சர்வேஷ்
14 நாட்களில், கன்யாகுமரி முதல் சென்னைவரை 750 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டம் (மாரத்தான்) ஓடிச் சாதனை செய்திருக்கிறார்சர்வேஷ். 9 வயதான இவர், தாம்பரம் சாய்ராம் மேல்நிலைப் பள்ளி மாணவர். இவர், ஐக்கிய நாடுகளின் எஸ்.டி.ஜி. உலகளாவிய இலக்குகள் (SDG Awareness Run 2021) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2. 2021 அன்று, கன்யாகுமரி, வள்ளுவர் சிலை அருகிலிருந்து மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கினார். அக்டோபர் 15 அன்று, சென்னை வள்ளுவர் கோட்டம் வரை 750 கி.மீ. தூரம் ஓடி மாரத்தானை நிறைவு செய்தார். இவர், பயண ஓட்டத்தில் இரண்டு லட்சம் விதை உருண்டைகளை வழி நெடுகிலும் விதைத்தது குறிப்பிடத்தக்க மற்றொரு சாதனை.



இந்தச் சாதனையை 'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. இதற்கான சான்றிதழைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிப் பாராட்டினார். பாராட்டு விழாவில் முதல்வர் இவரை மென்மேலும் சாதனைகள் நிகழ்த்த வாழ்த்தியதுடன், புத்தகப் பரிசு ஒன்றும் அளித்தார்.

சர்வேஷின் ஓட்டப் பந்தய ஆர்வம் சிறு வயதிலேயே தொடங்கி விட்டது. நான்கு வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உசேன் போல்ட் ஓட்டத்தைப் பார்த்தவர், உடனே பெற்றோரிடம் தானும் அதுபோல ஓடவேண்டும் என்று கூறியிருக்கிறார். விளையாட்டில் ஆர்வம்கொண்ட இவரது தந்தையும் உடனடியாக ஊக்குவித்திருக்கிறார். அப்படி ஆரம்பித்த பயிற்சிதான் இன்றைக்கு 'கலாம் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்', 'ஆசியா புக் ஆப் ரெகார்ட்ஸ்' என்று உலக சாதனைகளை நிகழ்த்தக் காரணமாயிருக்கிறது.



2017ல், ஐந்தாம் வயதில், ஒரு கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கிய ஓட்டத்தில் இந்திய அளவில் சாதனை படைத்தார் சர்வேஷ். 6 வயதில் 486 கி.மீ. தூரத்தைக் கடந்தார். கடந்த ஆறு ஆண்டுகளில் 56 மாரத்தான் ஓட்டங்களில் பங்கு பெற்றுள்ள ஒரே இளம் பங்கேற்பாளர் இவர்தான். இதுவரை பல்வேறு தடகளப் போட்டிகளில் கலந்துகொணடு 146 பதக்கங்கள், 62 வெற்றிக் கோப்பைகள், 256 சான்றிதழ்கள், 16 ரொக்கப் பரிசுகளை வென்றுள்ளார்.

தற்போது, தமிழகத்தின் காவல்துறைத் தலைவராக இருக்கும் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.தான், சிறு வயதிலிருந்தே சர்வேஷின் ரோல் மாடல். மாரத்தான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதும், சைலேந்திரபாபுவைப் போலவே ஐ.பி.எஸ். ஆகவேண்டும் என்பதும் இவரது லட்சியங்கள்.



சர்வேஷின் லட்சியம் நிறைவேற வாழ்த்துவோம்.

© TamilOnline.com