உலக சாதனையாளர் டாக்டர் பிரிஷா
பிரிஷாவுக்கு வயது 12. இந்த வயதில் அவர் நிகழ்த்தியிருக்கும் உலக சாதனைகள் எவ்வளவு என்று தெரியுமா? 10? 20? 30? இல்லை, 70 உலக சாதனைகளை நிகழ்த்தியிருகிறார் பிரிஷா, இந்தச் சின்னஞ்சிறு வயதில். எதில்? பார்ப்போம்.

திருநெல்வேலியைச் சேர்ந்த கார்த்திகேயன் - தேவிபிரியா இணையரின் மகள் பிரிஷா. ஏழாம் வகுப்பு படிக்கிறார். பாட்டி மற்றும் அம்மா செய்துவரும் யோகப் பயிற்சிகளைப் பார்த்து சிறு வயதிலேயே யோகப்பயிற்சி வகுப்பில் சேர்ந்தார்.அதில் புதிய சாதனைகள் படைக்கும் எண்ணம் தோன்றியது. அவருடைய முயற்சிகளுக்கு யோக ஆசிரியரும் பெற்றோர்களும் ஊக்கம் தரவே தனது முயற்சிகளைத் தொடர்ந்தார்.



பிரிஷா மாவட்டம், மாநிலம், பாரதம் மற்றும் சர்வதேச அளவிலான யோகாசனப் போட்டிகளில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றார். நூற்றுக்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்றவருக்கு மென்மேலும் சாதனைகள் நிகழ்த்த ஆர்வம் வந்தது. கண்ட பேருண்டாசனத்தை ஒரு நிமிடத்தில் 16 முறை செய்ததுதான் இவரது முதல் உலக சாதனை. அடுத்து 'லோகஸ்ட் ஸ்கார்ஃபியன் போஸ்' யோகாசனத்தை 3.02 நிமிடத்தில் செய்து இரண்டாவது உலக சாதனை படைத்தார். தொடர்ந்து நீரில் நீந்தியபடி சுப்த பத்மாசனம், அடுத்து கும்த பத்மாசனம் என 41 உலக சாதனைகளை நிகழ்த்தினார். மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகாசனப் போட்டியில் தங்கம் வென்று சேம்பியன் பட்டம் பெற்றார். யோகா ராணி, யோகா கலா, யோகா ஸ்ரீ, யோகா சாதனா, யோகா நட்சத்திரா என்று பல பட்டங்களும் குவிந்தன.



சமீபத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து செயல்படும் 'எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்' அமைப்பின் நடத்திய நிகழ்ச்சியில் ஒரே நாளில் 29 புதிய சாதனைகளைப் படைத்தார் பிரிஷா. கண்களைக் கட்டிக் கொண்டு வாமதேவ ஆசனம் மற்றும் விபரீத கண்ட பேருண்ட ஆசனத்தில் அமர்ந்து பிரைன்விட்டாவை வேகமாகச் சரி செய்வது, கண்களைக் கட்டியபடி ஸ்கேட்டிங் சென்றபடியே பந்தைத் தரையில் தட்டியபடி செல்வது, கண்கள் கட்டப்பட்ட நிலையில் கபோடா ஆசனத்தில் அதிவேகமாக ரூபிக்ஸ் க்யூபைச் சரி செய்வது, கண்களைக் கட்டியபடி நான்குவழிச் சாலையில் ஒரு கையால் சைக்கிள் ஓட்டுவது என 29 சாதனைகளை நிகழ்த்தினார்.

இவை மட்டுமல்ல; யோகக்கலை குறித்துப் புத்தகம் ஒன்றும் எழுதியிருக்கிறார். மத்திய அரசின் நிறுவனமான NCPCR (National Commission for Protection of Child Rights) 'உலகின் முதல் இளவயது யோகாசிரியர்' என்ற பட்டத்தை இவருக்கு வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. நியூ ஜெரூசலம் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.



பிரிஷா தனது சாதனைகளைப் பற்றிக் கூறும்போது, "எனது சாதனை முயற்சிகளுக்கு என் அம்மாவும் பாட்டியும் கொடுத்த ஊக்கம்தான் காரணம். எனக்குத் தெரிந்த யோகக்கலையை எல்லாருக்கும் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன்" என்கிறார். தற்போது ஆன்லைன் வழியே கற்பிக்கிறார் இந்த இளம் யோகாசிரியர்.

டாக்டர் பிரிஷாவுக்குத் தென்றலின் வாழ்த்துக்கள்!

© TamilOnline.com