'மேனேஜ்மென்ட் குரு' என்று அழைக்கப்பட்டவரும், இந்தியாவில் மேலாண்மைக் கல்வியை வடிவமைத்தவர்களில் முக்கியமானவருமான பாலா வி. பாலச்சந்திரன் காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தின் புதுப்பட்டி கிராமத்தில் 5 ஜூலை 1937ல் பிறந்த பாலச்சந்திரன், பள்ளிக் கல்வியையும் உயர்கல்வியையும் புதுக்கோட்டையில் நிறைவு செய்தார். பட்ட மேற்படிப்புகளைச் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1962ல் இந்தியா - சீனா இடையே போர் மூண்டபோது, ராணுவத்தில் சேர்ந்தார். போர் முடிந்ததும் அண்ணாமலைப் பல்கலைக்கழகமே இவருக்குப் பேராசிரியர் பணி அளித்தது. அங்கே என்.சி.சி. கமாண்டராகவும், பேராசிரியராகவும் பணியைத் தொடர்ந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் ஒஹையோவின் டேய்ட்டன் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பும், முனைவர் பட்ட ஆய்வும் மேற்கொள்வதற்கான உதவித்தொகை கிடைத்தது. அங்கு எம்.எஸ். படிப்பை முடித்த பாலச்சந்திரனுக்கு அதே பல்கலையில் துணைப் பேராசிரியர் வாய்ப்பு வந்தது. அது முதல் அவருக்கு ஏறுமுகம்தான். நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. மற்றும் முனைவர் பட்டம் முடித்தார். 1984ல், அந்தப் பல்கலையில் கணக்கியல், தகவல் மற்றும் நிர்வாகத் துறைப் பேராசிரியர் ஆனார்.
தாய்நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற அவரது கனவின் விளைவுதான் 'கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்' (Great Lakes Institute of Management - www.greatlakes.edu.in) தனது நிறுவனத்தை, தமிழகத்தின் மிகச்சிறந்த கல்வி நிறுவனமாக வளர்த்தெடுத்தார். சென்னை மட்டுமல்லாது குருகிராமத்திலும் தற்போது கிளை பரப்பி நிற்கிறது இந்தக் கல்லூரி.
இவர் தென்றலுக்கு அளித்த நேர்காணலை வாசிக்க
செப்டம்பர் 27, 2021 அன்று காலமானார் பாலா வி. பாலச்சந்திரன். அவரது நிறுவனங்களும், கல்விப் பணிகளும் என்றும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. |