ம. சிங்காரவேலு செட்டியார் (பகுதி-2)
பி அண்ட் சி மில் போராட்டம்
தொழிலாளர்மீதும் அவர்கள் வாழ்க்கை உயர்வின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் சிங்காரவேலு செட்டியார். பலவிதங்களில் தன்னாலான உதவிகளை அவர்களுக்குச் செய்து வந்தார். அவர்களின் வாழ்வாதார உயர்வுக்காக, பிரிட்டிஷாரின் அடக்குமுறைகளுக்கு எதிரான பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். அவற்றுள் குறிப்பிடத்தகுந்ததாக பி அண்ட் சி மில் தொழிலாளர் போராட்டம் (Buckingham and Carnatic Mills strike) அமைந்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றிணைந்த அந்தப் போராட்டமே தமிழகத்தின் முதல் மாபெரும் தொழிலாளர் போராட்டமாகக் கருதப்படுகிறது. Great Mill Strike என்று அழைக்கப்பட்ட இப்போராட்டம் ஜூன் 20, 1921ல் வேலை நிறுத்தமாகத்தான் ஆரம்பித்தது. குறைந்த ஊதியம், மோசமான பணிச்சூழல் ஆகியவற்றுக்கு எதிராகவும், தங்களில் சிலர் மீது நிர்வாகம் எடுத்த நடவடிக்கையைக் கண்டித்தும் இது ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தை ராஜாஜி, கஸ்தூரிரங்க ஐயங்கார், ஏ. ரெங்கசுவாமி ஐயங்கார், சிங்காரவேலு செட்டியார், சர்க்கரைச் செட்டியார் உள்ளிட்டோர் ஆதரித்தனர். அமைதியான முறையில்தான் போராட்டம் நடந்து வந்தது. ஆனால், அதை தங்களுக்கு எதிரான மிகப்பெரிய சவாலாகப் பார்த்தது அப்போதைய பிரிட்டிஷ் அரசு. சென்னை மாகாணத்தின் ஆளுநர் இதனால் மிகுந்த சினம் கொண்டார். கேவலம் சாதாரண அடிமைத் தொழிலாளர்கள் நம்மை எதிர்ப்பதாவது என்று நினைத்த அதிகார வர்க்கத்தினர் அந்தப் போராட்டத்தைப் பலவிதங்களில் நசுக்க முயன்றனர். தொழிலாளர்களுக்கிடையே சாதி ரீதியில் பிளவுகளை ஏற்படுத்தினர். அது ஓரளவுக்கு வெற்றி பெற்றாலும் பிற தொழிலாளிகளின் ஒற்றுமைக்கு அது வழிவகுத்தது. மாதக்கணக்கில் போராட்டம் நீண்டது.

துப்பாக்கிச்சூடு
அதுகண்டு சினந்த அரசு ஆகஸ்ட் 29, 1921 அன்று தொழிலாளர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் தொழிலாளர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டனர். அப்போது சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அது அதிகாரமற்ற இரட்டை ஆட்சி முறை என்பதால், ஆங்கிலேய அரசே நேரடியாகத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. என்றாலும் நீதிக்கட்சி ஆட்சியும் அதற்கு உடந்தையாக இருந்ததாகப் பலரால் விமர்சிக்கப்பட்டது. அந்தத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துத் தொழிலாளர்கள் செப்டம்பர் 19 அன்று மிகப்பெரிய ஊர்வலத்தை நடத்தினர். அதிலும் அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இருவர் உயிரிழந்தனர். அந்தக் கலவரத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிகழ்வு. தலைவர்கள் சிலர் நீதிக் கட்சியிலிருந்து வெளியேறவும் இச்சம்பவம் காரணமாக அமைந்தது.

சிங்காரவேலர், தொழிலாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். இந்த வேலை நிறுத்தம் குறித்தும், கலவரம் குறித்தும் மிக விரிவாக அவர் நவசக்தியில் கட்டுரைகள் எழுதினார். ஒருவழியாக டாக்டர். நடேச முதலியாரின் சமாதான முயற்சியால் அக்டோபரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.



