐயாயிரத்துக்கும் அதிகமான பக்திப் பாடல்களையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களையும் எழுதியவர் இவர். சில படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், 6 பிப்ரவரி 1956ல் பிறந்தார். 1984ல், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனால் 'சிறை' படத்தில் பாடலாசிரியராக அறிமுகம் செய்யப்பட்டார். 'என் பொம்முகுட்டி அம்மாவுக்கு', 'என்ன பெத்த ராசா', 'என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்', 'கேளடி கண்மணி' என 400க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார். 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆட்டமா தேரோட்டமா...' பாடல் இவரைத் தமிழகமெங்கும் அடையாளம் காட்டியது. 1991ல் 'என் ராசாவின் மனசிலே' திரைப்படத்தில் இடம்பெற்ற 'சோலப் பசுங்கிளியே...' என்ற பாடலுக்கு தமிழக அரசின் சிறந்த திரைப்பாடலாசிரியர் விருதைப் பெற்றார். 1996ல், 'தாயகம்' திரைப்படப் பாடலுக்காக மீண்டும் இந்த விருதைப் பெற்றார். .
'கலைச்செல்வம்', தமிழக அரசின் 'கபிலர் விருது' உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றவர். மிக எளியவர். பழகுவதற்கு இனிமையானவர், ஆன்மீகத்திலும் இலக்கியத்திலும் ஆழங்காற்பட்டவர். முருக பக்தர். முருகனையும் அகத்தியரையும் வணங்கிவிட்டே எப்பணியையும் தொடங்கும் வழக்கமுடையவர். காஞ்சி மகாபெரியவர் மீது மிகுந்த பக்தி கொண்டவர். பெரியவரின் பெருமையைப் பேசுகிற 'மஹா பெரியவா' என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழகமெங்கும் பல பட்டிமன்றங்கள், கவியரங்குகளில் பங்கெடுத்துத் தமிழ் வளர்த்தவர். குடும்பத்தினருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர் திடீர் மாரடைப்பால் காலமானார்.
'இதயமே இதயமே', 'உன் மௌனம் என்னைக் கொல்லுதே', 'மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா', 'கலகலக்கும் மணி ஓசை', 'தென்றல்தான் திங்கள்தான்', 'காதல் கவிதைகள் படித்திடும் நேரம்', 'வசந்தமே அருகில் வா', 'நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி படுத்தால் ஆறடி சொந்தம்' போன்ற பாடல்கள் என்றும் அவர் பெயர் சொல்லிக் கொண்டிருக்கும். |