தொழிலாளர் - விவசாயிகள் கட்சி
பம்பாயைச் சேர்ந்த எஸ்.ஏ. டாங்கேயுடனும், பொதுவுடைமை இயக்கவாதி எம்.என். ராய் அவர்களுடனும் சிங்காரவேலருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவர்களது கொள்கைகளும் திட்டங்களும் சிங்காரவேலரைப் பெரிதும் கவர்ந்தன. நாளடைவில் அது நல்லதொரு நட்பாக விரிவடைந்தது. தொழிலாளர்களுக்குச் சங்கங்கள் இருந்தால் போதாது அவர்களுக்கு ஆதரவாகப் பின்புலத்தில் இருக்கவும் உழைக்கவும் ஒருங்கிணைக்கவும் ஒரு கட்சி தேவை என்று முடிவுக்கு வந்த சிங்காரவேலர், மே 1, 1923ல் இந்தியத் தொழிலாளர்-விவசாயிகள் கட்சி (Labour Kisan Party of Hindustan) என்ற கட்சியை ஆரம்பித்தார். தொழிலாளர்களின் உயர்வும் அகிம்சைவழிப் போராட்டமும், பாரத விடுதலையும் கட்சியின் நோக்கங்களாக அறிவிக்கப்பட்டன. அன்றுதான் முதன்முதலில் உழைப்பாளர் தினம் என்பது இந்தியாவில் கொண்டாடப்பட்டது. முதன்முதலில் செங்கொடியும் ஏற்பட்டது. இதற்குக் காரணமாக இருந்தவர் சிங்காரவேலுச் செட்டியார்தான். மே 1-ம் நாளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சிங்காரவேலர் அரசின்முன் வைத்தார். கட்சி சார்பாக, தமிழில் 'தொழிலாளன்', ஆங்கிலத்தில், 'The Labour Kisan Gazette' என்கிற இதழ்களை ஆரம்பித்தார். இவற்றின் மூலம் பொதுவுடைமை இயக்கம் சார்ந்த பல காத்திரமான கட்டுரைகளை அவர் வெளியிட்டு வந்தார்.

கான்பூர் சதி வழக்கு
டிசம்பர் 26, 1925ல் இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் முதல் மாநாடு கான்பூரில் நடந்தபோது அதற்குத் தலைமை வகித்துச் சிறப்புரையாற்றினார் சிங்காரவேலர். அவர் போலவே பம்பாயில் எஸ்.ஏ. டாங்கே 'சோஷலிஸ்ட்' என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். கல்கத்தாவில் முசாஃபர் அகமது ஒரு பத்திரிகையை ஆரம்பித்து நடத்தலானார். இவர்கள் இப்பத்திரிகைகள் மூலம் பொதுவுடைமைக் கருத்துக்கள் மட்டுமல்லாது பிரிட்டிஷ் எதிர்ப்புப் பிரச்சாரத்தையும் செய்துவந்தனர். அதனால் சினம் கொண்ட பிரிட்டிஷ் அரசு, இவர்கள் அனைவருமே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகச் சதிசெய்யும் சதிகாரர்கள் என்று அறிவித்து அவர்கள்மீது வழக்குத் தொடர்ந்தது. அதுதான் 'கான்பூர் சதி வழக்கு.' இவர்களைக் கைது செய்யவும் பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது. எம்.என். ராய் ஜெர்மனியில் இருந்ததால் அவரைக் கைது செய்ய இயலவில்லை. முசாஃபர் அகமது, சௌகத் உஸ்மானி, குலாம் உசேன் போன்றோர் கைது செய்யப்பட்டனர். சிங்காரவேலர் மிகக்கடுமையான டைஃபாய்ட் காய்ச்சலினால் அப்போது பாதிக்கப்பட்டிருந்தால் அவர் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து வழக்கு நடந்து சிலருக்குத் தண்டனையும் அளிக்கப்பட்டது.

சிங்காரவேலர் உடல்நலம் பெற்றபின் பிரிட்டிஷ் அரசுக்குத் தான் வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்று மனு அனுப்பினார். ஆனால், கான்பூர் சதிவழக்கு நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட நிலையில், தனியாக இவர் மீது மீண்டும் வழக்குத் தொடர்வது தேவையற்றது எனக் கருதிய அரசு, அந்த மனுவை நிராகரித்தது. ஆனால், இந்த வழக்கின் விவரங்கள் தொடர்ந்து நாடெங்கும் பத்திரிகைகளில் வெளியானதால் பொதுமக்களிடையே பொதுவுடைமை இயக்கம் பற்றிய அறிமுகம் ஏற்பட்டது. அதற்கான ஆதரவும் பெருக ஆரம்பித்தது.

நகராட்சி உறுப்பினர்
சிங்காரவேலர் வழக்கம்போலப் பணிகளைத் தொடர்ந்தார். 1925ல் சுயராஜ்ய கட்சியின் வேட்பாளராக யானைக்கவுனியிலிருந்து நகராட்சி உறுப்பினர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் பதவி மூலம் பல்வேறு மக்கள்நலத் திட்டப் பணிகளை அவர் முன்னெடுத்தார். நகராட்சிப் பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து பின் நின்று போயிருந்த இலவச மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தினார். ஆசிரியர்கள் குழந்தைகளைப் பிரம்பால் அடிக்கக் கூடாதென்ற தீர்மானத்தை நகராட்சியில் நிறைவேற்றி அதற்குத் தடை விதித்தார். நகராட்சிப் பள்ளிகளில் காந்தியின் திருவுருப்படத்தை அமைக்க ஆவன செய்தார். காலரா, அம்மை போன்ற தொற்றுநோய்களைத் தடுக்கும் பொருட்டு நகராட்சி சார்பில் உடனடி மருத்துவக் குழுவை முதலில் ஏற்படுத்தினார். பூங்காக்கள், பொருட்காட்சிகள், கண்காட்சிகளில் நடந்து வந்த சூதாட்டங்களைத் தடை செய்தார். மின்சாரத்துறை, டிராம் போக்குவரத்துத் துறை ஆகியவற்றை நகராட்சியே ஏற்று நடத்தத் தீர்மானம் கொண்டுவந்தார். நகரெங்கும் பூங்காக்களை அமைக்கத் தீர்மானம் கொண்டு வந்தார். பாதாளச் சாக்கடைத் திட்டத்தை சென்னை நகரின் பல இடங்களுக்கும் விரிவுபடுத்தினார். அடிமை உணர்வின் சின்னமாக இருந்த நீல் சிலையை அகற்றவும் தீர்மானம் கொண்டு வந்தார்.



1926ல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1927ல் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டும், பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாபூர்ஜி சக்லத்வாலா சென்னைக்கு வருகை தந்தபோது அவரது வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தார். அவருக்காகக் கூட்டங்களை நடத்தியதுடன், சக்லத்வாலா பேசிய கூட்டங்களில் அவரது உரையைச் சிங்காரவேலர் மொழிபெயர்த்தார். நகராட்சியில் பயன்பாட்டு மொழியாக இருந்த ஆங்கிலத்தை நீக்கித் தமிழைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை நகராட்சித் தீர்மானம் மூலம் வலியுறுத்தினார். இவ்வாறாக, தனக்குக் கிடைத்த நகராட்சி உறுப்பினர் என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழ் மக்களின் உயர்வுக்காகப் பல்வேறு சமூக நற்பணிகளை மேற்கொண்டு வந்தார் சிங்காரவேலர்.

மீண்டும் போராட்டங்கள்
1927 டிசம்பரில், சென்னையில் டாக்டர் அன்சாரி தலைமையில் நடைபெற்ற 42வது அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் 'பரிபூரண சுதந்திரம்' என்ற கொள்கையைப் பிரகடனம் செய்தார் சிங்காரவேலர். சைமன் கமிஷனைப் புறக்கணிக்கவும் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி சென்னைக்கு சைமன் வரும்போது மக்கள் கூட்டத்தைத் திரட்டி, கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பைத் தெரிவிக்க எண்ணினார் சிங்காரவேலர்.. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். இதனை உளவாளிகள் மூலம் அறிந்த பிரிட்டிஷ் அரசு, அவரை இல்லத்திலேயே சிறை வைத்தது. அசராத சிங்காரவேலர் தனது வீட்டின் நான்கு மூலைகளிலும் கம்புகளை நட்டு, வீட்டில் இருந்த கருப்பு நிறப் புடவையைக் கிழித்துக் கொடியாக்கி அதில் பறக்கவிட்டார். 1927ல் சாக்கோ மற்றும் வான்செட்டி ஆகியோரின் மரண தண்டனையை எதிர்த்துக் கூட்டங்களும் நடத்தினார். இவையெல்லாம் பிரிட்டிஷ் அரசை அவர்மீது மிகுந்த சினம் கொள்ள வைத்தன.

இந்நிலையில் கரக்பூர் ரயில்வேயில் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. நூற்றுக் கணக்கானோர் வேலை இழந்தனர். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஊதியமும் குறைக்கப்பட்டது. இந்திய அளவில் அறியப்பெற்றிருந்த சிங்காரவேலருக்கு இச்செய்தி கிடைத்தது. உடன் போராட்டத்தில் கலந்துகொள்ள கரக்பூர் சென்றார். ஆயிரக் கணக்கானோர் கூடியிருந்த கூட்டத்தில் ஹிந்தியில் எழுச்சியுரையாற்றினார். அப்போராட்டத்தில் 30000 பேருக்குமேல் கலந்துகொண்டனர். பல நாட்கள் தொடர்ந்த போராட்டத்தின் விளைவால் நல்லதொரு முடிவு ஏற்பட்டது. என்றாலும் கரக்பூரில் நடந்தது போலவே நாகப்பட்டினத்திலும் ரயில்வேயில் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. நாகப்பட்டினம், போத்தனூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகளைப் பொன்மலைக்கு மாற்றவும், பணியாளர்களைக் குறைக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதனை அறிந்த ரயில்வே பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொழிலாளர்கள் முதல் உயர் அலுவலர்கள் வரை பலரும் கலந்துகொண்டனர். ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மக்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ஈ.வெ.ரா. பெரியார் உள்ளிட்டவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். சிங்காரவேலர் இப்போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.

சிங்காரவேலர் கைது
இந்த வேலை நிறுத்தத்திலும் தடியடி, துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. போராட்டமும் வேலை நிறுத்தமும் 10 நாட்கள்வரை நடந்தன. வங்காளத்தில் இருந்து பொதுவுடைமைவாதியான முகுந்த்லால் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டார். இதனால் போராட்டம் மேலும் வலுப்பெற்றது. இதனால் சினமுற்ற பிரிட்டிஷ் அரசு, ஜூலை 23, 1928 அன்று முகுந்த்லால் மற்றும் சிங்காரவேலரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. சிங்காரவேலருக்குப் பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்த காங்கிரஸ் தலைவர் அன்னி பெசன்ட் சிங்காரவேலரை விடுவிக்கக் கோரி கவர்னருக்குக் கடிதம் அனுப்பினார். அது நிராகரிக்கப்பட்டது. வழக்கு நடந்தது. கிருஷ்ணசாமி ஐயங்கார், ராமசாமி ஐயங்கார் உள்ளிட்டோர் சிங்காரவேலரை விடுவிக்கக் கோரி வாதாடினர். ஈ.வெ.ரா. பல கூட்டங்கள் மூலமாக சிங்காரவேலரை பிரிட்டிஷ் அரசு விடுவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். காங்கிரஸ் தலைவரும் சிறந்த வழக்குரைஞருமான சத்தியமூர்த்தியும் சிங்காரவேலரை விடுவிக்க வேண்டி உயர்நீதிமன்றத்தில் வாதாடினார். அக்காலத்தின் புகழ்பெற்ற ஆங்கிலேய வழக்குரைஞரான நியூஜெண்ட் கிராண்டும் சிங்காரவேலருக்காக வாதாடினார். இவ்வாறு பலரது முயற்சியின் விளைவாகப் பத்தாண்டுத் தண்டனை இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.



சிறையில் சிங்காரவேலர் இருந்த காலத்தில், அப்போதைய ஆளுநர் வெலிங்டன் பிரபுவால், கல்லூரி கட்டுவதற்கு இடம் வேண்டும் என்று கோரப்பட்டு, சிங்காரவேலர் வசித்து வந்த திருவல்லிக்கேணி மாளிகை எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்குரைஞராக இருந்தும், சட்ட விதிகளை நன்கு அறிந்திருந்தும் கல்லூரிக்காகத் தனது இடத்தை விட்டுக் கொடுத்தார் சிங்காரவேலர். அங்குதான் பின்னர் லேடி வெலிங்டன் கல்லூரி அமைந்தது. தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுத்தாலும் தன்னுடைய முன்னோர்களான கந்தப்பச் செட்டி, அருணாசலச் செட்டி ஆகியோரின் சமாதிகள் அங்கேயே இருக்கவேண்டும் என்று கோரி வழக்குத் தொடுத்து அதில் வெற்றியும் பெற்றார் சிங்காரவேலர். (இன்றளவும் அந்தச் சமாதிகள் அங்குதான் உள்ளன.)

சிங்காரவேலர் 1930ல் விடுதலை ஆனார். மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தை அடுத்துள்ள இடத்தை வாங்கி, அங்கு ஒரு மாளிகை எழுப்பினார். தன் வாழ்நாள் இறுதிவரை அதில் வாழ்ந்தார்.

சிங்காரவேலரின் எழுத்துப் பணிகள்
நாளடைவில் சுயமரியாதை இயக்கத்தவருடனான சிங்காரவேலரின் நட்பு வலுப்பட்டது. சுயமரியாதை இயக்க இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். சுயமரியாதை மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இவரது பேச்சும் எழுத்தும் தொடர்ந்து குடியரசு இதழில் வெளியாகின. இவர் பேசிய சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு குடியரசு இதழில் கட்டுரைகளாக வெளியாகின. பின்னர் அவை நூல்களாகவும் வெளியிடப்பட்டன. 'கடவுளும் பிரபஞ்சமும்', 'கடவுள் என்ற பதமும், அதன் பயனும்', 'மனிதனும் பிரபஞ்சமும்', 'பகுத்தறிவு என்றால் என்ன?', 'சுயராஜ்யம் யாருக்கு?' (மூன்று பாகங்கள்), 'சமதர்ம உபன்யாசம்' போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கன.

வரலாறு, பொருளாதாரம், உளவியல், அறிவியல், தத்துவம், மானிடவியல் போன்ற பலதுறைகளைக் கற்றறிந்த மேதையாகச் சிங்காரவேலர் விளங்கினார். வாசிப்பதில் பெரு விருப்பம் கொண்டிருந்த அவர், நேரம் கிடைத்த போதெல்லாம்.படித்துக் கொண்டே இருந்தார். 20000 புத்தகங்களுக்கு மேல் உள்ள ஒரு நூலகம் அவரது வீட்டில் இருந்தது. நவீன அறிவியலிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். அறிவியல் வளர்ச்சிக்காக 1935ல் 'புது உலகம்' என்ற மாத இதழைத் தொடங்கி நடத்தினார். அதில் தத்துவம், சமூகம், உளவியல் பற்றிப் பல கட்டுரைகளை எழுதினார். அச்சுத் தொழிலாளர் சங்கம், மண்ணெண்ணெய்த் தொழிலாளர் சங்கம் போன்ற பல சங்கங்களின் தலைவராக இருந்தும் சமூகப் பணியாற்றினார். டிராம்வே தொழிலாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

சிங்காரவேலரின் இறுதிக்காலம்
எப்போதும் சமூகத்திற்காவே சிந்தித்து சமூக உயர்வுக்காகவே உழைத்தார் சிங்காரவேலர்.. வயதின் காரணமாக அவ்வப்போது நோய்களால் பாதிக்கப்பட்டார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்து பின் அதிலிருந்து மீண்டார். வயதானாலும் சமூக சேவைகளில் ஈடுபடத் தயங்கவில்லை. கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவது, பத்திரிகைகளுக்கு எழுதுவது, நூல்கள் எழுதுவது போன்ற பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் அடிக்கடி நோய்களாலும் நுரையீரல் பாதிப்பாலும் துன்புற்றார். 1943ல் நடந்த தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். 1945 ஜூனில் நடந்த சென்னை அச்சுத் தொழிலாளர் சங்கத்தில் தொழிலாளர் ஒற்றுமை குறித்துச் சிறப்புரையாற்றினார். அதுவே அவர் கலந்துகொண்ட கடைசிப் பொதுநிகழ்ச்சி. அப்போது அவருக்கு வயது 85.

அதுமுதல் சிங்காரவேலர் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இயலவில்லை என்றாலும் தொடர்ந்து இதழ்களுக்கு எழுதி வந்தார். பாரத விடுதலையும், சாதி, மத, இனப் பாகுபாடற்ற சமதர்ம சமுதாயமுமே அவரது அப்போதைய முக்கிய லட்சியமாக இருந்தது. அதுகுறித்து இதழ்களில் எழுதிவந்தார். நாட்டின் சுதந்திரத்திற்காகவும் ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்களின் உயர்வுக்காகவும் அயராது பாடுபட்ட ம. சிங்காரவேலுச் செட்டியார், இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைப்பதற்கு ஓராண்டு முன்னரே, பிப்ரவரி 11, 1946ல், 86ம் வயதில் காலமானார். காலமாகுமுன் அவர் உகுத்த கடைசி வார்த்தை, "Let there be no more war; Let there be peace in the World"

சிங்காரவேலர் மீனவ சமூகத்தைச் சேர்ந்தவராதலால், தமிழக அரசு மீனவர் வீட்டு வசதித் திட்டத்திற்கு இவரது பெயரைச் சூட்டிக் கௌரவித்தது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 'சிங்காரவேலர் மாளிகை' என்று பெயர் சூட்டிச் சிறப்பித்தது. இவரது நூலகத்தில் இருந்த பல நூல்கள் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல் தலைவர், பொதுவுடைமை இயக்க முன்னோடி, தொழிலாளர் தலைவர், அரசியல் சிந்தனையாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகச் சாதனையாளராகத் திகழ்ந்தவர் சிங்காரவேலர். பிற்காலத்திய சமூக இயக்கங்கள் பலவற்றிற்கும், சமூக இயக்கத் தலைவர்கள் பலருக்கும் முன்னத்தி ஏராகச் செயல்பட்டவர். பொதுவுடைமைச் சிற்பியாகப் போற்றப்படும் சிங்காரவேலர், மக்கள் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய, மறக்கக்கூடாத முன்னோடி.

பா.சு. ரமணன்

© TamilOnline.com